சேலம் மேற்கு மாவட்ட நங்கவள்ளி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பெரியார் 49 ஆவது நினைவு நாளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிப்பு சம்பந்தமாக நங்கவள்ளி காவல் நிலையத்தில், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சி.அன்பு தலைமையில் தோழர்களின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் விசாரணையில் தெரியவந்தது - வனவாசி பகுதியைச் சார்ந்த பா.ஜ.க. கட்சியின் நபர் நஞ்சப்பன் த/பெ. மாரிச்செட்டி தேவாங்கர் தெரு பேரூராட்சி பின்புறம் உள்ளவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

காவல்துறை விசாரித்ததில் நஞ்சப்பன் என்பவர் சொல்லியது, “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் நெசவுத் தொழில் செய்து வருகிறேன். பா.ஜ.க.வில் உறுப்பினராக உள்ளேன். நான் தினந்தோறும் வனவாசி சந்தைப்பேட்டை அருகில் உள்ள டீக்கடையில் காலையில் 3 மணி அளவில் டீ குடிப்பது வழக்கம். 24/12/2022 தேதி வழக்கம்போல் விடியற்காலை டீ குடிக்க வழக்கம்போல் சென்றேன். குளிர்காலம் என்பதால் சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் சுவற்றின் மீது ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து வந்து குளிர் காய்வது வழக்கம். அன்றைய தினமும் அதேபோல் போஸ்டரை கிழித்து வந்து குளிர் காய்ந்த பொழுது அந்த போஸ்டரில் பெரியார் படம் உள்ளது என்று தெரிந்து அந்தப் போஸ்டரை ஒதுக்கி வைத்து விட்டேன் நான் பெரியார் சம்பந்தப்பட்ட போஸ்டர் என்று தெரிந்து கிழிக்கவில்லை. நான் போஸ்டரை கிழித்தது தவறுதான் எனவே மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நான் செய்த தவறை ஒப்புக் கொண்டு பெரியார் நினைவு நாள் வால் போஸ்டர் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் நூலை நாட்டுடைமையாக்கிய முதல்வரைப் பாராட்டியும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை வாழ்த்தியும் 100 வால் போஸ்டர் அடித்துக் கொடுத்து விடுகிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை செய்ய மாட்டேன் என்றும் தவறும் பட்சத்தில் தாங்கள் எடுக்கும் சட்டபடியான நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன் என்பதையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஆ. நஞ்சப்பன் நங்கவள்ளி காவல்துறை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் தோழர்கள் மத்தியிலும் வெளிப்படை தன்மையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, மாவட்டத் தலைவர் சூரியகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் நங்கவள்ளி, வனவாசி, இளம்பிள்ளை, சங்ககிரி வெள்ளரி வெள்ளிப் பகுதியைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் விடுதலை : வழக்கு நடத்திய திராவிடர் கழக வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியனுக்கு கழகம் நன்றி

2014ஆம் ஆண்டு அறிவுக்கு ஒவ்வாத ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆபாசங்களை விளக்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் துண்டறிக்கை வழங்கி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தனர்.

இந்து முன்னணி கும்பல் சிலர் துண்டறிக்கை தரக்கூடாது என ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்டு மோதலில் முடிந்த நிலையில் தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் ஆகியோரை மேட்டுப்பாளையம் காவல்துறை கைது செய்தது.

 இந்து முன்னணியினர் சிலரையும் காவல்துறை கைது செய்தனர். கழகத் தோழர்கள் 15 நாள் சிறைக்கு பின் பிணையில் வெளிவந்தனர். இந்த வழக்கு 8 வருடமாக நடந்து வந்தது.

 திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்காக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியன் வழக்கறிஞராக தொடர்ந்து வாதாடினார். இந்நிலையில் 11.1.2023 இன்று திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்குக்காக தொகை ஏதும் பெறாமல் கொள்கைக்காக தன் சொந்த செலவில் பணியாற்றி வெற்றி பெற்று கொடுத்த வழக்கறிஞர் பாண்டியனுக்கு கழகத் தோழர்கள் நன்றி தெரிவித்தனர்.

விடுதலையான தோழர்களையும் வழக்கறிஞர் பாண்டியனையும் பெரியார் பெருந்தொண்டர் இரும்பொறை சுந்தரமூர்த்தி, திராவிடர் கழக கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் சு. வேலுச்சாமி, தமிழ்ப்புலிகள் மூர்த்தி நேரில் சந்தித்து பாராட்டி வரவேற்றனர்.

Pin It