இந்து இராஷ்டிரம் அமைக்க மன்னராட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் ஆபத்துகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் பா.ஜ.க. அணியை வீழ்த்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று சேலத்தில் கூடிய (ஏப்.29, 30, 2023) திராவிடர் விடுதலைக் கழக மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.

இது தமிழ்நாடு; இளம் தலைமுறை எச்சரிக்கை மாநாட்டுத் தீர்மானங்கள்:

வேத மத ஆட்சியின் ஆபத்து : 1) தமிழ்நாட்டில் நீண்டநெடுங்காலமாக பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணுரிமைக் கொள்கைகளை சீர்குலைத்து வேத பார்ப்பனிய ஆட்சியை இந்துத்துவம் என்ற பெயரில் கொண்டுவர ஒன்றிய பாஜக ஆட்சி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில் அந்த ஆபத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வேத பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்தால் நாம் அடிமையாகி படுகுழியில் தள்ளப்படுவோம் என்றும் நமது முன்னோர்கள் பெற்று தந்த தன்மான உணர்வை இழந்து கீழ் மக்கள் ஆகிவிடும் ஆபத்து உருவாகிவிடும் என்பதையும் இம்மாநாடு தமிழர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறது.

விளிம்பு நிலை இந்துவும் - பார்ப்பன இந்துவும் : 2) சனாதன சக்திகள் தங்களை இந்துக்களின் காவலர்கள் என்று கூறிக் கொண்டு ஏழை எளிய இந்து மக்களின் கல்வி உரிமைகளைப் பறித்து, வரித் திணிப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு என்று பல்வேறு பொருளாதார சுமைகளை அவர்கள் மீது சுமத்தி வருகிறார்கள் அதே நேரத்தில் பார்ப்பனியத்தை உறுதிப்படுத்த அதிகாரம் மிக்க பதவிகளில் பார்ப்பனர்களை நியமித்தல், சமஸ்கிருதத்தை திணித்தல், பசுவதைத் தடைச்சட்டம், மதமாற்ற தடைச் சட்டம், ராமன் கோயில் கட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட இந்துக்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்துவதும் அதே நேரத்தில் அவர்களைப் பயன்படுத்திப் பார்ப்பன உயர்ஜாதி இந்துக்களை சமூக அரசியல் அதிகாரம் மிக்கவர்களாக உறுதிப்படுத்துவதுமே இவர்கள் பேசும் இந்துத்துவம் என்பதன் உள்ளடக்கம் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மாநாடு சுட்டிக் காட்டுகிறது.kolathoor mani and viduthalai rajendran 365சனாதனத்துக்கு மரண அடி தரும் திராவிட மாடல் : 3) வேத சனாதன கருத்துகள் பெண்களை அடிமைகளாக்குகிறது. அவர்கள் உரிமைகள் தரக் கூடாதவர்கள் என்று மனு சாஸ்திரம் கீதை போன்ற புனித நூல்கள் இதை வலியுறுத்துகின்றன. இதைத் தகர்த்தெறிந்து பெண்களுக்கு சொத்துரிமை, கணவனை இழந்த பெண்களுக்கு மறுமண உதவி, கல்லூரிப் படிப்புக்கு ஊக்கத் தொகை, கட்டணம் இல்லாத பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற பெண்கள் உரிமைத் திட்டங்களை திமுகவின் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. நீட், இடஒதுக்கீடு உரிமை, மாநில உரிமைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து சட்டப் போராட்டம் நடத்துவது திராவிட மாடல் ஆட்சியில் சரியான கொள்கை திசை வழிப் பயணம் ஆகும். சனாதன வேத மதங்களுக்கு வெடி வைத்துத் தகர்ப்பதை இந்தப் பெண்ணுரிமைத் திட்டங்களை, இளம் பெண்களுக்கான இத்திட்டங்களை சகதோழர்களிடம் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டி சனாதன சக்திகளின் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது.

போலி தமிழ் தேசியம் எச்சரிக்கை : 4) திராவிடம் என்பது மொழி, நிலம், பண்பாடு போன்ற மூன்றையும் உள்ளடக்கிய ஒரு குறிச்சொல். பார்ப்பனிய அரசியல் பண்பாட்டு அதிகாரத்திலிருந்து பார்ப்பனரல்லாத மக்களை மீட்டெடுத்து அவர்களை சுயமரியாதையும் சமத்துவம் கொண்ட மக்களாக மாற்றுவதே திராவிடம். திராவிடம் தமிழர்களுக்கு எதிரானது என்றும் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்கு அடிமைப்படுத்துவது என்றும் சில போலி தமிழ் தேசியவாதிகள் திராவிட எதிர்ப்புப் பேசி அதை திராவிட மாடல் ஆட்சிக்கு எதிர்ப்பாகப் பயன்படுத்தி வருகிறார்கள் திராவிட எதிர்ப்பாளராக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் பாஜகவுக்கு மறைமுகமாக இந்த போலி தமிழ் தேசியவாதிகளின் திராவிட எதிர்ப்பு துணை போகிறது என்பதையும் இந்த தமிழ் தேசியவாதிகள் தங்களின்இந்து அடையாளத்தையும் ஜாதி அடையாளத்தையும் பெருமையாகக் கருதி இப்போது உயர்த்திப் பிடிக்கத் தொடங்கி இருப்பதையும், இவர்களின் மறைமுக ஆதரவு வேத பார்ப்பனியத்துக்கு வலிமை சேர்த்துக் கொண்டிருப்பதையும் இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.

ஆளுநர்களின் அடாவடி : 5) பாரதிய ஜனதா கட்சி அல்லாத ஆட்சிகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றிய ஆட்சியால் திணிக்கப்படும் ஆளுநர்கள் ஆட்சிக்கு இடையூறுகளை உருவாக்குவதும் சட்டமன்ற தீர்மானங்களை ஒப்புதல் தராமல் முடக்குவதும் வழக்கமாகி விட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் இன்னும் ஒரு படி மேலே போய் திராவிடர் எதிர்ப்புக் கருத்துக்களையும் சனாதன பார்ப்பனியக் கருத்துக்களை வலியுறுத்தியும் தமிழ்நாட்டுக்கே வழிகாட்ட வந்த தலைவரைப் போல தன்னை கருதிக் கொண்டு பேசி நடந்து, தமிழக அரசிடம் இருந்து ஊதியம் பெற்றுக் கொண்டு அரசியல் சட்டவரம்புகளை மீறி நடந்து வருகிறார். நீட்விலக்கு உள்ளிட்ட மக்களால் தேந்தெடுக்கப்பட்ட கட்சியின் சட்டங்களை முடக்குகிறார். சனாதன பார்ப்பனிய சக்திகளின் கூடாரமாக ஆளுநர் மாளிகையை மாற்றி வருகிறார். தமிழ்நாட்டின் தனித்துவத்திற்கு எதிரான இந்த மண்ணின் உளவியலை சீர்குலைக்கும் ஆளுநரை ஒன்றிய ஆட்சி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது இல்லையென்றால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று மாநாடு எச்சரிக்கிறது.

6)           பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாகக் கருதப்படும் அனைத்து இந்துக்களும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி 24 கோயில்களில் அமுல்படுத்திய நிலையில் கருவறைக்குள் தாங்கள் நிலைநாட்டி வந்த மேலாதிக்கம் குலைந்து போய்விட்டதே என்று பார்ப்பனர்கள் பதறி வருகிறார்கள். அண்மையில் அரசால் நியமிக்கப்பட்ட திருவரங்கம் வயலூர் முருகன் கோயிலின் இரண்டு பார்ப்பனர்அல்லாத அர்ச்சகர்களை மதுரை உயர்நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாரம்பரியமாக ஏற்கனவே இருந்துவரும் முறையான நியமனமில்லாத, முறையான கல்வித் தகுதி பெறாத பார்ப்பன அச்சகர்களையே ஆகம விதிப்படி தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. பழக்க வழக்கம் ஆகமம் என்ற பெயரில் கடவுளிடம் நெருங்க முடியாத சமூகத்தினராக சூத்திர இந்துக்களும் பெண்களும் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டு வருகிறார்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தி வருகிறது.

மன்னராட்சியை நோக்கி : 7) இந்துராஷ்டிரம் என்பது மன்னர்கள் ஆட்சியில்தான் சாத்தியம் என்பதால் நீதிமன்றம், சட்டமன்றம், பொதுத் துறை நிறுவனங்கள், தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயகக் கட்டமைப்புகளை சிதைப்பதும், மாநிலங்களின் அடையாளங்களை அழிப்பதும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு இப்போது அத்தியாவசியத் தேவையாக மாறி இருக்கிறது. அதன் காரணமாக பொதுத் துறை நிறுவனங்களை ஒழித்து தங்களோடு உடன்பாடு கொண்ட அதானி போன்ற கார்ப்பரேட்டுகளை முறைகேடாக வளர்த்து விடுவதும் இதே நோக்கத்தில் தான் என்பதை மாநாடு சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆபத்தை நாம் எதிர் கொண்டு தடுத்து நிறுத்தியாக வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகம் என்ற குடைக்குள் ஒற்றை ஆட்சியாக இந்துராஜ்யத்தை உருவாக்கும் மன்னர் ஆட்சியை ஏற்படுத்தி நாட்டை வேத காலத்திற்கு இழுத்துச் செல்லும் ஆபத்தான திட்டங்களோடு பாஜக களம் இறங்கத் தயாராகி வருவதைத் தமிழர்கள் எச்சரிக்கையுடன் உணர வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தமிழ் நாட்டில் இந்த சனாதன சக்திகளை மண் கவ்வச் செய்ய தமிழ்நாட்டின் மதச் சார்பற்ற ஜனநாயக பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய மனித உரிமை சக்திகள் ஒருங்கிணைந்து களம் காண முன்வரவேண்டும் என்று மாநாடு அறைகூவி அழைக்கிறது.

Pin It