கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி சந்தித்து இருக்கிறது. பாஜக செய்த வெறுப்பு அரசியலை மக்கள் ஆதரிக்க தயாராக இல்லை என்பதையே இந்த தேர்தல் நமக்கு உணர்த்துகிறது.
கர்நாடக மாநிலத்திற்கு என்று சில தனித்த பண்புகள் உண்டு. அதை சமூக நீதி மாநிலமாக மாற்றி அமைத்த பெருமை தேவராஜ் அர்ஸ் என்பவரையே சாரும்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். தமிழ்நாட்டில் 69ரூ இட ஒதுக்கீடு வருவதற்கு முன்பே கர்நாடகாவில் 71% இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய சமூக நீதிப் போராளி அவர். மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தவர் அவர்.
சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் நடத்திய மண்டல் கமிஷன் இயக்கத்திற்கு ஆதரவான மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர் தேவராஜ் அர்ஸ். சமூக நீதி மாநிலமாகத் திகழ்ந்த கர்நாடகாவில் பிற்காலத்தில் பாஜக காலூன்றி ஜாதிய மதவாத அரசியல் மேலோங்கி சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது வேதனையான ஒன்று.
குறிப்பாக பசவராஜ் பொம்மை கர்நாடக முதலமைச்சரானப் பிறகு அங்கு இஸ்லாமிய வெறுப்பு கோரத் தாண்டவம் ஆடியது. ஹிஜாப் பசுவதை தடைச் சட்டம் மதமாற்ற தடைச் சட்டம் ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கலவரம், இஸ்லாமியர் இடஒதுக்கீடு இரத்து உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் மத வெறியைத் தூண்டிவிட்டு இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தி இந்துக்களை அணி திரட்டும் முயற்சியில் பாஜக ஆட்சி செயல்பட்டது. அந்த முயற்சிகள் எடுபடவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி பேசிக் கொண்டிருந்தார். இப்போது பாஜக இல்லாத தென்னிந்தியா உருவாகிவிட்டது. இந்த வெற்றி வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பாடத்தை கர்நாடக மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.
- விடுதலை இராசேந்திரன்