நீதிக்கட்சித் தலைவரை பதவி விலக மிரட்டினார் ராஜாஜி!

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளி யிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.

1938 இல் இந்தி எதிர்ப்பின் போது இராஜாஜி நீதிக் கட்சியின் தலைவர் பொப்பிலி அரசரை அக்கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினார். பொப்பிலி அரசர் பயப்படவில்லை. இராஜாஜியும் சும்மா இருக்கவில்லை. ஜமின்தாரி ஒழிப்பு மசோதாவை கொண்டு உங்கள் ஜமின் சொத்துகளை அரசுடைமை ஆக்கி விடுவேன் என்று மிரட்டியதால், மற்ற ஜமீன்தார்கள் பொப்பிலி அரசருக்கு நெருக்கடி கொடுத்து நீதிக்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகி விடுமாறு வற்புறுத்தினர். பொப்பிலி அரசர் விலகி விட்டால் நீதிக் கட்சியை ஒழித்து விடலாம் என இராஜாஜி கனவு கண்டார். பொப்பலி அரசர் நீதிக் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டார். இந்த நிலையில்தான்.

கி.ஆ.பெ. விசுவநாதமும் ஏ.டி. பன்னீர் செல்வமும் பெல்லாரி சிறையில் இருந்த பெரியாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பெரியாரை நீதிக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கும்படி வற்புறுத்தினர். பெரியாருக்கு அதில் விரும்பம் இல்லையெனினும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். தலைவரின் தலைமை உரையை அங்கேயே பெரியாரிடம் கேட்டு எழுதி வாங்கி வந்தனர்.

1938 டிசம்பர் 29, 30,31 மூன்று நாட்கள் சென்னையில் நடை பெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் பெரியாரின் படத்தை வைத்து அதற்கு மாலையிட்டு பெரியாரின் தலைமை உரையை ஏ.டி. பன்னீர் செல்வமும், கி.ஆ.பெ. விசுவநாத மும் படித்தனர். (கி.ஆ.பெ.விசுவநாதன் எனது நண்பர்கள் பக். 96) பெரியார் தானே முன் வந்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலும் பா.குப்பனின் வாதம் தவறானதே.

நெ.து. சுந்தரவடிவேலு, ஒரு முறை தம் இல்லத்தில் பெரியாருடன் பேசிக் கொண் டிருக்கும்போது, “அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை மட்டுமே நடத்தி வந்திருக்கலாம் நீதிக்கட்சிக்கு தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண் டியதில்லையே” என்று கேட்டுள்ளார். அதற்கு பெரியார் “என்னை வந்து கேட்டவர்கள் தமிழுக்காக நிறைய சேவை செய்தவர்கள் அவர்களே வந்து வேறு வழி இல்லை என்று கூறும்போது எனக்கு வேறுவழி இல்லாததால்தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

(நெ.து.சு. நினைவு அலைகள் முதல் தொகுதி பக்.740-742) ஆக பெரியா ருக்கு விருப்பம் இல்லாமல் தான் அதன் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள் ளார். திராவிடர் கழகத்துக்கு தலைவராக ஜனநாயக முறைப்படி 1944இல் சேலம் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1950 முதல் 1962 வரை வழக்குரைஞர் தி.பொ. வேதாச்சலம் தான் திராவிடர் கழகத் தலைவர்.  குத்தூசி குருசாமி தான் அதன் பொதுச் செயலாளர்.  தி.க. செயற் குழு, பொதுக் குழுக் கூட்டம் எல்லாமே தி.பொ.வேதாசலத்தின் தலைமையிலே நடைபெற்று வந்துள்ளதை ‘விடுதலை’ ஏட்டில் காண முடிகிறது. 34 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்த பா.குப்பனுக்கு தி.க. வரலாறே தெரியாதது வெட்கப்படவேண்டிய செய்தியாகும். அது சரி, பா.குப்பனின் தலைவர் மட்டும் என்னவாம்? 1946இல் ‘தமிழரசுக் கழகம்’ அமைத்த நாள் முதல் 1989இல் ராஜீவ் காந்தி முன்னிலையில் காங்கிரசில் அந்த இயக்கத்தை கரைக்கும் வரையில் அவர் தானே அதன் நிரந்தரத் தலைவர்.

வரலாற்றை திரிப்பதில் ம.பொ.சியை விட அவரது சீடர்கள் பன்மடங்கு உயர்ந் துள்ளனர். நான் ம.பொ.சியும் ஆதித் தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா என்ற நூலில்  ஆ.டு.ஹ., ஆ.டு.ஊ., போன்ற பதவிகளுக்காக அவர்கள் கொள்கை களை காற்றில் பறக்கவிட்டு போய் விட்டார்கள் என்று எழுதினால் பா.குப்பன் கட்சித் தலைவர் பதவியைப் பற்றி எழுதி திரிபுவாதம் செய்கிறார். நான் ம.பொ.சி தமிழரசு கழகம் கண்ட பிறகும் இந்தியைக் கட்டாய பாடமாக்க வேண்டும் என்று எழுதியதையும்.

1955இல் இந்தி ஆட்சி மொழி ஆணையத்திற்கு சாட்சியமளித்த ம.பொ.சி. இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி தான் இருக்கவேண்டும். நாடாளுமன்ற நிர்வாகம் கூட இந்தியில் நடத்தலாம். அந்த மாநிலத்தவருக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மட்டும் அவரவர் தாய்மொழியை அனுமதித்தால் போதும், உச்சநீதிமன்ற வாதங்கள் தீர்ப்புகள் கூட இந்தியிலே வெளிவரலாம் என்று கூறியதை எழுதியிருந்தேன். ஆனால் பா.குப்பன் 1938இல் கட்சி கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட்டு இந்தியை ஆதரித்தார் என்று மழுப்புகிறார். நான் எழுதியது. காங்கிரசை விட்டு வெளியே வந்த பிறகும் இந்தியை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது ஏன் என்ற கேள்விக்கு விடையைக் காணோம்.

தனி ஆந்திரம் பிரிய வேண்டும் என்று உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்த பொட்டி சீரிராமுலுவைப் பற்றியும் பா.குப்பன் தவறான கருத்தையே எழுதி யுள்ளார். “சர். பிட்டி தியாகராயரின் உடன் பிறந்தாளின் மகனான பொட்டி சீராமுலு சென்னை மயிலாப்பூரில் புலுசு சாம்ப மூர்த்தி என்பவரின் வீட்டில் உண்ணா விரதம் இருந்தார்” என்று எழுதுகிறார். தியாகராயர் தேவங்கர் எனும் துணி நெய்யும் நெசவு தொழில் செய்யும் சாதியைச் சார்ந்தவர். பொட்டி சீராமுலு பேரி செட்டி சாதியைச் சேர்ந்தவர் இவர் எப்படி தியாக ராயரின் தங்கை மகனாக முடியும்? அரு கோபாலன் ஏற்கனவே எழுதிய பொய்யை தான் பா.குப்பன் மறுபடியும் எழுதியுள்ளார்.

பொட்டி சீராமுலுவின் மனைவி இவருக்கு 28 வயது இருக்கும்போதே இறந்துவிட்டார். பிறந்த ஒரே குழந்தையும் இறந்துவிட்டது. அதனால் விரக்தியடைந்த அவர் மும்பையில் இரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு காந்தியின் சபர்மதி ஆகிரமத்தில் பத்தாண்டுக்கும் மேலாக பணியாற்றியவர். தீவிர காங்கிரஸ் காரர். மயிலாப்பூரில் இருந்த புலுசு சாம்ப மூர்த்தி என்ற ஆந்திரப் பார்ப்பனர் (இவர் இராஜாஜி 1937-38 முதல்வராக இருந்த போது சபாநாயகராக இருந்தவர்.) வீட்டில் தான் தனி மாநில ஆந்திரம் கோரி 19-10-52 முதல் 15-12-52வரை உண்ணாவிரதம் இருந்தார். அப்போது இராஜாஜி தான் முதலமைச்சர். ராஜாஜி நினைத் திருந்தால் அந்த இறப்பைத் தடுத்திருக்க முடியும். இராஜாஜியும் ஆந்திராவுக்கு ஆதரவாக சீராமுலு சாகட்டும் என்றே விட்டு விட்டார். தியாகராயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே  இது போன்ற பொய்யான செய்திகளை வரலாறாக எழுதுகிறார்கள். அருகோவும், பா. குப்பனும்.

(தொடரும்)