உடனடியாகத் தமிழ்நாட்டை விட்டுத் துரத்தி அடிக்கப்பட வேண்டியவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற முடிவுகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். ஆளுநர் ஏற்றுக் கெண்டால்தான் ஒவ்வொரு முடிவும் சட்டமாகும். ஆளுநர் எத்தனை நாட்களுக்குள் அரசின் முடிவுகளுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. அரசின் கருத்துக்களை, முடிவுகளை ஆளுநர் தன் விருப்பப்படி இழுத்தடிக்கலாம். ஆளுநரின் இழுத்தடிப்பிலிருந்து தப்பிக்கும் உரிமை தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆளுநருக்கு மீண்டும் முடிவுகளை அனுப்பி அவர் பதிலளிக்கவில்லை என்றாலும் அரசு அம்முடிவை நடைமுறைப் படுத்தச் சட்டம் அனுமதிக்கிறது. தமிழக அரசு தற்போது இந்த நிகழ்வை நோக்கி நகர்கிறது. மாநில அரசுகளை பொருத்தவரை ஆளுநர் என்ற பதவி தேவையற்ற ஒன்று. இதன் காரணமாகத்தான் அண்ணா “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை” என்றார்.

நடுவண் அரசுக்கு மாநில அரசுகளைக் கண் காணிக்கவும் கண்டிப்பதற்கும் கலைக்கவும் ஆளுநர் அவசிய மானவராக இருக்கிறார். நடுவண் அரசு வல்லாதிக்கம் செய்ய தேவையான ஒரு நபராகவே ஆளுநர் செயல்படுவார், செயல்படுகிறார். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நடுவண் அரசின் செயல் பாடுகளில் இருந்தவர். மோடி காலத்திலேயே நாகலாந்து பிரச்சனையில கலந்துகொண்டார். குறிப்பாக நாகலாந்து விடுதலைக் கட்சிகளைத் தேர்தலில் பங்கேற்க செய்யும் அரசின் முயற்சியில் ஈடுபட்டவர் இவர். தேர்தல் பாதையில் செயல்பட்ட கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த ஆட்சியின் போது இவர் ஆளுநராக பொறுப்பு ஏற்றார். இவரின் அதிகாரத் திமிரை ஏற்க மறுத்துப் போரிட்டது மக்கள் கட்சியும், காங்கிரசும். குறிப்பாக விரிவான மாணவர் போராட்டம் பொறுப் பிலிருந்து இவரை வெளி யேற்றியது. அதன் பிறகு இவர் தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பொறுப்பு ஏற்றார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக்கு எதிராக இருப்பது இவரது இயல்பு. அதிகாரத் திமிரே இவரின் அடிப்படை குணம் என்பதை தமிழக மக்கள் அறிந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தொடக்கம் முதலே இவருக்கு எதிராகப் போராடி வருகிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆளுநர் தமிழ் நாட்டிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனப் போராடி வருகின்றன. திமுகவும் தனது கட்சி சார்பாக ஆளுநர் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறது.mod and rn raviஆளுநரின் இந்தியக் கொள்கை பார்ப்பனியக் கொள்கை. தேசிய இனங்களை ஏற்காத, அங்கீகரிக்காத பார்ப்பனக் கொள்கை அவரது இயல்பான கொள்கையாகும். தமிழ்நாடு என்ற சொல்லே அவரை அச்சுறுத்துகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற சொல்லாடலையே மறுக்கிறார், வெறுக்கிறார். தமிழகம் என்றே பயன்படுத்துகிறார், இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்டது தமிழ்நாடு என்ற சொல்லாடல். சிலப்பதிகாரம் தமிழ்நாடு என்ற பெயரையும் எல்லையையும் வரையறுத்திக் கூறியது. மொழிப்பற்றும் இனப்பற்றும் இல்லாத, பார்ப்பனப் பற்றும் சமக்கிருதப்பற்றும் மனு ஸ்மிருதி பற்றும் மட்டுமே கொண்ட ஆளுநர் இந்திய தேசிய வாதியாக இருக்கிறார். தமிழ்நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாகாணம் மெட்ராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று காங்கிரஸில் பொறுப்பில் இருந்த சங்கரலிங்கனார் 79 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைந்தார். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய காங்கிரஸ் எதிர்த்தது. காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் எம்.பக்தவச்சலமும் தமிழ்நாடு பெயரை ஏற்க மறுத்தனர். இந்திய கொள்கையில் மூழ்கிக் கிடந்தனர்.

1962 மார்ச் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியால் தமிழ்நாடு கோரிக்கை பாராளுமன்றம் கொண்டு செல்லப்பட்டது. கோரிக்கை தோற்கடிக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியைக் கைப்பறிய பிறகு அண்ணா அவர்களால் 1968-ஜூன் 18ல் தமிழ்நாடு பெயர் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டது. நவம்பர் 23, 1968-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1964 ஜனவரியில் சென்னை சட்டமன்றத்திலும் தமிழ்நாடு கோரிக்கை தோற்கடிக்கப்பட்டது. எத்தனை போராட்டங்களிலினால் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது என்பதை அறிய மாட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. எத்தனை உயிர் தியாகங்கள் என்பதையும் அறிய மாட்டார்.

தமிழ்நாடு என்ற பெயரை கைவிட முயலும் ஆளுநர் ஆர். என். ரவி கட்டாயம் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர் ஏன் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை மறுக்கிறார் என்பது மட்டுமல்ல. சமக்கிருதத்தையும் மனு ஸ்ருமிதியையும் உயர்த்தி பிடிப்பதையே அவரது முதன்மையான தொழிலாக கொண்டு செயல் படுகிறார். தி.மு.க.வுக்கு, எதிரான பிரச்சாரகராகவும், தமிழ்நாடு அரசு ஏற்படுத்த முயலும் கொள்கை களை உடனடியாக நிறைவேற்ற தடை விதிப்பவராகவும் இருப்பது முக்கியமான காரணங்களாகும்.

ஆளுநர் என்ற பதவி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். நாட்டில் கட்டாயப் படுத்தப்பட்டு இணைக்கப் பட்ட மாநிலங்களும், மாநில உரிமைகள் கோரிக் கொண்டிருக்கும் மாநிலங்களும், அனைத்து உரிமைகளும் மாநிலங்கள் சார்ந்ததே என்று கூறும் இயக்கங்களும், தனிநாட்டு உரிமைகளை முன் வைத்தும் செயல்படும் இயக்கங்களும் இந்தியத் தால் ஒடுக்கப்படுகின்றனர். ஆளுநர் என்ற பதவியே தேசிய இன உரிமைகளை முற்றாக மறுப்பதற்கான அமைப்புதான். இந்திய அரசின் அதிகாரபூர்வமான ஒற்றன் ஆளுநர். எனவே ஆளுநர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.

உலகத்தில் பெரும்பாலான நாடுகளை கைப்பற்றிய இங்கிலாந்திற்கு நாடுகளை அடக்கவும் ஒடுக்கவும், கண்காணிக்கவும் ஆளுநர் தேவைப்பட்டார். உலகு எங்கும் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் இங்கிலாந்தைப் பணியச் செய்தது. இங்கிலாந்தின் ஆளுநர்கள் இங்கிலாந்தோடு விரட்டப்பட்டனர். ஆனால் அதிகாரம் பெற்ற இந்தியா தேசிய இனங்களைக் கண்காணிக்கவும், ஒடுக்கவும் ஆளுனரை தூக்கிப் பிடிக்கிறது. தேசிய இனங்களின் விடுதலையும் ஒற்றுைமையும் வரலாற்றில் தவிர்க்க முடியாதது. ஆளுநர் அப்போது விரட்டப்படுவதும் வரலாற்றில் தவிர்க்க முடியாதது.

- தமிழ்த் தேச இறையாண்மை இயக்கம்