எத்தனை போராட்டங்கள். எத்தனை நீதிமன்றங்கள், செங்கொடி உட்பட எத்தனை உயிர்ப்பலிகள்!
எல்லாம் கடந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாய் திறந்து இருக்கின்றன சிறைக் கதவுகள்! இளமை எல்லாம் எரிந்து முடிந்தபின் இன்று ஏழு பேரும் வெளியில் வந்திருக்கிறார்கள்.
7 பேருக்கும் தூக்குத் தண்டனை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில், 2000ஆம் ஆண்டு நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்றி அறிவித்தார் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்.
எப்படி நளினியின் தண்டனையைக் குறைக்கலாம் என்று கேட்டனர் சிலர். ஏன் நளினிக்கு மட்டும் தண்டனைக் குறைப்பு என்று எதிர்க் கேள்வி கேட்டார்கள் வேறு சிலர். எந்த ஒன்றையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனடியாகச் செய்து விட முடியாது. படிப்படியாகத்தான் மாற்றங்கள் நிகழும்.
திமு கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போதும், ஆளுங்கட்சியாக இருந்த போதும் எழுவரின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கத் தவறியதில்லை. இறுதியில் பேரறிவாளன் விடுதலையாக, மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்து விடலாம் என்னும் தீர்மானத்தை இன்றைய தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் உடனடியாகச் செயல்பட்டிருந்தால், இந்த அறுவரின் விடுதலை இன்னும் முன்பாகவே வந்திருக்கும். எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ, அவ்வளவு காலம் தாழ்த்தினார் ஆளுநர். ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு இன்று நீதியை நிலை நிறுத்தி இருக்கிறது.
இது ஆறு பேருக்குக் கிடைத்த விடுதலை மட்டும் இல்லை, ஆளுநருக்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கும் தண்டனையும் ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதலாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது! எனவேதான் இது மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாறு அளித்துள்ள அணிந்துரை என்று கூறுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.
ஈழப் போராட்டத்திற்கும், போராளிகளுக்கும் முழுமையாக ஆதரவு நிலையில் எம்ஜிஆர் காலத்திலும், முழுமையான எதிர்ப்பு நிலையில் ஜெயலலிதா காலத்திலும் இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவும் எழுவர் விடுதலைக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, தன்னால் இயன்றவைகளை எல்லாம் அவர்கள் விடுதலைக்காகச் செயல்படுத்தினார். தமிழ் அமைப்புகள், ஜனநாயக சக்திகள் ஆகியனவும், எழுவரின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. அனைவரும் மகிழ நேற்று வந்திருக்கிறது, நல்ல தீர்ப்பு!
மானுட வாழ்வில் 30 ஆண்டுகள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க பகுதி. அது சிறையில் கழிந்து விட்டது. இனிவரும் நாள்கள் இனிமையாய் அமையட்டும்!!
- சுப.வீரபாண்டியன்