இந்தியாவில் கடந்த 90 ஆண்டுகளாக, மநுவாதி பார்ப்பனர்கள் தலைமையிலான கம்யூனிஸ்டு இயக்கத்தின் (நக்சலைட்டுகள் உட்பட) செயல்பாடுகள் – கடந்த 30 ஆண்டுகளாக, மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளத்தில் அவர்கள் கட்சிகள் ஆட்சி நடத்திய இந்த காலகட்டங்களில், வளர்ந்து வந்து கொண்டிருந்த சமரசமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இயக்கம், தனது வேர்களை முற்றாக இழந்தது. கம்யூனிஸ்டு இயக்கத்தின் பார்ப்பனியத் தலைமை உழவையும், உழவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான அமைப்பு சாரா தொழிலாளர்களையும் தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒரு வகுப்பாக மதிக்கவில்லை. அவர்கள் இயக்கத்தின் அடிநிலையிலேயே இருக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். பதாகைகளையும், கொள்கை தவறி போய்விட்ட உறுப்பினர்களையும் சுமந்து, குரலற்று பின் தொடர்பவர்களாகவும், அவர்களது மாநாடுகளின் அரங்கங்களை நிறைப்பவர்களாக இருக்குமாறும் நிர்பந்திக்கப்பட்டனர்.

முற்றிலும் கிராமப்புற விவசாயப் பின்னணியிலிருந்து வந்த மிக்கேல் கோர்பசேவ், சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தினையும் அரசையும் தலைமையேற்று நடத்தும் பொறுப்பிற்கு உயர்ந்தார். இத்தகைய ஒரு சூழல் இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதே இல்லை. பல நூற்றாண்டுகளாக விவசாயத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; சுரண்டப்பட்டுள்ளனர்; வலுக்கட்டாயமாக வேலை வாங்கப்பட்டுள்ளனர்; வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் ஒருபோதும் எதிர்ப்புக் குரல் எழுப்பவோ, தங்கள் கையை உயர்த்தி எதிர்த்து நிற்கவோ முயலவில்லை. அதுதான் அவர்களின் "உயர் தனிக் குணம்' என்று விவசாயத் தொழிலாளர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களின் உயர்ந்த குணம் என்பது, அவர்கள் தங்கள் மீதான வன்கொடுமைகளை சகித்துக் கொள்வதில் கண்டறியப்பட்டுள்ளது.

1980களின் தொடக்கத்தில் சவுத்ரி சரண் சிங், போட் கிளப் திடலில் நடத்திய மிகப் பெரும் விவசாயிகள் பேரணிக்கு பதிலடி கொடுக்க, அதே இடத்தில் கம்யூனிஸ்டுகளின் ஏற்பாட்டில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் பங்கேற்ற விவசாயிகள் பேரணி ஒன்று நடைபெற்றது. அப்பேரணியில் தெலுங்கானா விவசாயத் தொழிலாளர்களின் நாயகனான பி.டி.ரணதிவே, இதே கருத்தை மிகப்பெருமிதத்துடன் உறுதி செய்தார். தெலுங்கானாவிலும், வங்காளத்திலும் முன்பே கண்டதைப் போல, செங்கொடியின் கீழ் எந்த விவசாயிகள் புரட்சியும் ஏற்படவில்லை. விவசாய சங்கங்கள் இன்றைய சூழலில் எந்த முக்கியப் பங்கையும் ஆற்றும் நிலையில் இல்லை. அவர்களுடைய அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் பதியப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பன் மடங்கு இருக்கலாம். ஆனால், எவ்வித இயக்கமும் அங்கு இல்லை.

விவசாயத் துறையைச் சேர்ந்த அமைப்பு சாரா பிரிவினர், வறுமை, கல்வியின்மை மற்றும் ஆரோக்கியமின்மை ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மிகவும் ஒதுக்கப்படுபவர்களாகவும், எல்லா வகையிலும் அதிகமாக சுரண்டப்படுபவர்களாகவும் உள்ளனர். அவர்களுக்காக யாரும் போராடுவதில்லை. பார்ப்பன கம்யூனிஸ்டுகளிடம் தங்களின் போராட்டத் திறனை அடகு வைத்ததால், அதனையும் இழந்து நிற்கின்றனர். பார்ப்பனர்களும் பிற 'பத்ரலோக்' சாதியினர் மற்றும் வகுப்பினரும் வகுப்பு நீக்கிய அல்லது சாதி நீக்கிய பாட்டாளிகளாக அங்கீகாரம் பெற்று, பாட்டாளிகளின் தகுதி வாய்ந்த தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், வெளிப்படையான நோக்கங்களுக்காக, இந்திய மார்க்சியவாதிகள், ஒட்டுமொத்த விவசாயத் தொழிலாளர்களையும் பாட்டாளிகளாகவோ, தங்களின் தலைவர்களாகவோ அங்கீகரிக்க மறுக்கின்றனர்.

ஒட்டுமொத்த விவசாயத் தொழிலாளர் வகுப்பினரும் (தீண்டக்கூடிய மற்றும் தீண்டத்தகாத) சூத்திரர்களாகவோ, முஸ்லிம்களாகவோ, பழங்குடியினராகவோ உள்ளனர். வங்காளத்தின் 80 விழுக்காட்டு இந்து விவசாயத் தொழிலாளர்கள், தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். இதன் விளைவு, சாதியப் பாகுபாட்டின் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தை வலுப்படுத்த இயலவில்லை.

Buddhadeb_300ஓர் அறிக்கை இவ்வாறு விவரிக்கிறது : "1970 – 80களில் நிலச் சீரமைப்பு ஆணையராகப் பணி புரிந்த காலத்தில் 'பர்கா' நடவடிக்கையை முன்னெடுத்த புகழ் பெற்ற அரசு அதிகாரியான தேபபிரதா பந்தோபாத்யாயா, சில கடுமையான செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார். 2006இல் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான வங்காள கம்யூனிஸ்டுகள் முதலாளிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் தேனிலவு காலத்தை, 'ஒரு கோட்பாட்டின் மரணம்' என விவரித்தமைக்காக இந்த நிலச் சீரமைப்பு வல்லுநர், தனிமைப்படுத்தப்பட்டார்.

“ஆழமான மற்றும் நுட்பமான ஆற்றலும், பளிச்சிடும் அறிவுக் கூர்மையும் கொண்டிருந்தபோதும் காரல் மார்க்சால், அர்ச்சகர் தொழிலில் உள்ள 'பத்ரலோக்' வங்காள பார்ப்பனர்களின் எளிதில் மாறக்கூடிய மனம் மற்றும் ஆற்றலை கணிக்க முடியவில்லை'' என்பது அவர் கருத்து. “இப்பிரிவை சேர்ந்த மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, அவருடைய நெஞ்சில் பதிக்கப்பட்ட மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியின் பதாகையை தாங்க முடியாமல், கம்யூனிசத்தை கைவிடவும், அதன் கோர நினைவுகளை உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அகற்றவும் துணிந்தார். இதை அவர் அரசர் அல்லது அரசு அல்லது போர் அல்லது மதத் தலைவர் ஆகிய எவரின் துணையுமின்றி செய்தார்.''

“தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த ஒரு பார்ப்பனக் குடும்பத்தின் வாரிசால் கம்யூனிச கருத்தியலுக்கான இறுதி காரியங்கள் செய்யப்பட்டது என்பது மிகப் பொருத்தமானது.'' புத்ததேவை மேற்கோள் காட்டி பந்தோபாத்யாயா, இவ்வாறு சொல்கிறார்: “நாம் இங்கு செயல்படுத்திக் கொண்டிருப்பது முதலாளித்துவம். தற்போதைய சூழலில், சோசலிசத்தை பரப்புரை செய்தாலும் அதை உருவாக்க முடியாது. நான் எதார்த்தவாதி; முட்டாள் அல்ல.''

சிங்கூர், நந்திகிராம் மற்றும் தெற்கில் உள்ள 24 பர்கானாக்கள் போன்ற இடங்களில், இந்திய அரசு சட்டம் 2005இன் கீழ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கென, கம்யூனிஸ்டுகள் அங்குள்ள ஏழை விவசாயிகளுக்கு எதிராக உள்ளனர். தங்களின் காவல் துறை மற்றும் தொண்டர்களை வைத்து, இனப்படுகொலை வரலாற்றை உருவாக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது, ஒரு மாநிலத்திற்குள் மற்றொரு மாநிலத்தை உருவாக்குகிறது. ஏனெனில், இச்சட்டத்தின் பிரிவுகள் இம்மண்டலங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கின்றன.

வெளி உலகம் அறியாதிருந்த கிராமமான நந்திகிராம், தற்போது குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில், விவசாயப் புரட்சியின் வரலாற்றில் தன் பெயரை வடித்துக் கொண்டுள்ளது. டாடா, செலிம் போன்ற தொழிலதிபர்களின் பலி பீடத்தில் பல உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. இன்று கொல்கத்தாவின் சேரிகளிலும், வங்காளத்தின் ஏழ்மையான கிராமப்புறங்களிலும், தொழில்மயத்திற்கு ஆதரவாகவும் நந்திகிராம் விவசாயிகளுக்கு எதிராகவும் இந்திய மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி அமைத்த 'டாடா படை'யின் ஊர்வலத்தை காணலாம். அவர்களிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தும் இறுதிக் கட்ட வேலைகள் நடக்கின்றன.

விடுதலை பெற்ற முதல் 60 ஆண்டுகளில் மேற்கு வங்கம் ஒரு தொழிற்சாலையைகூட புதிதாக அமைக்கவில்லை. பிரிட்டிசாரும் இந்திய தொழிலதிபர்களான சர் பிரேன் முகர்ஜி போன்றோரும் விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நிறுவிய அத்தனை தொழிற்சாலைகளையும் இவர்கள் அழித்து விட்டனர். முன்னேறிக் கொண்டிருந்த கிராமப்புற மக்களின் பொது கல்வித் திட்டத்தையும், வேலைவாய்ப்புகளையும் அழிக்கக் கிடைத்த அனுகூலமான வாய்ப்பினை அவர்கள் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டனர். தற்போது, வங்காளத்தின் 'கீழ் சாதி' மக்கள் தங்களின் கல்வியை முற்றிலுமாக இழந்த பிறகு, முற்றிலுமாக தொழிலாளர் வர்க்கமாக மாறிய பிறகு, அவர்களின் இருப்பிடங்களைப் பறித்து, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் அரசியல் மாற்றத்தை உருவாக்கி இருக்கக்கூடிய அவர்களின் ஒருங்கிணைந்த சமூக ஆற்றலை அழித்து, தொழில்மயமாக்கும் சரியான நேரம் தற்பொழுது வாய்த்திருக்கிறது.

பிரிட்டிஷ் காலனிய அரசின் குண்டுகள் கொன்றதைவிட அதிகமாகவே விடுதலை பெற்ற இந்தியாவின் காவல் துறை, துணை ராணுவம், ஏன், ராணுவப் படைகளும்கூட இந்நாட்டு மக்களை கொன்றுள்ளன. ஜனநாயக கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் அணி திரண்டு போராட்டங்களை நடத்தும் போதெல்லாம், அது எங்கேயாயினும், எப்போதாயினும், (நந்திகிராமாக இருந்தாலும், ராஜஸ்தானின் குஜ்ஜாராக இருந்தாலும்) அவர்களை எவ்விதத் தயக்கமோ, மனசாட்சியின் உறுத்தலோ இன்றி கொடூரமாகக் கொல்கின்றனர்.

பாரதிய ஜனதாவின் இந்து தலைவர்கள்கூட, கோத்ரா – குஜராத் போன்றவற்றைவிட கொடூரமான அரச வன்முறையின் இடமாக நந்திகிராமை குறிப்பிடுகின்றனர். 2007 மே 15 நாளிட்ட 'ஸ்டேட்ஸ்மேன்' இதழ் இவ்வாறு குறிப்பிடுகிறது : “நந்திகிராமில் அமைதியை ஏற்படுத்தவும், அங்கு இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் குண்டர்களுடனான மோதலில் காவல் துறை செய்தவற்றை இல்லாமல் ஆக்கவும் – இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியும், முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் படும் பதற்றம், புரிந்து கொள்ள கடினமானதல்ல. 2001இல் திரு. பட்டாச்சார்யா முதலமைச்சராக தனது பணியை தொடங்கியபோது, என்னிடம் அளித்த ஒரு தனிப்பட்ட நேர்காணலில், தாகூரின் புகழ் பெற்ற ஒரு வரியை மேற்கோள் காட்டி கூறினார்.

“என்னுடைய பெயர் உங்களுக்கு (மக்களுக்கு) உரிமை உடையதாக விளங்க வேண்டும்.'' ஆனால், “ரத்தன் டாடாவின் மயிரைத் தொடக்கூட ஒருவரையும் அனுமதிக்க மாட்டேன்'' என்று அவர் கூறியது, அவர் மக்களுக்கானவர் அல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. தோல்வியுற்ற தலைவராகவே அவர் பார்க்கப்படுகிறார். உண்மையில், மநுவாதி கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மக்களின் தலைவர்களாக இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக, மக்கள் என்பது (தீண்டத்தகுந்த மற்றும் தீண்டத்தகாத) சூத்திரர்கள், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய முஸ்லிம்களை குறிக்கும்போது அவர்கள் மக்களுக்கான தலைவர்களாக இருந்ததில்லை.

முறையற்ற, இரக்கமற்ற, இதயமற்ற முறையில் ஒடுக்கப்பட்ட மரிச்ஜாப்பி விவசாயிகள் போராட்டத்தின்போது முந்தைய முதலமைச்சர் இந்த உண்மையை நிரூபித்துக் காட்டினார். மரிச்ஜாப்பி நிகழ்வை போலவே, நந்திகிராம் நிகழ்வில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் (ஓர் அதிகார வர்க்க நிறுவனம்), நந்திகிராமில் மார்ச் 14 அன்று காவல் துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டித்து, அதை அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், முற்றிலும் நியாயமற்றது என்றும் உரைத்தது. இதனால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத கம்யூனிஸ்டுகள், அதை மறைக்க முயலவில்லை.

 இறுதியாக, நவம்பர் 2007இல், இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள், மேற்கு வங்க அரசின் காவல் துறையினருடன் இணைந்து, ஏறத்தாழ 95 விழுக்காட்டு மக்கள் தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த நந்திகிராமில் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது கொடூரமான குண்டுத் தாக்குதல்களை நடத்தி, பலரை கொன்று அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்தினர்.

கலவரம், குழப்பம் மற்றும் அழிவின் போர்வையில், தொண்டர்கள், கிராமத்தின் பல பெண்களை வன்புணர்வு செய்வதற்கும், நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தவும் துணை ராணுவமும் காவல் துறையினரும் துணை நின்றனர். முஸ்லிம் மக்கள் அதிகம் இருந்த பகுதிகளில் மட்டுமே, 'செம்படை'யின் வெற்றி ஊர்வலத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்புகளை காட்ட முற்பட்ட வங்காளத்தின் போலியான அறிவுஜீவிகள் மீது கொல்கத்தா தெருக்களில் போலியான தடியடி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்ற முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு சில காலம் பிடித்தது. நவம்பர் 13 அன்று, “அவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கப்பட்டது'' என்று கூறினார். மறுநாள், 14 நவம்பர் அன்று, “நான் நேற்று கூறியதிலிருந்து நான் மாறவில்லை. மாறவில்லை. மாறவில்லை'' என்று மீண்டும் கூறினார்.

உள்ளார்ந்த பாசிச போக்குடைய குணங்களை கொண்ட பார்ப்பனர்கள், நாடாளுமன்ற ஜனநாயக முறையில் அறிவு முதிர்ச்சி பெற்ற மனிதர்களாய், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக அல்லது ஒரு சாதாரண குடிமகனாக, எந்தச் சூழலிலும் இதைவிட குறைந்த ஆணவமுடைய சொற்களைப்பயன்படுத்தும் திறனற்றவராக அவர் இருக்கிறார்.

2007, டிசம்பர் 5 நாளிட்ட, "டெலிகிராப்' இதழ், “முதலமைச்சர் தொனி மாறுகிறார்'' என்று தலைப்பிட்டு எழுதியது. ஆனால், அது பொருத்தமற்ற தலைப்பு. ஏனெனில், மக்கள் மீது மற்றொரு தாக்குதலை நடத்துவதற்கான ஒரு கால அவகாசத்தை அளிப்பதற்காகவோ பாதிக்கப்பட்டவர்களான தலித் – பெரும்பான்மை தொல்குடி மக்கள் “அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்பது'' என்ற கொள்கையை கற்றுக்கொள்ளக் கூடாது என்ற நோக்கத்துடனான தனது பாணியை மட்டும் அவர் மாற்றிக் கொண்டார். தன்னை தேர்ந்தெடுத்த மக்களை, மக்கள் பிரதிநிதியாக தனது நடவடிக்கைகளுக்காக தான் யாருக்கு பதில் சொல்ல வேண்டுமோ அந்த மக்களை படுகொலை செய்த பின், தங்களின் விடுதலைக்காக, (தன்னைப் பின்பற்றி) மக்கள் வன்முறையில் இறங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

“நான் அதை சொல்லியிருக்கக் கூடாது. ஏனெனில், தற்போது எனக்கு அமைதி வேண்டும். அனைவருக்குமான அமைதி, அனைத்துத் தரப்பினருக்குமான அமைதி.'' மக்களை கொன்றொழித்தபின் எந்தவொரு அடக்குமுறையாளரும், சர்வாதிகாரியும் அமைதியையே நாடுவார். முதலமைச்சர் அமைதிக்கான வேண்டுகோளை விடுத்து இரண்டு நாட் களுக்குப் பிறகு, நந்திகிராமுக்கு செல்லும் வழியில் உள்ள பாமன் சாய் கிராமத்தில், பாதி எரிந்த நிலையில் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நந்திகிராமை கைப்பற்றும் நடவடிக்கையில், இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியினர் நடத்திய வன்முறையில் இறந்தவர்களின் உடல்களை அழிக்கும் முயற்சி இதுவென சந்தேகங்கள் எழுந்துள்ளன.

- எஸ்.கே. பிஸ்வாஸ்

தமிழில்: பூங்குழலி

Pin It