தொடர் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பதை சமூக ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் தமிழ்நாடும் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்படுகிறது. அதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நிகழ்வே ஒரு சான்று.

பொள்ளாச்சியில் நடந்த அந்த பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. முக்கியக் குற்றவாளிகள் இன்னமும் வெளியே நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் ஆளும் தரப்புக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதில் அக்கறை எடுக்கவில்லை போலத்தெரிகிறது.

இப்பொழுது காவல்துறையின் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் மீது அதே துறையைச் சேர்ந்த பெண் கண்காணிப்பாளர் ஒருவர் தன்னைப் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாகப் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்துச் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கண்ணன் பாதிக்கப்பட்ட பெண் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரைத் திரும்பப் பெறச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்.

இன்று கிடைத்துள்ள செய்தியின்படி அவருக்கு கொலை மிரட்டலும் வந்துள்ளது.

காவல்துறையின் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கொடுக்கப்பட்டவுடன் அவரைப் பதவி இடைநீக்கம் செய்து வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.

மாறாக அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது என்பது ஏறத்தாழ அவர் பதவியில் இருப்பதற்குச் சமமாகும். இந்தக் கண்துடைப்பு நாடகத்தால் நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதைப் போல சிறப்பு டி.ஜி.பி. ராஜேசையும், செங்கல்பட்டு கண்காணிப்பாளரையும் கைது செய்து வழக்கை நேர்மையாக நடத்த வேண்டும்.

இப்பொழுது தேர்தல் நடத்தை விதி இருப்பதனால் உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

- கருஞ்சட்டைத் தமிழர்

 

Pin It