உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜு அவர்கள், தற்பொழுது "இந்திய பிரஸ் கவுன்சில்'இன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். "பிரஸ் கவுன்சில்' தலைவராகப் பொறுப்பேற்றவுடன் நடந்த ஊடக ஆசிரியர்கள் சந்திப்பில், இந்நாட்டில் செயல்படும் ஊடகங்கள் குறித்து தனது கண்டனத்தை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, 1.11.2011 அன்று, சி.என்.என். – அய்.பி.என். ஆங்கிலத் தொலைக்காட்சியில் கரன் தாப்பருக்கு அளித்த நேர்காணலிலும், இதே கருத்துகளை உறுதி செய்துள்ளார். ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்து 'தலித் முரசு' தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில், ஊடகங்களுக்கு கடிவாளமிடும் "பிரஸ் கவுன்சில்' தலைவரே இத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருப்பதை கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், அச்சு ஊடகத்தில் தமிழிலும் ('தினகரன்' நாளேடு தவிர) ஆங்கிலத்திலும் வெளிவராத நிலையில், இந்நேர்காணலை இங்கு வெளியிடுகிறோம்.

mkatju_370பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவரான நீங்கள், ஊடகங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? நீங்கள் ஊடகங்கள் குறித்து ஏமாற்றமடைந்திருக்கிறீர்களா?

மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.

ஆக, ஊடகங்கள் குறித்து மிகவும் தாழ்வான கருத்தையே கொண்டுள்ளீர்கள்?

உண்மையில், ஊடகங்கள் குறித்து மிகவும் மோசமான கருத்தையே கொண்டுள்ளேன்.

இதை உண்மையாகத்தான் கூறுகிறீர்களா?

நிச்சயமாகத்தான்! ஊடகங்கள் மக்களின் நலன்களுக்காகப் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மக்களின்

நலன்களுக்காகப் பணிபுரியவில்லை. மேலும், அவர்கள் சில நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலையில் பணிபுரிகின்றனர்.

சரி. ஊடக ஆசிரியர்களுடனான அதே உரையாடலில் நீங்கள், "மக்கள் அறிவுபூர்வமான கருத்துகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில், உண்மையான மற்றும் சார்பற்ற செய்திகளை வழங்குவது ஊடகங்களின் அடிப்படையான பணிகளில் ஒன்று' என்றும் கூறியிருக்கிறீர்கள். அது, ஒட்டுமொத்தமாக நிகழவேயில்லை என்கிறீர்களா? அல்லது போதுமான அளவிலும் திறனான வகையிலும் நடைபெறவில்லை என்கிறீர்களா?

நீங்கள் முதலில் நாம் வாழும் தற்போதைய சூழலின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா தனது வரலாற்றில் ஒரு மாற்றத்தின் காலத்தில் இருக்கிறது. நிலவுடைமை – வேளாண் சமூகத்திலிருந்து நவீன தொழிற்சார் சமூகத்தை நோக்கிய மாற்றம்; வரலாற்றில் மிகவும் வலியும் வேதனையும் மிகுந்த காலகட்டம் இது. இதே மாதிரியான ஒரு காலத்தை அய்ரோப்பா கடந்த போது, ஊடகங்கள் மிகப் பெரும் பணியாற்றின. அய்ரோப்பிய சமூகத்தை நிலவுடைமை சமூகத்திலிருந்து நவீன சமூகத்திற்கு மாற்ற அது பேருதவியாய் இருந்தது.

அது இந்தியாவில் நடக்கவில்லையா?

இல்லை. இங்கு நேர் எதிராக நடக்கிறது. அய்ரோப்பாவில், ரூசோ (பிரெஞ்சு சிந்தனையாளர்), தாமஸ் பெயின் (பிரித்தானிய சிந்தனையாளர்) மற்றும் திதேராத் (பிரெஞ்சு சிந்தனையாளர்) போன்ற பெரும் எழுத்தாளர்கள் இருந்தனர். "கடைசி சாமியாரின் குடலை உருவி, அதில் கடைசி மன்னனை சுருக்கிடும் வரை மக்கள் விடுதலை பெற முடியாது' என திதேராத் சொன்னார்.

அவர்களோடு ஒப்பிடும்போது, இந்தியா கடந்து கொண்டிருக்கும் இந்த மாற்றத்திற்கான காலத்தில் என்ன மாதிரியான பங்கை இந்திய ஊடகங்கள் செய்கின்றன?

இந்திய ஊடகங்கள், பெரும்பாலும், மக்களுக்கு எதிரான பங்கையே ஆற்றுகின்றன. இதை மூன்று விதத்தில் விவரிக்கிறேன். முதலாவதாக, அடிப்படையில் பொருளாதாரச் சிக்கல்களாக இருக்கக் கூடிய உண்மையான சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தை அது திசை திருப்புகிறது. 80 விழுக்காடு மக்கள் கொடுமையான வறுமை, வேலையின்மை சூழலில், விலைவாசி உயர்வை எதிர்கொண்டு, மருத்துவ வசதிகளின்றி வாழ்கின்றனர். நீங்கள், இந்த சிக்கல்களிலிருந்து கவனத்தை திசை திருப்பி, மாறாக, திரை நட்சத்திரங்களையும், ஆடை அலங்கார நிகழ்வுகளையும், கிரிக்கெட்டையும் முதன்மைப்படுத்தி, ஏதோ அவைதான் மக்களின் உண்மையான சிக்கல்கள் போல காட்டுகிறீர்கள்.

ஆக, ஊடகங்கள் ஆடைஅலங்காரம், திரை நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட்டை ஒரு போதைப் பொருள் போன்று பயன்படுத்துகிறார்களா?

ஆம். கிரிக்கெட் பெரும்பான்மை மக்களுக்கு போதைப் பொருளாகத்தான் உள்ளது. ரோம் நாட்டு அரசர்கள் கூறுவார்களாம், "மக்களுக்கு உணவு கொடுக்க முடியாவிட்டால் அவர்களுக்கு சர்க்கஸ்சை காட்டுங்கள்' என்று. இந்தியாவில் உணவு அளிக்க முடியாவிட்டால், அவர்களை கிரிக்கெட் பார்க்க அனுப்புங்கள் என்பதாக உள்ளது. நிறைய தொலைக்காட்சிகள், ஏதோ கிரிக்கெட்தான் நாட்டின் சிக்கல் என்பது போல இரவும் பகலும் அதையே காட்டுகின்றன.

ஊடகங்கள் மக்களுக்கு எதிராக இருப்பதை மூன்று விதத்தில் விளக்குவதாக சொன்னீர்கள். ஒன்று சொல்லியிருக்கிறீர்கள். மற்ற இரண்டும் என்ன?

இரண்டாவதாக, ஊடகங்கள் அடிக்கடி மக்களைப் பிளவுபடுத்துகின்றன. இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. ஏனெனில், இங்கு குடியேறியவர்கள் அதிகம். எனவே, நாம் ஒருவரை ஒருவர் மதித்து ஒன்றுபட்டு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மும்பை, தில்லி, பெங்களூர் என்று எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், சில மணி நேரங்களுக்குள், ஏறத்தாழ எல்லா தொலைக்காட்சிகளுமே, "இந்திய முஜாகிதீன்' அல்லது "ஜெய்ஷ் இ முகமது' அல்லது "ஹர்கத் உல் ஜிஹாத்' அல்லது ஏதோவொரு முஸ்லிம் பெயரைக் கொண்ட அமைப்பு இதற்கு பொறுப்பேற்று இருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதாகவோ, குறுஞ்செய்தி வந்திருப்பதாகவோ காட்டத் தொடங்குகின்றன. ஒரு மின்னஞ்சலையோ, குறுஞ்செய்தியையோ எந்தவொரு தவறான மனிதரும் அனுப்பலாம். ஆனால், அதை தொலைக்காட்சியில் காட்டுவதாலும், மறுநாள் அச்சில் வெளிவருவதாலும், எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் மற்றும் குண்டு வீசுபவர்கள் என்ற செய்தியை நீங்கள் பரப்புகிறீர்கள். முஸ்லிம்களை கொடூரமானவர்களாக சித்தரிக்கிறீர்கள். ஆனால், இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் 99 விழுக்காடு மக்கள் நல்லவர்களே.

இதன் மூலம் ஊடகங்கள் அக்கறையற்று இருப்பதாக நினைக்கிறீர்களா அல்லது ஊடகங்கள் திட்டமிட்டே கவனமற்றும், செய்தியை உறுதிப்படுத்த தனது அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தாமலும் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் இன்னமும் மோசமாக நினைக்கிறேன். மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்த ஊடகங்கள் எடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கை இதுவென நினைக்கிறேன். இது, தேச நலனுக்கு முற்றிலும் முரணானது.

ஊடங்கள் திட்டமிட்டே மக்களைப் பிளவுபடுத்துகின்றன என்றா சொல்கிறீர்கள்?

ஆம். வேறு என்ன இது? குண்டு வெடிப்பு நடந்து சில மணி நேரங்களிலேயே, ஏதோ ஒரு முஸ்லிம் அமைப்பிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது அல்லது ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது என்று முஸ்லிம் சமூகத்தையே நீங்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறீர்கள் என்றால் அது எதைக் காட்டுகிறது?

ஊடகங்கள் மக்களுக்கு எதிராக இருப்பதை எடுத்துரைக்க மூன்று சான்றுகள் இருப்பதாகக் கூறினீர்கள். இரண்டை கூறிவிட்டீர்கள். மூன்றாவது என்ன?

மூன்றாவதாக, நான் முன்பே கூறியது போல, இந்தியா நிலவுடைமைச் சமூகத்திலிருந்து நவீன சமூகத்திற்கு மாறுவதற்கான காலகட்டத்தில் உள்ளது. அய்ரோப்பாவில் இத்தகைய காலகட்டத்தில் அய்ரோப்பிய ஊடகங்கள் செய்ததைப் போல, நாட்டை முன்நடத்த உதவக்கூடிய அறிவியல்பூர்வமான சிந்தனைகளை ஊடகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இங்கு ஊடகங்கள் மூடநம்பிக்கைகளையும், சோதிடத்தையும் அது போன்றவற்றையும் ஊக்கப்படுத்துகின்றன. உங்களுக்குத் தெரியும் – இந்நாட்டின் 80 முதல் 90 விழுக்காடு மக்கள், சாதி, மதம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றில் ஆழமாக வேரூன்றியவர்களாக, மனதளவில் மிகவும் பின் தங்கியுள்ளனர். அறிவுத் தெளிவு பெற்ற இந்தியாவின் உறுப்பினர்களாக அவர்களை ஆக்கும் விதத்தில் அவர்களை உயர்த்தி, ஒரு மேம்பட்ட உளவியல் நிலைக்கு அவர்களை கொண்டு வர ஊடகங்கள் பணிபுரிய வேண்டுமா அல்லது அவர்களின் நிலைக்குத் தன்னை தாழ்த்தி, அவர்கள் பின்தங்கிய நிலையை மாறாமல் காக்கும் வேலையை செய்ய வேண்டுமா? சுத்த ஏமாற்று வேலையான சோதிடத்தை நிறைய தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. சோதிடம் ஒரு முழு மூடநம்பிக்கை. "இன்று இந்த நிறத்தில் சட்டை அணிந்தால் உங்களுக்கு மிகவும் நல்லது' என்பதெல்லாம் என்னது?

தொடக்கத்தில், உங்களுக்கு ஊடகங்கள் மீது மிகவும் தாழ்வான கருத்தே இருப்பதாகக் கூறினீர்கள். ஊடகங்கள் குறித்து மிகவும் ஏமாற்றமடைந்து இருப்பதாகக் கூறினீர்கள். ஆனால், உங்களுக்கு ஊடகங்கள் பற்றி சொல்லிக் கொள்ளும்படியான கருத்தே இல்லாதது போல் எனக்குத் தோன்றுகிறது.

மிகவும் மதிக்கத் தகுந்த ஊடகவியலாளர்கள் சிலரை நான் சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக, திரு. பி. சாய்நாத். அவர் மீது எனக்கு மிகவும் மதிப்புண்டு. விவசாயிகளின் தற்கொலை குறித்து அவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். "தி இந்து' இதழில், ஏறத்தாழ இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருந்தார்.

ஆனால், ஊடகத்தைச் சேர்ந்த சில தனி நபர்களை குறிப்பிடுவதற்கு பதில், ஒட்டுமொத்தமாக ஊடகங்களைப் பற்றிய உங்கள் கருத்து மிகக் குறைவாகவே இருக்கிறதோ?

ஆம். பொதுவாக மிகத் தாழ்ந்த கருத்தே உள்ளது. ஊடகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் மீது எனக்கு மோசமான கருத்தே உள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், பொருளாதார கருத்தியல்கள் குறித்தோ, அரசியல் அறிவியல், இலக்கியம், தத்துவம் என எவை குறித்தும் அவர்களுக்கு போதுமான அறிவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் இதையெல்லாம் படித்திருப்பார்கள் என்றே நான் நினைக்கவில்லை.

எனவே, இந்த நிலையில், ஊடகங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்றும், அவை இந்தியாவை கைவிடுகின்றன என்றும் கூறுகிறீர்களா?

ஆம். நிச்சயமாக. ஏனெனில், இந்த மாற்றத்திற்கான காலகட்டத்தில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நான் முன்பே கூறியது போல, ஊடகங்கள் கருத்தியல்களை கையாளக்கூடியவை. வெறுமனே பொருட்களோடு உறவாடக்கூடிய சாதாரண தொழில் அல்ல. அது கருத்தியல்களை கையாளக் கூடியது. எனவே, மக்களுக்கு நவீன, அறிவியல் கருத்தியல்கள் தேவை.

அது நடக்கவில்லை?

எதிர்மறையாக நடக்கிறது.

ஊடகங்கள் இந்தியாவை மேலும் மூடத்தனமாக, மேலும் சாதிய சிந்தனையுடையதாக, மத அடிப்படையில் மேலும் பிளவுபட்டதாக ஆக்கிக் கொண்டிருக்கிறது என நீங்கள் உண்மையாகவே கூறுகிறீர்களா?

ஆம். நிச்சயமாக. நீங்கள் தொலைக்காட்சிகளைப் பாருங்கள். பெரும்பான்மையானவை சோதிடத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. "இந்த ராசி, அந்த ராசி' என்று. என்ன இதெல்லாம்?

சரி. ஊடகங்களைப் பற்றி உங்களுக்கு இருக்கும் கருத்தையும் பார்வையையும் நான் புரிந்து கொண்டேன். அடுத்து, சாதாரண மக்கள் பொதுவாக ஊடகங்கள் மீது வைக்கக் கூடிய குற்றச்சாட்டுகளை உங்கள் முன் வைக்கிறேன். பிரஸ் கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் அந்த குற்றச்சாட்டுகளை நீங்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை? ஊடகங்கள் எப்போதும் துல்லியமாக இருப்பதில்லை என்று மக்கள் அடிக்கடி சொல்கின்றனர். அதனிலும் மோசமாக, ஊடகங்கள் உண்மைகளை திரிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். மக்களின் கருத்துகளையும் சொற்களையும் திரிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த கருத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

நிச்சயமாக. 2009–ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது காசு கொடுத்து வந்த செய்திகள் பற்றிய மோசடியை நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். முன்பெல்லாம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் செய்தியாளர்கள் சென்று பணம் கேட்பார்கள். "எனக்கு 10,000 ரூபாய் தாருங்கள். உங்களுக்கு சாதகமாக நான் செய்தி போடுகிறேன்' என்று சொல்வார்கள். பின்னர், முதலாளிகளுக்கு புத்திசாலித்தனமான யோசனை தோன்றியிருக்கும். தங்களிடம் பணிபுரியும் செய்தியாளர்கள் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்? ஏன் நாம் பணம் சம்பாதிக்கக் கூடாது? அதன் பின் அவர்கள், "நீங்கள் எனக்கு ஒரு கோடி தாருங்கள். உங்களுக்கு ஒரு தொகுப்பு வழங்கப்படும். முதல் பக்க தலைப்புச் செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்' என்று சொன்னார்கள். இதனால் 2009 தேர்தலில் நம்மை உறையச் செய்யும் ஒன்று நடந்தது. நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வேட்பாளர் "அ' சொல்கிறார், தான் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக! முதல் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்கு, போட்டி வேட்பாளர் பணம் செலுத்தியிருக்கிறார். வேட்பாளர் "அ', வைப்புத் தொகையை இழப்பார் என்று அவர் சொல்கிறார். பாருங்கள், ஒரே பக்கத்தில், மிகப் பெரும் பெரும்பான்மையில் அவர் வெற்றி பெறுகிறார். அத்துடன் அதே பக்கத்தில் அவர் வைப்புத் தொகையையும் இழக்கிறார்.

ஆக, இதனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால், அது காசு கொடுத்து வாங்கப்படும் செய்தியாக இருந்தாலும், ஊடகங்கள் உண்மைகளை திரித்தும் சிதைத்தும் சொல்கின்றன என்ற உங்கள் குற்றச்சாட்டாகட்டும், ஊடகங்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி ஏற்க முடியாது அவை உண்மையல்லாதவையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம் என்று சொல்கிறீர்கள்?

ஆம். நிச்சயமாக. ஏனெனில், ஒரு செய்தியை எழுதுவதற்காக உங்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது எனில், நீங்கள் உண்மையில் உணர்ந்தவற்றை எழுதவில்லை என்றுதானே பொருள்? நீங்கள் என்ன எழுதவேண்டும் என்று சொல்லப்படுகிறதோ, அதை எழுதுவதற்காகத்தான் உங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.

சாதாரண மக்கள் ஊடகங்கள் மீது வைக்கும் இரண்டாவது விமர்சனம் என்னவெனில், ஒன்றுமறியா மக்களின் நன்மதிப்பை ஊடகங்கள் கெடுக்கின்றன என்பது. அவர்களை தவறாக முன்னிறுத்தியோ, அதனினும் மோசமாக, தகுந்த காரணமோ சான்றோ இன்றி, அவர்கள் குற்றவாளிகள் எனப் பரிந்துரைத்தோ, கோரியோ, அறிவித்தோ அவர்களின் நன்மதிப்பை கெடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த கருத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

ஆம். இதற்கு சான்றாக நானொரு நிகழ்வை கூறட்டுமா? ஒரு தொலைக்காட்சி நிறுவனம், மிகவும் பெயர் பெற்றது, அதனால் நான் அதன் பெயரை குறிப்பிடவில்லை, நான் தலைமை நீதிபதியாக இருந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரின் படத்தையும் நன்கு அறியப்பட்ட ஒரு குற்றவாளியின் படத்தையும் அடுத்தடுத்து காட்டியது. அதுவும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு. அந்த நீதிபதி ஏதோ நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக பறித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு. நான் தனிப்பட்ட முறையில் விசாரித்து அது பொய்யென அறிந்தேன். அவர் ஒரு கிராமப்புறத்தில் நிலத்தை வாங்கியுள்ளார். வெளிப்படையாக, சந்தை விலையில் வாங்கியுள்ளார்.

அதற்கான எல்லா ஆவணங்களும் என்னிடம் உள்ளன. நான் அவரை காணச் சென்ற போது அவர் அழுது கொண்டிருந்தார். தான் ராஜினாமா செய்யப்போவதாக அவர் கூறினார். "தயவு செய்து ராஜினாமா செய்யாதீர்கள். நான் ஏதாவது செய்ய முயல்கிறேன்' என்று கூறினேன். தவறான, ஊழல்வாதியான ஒரு நீதிபதியை நீங்கள் கண்டியுங்கள். நானும் உங்களுடன் நிற்கிறேன். ஆனால், ஒரு நேர்மையான நீதிபதியை நீங்கள் ஏன் கண்டிக்க வேண்டும், அதுவும் அவர் மிகச் சரியாக இருக்கும்போது?

ஊடகங்கள், அக்கறையின்மை காரணமாகவோ, திட்டமிட்டோ ஒன்றுமறியா மக்களின் நன்மதிப்பில் களங்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆம். ஒரு செய்தியை பரபரப்பாக்குவதற்காக, சரியான விசாரணையின்றி நீங்கள் ஒன்றை வெளியிட நினைக்கிறீர்கள். இவற்றையெல்லாம் வெளியிடுவதற்கு முன் சரியான விசாரணையும் ஆய்வும் நடத்தப்பட வேண்டும்.

ஆக, ஊடகங்கள் எவ்வித ஆய்வையும் விசாரணையும் நடத்துவதில்லை என்கிறீர்கள்?

சில நேரங்களில் செய்யலாம். ஆனால், சில நேரங்களில் செய்வதில்லை. இந்நிகழ்வில் அவர்கள் செய்யவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

செய்தித் தொலைக்காட்சிகள் குறித்து கொஞ்சம் கவனம் செலுத்துவோம். தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களின் தரம் குறித்து பெரிதும் அக்கறை உள்ளது. அந்த விவாதங்களை நீங்கள் பாராட்டுகிறீர்களா அல்லது விமர்சிக்கிறீர்களா?

பெரும்பாலும் இந்த விவாதங்கள் மேலோட்டமாகவே உள்ளன. முதன்மையாக, எவ்விதக் கட்டுப்பாடும் அதில் இல்லை. விவாதத்தில் 4 பேர் பங்கேற்கிறார்கள் என்றால், அனைவரும் ஒரே நேரத்தில் பேசுகின்றனர். இதுதான் கட்டுப்பாடுள்ள மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையா? நீங்கள் பேசும் போது, நான் ஒரு போதும் குறுக்கிட மாட்டேன். ஆனால், நான் பேசும்போது நீங்கள் ஏன் குறுக்கிட வேண்டும்?

நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மரியாதையற்ற முறையில் குறுக்கிடுகிறார்கள் என நினைக்கிறீர்களா?

நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அல்லர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அந்த 4 பேர். ஒருவர் பேசும்போது, வேறொருவரும் அதே நேரத்தில் பேசத் தொடங்குகிறார். நீங்கள் யார் பேசுவதை கேட்பீர்கள்?

தொலைக்காட்சிகளில் வரும் விவாதங்கள் சூட்டை கிளப்புகின்றனவே ஒழிய வெளிச்சத்தைத் தருவதில்லை என்று மக்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உண்மையில் அவர்களின் பணி வெளிச்சத்தைத் தருவது.

இது பெரும்பாலும் சரிதான். இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிச்சத்தைத் தரவேண்டும். மக்களுக்கு அறிவூட்ட வேண்டும். அறிவுபூர்வமான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். வெறுமனே கூச்சலிடுவது அல்ல.

ஊடகங்களின் பொதுத்தன்மை தாழ்ந்து வருகிறது என்று நம்புகிறீர்கள்.

சொல்வதற்கு வருந்துகிறேன். ஆனால், பெரும்பான்மையானவர்கள் மிகவும் மோசமான அறிவுநிலையில் உள்ளனர். பொருளாதார கருத்தியல், அரசியல் அறிவியல், தத்துவம் அல்லது இலக்கியம் இவை பற்றி ஊடகவியலாளர்களுக்கு ஏதேனும் கருத்து இருக்குமா என சந்தேகிக்கிறேன். இவற்றை நன்றாகக் கற்றிருப்பார்களா என்ற சந்தேகம் எனக்குள்ளது. உண்மையில், இவற்றை அவர்கள் கற்றிருக்க வேண்டும்.

நீதிபதி கட்ஜு அவர்களே, செய்தி தொலைக்காட்சிகளை மேம்படுத்த தேவையென நீங்கள் நம்பும் நடவடிக்கைகள் பற்றி பேசுவோம். முதன்மையாக, செய்தி தொலைக்காட்சிகளும், மின்னணு ஊடகங்களும் பிரஸ் கவுன்சிலின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். நீதிபதி வர்மா தலைமையிலான செய்தி ஒலிப்பரப்பாளர்கள் சங்கத்தின் சுய கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த ஊடகங்களின் முயற்சி போதுமானது அல்ல என்று ஏன் நினைக்கிறீர்கள்?

அது குறித்து எவ்வித மேல் நடவடிக்கையையும் நான் காணவில்லை. ஊடகங்கள் அறிவுறுத்தப்படவேண்டும். நாம் ஏழை நாட்டில் வாழ்கிறோம். இங்கு ஏழை மக்களின் சிக்கல்கள் பேசப்பட வேண்டும் என்பதை ஊடகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நீங்கள் என்ன காட்டுகிறீர்கள்? "லேடி காகா(மேற்கத்திய பாப்பிசை பாடகர்) வந்துவிட்டார்.' நேற்று நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். செய்தித்தாள்களில் படித்தேன். இதுவா நாட்டின் சிக்கல்? "கரீனா கபூர் "மேடம் டுஸ்ஸாட்'டில் (லண்டனில் உள்ள புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலை காட்சியகம்) தன்னுடைய சிலையை கண்டார். அவர், அது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறினார்.' இதுதான் தொலைக்காட்சியில் வருகிறது, அதுவும் தலைப்புச் செய்திகளில்.

நீதிபதி வர்மா தலைமையில் சுய கட்டுப்பாடு விதிகளை ஏற்படுத்த, செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கம் எடுத்த முயற்சிகள் வேலை செய்யவில்லை என்று கூறுகிறீர்களா?

ஆம். அது வேலையே செய்யவில்லை. ஊடகங்களுக்கு ஏதாவது ஓர் அச்சம் இருக்க வேண்டும் என்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.

பிரம்பு இல்லை என்றால், ஊடகங்கள் எளிதாக அதை புறந்தள்ளிவிடுகிறார்கள்.

ஆம். நிச்சயமாக. நான் பல நேர்காணல்களில் குறிப்பிட்டதைப் போல, பிரம்பு சில ஆக மோசமான சூழல்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்.

வேறு சொற்களில் சொல்வதானால், ஊடகங்கள் அஞ்சக்கூடிய தண்டனை இருக்க வேண்டும். இல்லையென்றால், ஊடகங்கள் தங்களுடைய பங்கை முழுமையாக உணர்ந்து, சரியாக செயல்படமாட்டார்கள் என்பது உங்கள் கருத்து?

நிச்சயமாக.

பிரஸ் கவுன்சிலின் அதிகாரத்திற்குள் செய்தி தொலைக்காட்சிகளை அல்லது ஒட்டுமொத்தமாக மின்னணு ஊடகங்களையும் கொண்டு வர என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் அல்லது எடுக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?

மின்னணு ஊடகங்களை பிரஸ் கவுன்சிலின் கீழ் கொண்டுவர வேண்டுமென நான் பிரதமருக்கு எழுதியுள்ளேன். அது "ஊடக கவுன்சில்' என்று அழைக்கப்பட வேண்டும். மேலும், அதற்கு கூடுதலாக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். அந்த அதிகாரங்கள் ஆக மோசமான சூழலில் மட்டுமே பயன்படுத்தப்படும். செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. அம்பிகா சோனியை நான் சந்தித்தேன். அவரிடம் தான் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தைக் கொடுத்தேன். அதை பரிசீலிப்பதாக பிரதமரிடமிருந்து பதில் வந்துள்ளது. வெள்ளிக்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் திருமதி. சுஷ்மா சுவராஜை சந்தித்தேன். கடிதத்தின் நகலை அவரிடம் அளித்தேன். இரண்டு தேசிய கட்சிகளுக்கு இடையிலும் ஒத்த கருத்து இல்லாவிடில், இந்த சட்டம் நிறைவேறாது என்று அவரிடம் கூறினேன்.

திருமதி. சுவராஜிடமிருந்து என்ன பதில் கிடைத்தது?

இந்த விசயத்தைப் பொருத்தவரையில், ஒத்த கருத்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

பிரதமரிடமிருந்து உங்களுக்கு பதில் கிடைத்திருக்கிறது. அவரது பதிலில் அவர் என்ன கூறியுள்ளார்? உங்களது கருத்தை அவர் ஏற்றுக் கொண்டுள்ளாரா?

இல்லை. பரிசீலிப்பதாகத்தான் அவர் எழுதியுள்ளார். எழுத்துபூர்வ பதிலை பெற்றுள்ளேன். நான் அவரை இன்னமும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.

பிரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரங்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். மேலும், சரியான முறையில் கட்டுப்படுத்த அது தேவையென நினைக்கிறீர்கள். அதை மிக மோசமான சூழலில் தான் பயன்படுத்துவீர்கள் என எனக்கு தெரியும். ஆனாலும் என்ன மாதிரியான கூடுதல் அதிகாரங்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றன?

அரசு விளம்பரங்களைத் தடுக்கும் அதிகாரம், மிகவும் ஆட்சேபகரமான முறையில் நடக்கும் ஊடகங்களின் அனுமதியை சில காலத்திற்கு தடுத்து வைக்கும் அதிகாரம் ஆகியவை வேண்டும். அபராதம் விதிக்கும் அதிகாரம் வேண்டும். எல்லாம் மிக மோசமான சூழல்களில் மட்டும்தான். பொதுவாக, ஓர் ஊடகம் தவறிழைக்கிறது என்றால், நான் அவர்களை அழைத்துப் பேசுவேன். இது சரியல்ல என்று கூறுவேன். உரையாடலின் மூலம் 80 விழுக்காடு மக்களை சீர்செய்துவிடலாம்.

உங்களுடைய சரியான சொற்கள் என்னவெனில், ஊடகங்கள் சரிசெய்யவே இயலாத நிலைக்குச் சென்றுவிட்டது உறுதிப்படுத்தப்பட்டால், கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படும் என்பது. இதை சிலர் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக நினைக்கிறார்களே?

கேளுங்கள், ஜனநாயகத்தில் அனைவருக்கும் பதில் சொல்லும் கடமை உள்ளது. எந்த சுதந்திரமும் முழுமையானதல்ல. ஒவ்வொரு சுதந்திரமும் சில நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவையே. நான் கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள். நாம் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். 

தமிழில் : பூங்குழலி

Pin It