மனித உடல் - நெருப்பு, காற்று, நீர், பூமி, வானம் எனும் பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைப்பால் உருவானது என்றும் உயிர் பிரிந்து மரணம் நிகழும்போது இந்த அய்ந்தும் தனித்தனியே பிரிந்து விடுகிறது என்றும் ஒரு கூற்று நம்பப்படுகிறது. நீண்டகால இந்த நம்பிக்கை அறிவியலுக்கு உடன்பட்டதா? இல்லை.

பிரான்ஸ் நாட்டின் இரசாயனத்துறை ஆராய்ச்சியாளர் அன்டோனி லெவோய்சியர் (Antoine Lavoisier) நிரூபித்த அறிவியல் ஆய்வின்படி நெருப்பு எரிதல் என்பது ஒரு இரசாயன நிகழ்வு. காற்று என்பது வாயுக்களின் (ழுயளநள) கலவை. நீர் என்பது, அய்ட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டது. எனவே நெருப்பு, காற்று, நீர் தனி படிமங்கள் அல்ல. அதேபோல பூமியும், வானமும் தனியான படிமங்கள் (elements) அல்ல.

அறிவியல் கலைக் களஞ்சியம் ‘படிமம்’ என்றால் என்னவென்று விளக்குகிறது. ஒரே வகையான அளவைக் கொண்டதே படிமம். பிரபஞ்சத்தில் அடிப்படையே படிமங்கள் தான். அதை மேலும் எளிமையாகப் பிளக்க முடியாது. உலகில் 109 படிமங்கள் உள்ளன. அதில் 91 இயற்கையாகக் கிடைப்பவை. 18 செயற்கையாக உருவானவை.

பூமியில் உயிர் வாழும் அனைத்தும் ‘கார்பன்’ எனும் படிமத்தை அடிப்படையாகக் கொண்டவை. உயிர் அணுக்கள் செயல்பாட்டுக்கு கார்பன்தான் அடிப்படையானது. பூமியில் நிறைந்திருக்கும் மற்றொரு படிவம் ஆக்சிஜன். காற்று, நீர், மலைகளிலும் ஆக்சிஜன் உண்டு. ‘பஞ்சபூதம்’ என்று நம்பப்படும் உயிர் வாழ்தலுக்கான அடிப்படையில் கார்பன் இடம் பெறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். கார்பன் இயங்காவிட்டால் உயிரணுக்கள் இல்லை. அதேபோல் உடல் எலும்புகளுக்கு வலிவூட்டுவது ‘கால்சியம்’.

எலும்புகள் வலுவின்றி மனிதர்களோ, மிருகங்களோ இயங்கவே முடியாது. பிரபஞ்சம் உருவானதற்கு அடிப்படையாக இருந்தது ஹைட்ரஜன். அது 90 சதவீதம் பரவி நிற்கிறது. ஹைட்ரஜன் சுவையோ, மணமோ, வண்ணமோ இல்லாத வாயு. அமிலங்களுக்கு அமிலத் தன்மையைத் தருவதே ஹைட்ரஜன் தான். இப்படி உயிர் வாழ்தலுக்கு பல படிமங்கள், கூறுகள் தேவைப்படுகின்றன. இது தான் அறிவியல். ‘பஞ்சபூதம்’ மட்டுமே உயிர் வாழ்தலை உறுதி செய்கிறது என்பது, அறிவியலுக்கு எதிரான நம்பிக்கைகள். ஆன்மீகத்தை - அறிவியலோடு இணைத்து கடவுள் படைப்போடு முடிச்சுப் போடும் பேச்சுகள் அறிவியலுக்கு எதிரானதே!

(‘ரேடிக்கல் ஹீயுமானிஸ்ட்’ ஜன. 2023-லிருந்து)

- விடுதலை இராசேந்திரன்

Pin It