கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை :- 14.03.2024 இதழின் தொடர்ச்சி...

கலை வடிவத்தை விரிவுபடுத்தினார்

அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றியபோது பெரியாருக்கும், அவருக்கும் உண்டான மொ ழி நடை, உரை ஆகியவை வேறுபட்டிருந்தது. அண்ணாவின் வருகைக்கு பிறகு திராவிடர் கழகத்தில் கலை வடிவம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திராவிட நடிகர் சங்கம், திராவிட நாடக சபை மூலமாக நாடகங்களை அரங்கேற்றினார்கள். அண்ணா எழுதிய சில முக்கியமான நூல்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

குறிப்பாக சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். இந்து ராஜ்ஜியம் அமைந்தால் என்ன பலன் ஏற்படும் என்பதுதான் அந்த நாடகத்தின் கரு. சிவாஜி பெரிய வீரன், மராட்டியத்தையே வெற்றிகொண்டான். ஜோதிபாபூலே போன்றோர் மராட்டியத்தின் அடையாளமாக சிவாஜியைப் போற்றினார்கள். சங் பரிவார கும்பல் இந்துக்களின் எழுச்சி சின்னமாக சிவாஜியை மாற்றி விட்டனர். ஆனால் சிவாஜி தனது மெய்க்காப்பாளராக, தனித் தூதுவராக இரு இஸ்லாமியரைத்தான் வைத்திருந்தார். ஔரங்கசீப் மெய்க்காப்பாளராக, படைத்தளபதியாக ஒரு இந்துவைத்தான் வைத்திருந்தார். நீ என்ன வீரனாக இருந்தாலும் உன்னை பார்ப்பான் பணிய வைத்துவிடுவான். அப்படித்தான் இந்த மக்களை அவன் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறான் என்று அண்ணா எழுதினார்.

anna 258அந்த நாடகத்தில் சிவாஜி மன்னராக முடி சூடுகிறார். உடனே அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ சூத்திரன், ஆகையால் முடி சூட்டிக்கொள்ள முடியாது என்கிறார்கள். பின்னர் வாரணாசியில் உள்ள காகப்பட்டர் என்ற பார்ப்பனரை சந்தித்து பணம் அதிகமாக கொடுத்த பிறகு மன்னராக்கி விட்டார்கள். இதுதான் அங்கு நடந்த கதை.

இதில் சந்திர மோகனாக வருபவர் சிவாஜியின் நண்பர். நீ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன், ஆகையால் பார்ப்பனர்களிடம் கேட்காமல் நீ ஆட்சியை நடத்து என்று அவ்வப்போது கூறுவார். இறுதியில் சந்திர மோகனை வீட்டை விட்டு துரத்திய பிறகு சிவாஜி சந்திர மோகனிடம், “நீ கூறுவதெல்லாம் சரிதான், இதை ஊருக்குள் இருக்கும் மக்களிடம் போய் சொல்” என்று அந்த நாடகம் நிறைவடையும்.

மற்றொன்று சந்திரோதயம், அது முழுவதும் பகுத்தறிவு பேசுகிற நாடகமாகத்தான் இருக்கும். அந்த நாடகம் தான் அப்போது நடந்த அனைத்து மாநாடுகளிலும் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் வரும் ஒரு காட்சி. வேலையாள் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அரண்மனைக்கு வரும் போது, ஜமீன்தார் எங்கே போனீர்கள், இரண்டு நாட்களாக காணவில்லை என்று கேட்க? சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்கு சென்றிருந்தேன் என்பார். அங்கு என்ன விஷேசம் என்று ஜமீன்தார் கேட்க, அங்கு நடராஜர் நடனமாடிக் கொண்டிருப்பார், பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்றார் வேலையாள். உடனே ஜமீன்தார் அப்படியா? எப்படி இருந்தது என்பதை சற்று விளக்கு என்று கேட்டபோது, நடராஜர் மாதிரியே நின்று காட்டுவார். சிறிது நேரம் கழித்து எஜமான் கால் வலிக்குது என்பார் அந்த வேலையாள். எத்தனை ஆண்டுகாலம் நடராஜர் அப்படியே நிற்கிறார் என்று எஜமான் கேட்ட போது அது வெறும் கல் எஜமான், நான் மனிதன் என்று பதிலளிப்பார் வேலையாள். இதைத்தான் நானும் சொல்கிறேன் என்று எஜமான் சொல்வதுடன் அந்த நாடகம் நிறைவடையும். அப்படி அந்த நாடகம் முழுவதும் பகுத்தறிவைப் பரப்புகிற ஒரு நாடகமாகத்தான் இருக்கும்.

விவாதத்துக்கு வல்லவர் அண்ணா

வர்ணாசிரமம், தேவ லீலைகள் என்ற நூல்களையும் எழுதியுள்ளார் அண்ணா. வர்ணாசிரமம் என்ற நூலில் பார்ப்பனர்களின் ஆட்சி, அவர்களது சூழ்ச்சிக்கு நாம் ஆளாகிவிட்டோம் என்று எழுதியிருப்பார். கம்பரசம் என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார். 1971இல் மாட்டுக்கறி – பன்றிக்கறி விருந்து என்று ஒன்றை பெரியார் அறிவித்தார். அதைப்போல பெரியபுராண – ராமாயண எரிப்புப் போராட்டத்தையும் அறிவித்தார் பெரியார். அப்போது கடும் எதிர்ப்பு வந்த போது அண்ணா வாதம் செய்ய தயாராக இருந்தார். இரண்டுமுறை விவாதம் நடைபெற்றது. சென்னையில் நடந்த விவாதத்தின் தலைவராக கோவையைச் சேர்ந்த ராமசந்திர செட்டியார் இருந்தார். அவர் கோவை கிழார் என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்போது அண்ணாவை எதிர்த்துப் பேசியவர் தமிழ் பேராசிரியரான ரா.பி.சேதுப்பிள்ளை ஆவார்.

அடுத்து சேலத்தில் நடைபெற்ற விவாதத்தின் தலைவராக சேலம் கல்லூரி முதல்வர் ராமசாமி கவுண்டர் இருந்தார். அப்போது அண்ணாவுக்கும் சோம சுந்தர பாரதியாருக்கும் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் இடையில் சோம சுந்தர பாரதியார் தொடர்வண்டிக்கு நேரமாகிவிட்டது என்பதால் பாதியிலே கிளம்பிவிட்டார். பின்னர் தலைவர் ராமசாமி கவுண்டர், சென்னையில் நடந்த விவாதத்தில் ராமசந்திர செட்டியார் எந்த தீர்ப்பையும் சொல்லவில்லை. அப்படி நான் தீர்ப்பு சொல்லாமல் இருக்க மாட்டேன். நான் சொல்கிறேன், “ராமாயணம் ஆபாசம் நிறைந்தது, அது அழிக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பு வழங்கினார்.

கம்பர் தனது பாடலின் முதல் வரியிலேயே “இந்த பாட்டை பாடினால் சமூகம் என்னை திட்டும், கேவலமாக பேசும்” என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் ஒரு தெய்வக் கவியின் பாட்டை தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறேன் என்று சொல்லுவார். இதனை கம்பரே வருத்தப்பட்டுத்தான் எழுதியிருக்கிறார் என்று வேடிக்கையாக அண்ணா சொல்லுவார். அப்படிப்பட்ட சிந்தனைகளை உரைகளின் மூலமாக மட்டுமில்லாமல் நூல்களின் மூலமாகவும் வழங்கியுள்ளார் அண்ணா.

எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு நூலாக நான் கருதுவது ஆரிய மாயை ஆகும். அந்த நூலில்

பேராசைப் பெருந்தகையே போற்றி!

பேச நா இரண்டுடையாய் போற்றி!

தந்திர மூர்த்தி போற்றி!

தாசர் தம் தலைவா போற்றி!

வஞ்சக வேந்தே போற்றி!

வன்கண நாதா போற்றி!

கொடுமைக் குணாளா போற்றி!

என்ற பாடலுடன் அந்த நூல் தொடங்கும். இதையெல்லாம் நான் சொல்லவில்லை, பிரெஞ்சுக்காரர் ஒருவர் இந்த நாட்டை பார்வையிட்ட பிறகு எழுதியது இது என்று அண்ணா எழுதுகிறார்.

‘நீதிதேவன் மயக்கம்’ என்ற இன்னொரு நூலையும் அண்ணா எழுதியுள்ளார். அந்த நூலில் ராவணன் தன்னை பற்றி அவதூறாக எழுதிய கம்பன் மீது வழக்கு தொடுப்பான். “இரக்கம் எனும் பொருளிலா அரக்கன்” என்று எழுதியுள்ளார். எனவே அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்றார் இராவணன். அவனிடம் நான் ஏன் போய் பேச வேண்டும் என்று கம்பன் கேட்பார். உடனே உனக்கு சம்மன் வந்துள்ளது. ஒழுங்காக நீதிமன்றம் வந்துவிடு என்பார்கள்.

பின்னர் கம்பனிடம் ஒவ்வொரு கேள்வியாய் கேட்பார்கள், ராமன் மறைந்திருந்து ஒரு குரங்கை கொன்றானே அவனுக்கு இரக்கம் இருந்ததா? என்று கேட்டதற்கு இல்லை என கம்பன் பதிலளிப்பான். பின்னர் ஏன் அவனை மட்டும் இரக்கமில்லாதவன் என்று எழுதவில்லை என்று இராவனன் கேட்பான். நான் சீதையை கூட்டிவந்தேன், அவருக்கு எனது தம்பி மகளை காவலுக்கு வைத்திருந்தேன். சீதை என் மீது எதாவது குறை சொன்னாரா? பின்னர் ஏன் என்னை மட்டும் இரக்கமில்லாதவன் என்று எழுதி வைத்துள்ளீர் என்று கம்பனை நோக்கி கேள்விகளை அடுக்கினார் இராவணன். இறுதியில் இதை கவனித்த நீதிபதியே மயங்கி விடுவார்.

சுரண்டலை கடுமையாக எதிர்த்தவர்

‘பணத்தோட்டம்’ என்ற நூலில் வடவர்கள் எப்படி நம் பணத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கியிருப்பார். 1950இல் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வந்தபோது அதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அந்த போராட்டத்துடன் சேர்த்து வடவர் கடை மறியல் போராட்டம் என்பதையும் சேர்த்து நடத்தினார் பெரியார். சென்னையில் மட்டும் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழ்நாடு தழுவிய போராட்டமாக நடைபெற்றது.

இன்சூரன்ஸ் என்ற பெயரில் நம் பணத்தை எப்படி திருடுகிறார்கள். இந்தியாவில் உள்ள மொத்த இன்சூரன்ஸ் கம்பெனிகளின் எண்ணிக்கை 234. அதில் சென்னையில் நடத்துபவர்கள் 37 பேர், வடநாட்டுக்காரர்கள் 187 பேர் நடத்துகிறார்கள். இப்படி புள்ளிவிவரங்களுடன் எப்படியெல்லாம் நம்மை சுரண்டுகிறார்கள் என்பதை விளக்கியிருப்பார். திருமணம் என்ற நூலில் திருமணத்தில் பின்பற்றப்படும் மூடநம்பிக்கைகள் குறித்து விரிவாக எழுதியிருப்பார்.

அண்ணாவின் ஒப்பில்லாத ஆட்சி

அண்ணா ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த உடனே இரு மொழிக் கொள்கை, சுயமரியாதைத் திருமண சட்ட அங்கீகாரம், தமிழ்நாடு பெயர் சூட்டல் உள்ளிட்டவைகளை விரைவாக செய்தார். இது குறித்து லிங்கம் என்பவர், மெட்ராசுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால் என்ன கிடைத்துவிடப் போகிறது என்று கேட்டார். அதற்கு அண்ணா, பார்லிமெண்டுக்கு லோக்சபா என்று பெயர் வைத்தீர்களே, கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதற்கு ராஜ்யசபா என்று வைத்தீர்களே, அப்போது என்ன கிடைத்தது உங்களுக்கு. குடியரசுத் தலைவர் ராஷ்டிரபதியாகி விட்டாரே, அதனால் உங்களுக்கு என்ன கிடைத்ததோ, அதேதான் எங்களுக்கும் என்று பதிலளித்தார்.

அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அந்த சுற்றறிக்கையில் இனிவரும் காலங்களில் யாரும் Beg மற்றும் Obediantly என்ற வார்த்தையை கடிதங்களில் பயன்படுத்தக் கூடாது, மாறாக sincerely என்று குறிப்பிட்டால் போதுமானது என்றார். ரகசிய பதிவேடு முறையை ரத்து செய்தவர் அண்ணா, இதன்மூலம் பார்ப்பனரல்லாதவர்களின் பதவி உயர்வு என்பது காப்பாற்றப்பட்டது. தனது இறுதிக்காலத்தில் 1969இல் மாநில சுயாட்சி குறித்து எழுதினார். இவையெல்லாம் சாதாரண சாதனையாக எண்ணிவிட முடியாது, சுயமரியாதை உள்ள ஒருவரால் தான் இப்படி யோசிக்க முடியும். அறிஞர் அண்ணா தனி மனிதரல்ல, அவர் விரிந்த அரசியல் சிந்தனையை கொண்டவர். அப்படிப்பட்ட அரசியல் புரிதலோடு நம் பணியாற்ற வேண்டும் என்பதை அண்ணாவின் நினைவுநாளில் எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

(நிறைவு)

- கொளத்தூர் மணி

தொகுப்பு : விஷ்ணு

Pin It