பல நேரங்களில் நம்முடைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஏதோ இந்திய முதலாளிகளால் பணம் கொடுத்து இந்தியாவில் வெகுமக்களிடம் பொதுவுடைமைக் கருத்து பரவுவதைத் தடுக்கவும், எக்காலத்திலும் இந்தியா ஒரு பொதுவுடைமை நாடு ஆகிவிடக்கூடாது என்பதற் காக நடத்தப்படும் கட்சி போலவே தெரிகிறது. இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் நாம் மூழ்கியுள்ளதால், நேற்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட்டை பற்றிய விவாதம் பெருமளவில் இல்லை. ஆனால் மிக கவனிக்கத்தக்க வகையில் அந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
மேலோட்டமாகப் பார்க்கும் போது திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றிந் தாலும், அதற்கு அடுத்து பி.ஜே.பி இருப்பதும், மூன்றாம் இடத்திற்கு சி.பி.எம். வந்துள்ளதும் மிகப்பெரிய எச்சரிக்கையாகும்.
வெற்றி எண்ணிக்கை அடிப்படையில் திரிணாமுல் காங்கிரஸ்க்கும், பி.ஜே.பி.க்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும், அதேபோல் பி.ஜே.பி.க்கும், சி.பி.எம் முக்கும் பெரிய இடைவெளி உள்ளது. வரப்போகும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் கூட பி.ஜே.பி சி.பி.எம். மைவிட அதிக இடங்கள் பெற்று ஒரு எதிர்க்கட்சியாக வருவதற் கான வாய்ப்புகள் தெளிவாக உள்ளன. இதேபோல் கேரளாவிலும் பி.ஜே.பி நன்கு வளர்ந்து வருகிறது .
பி.ஜே.பி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எப்படி வளர்ந்து வந்ததோ அதேபோல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள் ஆளும் மாநிலங் களிலும் வளர்த்து வருகிறது. அது அந்த மாநில மக்களிடம் உள்ள மிக மோசமான சமூகஅநீதிக் கருத்துக்களின் சாட்சியே. அதற்கு மிகப்பெரிய பொறுப்பை பொதுவுடைமைக் கட்சிகள் ஏற்க வேண்டும்.
திராவிடர் இயக்கங்களின் இந்துக் கடவுள் - அமைப்பு முறை பற்றிய விமர்சனங்களை மக்களுக்கு ஒவ்வாத நாத்திகம், வறட்டு நாத்திகம் என்றும், பார்ப்பனர் எதிப்புக் கருத்தி யலை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றும் நீட்டி முழக்குகிற இந்தியப் பொதுவுடைமைவாதி களின் செயற்பாடுகள் எல்லாமே தற்போது பி.ஜே.பிக்கு அரசியல் ரீதியாக வால் பிடிப்பது போலவே அமைந்துள்ளது.
நாம் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இந்தியாவில் பார்ப்பனியத்தை மறைமுகமாகக் கூட விமர்சிக்காத எந்த ஒரு கருத்தியலாலும் - கட்சியாலும் எந்தஒரு காலத்திலும் மிகப்பெரும் பான்மையான இந்திய மக்களுக்கு (திராவிடர்) - அவர்களின் சமூக சமத்துவ வாழ்விற்குச் சிறு விடுதலையைக் கூடப் பெற்றுத்தர முடியாது.
சரி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தில், வர்ணாசிரமதர்மத்தில் பற்றுக்கொண்ட காந்தியார் அவர்கள் கூறிய தீண்டாமை ஒழிப்பை ஏதோ ஒரு பெரிய புதிய கருத்தியல் போலத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி (அதாவது சாதி ஒழிப்பு என்று கூடப் பெயரிடாத) என்று சொல்லி சமூகப் புரட்சி செய்பவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்பது?