மகத் குளம் நீர் எடுக்கும் போராட்டத்தையொட்டி 1935-இல் அம்பேத்கர் நடத்திய அந்த மாநாட்டில் அம்பேத்கர் இயற்றிய தீர்மானங்களில் ஒன்று அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்பது. அதற்கு அடுத்து ஜாதி ஒழிப்பு. இந்த உரையில் இன்னும் அவர் சொல்லுகிறார் இன்னும் கொஞ்சம் கடுமையாக சொன்னார், இந்து மதத்திற்கான மூலநூல் என்று ஒரு நூலை அடையாளம் காட்டுங்கள், சைவனும் வைணவனும் மோதிக்கொண்ட வரலாறு நிறைய இருக்கிறது, வடகலையும் தென்கலையும் ஆண்டாண்டு காலமாக காஞ்சிபுரத்தில் சண்டையிடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் இதுதான் இந்து மதம் என்கிறாய், அதற்கு மூல நூல் எது? கிருஸ்துவர்களுக்கு பைபிள் இருக்கிறது, இஸ்லாமியர்களுக்கு குரான் இருக்கிறது, இந்து மதத்திற்கு என்ன இருக்கிறது என்று சொல்.

இந்து மதத்தினர் என்று சொல்லப்படும் எல்லோருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும், அதற்கான படிப்பை வைத்து தேறியவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். பட்டயம் பெறாமல் அர்ச்சகராக இருப்பவர்கள் செய்கிற எந்த சடங்கும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று பேசுகிறார். இந்த தீர்மானங்களை அடுத்த 1936-லும் பேசுகிறார்.

பெரியாரும் காங்கிரஸை விட்டு வெளியே வந்த பின்னாலும் மதுரையில் 1926 டிசம்பரில் 10-வது பார்ப்பனரல்லாத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அது என்ன? இந்துக்கள் என்று சொல்லப்படும் சகல சமூகத்தவருக்கும் உரிமை வேண்டும், பூஜையிலும், பிரவேசத்திலும், தொழுகையிலும் சம உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் போட்டு என்ன பயன்? நடைமுறைக்கு எப்படி வரும்? நடைமுறைக்கு கொண்டு வந்த பெருமை நம்முடைய கலைஞர் அவர்களுக்கு உண்டு. 1971-இல் முதல்முறையாக கொண்டுவந்து, முதலில் பரம்பரையாக இருப்பதை ரத்து செய்கிறார். கலைஞர் போராட்டத்தைப் பற்றி எல்லாம் சொன்னார்கள். பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்த போது நீங்கள் என் ஆட்சியில் போராட வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய கலைஞர், பிறகு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்.

இங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது, ஆகமத்தின் படி ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவரே ஆகமுடியும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். அதை இப்போது சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேரளாவில் ஆதித்யன் என்ற ஈழவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அரசியல் சட்ட நடைமுறைக்கு வந்த பின்னால் அதுதான் பெரியது, அதற்கு முன்னால் என்ன பெயரில் பாகுபாடு இருந்தாலும் அதெல்லாம் செல்லாது, சமத்துவத்தை பேசுகிற அரசியல் சட்டம் தான் உயர்ந்தது, இதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்று தீர்ப்பு சொன்னார்கள்

இந்த தீர்ப்பை சொன்ன இரண்டு பேரும் தென்னாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் நம்முடைய தமிழ்நாட்டுச் சேர்ந்த துரைசாமி ராஜு, கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டில் கல்வி கற்று பகுத்தறிவாளராக இருந்த ராஜேந்திர பாபு இவர்கள் இருவரும் தான் இந்த தீர்ப்பு சொன்னவர்கள். 1936-இல் அம்பேத்கர் கொடுத்த குரலுக்கு 1971-இல் சட்ட வடிவம் தந்தவர் கலைஞர், காரணம் கலைஞர் இளம் பருவத்தில் இருந்தே சுயமரியாதை, திராவிட அரசியல் சிந்தனையோடு வளர்ந்தது தான்.

(தொடரும்)

கொளத்தூர் மணி