'ராமன்’ அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது. தமிழ் நாட்டில் வாழும் மெஜாரிட்டி ‘இந்துக்கள்’ பார்ப்பனரல்லாதவர் என்ற உணர்வுள்ளவர்கள் என்று, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் (24, செப்.2007) சமூக ஆய்வாளர் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவம்:
தமிழக முதலமைச்சர் தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை, ராமன் வரலாற்று நாயகன் அல்ல. அவன் மனிதனின் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரம் என்பதே அவரது கருத்து. ராமன், ஒரு வரலாற்றுப் பாத்திரம் என்று, அத்வானி தன்னுடன் விவாதிக்கத் தயாரா என்று அவர் சவால் விட்டதோடு மட்டுமல்ல, வால்மீகி ராமாயணத்தை உன்னிப்பாகப் படித்துப் பாருங்கள் என்று, அத்வானிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகிவிட்டது. கருணாநிதிக்கு, ராமாயணம் நன்றாகவே தெரியும் என்பது - தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியும். கருணாநிதியின் கருத்து - அத்வானி சகாக்களை கந்தகமாக சூடேற்றியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு இந்துக்களை - கருணாநிதிக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சிகளில் ‘எள் மூக்கு முனை அளவுகூட அவர்கள் வெற்றி பெறவில்லை. அந்த விரக்தி நன்றாகவே தெரிகிறது.
பா.ஜ.க.வின் பேச்சாளர் முக்தர் அபாஸ்நக்வி - அளித்த பேட்டி ஒன்றில் கருணாநிதி தனது தலைமையையே இழந்து விட்டதாகக் கூறினார். அவரது தொண்டர்கள், ராமனைக் குறை கூறியதால், அவர் தலைமையை ஒதுக்கி விடுவார்கள் என்று கருதியிருக்கிறார் போலும்! ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. தி.மு.க.வில் முழுமையான பகுத்தறிவாளர்கள் என்பவர்கள் வெகு குறைவுதான். பெரும்பான்மையான தி.மு.க. தொண்டர்களும், ஆதரவாளர்களும் ‘பார்ப்பனரல்லாத இந்துக்களாகவே’ வாழ்கிறார்கள்.
கோயிலுக்குப் போவதையும், வழிபடுவதையும், வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். கருணாநிதி ராமனை ஏற்றுக் கொள்ளாதவர் என்று தெரிந்தும், அவர்கள் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு வேறு காரணங்கள் உண்டு. முதலில், கருணாநிதி ராமனை எதிர்த்துப் பேசுவது ஒன்றும் புதுமையானதல்ல. பெரியார் ஈ.வெ.ராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் ராமாயணமும், ராமனும் மக்கள் மன்றத்தில் கடும் விவாதத்துக்குரியவைகளாகிவிட்டன.
தமிழ்நாட்டில் ராமாயணத்தை விமர்ச்சிக்கும் பார்ப்பனரல்லாதோர் மூன்று வாதங்களை முன் வைக்கின்றனர். முதலாவதாக, ராமன் ‘சத்திரியன்’ எனும் ‘இருபிறப்பாளர்’ பிரிவில் வந்தவன். பார்ப்பன உணர்வில் மூழ்கியவன், அதனாலேயே சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்ததற்காக, சம்பூகனைக் கொன்றான். இதன் மூலம், பார்ப்பனர்கள் வலியுறுத்திய ‘குலதர்மத்தை’ உயர்த்திப் பிடித்தான்.
இரண்டாவதாக ராமன் ஒழுக்கசீலனும் அல்ல. காரணம் வாலியை நேரிடையாக அவன் கொல்லவில்லை, சூழ்ச்சியாக மறைந்திருந்து கொன்றான். அடுத்து, இராமாயணம் என்பதே, வடநாட்டார் தென்னாட்டவரை அடக்கியாண்டதைக் கூறும், கற்பனைக் கதை. மேற்குறிப் பிட்ட கருத்துகள் தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாத இந்துக்களிடையே அழுத்தமாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. “பார்ப்பனர்கள் - பார்ப்பனரல்லாதாரை ஏன் தொடர்ந்து வேற்றுமைப்படுத்தி, தாங்களே உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும்? ராமாயணத்தை விமர்சிப்பதை ஏன் தடுக்க வேண்டும்?” என்ற கேள்வியை - தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன், ‘திராவிடர் அரசியல்’ மத அடையாளத்தைச் சார்ந்து நிற்கவில்லை. அது தமிழன், தமிழ், பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளங்களைத் தழுவித்தான் நிற்கிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்று அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களின் ஆதரவு - திராவிடர் அரசியலுக்கு உண்டு. தமிழ்நாட்டில், மதம் பற்றிய பிரச்சினை எப்போதாவது வருகிறது என்றால், அதுகூட, மொழி, சாதி அடையாளங்களுக்காகவே தான் இருக்கும். உதாரணமாக, தமிழ்நாட்டில் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பூசை செய்யும் உரிமை பார்ப்பனரல்லாதோருக்கு வேண்டும். வழிபாடு தமிழில் வேண்டும். சமஸ்கிருதத்தில் கூடாது என்பது, பார்ப்பனரல்லதாரின் கோரிக்கையாகும்.
எனவே, சாதி, மொழி, மாநிலங்களைக் கடந்த ‘ஏகத்துவ இந்து’வாக இருப்பதில், தமிழ்நாடு பார்ப்பனரல்லாதாருக்கு பிரச்சினைதான். அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். எனவே பா.ஜ.க. கூறும் இந்து அடையாளத்தை - அதாவது, மொழி, இன அடையாளங்களைத் தவிர்க்கும் இந்து அடையாளத்தை பார்ப்பனரல்லாத தமிழர்கள், சந்தேகத்துடனேயே பார்ப்பதில் வியப்பு ஏதுமில்லை.
கருணாநிதி - தன்னுடைய பார்ப்பனரல்லாத இந்துக்கள் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளார் என்றால், அந்த நம்பிக்கை தவறானது அல்ல. கடந்த காலத்தில் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளே இதற்குச் சான்றாகும்.
1972 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலையே சுட்டிக்காட்ட முடியும். இந்தத் தேர்தலுக்கு முன்பு, பெரியார் சேலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினார். மாநாட்டின் ஒரு பகுதியாக ‘ராமன்’ கொடும்பாவி எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தின் இறுதியில் ராமன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்தப் படம், பத்திரிகைகளில் வெளிவந்தபோது, வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது ‘ஜனசங்’ கட்சியில் இருந்த வாஜ்பாய், இதைக் கண்டித்து, “கோடிக்கணக்கான இந்துக்களைப் புண்படுத்தும் அவமானமான நிகழ்ச்சி” என்றார்.
சேலம் சம்பவத்தை, தேர்தல் அரசியல் லாபத்துக்கு அன்று காமராசர் தலைமையில் செயல்பட்ட பழைய காங்கிரஸ் பயன்படுத்தியது. காமராசர் தனது மதச்சார்ப்பினைமை அடையாளத்தைக்கூட, கை கழுவிவிட்டு, இந்து வகுப்புவாதிகளுடன் கை கோர்த்துக் கொண்டார். அன்றைக்கு சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்த சி.இராஜகோபாலாச்சாரி தனது அரசியல் எதிரியான காமராசருடனிருந்த பகைமையை எல்லாம் புதைத்துவிட்டு, அவருடன் சேர்ந்து கொண்டார்.
“பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடாதீர்கள்" என்று பார்ப்பனர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்துமதவாத அமைப்புகளான ஜனசங்கம், ஆலயப் பாதுகாப்புக் கமிட்டி, ஆஸ்திக சமாஜம் போன்ற அமைப்புகள் தி.மு.க.வுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தை பத்திரிகைகளின் ஆதரவுடன் முடுக்கிவிட்டன. தி.மு.க. இந்து விரோதக் கட்சி என்ற பிரச்சாரம் தீவிரமாக நடந்தது.
ஆனால் தேர்தல் முடிவு பழைய காங்கிரசுக்கும் அதை ஆதரித்த இந்து வகுப்புவாத அமைப்புகளுக்கும் அதிர்சியளிப்பதாகவே இருந்தது. பழைய காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் காமராசர் தான். தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும், ஏனைய இடங்களைக் கைப்பற்றி விட்டன. தி.மு.க. பெற்ற பெற்றி - அதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத பெரும் பெற்றி. 234 இடங்களில் 184 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. தமிழ்நாட்டின் மெஜா ரிட்டி ‘இந்து’க்கள் தி.மு.க.வைத்தான் தேர்ந்தெடுத்தனர். ‘ராமனை’ புறக்கணித்தனர்.
இந்துவாக ஒருவர் இருப்பதற்கு - ஒற்றைப் பாதை மட்டுமே இல்லை. வெவ்வேறு பாதைகளில் - வழிகளில் - இந்துவாக வாழலாம். இதில் தமிழ் நாடு - தனித்துவமானது. வரலாற்றி லும் சரி, அரசியலிலும் சரி, தமிழ் நாட்டுக்கென்று தனித்துவம் உண்டு. தமிழ்நாட்டின் ஒரு சராசரி இந்து, தன்னுடைய மதத்தை ஏதேனும் ஒரு வழியில் ஏற்றுக் கொண்டு, பல்வேறு கொள்கைகளில் இந்து மதத்தோடு முரண்படுகிறார். சில கருத்துகளை ஏற்கிறார்கள்.
பல கருத்துகளை ஏற்க மறுக்கிறார்கள். அதாவது, இதை ஒரு சீர்திருத்தவாதியின் நிலை என்றே கூறலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கு வாழும் இந்துக்கள் - சீர்திருத்தவாதிகளைப் போன்ற இந்துக்களாகவே இருக்கிறார்கள். கருணாநிதி ராமனை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டு, தனது அரசியல் செல்வாக்கை இழக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கான விடை, இந்த அடிப்படையான உண்மையில்தான் தங்கி நிற்கிறது. இவ்வாறு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரையில் எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதியுள்ளார்.
(பின் குறிப்பு : ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வெளிவந்துள்ள இக்கட்டுரை - தமிழ்நாட்டின் தனித் தன்மையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல் - சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ‘ராமன்’ கொடும்பாவி எடுத்து வரப்படவில்லை. வால்மீகி ராமாயணத்தில் ராமன் பிறந்த கதை கூறப்பட்டிருப்பதை ஓவியமாகத் தீட்டி ஊர்வலத்தில் டிரக்கில் எடுத்து வரப்பட்டது. தோழர்கள் அந்தப் படத்தை செருப்பாலடித்து வந்தார்கள்.)