டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோரைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் சமயத்தில் நடந்திருக்கும் இக்கைது வடமாநிலங்களில் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென் கைது செய்யப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகப் பழிவாங்க இத்தகைய கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற விமர்சனம் இதுவரை இந்திய அளவில் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது. இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைதால் இது சர்வதேச விவாதமாகியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஜெர்மனி வெளியுறவு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் பிஷ்ஷரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“இந்த வழக்கை கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த வழக்குக்கு பொருந்தும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம்.” என்று அவர் பதிலளித்திருக்கிறார். வழக்கு நியாயமாக விசாரிக்கப்பட வேண்டுமென்று அவர் கூறியதற்கே, ஒன்றிய அரசு அதிர்ந்து போயிருக்கிறது. ஜெர்மனி தூதரை உடனே அழைத்து கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஆனால் ஜெர்மனியைத் தொடர்ந்து அமெரிக்காவும் இப்போது அரவிந்த் கெஜ்ரிவல் கைது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது. நியாயமான மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விசராணை நடத்தப்பட வேண்டுமென்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஆனால் இதுவரை அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவுத்துறை எவ்விதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு முகாந்திரம் இருக்கிறது என்றால், இதே வழக்கில் தொடர்புடைய அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் நிர்வாகி சரத் சந்திர ரெட்டி 35 கோடி ரூபாய்க்கும் மேல் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்துள்ளார். இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்ட பிறகே பெரும்பாலான நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு இவர் அப்ரூவராக மாறி ஜாமினும் பெற்றுள்ளார். ஆக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை நியாயமான விசாரணை நடத்திட, பாஜகவின் நன்கொடையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் இதுவரை அமலாக்கத்துறை அத்தகைய முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பதில் இருந்து, இந்த கைது முழுக்க அரசியல் ரீதியாக நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அமைதியற்ற சூழலால் பல தொகுதிகளில் பாஜக போட்டியில் இருந்து விலகிக்கொண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்த பின்பும் கூட இந்தியா கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. தென்மாநிலங்களில் பாஜகவுக்கு எவ்விதமான செல்வாக்கும் இல்லை. எஞ்சியிருக்கும் வடமாநிலங்களிலும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை பிரச்னைகள் மைய விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன. பாஜகவுக்கு சாதகமான அலை ஒரு மாநிலத்தில் கூட வீசவில்லை என்பதுதான் கள எதார்த்தமாக இருக்கிறது.

இதை பாஜகவினரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதனால் சிலர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பே, தாங்கள் இம்முறை போட்டியிட விரும்பவில்லை என தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டார்கள். குஜராத்திலேயே 2 வேட்பாளர்கள் பின்வாங்கி விட்டார்கள். தமிழ்நாட்டில் கூட நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம், “எனக்கு போட்டியிடும் எண்ணமில்லை, ஆனால் தலைமை அறிவித்து விட்டது.” என்று புலம்பியிருக்கிறார். இத்தகைய விரக்தியில்தான் எதிர்க்கட்சிகள் மீது மிகத் தீவிரமான ஒடுக்குமுறையை பாஜக அரசு கையாண்டு வருகிறது என்பதை சாமானிய மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதன் உச்சபட்சமாகவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களை, பணத்தை முடக்கிவிட்டால், பாதி வெற்றி உறுதியாகி விட்டது என்று கருதுகிறது பாஜக. ஆனால் 10 ஆண்டுகாலத்தில் பாஜகவால் மக்கள் இழந்த வாழ்வாதாரமே இம்முறை தேர்தல் களத்தில் முதன்மைச் சிக்கலாக இருக்கப் போகிறது. எத்தனை கைது செய்தாலும், எவ்வளவு பணத்தை முடக்கினாலும் பாஜகவால் இதை மாற்ற முடியாது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It