கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது.

dvk meeting at chennaiதிராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்:

இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங் பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே மெஜாரிட்டி இந்து பண்பாடு என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கிக் காட்டுகிறார்கள்.

இந்து என்ற அடையாளத்தோடு பிரிக்க முடியாமல் ஒட்டி நிற்கும் ஜாதி - அதன் பெயரில் நிகழும் சமூக ஒடுக்குமுறைகளை இந்துக்கள் அணி திரட்டல் வழியாக உறுதிப்படுத்திக் கொள்வதே பார்ப்பனர் பேசும் இந்துத்துவாவில் அடங்கியுள்ள ஆபத்து என்பதை இந்து மதத்தில் நம்பிக்கையுள்ள பெரும்பாலான பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ந்திட வேண்டும் என்பதோடு, இந்த ஆபத்தை மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள், மக்களிடையே எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. இந்த ஆபத்தான பார்ப்பன இராஜ்யத்தை உருவாக்கும் திட்டத்துக்கு அரசியல் அதிகாரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் சட்டத்தின் அடிப்படைகள் தகர்க்கப்படுகின்றன. அதற்கு இசைவாக நீதிமன்றம், நிர்வாகம், நாடாளுமன்றம் என்ற அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் படிப்படியாக கொண்டு வரப்படுகின்றன.

இராணுவத்தின் தளபதி ஜெனரல் பிபின்ராவத் - இது வரை பின்பற்றப்பட்ட மரபுகளுக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும், அசாம் மக்களின் போராட்டம், காஷ்மீர் பிரச்சினைகளில் நடக்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் அரசியல் கருத்துகளை முன் வைத்திருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த வி.கே. சிங் இப்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக்கப் பட்டுள்ளார் (சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர்). அவர் இராணுவ தளபதி ராவத்தின் பேச்சை வரவேற்றிருக்கிறார். முப்படைக்கான தனித்தனி தளபதி பதவிகளை ஒழித்து ஒரே இராணுவ தளபதி பதவியின் கீழ் முப்படைகளையும் கொண்டு வர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

இந்த செயல்பாடுகள் எல்லாம் இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வந்து இராணுவ ஆட்சி வழியாக ‘இந்து இராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகள் நடக்கிறதோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது. ‘இந்துக்களை இராணுவ மயமாக்கு; இராணுவத்தை இந்து மயமாக்கு’ என்று ஏற்கனவே சங் பரிவார் முன் வைத்த முழக்கம் செயல்வடிவம் பெறத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த ஆபத்தை எதிர்கொள்ள மக்கள் ஒற்றுமையை விரும்பும் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு மீண்டும் வேத - பார்ப்பன காலத்துக்கு இழுத்துச் செல்லும் பேராபத்தை முறியடிக்க தயாராக வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அறைகூவல் விடுக்கிறது.

தீர்மானம் 2 : அசாம் மாநிலத்தில் ரூ. 1600 கோடி செலவு செய்து 19 இலட்சம் மக்கள் இந்தியக் குடிமக்கள் இல்லை என்று கண்டறிந்துள்ளது, பா.ஜ.க. ஆட்சி. அவர்களுக்கு தடுப்புக் காவல் முகாம்கள் என்ற பெயரில் நிரந்தர சிறைச் சாலைகளைக் கட்டுகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் , மாநிலத்தில் குடியுரிமை பெறத் தகுதி இல்லாதவர்கள் பட்டியல்களைத் தயாரித்து மாநிலம் முழுதும் தடுப்புக் காவல் முகாம்களை கட்டப் போவதாக உள்துறை அமைச்சர் அமீத்ஷா அறிவித்ததைத் தொடர்ந்து நாடே இப்போது கொந்தளித்து நிற்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என்ற மூன்று நாடுகளை இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்து அங்கிருந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவுக்குள் ஊடுறுபவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் ‘குடியுரிமை’ வழங்கப்படும் என்று கூறுகிறது (இந்து, பார்சி, கிறிஸ்தவர், சீக்கியர், பவுத்தர், சமணர் என்ற பிரிவினருக்கு மட்டும்). இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று மதத்தின் அடிப்படையிலேயே குடியுரிமையை மறுக்கிறது. அது மட்டுமன்றி இந்த மூன்று நாடுகளில் கடவுள் மத நம்பிக்கையில்லாத நாத்திகர்கள் துன்புறுத்தப்பட்டு அவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது இந்தச் சட்டம். சிங்கள பவுத்த கொடுங்கோல் ஆட்சியின் இராணுவக் கொடுமைக்கு அஞ்சி கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கும் ‘குடியுரிமை’ வழங்க இந்த சட்டத் திருத்தம் மறுக்கிறது.

இந்த நிலையில் இந்த சட்டத் திருத்தத்தின் வழியாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், இஸ்லாமியர்கள் ‘நாட்டில் வாழத் தகுதியற்ற இரண்டாம் தர குடிமக்கள்’ என்ற பொதுக் கருத்தையே பார்ப்பனிய - பா.ஜ.க. ஆட்சி, பொதுப் புத்தியில் உருவாக்கி ‘தேச விரோதிகளைப் போல சித்தரிக்க முயற்சிக்கிறது.

வரலாற்றை மீள் ஆய்வு செய்தால் இந்த நாட்டுக்குள் நுழைந்தவர்கள் ஆரியர்களும், அந்த இனவழி வந்த பார்ப்பனர்களும்தான். அவர்கள் பூர்வீகக் குடிகளான சிந்து சமவெளி திராவிடர்களின் நாகரிகத்தை அழித்து தங்களை மேலாதிக்கவாதிகளாக நிலை நாட்டி மக்களை சுரண்டிக் கொடுத்தனர். இதை ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

வரலாற்றில் வந்தேறிகளான ஆரிய வம்சத்தைச் சார்ந்த பார்ப்பனர்கள் இன்று வரை தங்கள் வேத புரோகித பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு சமுதாயத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே வாழ்கிறார்கள். வந்தேறிகளான இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன் வைப்பதற்கான வரலாற்று நியாயங்கள் இருந்தாலும்கூட ‘நாடு - சட்டம் - குடிமைச் சமூகம்’ என்று உருவானதற்குப் பிறகு சமூக ஒருமைப்பாடு, மாந்த நேய சமூக நாகரிகம், பொதுமைப் பண்பாடு காரணமாக அந்த முழக்கத்தை பொதுச் சமூகம் முன்னெடுக்கவில்லை. ஆனால், அத்தகைய விழுமியங்களைப் பற்றியோ, அரசியல் சட்டத்தின் நோக்கங்களைப் பற்றியோ சமூக ஒற்றுமை பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாத பார்ப்பனர்கள். மீண்டும் ஆரிய தேசத்தை உருவாக்க மதவெறுப்பு எனும் பாசிச பார்ப்பனியத்தை அதிகாரத்தின் வழியாக திணிக்க முயல்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, இவர்களின் சமூகச் சுரண்டல்களை வேத காலத்திலிருந்து கேள்விக்கு உட்படுத்திய புத்தர்கள், சார்வாகர்கள், சித்தர்கள் என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியாக வந்த, புலே, அம்பேத்கர், பெரியார் போன்ற மத, ஜாதி, கடவுள் மறுப்பு சிந்தனையாளர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக்கத் துடிக்கிறார்கள். பெரியார் பேசிய நாத்திகம், வேத பார்ப்பனியம் சுமத்திய அடிமை விலங்கை ஒடிக்கும் விடுதலைக்கான மக்கள் முழக்கம், இந்த வரலாற்று உண்மையை பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு விளக்க வேண்டும். வந்தேறிகள் - சொந்த நாட்டு மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை என்பதை உரத்து முழங்க வேண்டும். பார்ப்பனியத்துக்கு பலிகடாவான மதப் பிரிவினர்களும் சமூக மாற்றத்தை விரும்பும் முற்போக்காளர்கள் அனைவரும் இந்த ஆபத்துகளை வரலாற்று வெளிச்சத்தில் முறியடிக்க முன் வரவேண்டும் என்றும் அதற்கான வலிமையான மக்கள் மேடைகளை உருவாக்கிட வேண்டும் என்றும் திராவிட விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயலவைக் கூட்டத்தில் பேசிய கழகப் பொறுப்பாளர்கள், 2020ஆம் ஆண்டில் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழக செயலவை, சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் டிசம்பர் 28, 2019 அன்று காலை 10.30 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தென்சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் மயிலை சுகுமார், கடவுள், ஆத்மா மறுப்பு முழக்கங்களைக் கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள் - பெரியாரியலை எதிர்நோக்கும் ஆபத்துகள், கழக அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து தலைமைக் குழுவில் நடந்த விவாதங்கள், கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ குறித்த வரவு செலவு கணக்குகளை விளக்கி ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து கழகத் தோழர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

கருத்துகளைத் தெரிவித்த தோழர்கள் : அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்), தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, ராஜீ (வடசென்னை மாவட்ட செயலாளர்) ஆகியோர் உரையைத் தொடர்ந்து இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், இணையதளத்தின் வழியாக எளிமையாக படிக்கக் கூடிய பெரியார், அம்பேத்கர் தொகுப்புகள், குடிஅரசு தொகுப்புகள், கழக நிகழ்வுகள் குறித்த பதிவுகள், இணையதளத்தில் மின்னஞ்சல் நூல்களாக ஏற்றப்பட்ட கழக வெளியீடுகள், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ பதிவுகள், ‘அமேசான் கிண்டில்’ வழியாக தரவிறக்கம் செய்து படிக்க பதிவேற்றப்பட்ட நூல்கள், பெரியார் செயலி (ஆப்ஸ்) அதைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து திரைக்காட்சிகள் வழியாக விரிவாக விளக்கினார்.

பிற்பகல் 2.30 மணிக்கு அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. 3.30 மணிக்கு மீண்டும் செயலவை கூடியது. தெள்ளமுது (காஞ்சிபுரம்), பரிமளராசன் (முகநூல் பொறுப்பாளர்), இளையரசன் (விழுப்புரம்), மதன்குமார் (கடலூர்), டேவிட் (சேலம் கிழக்கு), மேட்டூர் கோவிந்தராஜ் (சேலம் மேற்கு), முகில்ராசு (திருப்பூர்), சங்கீதா (திருப்பூர்), வேணுகோபால் (ஈரோடு), கிருஷ்ணமூர்த்தி (ஈரோடு தெற்கு), மா.பா.மணிகண்டன் (மதுரை), வெள்ளியங்கிரி (கோவை), இராமச்சந்திரன் (மேட்டுப்பாளையம்), நிர்மல் குமார் (கோவை), சாமிநாதன் (நாமக்கல்), சந்தோஷ்குமார் (தர்மபுரி), பாரி (தஞ்சை), சென்னிமலை செல்வராஜ் (ஈரோடு), தலைமைக் குழு உறுப்பினர்கள் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம், கோபி. இராம இளங்கோவன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார்.

குடிஅரசு வழக்கு, பேச்சாளர்களுக்கு, களப்பணியாளர்களுக்கு பயிற்சிகள், கழக ஏடுகள் வளர்ச்சி, கழகத் தோழர்களை மாவட்டந்தோறும் சந்திக்கும் திட்டம் குறித்து விரிவாகப் பேசினார். மயிலை சுகுமார் நன்றி கூற 7 மணியளவில் செயலவை நிறைவடைந்தது. கழகச் செயல்பாடுகளை வரும் ஆண்டில் தீவிரமாக்க தோழர்கள் உறுதி அளித்தனர்.