பிப். 14 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காதலர் நாள் விழாவில் மனநல மருத்துவர் சிவபாலன், காதல் - காதலுக்குப் பிறகான திருமண வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த ஆழமான உளவியல் சிக்கல்களை விளக்கினார். அவரது உரை:
ஒரு மனநல மருத்துவராக பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். பல கூட்டங்களில் பேசியுள்ளேன். அவைகளில் பொதுவாக, மனதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்? மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி? இப்படியான தலைப்புகள் தான் அதிகம் இருக்கும். காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் மத்தியில் பேசுவது ஒரு தனி அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கும் அப்படியான அனுபவமாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.
காலையிலிருந்தே காதலர் தின வாழ்த்துக்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே உள்ளன. Facebook, Whatsapp இப்படி சமூக வலைதளங்களிலும் காதலர் தின வாழ்த்துக்கள் தான் அதிகம் நிரம்பி இருந்தன. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், தமிழ்ச் சமூகம் போல் வேறெந்த சமூகமும் ‘காதலை’ Romanticize (புனிதம்) செய்வது கிடையாது. வேறெந்த சமூகமும் காதலை இப்படி கொண்டாடி இருக்கிறார்களா ? Romanticize செய்திருக்கிறார்களா ? என்றால் இல்லை. இயல்பிலேயே தமிழர்கள் உணர்ச்சி வயப்பட் டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் காதலை இந்த அளவிற்கு புனிதப்படுத்து கிறார்கள் என்று நினைக்கிறேன். எந்த ஒன்றையுமே புனிதப்படுத்திவிட்டோம் என்றால் அதைப் பற்றி தீவிரமாக நாம் சிந்திக்கமாட்டோம். ஏதோ ஒன்றை சொல்லி வைத்துவிட்டார்கள், அதை நோக்கியே செல் வோம் என்று சென்று கொண்டிருப்போம்.
ஒரு பிரச்சினையை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதை நாம் முதலில் Romanticize செய்யக் கூடாது. இதைத் தான் சமூக வலைதள மொழியில் ‘Furniture’ உடைப்பது' (பிம்பத்தை உடைப்பது) என்போம். அப்படி புனிதப்படுத்துதலை நிறுத்திவிட்டு அதனுள் உண்மையாகவே என்ன நடக்கிறது என்று பார்த்தோம் என்றால் அதன் உண்மைத் தன்மை புரிய வரும். இந்த ‘Furniture’ உடைப்புக்கு முன்னோடி பெரியார் தான். அவர் காதலைப் பற்றி என்ன கூறியிருக் கிறார் என்பதை ‘குடிஅரசி’ல் அவர் எழுதியதை அப்படியே இங்கு படிக்கிறேன்.
“காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிது கூட சிறந்தது அல்லவென்பது விளங்கி விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்று கருதி, எப்படி பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்ட தால் அனேகர் தங்களை பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும், பட்டை நாமம் போடு வதும், சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும், வாயில் சிவசிவ என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்தி மான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அது போலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேஷம் போட்டு கண்களை மூடிக் கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும் உண்மையான காதலர்களானால் இப்படி இருப்பார்களே என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அதுபோலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடு கிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.
ஆகவே ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள் இடத் திலும் மற்ற உயர் திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப் பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவ தென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும், மாறக் கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம்”. (குடி அரசு 18.01.1931)
இப்படி ஒரு மிக அற்புதமான கருத்தை காதல் குறித்து வேறு யாரும் இதுவரை கூறவில்லை.
மனநல மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், தத்துவம் படித்துவிட்டுத்தான் வர வேண்டும். எவ்வளவோ தத்துவங்களைப் படித்துள்ளேன். சாக்ரடீஸ், பிளாட்டோ போன்றவர்களின் தத்துவங்களையும் படித்துள்ளேன். எதையும் நான் மிகைப்படுத்தி கூறவில்லை. நான் பயின்ற மனநல பாடங் களில் எந்த தத்துவியலாளரும் காதலை இப்படி விவரிக்கவில்லை. என்ன காரண மென்றால் பெரியார் தத்துவவாதி அல்ல. எதார்த்தவாதியாக இருந்துள்ளார். தத்துவங் கள் என்றாலே என்ன, கட்டுக்கதைகள் தானே! அப்படி எந்த கட்டுக்கதைகளும் இல்லாமல் எதார்த்தத்தில் என்ன உள்ளதோ அதை பேசுவது; அவர் தான் பெரியார்.
பெரியார் கூறியபடி பார்த்தோமென்றால், ‘மற்றவர்களிடம் நாங்கள் சிறந்த காதலர்கள் என்று காட்டிக் கொள்வதற்கு செய்கிறோமே ஒழிய, அன்பு நட்பை விட வேறு என்ன பெரியதாக இருக்கிறது' என்று கேட்கிறார். கிட்டத்தட்ட சமூகத்திலும் அதே நிலைதான் தற்போதும் நிலவுகிறது. முகநூலில் மனைவியைப் பற்றி பத்து பக்கத்திற்கு எழுதுவார்கள். ஆனால் வீட்டில், தலைவலி என்றால் மனைவிக்கு தைலம் பாட்டிலைக் கூட எடுத்து கொடுக்க மாட்டார்கள். எனவே, இவையெல்லாம் மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதற்காகத்தான். எதார்த்தத்தில் அப்படி நாம் இருக்கிறோமா ? எதார்த்தத்தில் இல்லாத ஒன்றை ஏன் பூசி மொழுகுகிறோம்? எனவே காதலை ஏன் புனிதப் படுத்துகிறோம் என்றால் யாரோ ஒருவர் சொல்லிவிட்டுப் போனதை காப்பாற்ற புனிதப்படுத்துகிறோம்.
காதலை புனிதப்படுத்துவதில் தமிழ் சினிமாக்களுக்கு அதிகம் பங்கு உள்ளது. உண்மையான காதல் என்றால் என்ன? பொய்யான காதலென்றால் எது? நட்பு என்றால் எது ? Infactuation (மோகம்) என்றால் என்ன? என்பவைகளைப் பற்றி சாக்ரடீஸை விட அதிகமான தத்துவங்களை தமிழ் சினிமாக்கள் தான் கூறியிருக்கின்றன. ஏற்கெனவே இப்படியான கற்பிதங்களை உருவாக்கி வைத்திருப்பதனால், உண்மையான காதலர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் வெளியில் காட்டிக் கொண்டிருக்கிறோம். இன்று காலையில் இருந்து நடந்து கொண்டிருப்பதும் அப்படித் தான். காதல் என்பது அன்பை விட, நட்பை விட பெரிய விடயம் கிடையாது. அதை Romanticize செய்யத் தேவையில்லை. எதார்த்தத்தில் ஒரு மனிதனுடன் இணக்கமாக வாழ முடிகிறதா? எதார்த்தத்தில் ஒரு மனிதனை உங்களால் சகித்துக் கொள்ள முடிகிறதா? எதார்த்தத்தில் ஒரு மனிதனை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா ? இது மூன்றையும் உங்களால் செய்ய முடிகிறது என்றால் அதற்கு எந்த பெயர் வேண்டுமானா லும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு காதல் என்று வைத்துக் கொண்டு, அதற்கு சிறப்பு இருக்கிறது என்று கூறத் தேவையில்லை.
சினிமாக்களில், உனக்காக அது செய்கிறேன், இது செய்கிறேன் என்று கூறுவார்கள். அதில் என்ன இலக்கு என்றால் திருமணம் தான். திருமணம் நடந்தால் அந்த காதல் முடிந்தது. எனது காதல் வெற்றியடைந்து விட்டது என்று அர்த்தப்படுத்தி வைத்து விட்டார்கள். வேறொருவரிடம் கேட்டால் எனது காதல் தோல்வி என்பார். ஏன் என்றால்? திருமணம் நடக்கவில்லை. கிட்டத்தட்ட காதல் என்றாலே திருமணம் செய்வது தான் இலக்கு. ஆனால், உண்மை என்னவென்றால் காதலின் தேவையே திருமணத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதற்கு முன் இருப்பதெல்லாம் காதல் கிடையாது.
காதல் என்பதே ஒரு Responsibility (பொறுப்பு). காதல் என்பதை ஒரு Commitment (அர்ப்பணிப்பு) என்று சொல்லலாம். நீங்கள் காதலிக்கும் போது, என்ன Commitment, Responsibility இருக்கு? ஆனால் திருமணத்திற்கு பின்பு நிறைய Responsibility, Commitment வருகிறது. பொறுப்புகள் அதிகமாகும்போது சில விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். அல்லது சில விடயங்களை பிடிக்கவில்லை என்றாலும் செய்ய வேண்டி வரும். காதலுக்கும் திருமணத் துக்குப் பிறகான உறவுக்கும் இது தான் முக்கியமான விடயம். காதலில் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்து கொண்டிருக்கலாம். ஒன்றாக இருக்கும் நேரத்தில் இருக்கலாம், வேண்டாம் என்றால் வேண்டாம். ஆனால் திருமண வாழ்க்கையில், தங்களுக்கு பிடித்த சில விடயங்களை செய்யாமலிருக்கணும். பிடிக்காத சில விடயங்களை செய்ய வேண்டி வரும். இதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? தயாராக இருக்க என்ன தேவை? நான் ஏன் இந்த இரண்டையும் செய்ய வேண்டும். கல்யாணம் செய்தால் இதை செய்தாக வேண்டுமா? ஏனென்றால் இங்கு உறவு முக்கியம். எனக்கும் உனக்குமான இந்த உறவு முக்கியம். மற்றவைகளை விட இந்த உறவு தான் முக்கியம்.
நாங்கள், உளவியல் ரீதியாக சில செய்முறைகளை, கலந்தாய்விற்கு (Councelling) வருபவர்களிடம் செய்வோம். “எங்களைப் பொருத்தவரை நீங்கள் நோயாளிகள் அல்ல. உங்களின் உறவு தான் பிரச்சினை. உங்களை சரி செய்ய நாங்கள் முயற்சி செய்யவில்லை. உங்களுக்குள் இருக்கும் உறவைத் தான் சரி செய்ய முயற்சிக்கிறோம்” என்று கூறுவோம். எனவே, இந்த உறவு தான், நமது தனி மனித விருப்பு, வெறுப்பை விட முக்கியமான ஒன்று. இந்த உறவின் மேல் எனக்கு பொறுப்பு இருக்கிறது. என்ன பொறுப்பு ? இந்த உறவு நீடிக்குமா? என்ற பொறுப்பு இருக்கிறது. இந்த உறவு நீடிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ? இதற்கு எழுத்தாளர்களும், தமிழ் சினிமாக்களும் என்ன சொல்வார்களென்றால் ‘விட்டுக் கொடுக்கனும்’. அவர்களுக்காக இதைக்கூட செய்ய மாட்டியா? என்பது தான் அனைவரும் சொல்லக் கூடிய ஒன்று.
என்னிடம் கலந்தாய்விற்கு வருபவர்கள் அதிகம் பேர் கூறுவது என்னவென்றால், காதலித்து திருமணம் செய்தார்கள் ஆனால் சண்டை போடுகிறார்கள் என்று கூறுவார்கள். இதில் ஒரு கட்டுக் கதை உள்ளது. காதலித்து திருமணம் செய்தால் சண்டையே வரக்கூடாது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது ஒரு கட்டுக் கதைதான். காதலித்து திருமணம் செய்தால் அவர்கள் நன்றாக புரிந்திருப்பார்கள் என்பது. காதல் திருமணம் செய்தால் அவர்கள் மிக சிறப்பாக வாழ்வார்கள் என்று நினைப்பதும் கட்டுக்கதை. குடும்ப நல நீதி மன்றங்களில் இப்போது மூன்றில் இரண்டு பங்கு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் விவாகரத்திற்கு வருகிறார்கள். ஏனென்றால், காதலித்தாலும், காதலிக்காமல் வீட்டில் ஏற்பாடு செய்த திருமணமானாலும் ஒரே நிலை தான். திருமணமான பின் இரண்டும் ஒன்று தான். திருமணத்திற்கு முன் எப்படி காதலித்து இருந்திருந்தாலும், திருமணமான பின் நீங்கள் கணவர் தான், நீங்கள் மனைவி தான். இதில் எந்த மாறுதலும் இல்லை.
(தொடரும்)
- மனநல மருத்துவர் சிவபாலன்