(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) கடந்த இதழின் தொடர்ச்சி...

மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கிற மூட நம்பிக்கைகள், புராணங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிற ஆபாசங்களை எழுதியெல்லாம் ஆதாரப்பூர்வமாக விளக்கி, ‘சோ’ அதற்கு மறுப்பே எழுத இயலாத அளவுக்கு பகுத்தறிவுச் சுடராக மிளிர்ந்தவர் கலைஞர்.

இந்தியாவில் வேறெந்த தலைவர்களுக்கும் தோன்றாத, சமத்துவபுரம் என்ற மாபெரும் திட்டம் கலைஞரின் எண்ணத்தில் உதித்து செயல்வடிவம் பெற்றதுதான் அவரது பகுத்தறிவின் ஆற்றலுக்கான உச்சபட்ச சான்று. ஊர், சேரி, அக்ரகாரம் என மூன்றாய் பிரிந்து கிடக்கும் சமூகக் கட்டமைப்பை தகர்த்து, சமன்படுத்தும் முன்முயற்சியை செய்ய வேண்டுமென்று தேர்தல் அரசியலில் எவருக்குமே தோன்றவில்லை, கலைஞருக்கு மட்டும்தான் தோன்றியது. அதற்கான முன்மாதிரியாக பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர்ஜாதியினர் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக வாழும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கட்டியெழுப்பினார். அதிலும் ஆழமாக சிந்தித்து பட்டியல் சமூகத்தினரின் பாதுகாப்புக்காக சமத்துவபுரங்களில் கூடுதல் வீடுகளை அவர்களுக்கு ஒதுக்கினார்.

karunanidhi 360சமூக ஏற்றத்தாழ்வுகளை மட்டுமல்ல, குடும்பங்களுக்கு உள்ளும் இருக்கும் பாலின பேதங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்ற உறுதியான சிந்தனை கொண்டவராகவும் கலைஞர் திகழ்ந்தார். அதனால்தான் ‘பெண்களுக்கு சொத்துரிமை’ என்ற பெரியாரின் மகத்தான எண்ணத்துக்கு அவரால் செயல்வடிவம் கொடுக்க முடிந்தது. அரசுப்பணிகளில், உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு பார்த்துப் பார்த்து இடஒதுக்கீடு கொடுக்க முடிந்தது.

ராமன் வனவாசம் புறப்பட்ட மறுநொடியே சீதையும் ராமனோடு புறப்பட்டாள், நல்ல மனைவி என்பவள் இப்படித்தான் கணவன் செயலுக்கும் சொல்லுக்கும் பணிந்து நடந்துகொள்ள வேண்டுமென்பதுதான் மனுதர்மத்தின்படி எழுதப்படாத விதி. ஆனால் அதைக்கூட வேறு விதமாகச் சிந்தித்தார் கலைஞர். “சீதை ஒன்னும் விவரம் தெரியாம புறப்படல. வீட்டிலே இருந்தால் மாமனார், மாமியார், கொழுந்தன் என பெரிய கூட்டத்திற்கே சமைத்துப்போட வேண்டும். அதற்கு காடே பரவாயில்லை என்றுதான் புருஷன் கூட கிளம்பிட்டாள்” என அதையும் பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்து, தனக்கே உரிய தனித்துவமான பாணியில் புதியதோர் விளக்கம் கொடுத்தார். பெண்கள் அடுப்படியில் முடங்கி விடக்கூடாது என்ற திராவிட சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் கலைஞரின் இக்கருத்தும் பொருந்திப் போகிறது.

கலைஞர் தன் வாழ்நாளில் சுமார் 75 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். அவற்றிலும் பகுத்தறிவு சிந்தனைகளை நிரம்ப வசனங்களாக வடித்தவர் கலைஞர். அதற்கான அழியா சான்றாக பராசக்தி இப்போதும் இருக்கிறது. திரைத்துறை இன்னும் எத்தனை நவீனங்களை கண்டாலும், பராசக்தியின் வசன வீச்சுகளுக்கு ஈடுகட்டி விட முடியுமா என்பது கேள்விக்குறிதான். அதனால்தான் இப்போதும் பல பல்கலைக்கழகங்களில் பராசக்தி வசனங்களை பகுப்பாய்வு செய்கிறார்கள். உரையாடல்களை நிகழ்த்துகிறார்கள். அதற்கடுத்து கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய “நாம்” திரைப்படத்தில் நாயகனின் பாத்திரமே ஒரு பகுத்தறிவுப் பரப்புரையாளர்தான். சமூகத்தில் புரையோடிப்போன ஜாதி உணர்வும், மூடப்பழக்க வழக்கங்களையும் படம்பிடித்த இன்னொருமோர் திரைப்படம் “தாயில்லா பிள்ளை”. மகாபாரதத்தை தோலுரித்த ‘நடுத்தெரு நாராயணி’, பக்தியின் பெயரால் சாமியார்களை புரட்டி எடுக்கும் ‘சங்கிலி சாமியார்’ சிறுகதைகள், கடவுள், மத, மூடநம்பிக்கைகளை விளாசிய ‘வெள்ளிக்கிழமை’ புதினம் என கலைஞரின் பகுத்தறிவு பிரச்சாரங்கள் அவரது கலையுலகப் படைப்புகள் அனைத்திலும் நிரம்பி வழிந்தன.

பகுத்தறிவு என்பது தனக்கான தனிச்சொத்தாக மட்டுமே இருந்தால் போதுமானது என்று கலைஞர் கருதிவிடவில்லை. அதனால்தான் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம், மூடத்தனங்களுக்கு எதிரான கருத்துக்களை சவுக்கடிகளாய் கொடுத்துக் கொண்டே இருந்தார். திரைத்துறை வழியாக மக்களுக்கும் கடத்தினார். எல்லாவற்றுக்கும் தன்னைப் பின்பற்றும் தோழர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதிகளாக இருக்க வேண்டுமென்ற அக்கறையும், கவலையும் கொண்டவராக கலைஞர் இருந்தார். உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்களில் பலமுறை அதை மெய்ப்பித்திருக்கிறார்.

“ஜாதி, மதமென்னும் சமூக அமைப்புகளால் ஏற்பட்ட பேதங்களை அகற்றுவதற்கு மட்டுமல்ல, உழைக்க ஓர் பிரிவு, உண்டு கொழுக்க ஓர் பிரிவு என்ற பொருளாதார பேதத்தையும் சுட்டிக்காட்டி ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் அமைத்திடவும் பகுத்தறிவு மன்றமே தீர்ப்பு எழுதியது” ,

“சமுதாயத்துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை அனைத்திலுமே பகுத்தறிவு நீரோடை தங்கு தடையின்றிப் பாய்ந்தோடிட வேண்டும்; அப்போதுதான் நாடு வாழும்! நலிவு தீரும்! பண்பு சிறக்கும்! பளிங்கெனத் தெளிவு பிறக்கும்”

“சமுதாயக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும், நேர்மையையும் நெறியையும் மூடநம்பிக்கைகளால் நிலை நிறுத்த முடியாது”

என்றெல்லாம் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதினார் கலைஞர்.

இன்றைக்கு கர்நாடகாவில் மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இப்படியொரு சட்டத்தை இந்தியா முழுமைக்கும் இயற்ற வேண்டுமென்கிற எண்ணம் கலைஞருக்கு இருந்திருக்கிறது. “அதிசய வேலைகள், ஆருடக் கணிப்புகள், ஜோசிய மோசடிகள் இவைகள் நம்பத்தகாதவை என்று கட்சிக்கும் அப்பாற்பட்ட மேதைகள் அனைவரும் திடமாகக் கூறியாயிற்று. ஆகவே இந்தக் கொடுமையை ஒழிக்க - இந்திய நாட்டு அளவில் உடனடியாகச் சட்டம் தேவை!” என்று வலியுறுத்தியிருக்கிறார் கலைஞர். பகுத்தறிவு சிந்தனைகள் மக்கள் மனத்தில் வளராமல் இந்த நாடு வளராது என்பதில் கலைஞர் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே, மானமும் அறிவும் கொண்ட பகுத்தறிவு சிந்தனையோடு கூடிய சமத்துவ சமுதாயத்தை படைப்போம் என உறுதியேற்பதே கலைஞருக்கு நூற்றாண்டில் நாம் செலுத்தும் மரியாதை.

(நிறைவு)

- விடுதலை இராசேந்திரன்

Pin It