விடுதலை பெற்ற இந்தியாவில் நடந்து முதல் மக்கள் விடுதலைப் புரட்சி, ஜாதி ஒழிப்புப் புரட்சி என்றால் அது 1957 ஆம் ஆண்டு நடந்த இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டமே ஆகும். தோழர் பெரியாரின் ஆணைக்கிணங்க இலட்சக்கணக்கான தோழர்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினர். ஆயிரக்கணக் கானோர் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர். 17 தோழர்கள் களப்பலி ஆயினர். இவ்வளவு வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்ட நினைவு நாள் கடந்த ஆண்டு மிக அதிகமாக நினைவுகூறப்பட்டது. சமூக வலைத்தளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.

ஆனால், இதைப் பெரியார் - அம்பேத்கர் அமைப்புத் தோழர்களுக்கிடையேயான மோதலாக மாற்ற முகநூல் பக்கங்கள் வழியாகச் சிலர் முயன்றனர். டாக்டர் அம்பேத்கரே எழுதிய அரசியல் சட்டத்தை அதுவும் எரிப்பது தவறு. எரித்ததை எப்படி நினைவுநாளாகக் கொண்டாடலாம்? அரசியல் சட்டம் ஏற்கப்பட்ட நாளான - சட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளைச் சட்ட எரிப்பு நாளாக எப்படிக் கூறலாம்? இது அம்பேத்கருக்கு எதிரானது என சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்துப் பரப்பப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத் தொகுப் புக்குழுத் தலைவரான டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்தச் சட்டத்தைச் சமர்ப்பித்து ஆற்றிய முன்னுரையிலேயே இதுபோன்ற குழப்பங்களுக்குத் தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார்.

பெரியார் பார்வையில் இந்திய அரசியல் சட்டம்

இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள், ‘பழக்க வழக்கங்கள்’ என்ற பெயரில் இந்து, ஜாதி ஆதிக்க, பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைத் திணிக்கத் திட்டம் போடத் தொடங்கிய காலத்திலேயே தோழர் பெரியார் அதைச் சரியாகக் கண்டு, கடுமையாக எதிர்த்தார். 03.07.1929 ஆம் நாள் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லைவனத்தில்) நடைபெற்ற சென்னை ஆதி திராவிட மகா ஜனங்களின் சுயமரியாதை மாநாட்டின் சொற் பொழிவில் பெரியார்,

“சாமியையும் சாத்திரத்தையும் தொட்டதற்கெல்லாம் முட்டுக்கட்டையாகக் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதை ஒரு விதத்தில் மறைத்துக் கொண்டு பழக்கம் வழக்கம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சாமி, மதம், சாத்திரம் என்கின்ற முட்டுக் கட்டைகளை இன்னமும் தைரியமாக உடைத்தெறியத் துணிந்து விட்டோமே யானால் பழக்க வழக்க முட்டுக்கட்டைகளை பஞ்சாய் பறக்கச் செய்துவிடலாம்.”-  குடி அரசு - 21.07.1929

என்று அரசியல் சட்டம் எழுதப்படுவதற்கு முன்பே, இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே ‘பழக்க வழக்கம்’ என்ற சொல்லின் ஆபத்தைக் கண்டு எச்சரிக்கிறார்.

கராச்சி என்ற நகரில் 1931 ஆம் ஆண்டு மார்ச் 27 முதல் 30 வரை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரஜா உரிமைத் தீர்மானம் பெரியாரின் எச்சரிக்கையை உறுதி செய்தது. அந்தத் தீர்மானம் பற்றி பெரியார்,

அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது பற்றிய, விதிப்பிரிவுகளில் “இந்தியாவில் உள்ள சகல சமூகத்தாருக்கும், “அவர்களது கலைகள், சமூக நாகரீகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள், பழக்க வழக்கங்கள், மதம், மத தர்மங்கள் ஆகியவைக் காப்பாற்றப்படும்” என்பதாக ஒரு உத்திரவாதம் அதாவது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித் திருக்கின்றார்கள்.

...இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமை களையும் பொருத்த கலை ஆதாரங்கள், அதாவது வேதசாஸ்திர புராணங்கள், அவர்களது பாஷைகள், பாஷை எழுத்துக்கள், வகுப்பு கல்விகள், வகுப்பு தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும் நடவடிக்கைகள், ஒவ்வொரு வகுப்பாருடைய மதங்கள், அதாவது சமயம், உட்சமயம், புறச்சமயம், அந்தந்த மததர்மங்கள், அதாவது கோவில், கோவில்சொத்து, மடம், மடங்களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங்கள் செய்வதற்கு விடப்பட்டிருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவைகள் எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண்டிருக்கின்றது. - தோழர் பெரியார், குடி அரசு - 19.07.1931

1931 இல் மட்டுமல்ல; தொடர்ச்சியாக இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலம் வரை இந்தப் பழக்க வழக்கம் என்ற ஆபத்தை எதிர்த்துப் போராடிவந்துள்ளார். சில சான்றுகள்.

1931 ஆம் வருஷத்திய காங்கரஸ் வேலைக் கமிட்டி யானது பிரஜா உரிமை திட்டம் என்பவற்றில் ஒன்றாக “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பார்கள் சம்பந்தப்பட்ட வரையில் அவரவர்களுடைய கலை, பாஷை, எழுத்து, கல்வி, தொழில், மத ஆச்சாரம், மத தர்மம் ஆகியவைகள் காப்பாற்றிக் கொடுக்கப்படும்” என்கின்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது.- தோழர் பெரியார், குடி அரசு - 06.09.1936

“கராச்சி காங்கிரஸ் பிரஜா உரிமை திட்டம் என்பதில் ஜாதி, மதம், தொழில், ஜாதிமத உரிமை, பழய சாஸ்திரம், பழக்க வழக்கம், நடைமுறை ஆகியவை களை காப்பாற்றிக் கொடுப்பதாக உத்தரவாத மளிக்கப்பட்டிருக்கிறது. இதன் அருத்தம் என்ன என்று பாருங்கள். சமூக சம்மந்தமாக உள்ள குறைபாடுகளிலும், பல மக்களுக்கு இருந்துவரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும் சிறிதும் கை வைப்ப தில்லை என்பது தான் இன்றைய அரசியல் தத்துவ மாகும். இந்திய ஏழை மக்களுக்கும் பாமர மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும் சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும் சமூக இயல் வேறாகவும் இந்நாட்டில் இருந்து வர முடிகின்றது.

...புரட்சி உணர்ச்சி உள்ள இந்த காலத்தில் இன்னமும் அரசியல் திட்டத்தில் ஜாதியைக் காப்பாற்ற உரிமையைப் பிரத்தியேகமாய்க் குறித்து வைத்துக்கொண்டு அரசியல் மூலம் மக்களுக்கு சுதந்திரமும் விடுதலையும் சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்கின்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்குமானால் - இருக்க அனுமதிக்கப் படுகிறார்கள் என்றால் இந்நாட்டு மக்கள் மனிதத் தன்மை இன்ன தென்று உணராத நடைப் பிணங்கள் என்று ஏன் சொல்லக்கூடாது என்று கேட்கின்றேன்.”  -தோழர் பெரியார், குடி அரசு - 06.06.1937

1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள், அரசியல் நிர்ணய சபையில் தோழர் அம்பேத்கர் அவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு அவருக்கே, தாம், வரைவுக் குழுவுக்குத் தலைவராவோம் என்று தெரிந்திருக்காது. அதற்கு முன் காங்கிரஸ் அவரை விரும்பவில்லை. மேலே உள்ள பெரியாரின் கருத்துக்கள், அரசியல் நிர்ணய சபையில் தோழர் அம்பேத்கர் ஒரு உறுப்பினராக வருவார் என்று அரசியலில் இருந்த எவருமே கணிக்காத ஆண்டுகளில் 1929 லிருந்தே பேசியவை ஆகும்.

அரசியல் நிர்ணய சபையைக் கலைத்துவிடு

அரசியல் நிர்ணயசபை என்ற  அமைப்பு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. இந்த அரசியல் நிர்ணயசபையின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் என்ன தெரியுமா? பெரும் நில உடைமையாளர்கள், வருமானவரி கட்டுவோர், பட்டதாரிகள் போன்ற 10 சதத்திற்கும் குறைவான வெகு சிலர் வாக்களித்து, அதில் வென்றவர்கள் தான் அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்கள். 21 வயது வந்த அனைவரும் வாக்களிக்கும் நிலை அன்று இல்லை. அதனால்தான் தோழர் அம்பேத்கரேகூட அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். (வங்காளத்து ஷெட்யூல்ட் பிரிவினர் மற்றும் முஸ்லீம்லீக்கின் வாக்குகளால் அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்வானார்)

அம்பேத்கரே தோல்வியுறக் காரணமாக இருந்த இந்தத் தேர்தல் முறையையும், அதனால் தேர்வு பெற்ற சபையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார். மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்த அரசியல் நிர்ணயசபையைக் கலைக்க வேண்டும் என பெரியார் முாங்கினார்.

“வயது வந்த அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கி, அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும். இனவாரியாக இந்தியாவைப் பிரித்து, இன உரிமை கொண்ட ஆட்சி முறையை வகுக்க வேண்டும். அரசியல் நிர்ணய சபையைக் கலைத்துவிட்டு, திராவிடம், பாகிஸ்தான், ஹிந்துஸ்தான், சீக்கிஸ்தான் ஆகிய பகுதிகள் தனித்தனியே தனக்கு வேண்டிய முறையில் அரசியல் அமைப்பு முறையை வகுத்துக்கொள்ளுமாறு விட்டு விட வேண்டும்” - தோழர் பெரியார், விடுதலை, 25.10.1946

என்றார்.அகில இந்தியா முழுவதும் மொத்தம் 393 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், தமிழ்நாட்டுக் காங்கிரசில் இருந்து சென்ற 7 பேரும் பார்ப்பனர்கள். அவர்களைப் பற்றிப் பெரியார் கூறுகிறார், 

“சட்ட மறுப்பு இயக்கத்திலே அரசியலார்க்குச் சட்டத்தைப்  புரட்டிக் காண்பித்து உதவிசெய்த சர். அல்லாடி அய்யருக்கு அதே காங்கிரசின் பேரால் அரசியல் நிர்ணய சபையில் பதவி; பிற்போக்கான நிலையிலுள்ள சமஸ்தானாதிபதிகளுக்கு உற்ற துணையாயிருந்த சர்.கோபால்சாமி அய்யங்காருக்கும் காங்கிரஸ் பேரால் பதவி; காங்கிரஸ்காரர் அந்நிய நாட்டு சாமான்களைப் பகிஷ்காரம் செய்து சிறைவாசம் சென்ற சமயம், அந்நிய சாமான்களுக்கு ஏஜண்டாயிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு இன்று பதவி” - தோழர் பெரியார், குடிஅரசு- 26.04.1947

வெறும் அறிக்கைகள் என்ற அளவில் மட்டு மல்ல; கழகத்தின் மாநில மாநாட்டிலும் அரசியல் நிர்ணய சபையைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1948 -ஆம் ஆண்டு மே மாதம் 8, 9-ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர்கழக 18 வது மாநாட்டில்,

“இந்திய அரசியல் நிர்ணயசபை என்ற பெயரால் டில்லியில் கூடுகின்றசபை திராவிட மக்களின் பிரதிநிதித்துவம் பெற்றதல்ல வென்றும், திராவிட மக்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்தக் கூடியன வல்லவென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.”

“திராவிட நாட்டைத் தனிச்சுதந்தர நாடாக்குவதே திராவிட மக்களின் முடிவான அரசியல் கோரிக்கை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.”

என்று உரிமை முழக்கங்கள் வெடித்தன. 1931 கராச்சி காங்கிரசில்  நிறைவேற்றப்பட்ட பிரஜா உரிமைத் தீர்மானம், பெரியாரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளை மீறி, இந்திய அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்டது.  அந்தப் பிரிவுகள் தான் 25 மற்றும் 26.  இந்தப் பிரிவுகள் மட்டுமல்ல; 13, 19, 368, 372(1) ஆகியவையும் ஆகிய சட்டப் பிரிவுகளும் பார்ப்பன, ஜாதிய ஆதிக்கத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றன. அதனால் தான் தோழர் பெரியார் 1957 லேயே இந்திய அரசியல் சட்டத்தின் மேற்கண்ட பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். அப்போரில் கடும் இழப்புகளைச் சந்தித்தபின்பும் கூட, அரசியல் சட்ட எதிர்ப்பைப் பெரியார் கைவிடவே இல்லை. 1960-லும் கடுமையான அறிக்கையைக் கொடுத்தார்.

“ஆறுபேர் கொண்ட கமிட்டி அமைத்து அதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும், ஒரு  (யாரென்று தெரியாத) முஸ்லீமையும் போட்டு 4 பார்ப்பனர்கள் கூடி, கல்லுப்பிள்ளையார் மாதிரி அமர்ந்து, அசைக்க முடியாத பார்ப்பன நலச்சட்டம் ஒன்றை - நவீன மனுதர்மத்தை - எழுதி அதற்கு இந்திய அரசியல் சட்டம் என்று பெயரிட்டுக் கொண்டது போல், இந்தியக்காரர்களையே போட்டு, பெயருக்கு ஒரு தமிழரைப் போட்டு அவரது ஆட்சேபக் குறிப்புக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல், இந்தி நுழைப்புக்குச் சரியானபடி அடிகோலி ஆணி அடித்து விட்டார்கள். - தோழர் பெரியார், விடுதலை 21.05.1960

1929-லிருந்து, தனது இறுதிக்காலம் வரை தொடர்ச்சியாக அரசியல் நிர்ணய சபையையும், அந்தச் சபை உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் கடுமையாக எதிர்த்துப் போராடி யவர் பெரியார். ஆனாலும், அம்பேத்கர் மீது பெரும் நம்பிக்கையைக் கொண்டிருந்தார். “வலிமையான இந்தியா தேவை” என்று அரசியல் நிர்ணய சபையிலேயே அம்பேத்கர் அழுத்தமாகப் பேசியதற்குப் பிறகும்கூட, பெரியார் அவரை ஆதரிக்கத் தயங்கவில்லை.

அம்பேத்கரிடம் நம்பிக்கை - ஆதரவு

க்ரிப்ஸ் தூதுக்குழு வந்துசென்ற பிறகும்கூட, தாழ்த்தப்பட்டோருக்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரசும், ஆங்கிலேயர் களும் கூட்டுச்சதி செய்து தாழ்த்தப்பட்டோர் கோரிக்கைகளைப் புறந்தள்ளி வந்தனர். அதற்கு எதிர்வினையாக, புனேயில் கூடிய தாழ்த்தப் பட்டோர் சம்மேளனம், ஆங்கிலேய அரசு மற்றும் காங்கிரசுக் கட்சிகள் வழங்கும் பட்டங்கள், பதவிகளைத் துறக்கும் போராட்டங்களை அறிவித்தது. அந்நிலையில் 1946-இல் காங்கிரஸ் அமைத்த இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியாக பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றார். இதைத் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனம் கடுமையாகக் கண்டித்தது.

அமைச்சரான பிறகு 27.12.1946-இல் பாபு ஜெக ஜீவன்ராம் சென்னைக்கு வருகை தந்தார்.  திராவிடர் கழகத்தினரும், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும் அவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட் டத்தை நடத்தினர். பாபு ஜெகஜீவன் ராமைப் போல, ஆங்கிலேய அரசின் ஆதரவு பெற்ற அனைத்து தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் திராவிடர் கழகமும், ஷெட்யூல்ட் பேரவையினரும் எதிர்த்து வந்தனர் ஆனால், அம்பேத்கரைத் தொடர்ச்சியாக ஆதரித்தே வந்தனர். அம்பேத்கருக்கு ஆதரவாக 27.08.1946 குடிஅரசு, 01.01.1947 விடுதலை ஏடுகளில் கட்டுரைகள் வெளியாயின. அரசியல் நிர்ணய அவையில், அம்பேத்கர் உறுப்பினராகி, பெரியாரின் கருத்துக்களுக்கு மாற்றாகப் பல கருத்துக்களைப் பேசிய பிறகும், பெரியார், அம்பேத்கருக்கு ஆதரவாக நின்றார்.

இந்துச் சட்டத் தொகுப்பு மசோதாவை நிறைவேற்ற இயலாமல் போன பிறகு 10.10.1951 இல் அம்பேத்கர், பதவி விலகுகிறார். பெரியார், உடனடியாக, அம்பேத்கரின் விலகலை ஆதரித்து,

“அந்த இரும்புத்திரைக் கும்பலை விட்டு வெளியேறிய டாக்டர் அம்பேத்கரைப் பாராட்டு கிறோம்”  - விடுதலை 12.10.1951

என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்துச் சட்டத் தொகுப்பு மசோதாவுக்கு எதிராகப் பார்ப்பனர்களும், இந்து ஆதிக்க வாதிகளும் எழுப்பிய கேள்விகளுக்கு அம்பேத்கர் ஆற்றிய பதில் உரையை, பெரியார், “ அம்பேத்கரின் சவுக்கடி” என்ற தலைப்பில் தனியாகத் தொகுத்து வெளியிட்டார். 

அம்பேத்கர் எரிக்க விரும்பியதை எரித்த பெரியார்

09.12.1946-இல் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத்தைத் தலைவராகக் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணி தொடங்கியது. ‘சர்.பெனகல் நரசிங்கராவ்’ என்ற தெலுங்குப் பார்ப்பனர் இந்திய அரசியல் சட்டத்தின் முதல் வரைவைத் தயாரித்துப் பாராளு மன்றத்திலும் சமர்ப்பித்துவிட்டார். அவர் சமர்ப்பித்த அரசியல் சட்டத்தைச் செம்மைப்படுத்தும் பணிக்காக டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதிலும் 4 பேர் பார்ப்பனர்கள்.

தோழர் பெரியார் 1931 லிருந்தே எதிர்த்துவந்த பார்ப்பன ஆதிக்கப் பிரிவுகள் பெனகல் நரசிங்கராவ் தயாரித்த அரசியல் சட்டத் தொகுப்பில் எவ்வித மாற்றங்களும் இன்றி அப்படியே இடம் பிடித்திருந்தன. அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவில் அம்பேத்கர் இடம்பெறவில்லை. அதைச் செழுமைப் படுத்தும் குழுவில்தான் தலைவராக இருந்தார். அதனால், இன்றுவரை நம்மை அடிமைப்படுத்திவரும் மேற்கண்ட பார்ப்பன ஆதிக்கப் பிரிவுகளை அவரால் மாற்ற இயலவில்லை. ஆனாலும், இந்துச்சட்டத் திருத்த மசோதா மூலமாக, அந்தப் பிரிவுகளில் மாற்றம் கொண்டுவரப் பெரிதும் போராடினார். அந்த வாய்ப்பும் இல்லாத போது பதவியையே தூக்கி எறிந்தார்.

குறிப்பாக, 1949- நவம்பர் 25-இல் அரசியல் சாசனத்தைச் சமர்ப்பித்த அம்பேத்கர், 1951 ஆம் ஆண்டே அவரே தொகுத்த அரசியல் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார். தமது பதவி விலகலுக்கான அறிவிப்பில் இந்த விமர்சனத்தை முக்கியமாக வைத்துள்ளார்.

“தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையைப் பாதுகாப்ப தற்காக அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்குத் திருப்தி அளிக்க வில்லை. ஆயினும் அரசாங்கம் அவற்றைப் பயனுறுதி யுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்னர் இருந்ததைப் போலவே, இன்னமும் இருந்து வருகின்றன. சொல்லப்போனால், மிக மோசமான முறையில் நடைமுறையில் உள்ளன.”- டாக்டர் அம்பேத்கர், 10.10.1951, ‘நான் ஏன் பதவி விலகினேன்’ நூல்

02.09.1953 இல் தோழர் அம்பேத்கர், அரசியல் சட்டம் பற்றிய ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், “ஒரு வாடகைக்குதிரை போலப் பணியாற்றினேன். என்னை என்ன செய்யச் சொன்னார்களோ, அதை என் விருப்பத்திற்கு மாறாகச் செய்தேன்...இந்தச் சட்டத்தை எரிப்பதற்கு நான் முதல் ஆளாக நிற்பேன்.” என்றார்.

25.11.1949 அன்று சட்டமுன்வைவு சமர்ப்பிக்கப் பட்ட நாளிலேயே வரைவுக்குழுவில் தோழர் அம்பேத்கருடன் பணியாற்றிய இஸ்லாமியர் தோழர் முகமது சாதுல்லாவும், “ எங்கள் மனச்சான்றுக்கு விரோதமான தன்மையில் பலவற்றை இந்த அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்க நேர்ந்து விட்டது” என்று பதிவு செய்துள்ளார். (ஜனவரி 2016, சிந்தனையாளன் இதழ்)

அரசியல் சட்டம் ஒரு தலைமுறைக்கு மட்டுமே

தனியார் உடைமைகளை அரசுடைமை யாக்குவது தொடர்பான விதிகளில் முரண்பட்டு கம்யூனிஸ்ட்டுகள் அரசியல் சட்டத்தை எதிர்த்தனர். எந்த நட்ட ஈடும் வழங்காமல், பொதுவுடைமை யாக்க வேண்டும் என்பது அவர்களது வாதம். அதற்குப் பதில் அளித்த தோழர் அம்பேத்கர்,

“இந்த அரசியல் சாசனத்தின் கோட்பாடுகள் எல்லாம் தற்காலத் தலைமுறையின் கருத்துக்களே. ஒருவேளை நான் மிகைப்படக் கூறவதாகக் கருதினால், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் அவை என்று கூறுகிறேன். அரசியல் சாசனத்தில் அவை சேர்க்கப்பட்டதற்கு, வரைவுக்குழுவின் மீது ஏன் குறைகூறப்பட வேண்டும் என்று கேட்கிறேன்?” என்றார். (25.11.1946 உரை)

இந்தப் பதில் மிக முக்கியமானது. பெரியாரால் எரிக்கப்பட்ட சில சட்டப்பிரிவுகள் தோழர் அம்பேத்கர் விரும்பி உருவாக்கியவை அல்ல; அரசியல் நிர்ணயசபை உருவாக்கியவையே அவை என்பதை மேற்கண்ட பதிலின் வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும், அதே பதில் உரையில், அமெரிக்க அரசியல் நிபுணரும், அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான ஜெபர்சனின் கோட்பாட்டின் அடிப்படையில் தான் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலி ருந்து இந்தச் சாசனம் விலகவில்லை என்கிறார் அம்பேத்கர். அரசியல் சாசனம் பற்றி ஜெபர்சன் கூறிய கூறுவதென்ன?

“ஓவ்வொரு தலைமுறையும், பெரும்பான்மையின் விருப்பப்படி தாங்கள் ஒருங்கிணைத்துக் கொண்டு வாழும்  உரிமையுடைய ஒரு தனிப்பட்ட தேசிய இனமாகக் கருத வேண்டும். மற்ற நாட்டுக் குடிமக்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ளும் உரிமையில்லாதது போலவே அடுத்த தலைமுறை யையும் பிணைத்துக் கொள்ள முடியாது.”

இக்கருத்தைத் தோழர் அம்பேத்கர் இன்னும் விரிவாகத் தன் முன்னுரையில் விவரித்துள்ளார். இந்த அரசியல் சாசனம் ஒரு தலைமுறைக்குத்தான் பொருந்தும். அடுத்த தலைமுறை வேண்டுமானால் திருத்திக்கொள்ளலாம். அதற்கு மிக எளிதான வரையறைகள் அரசியல் சாசனத்திலேயே உள்ளதாகக் கூறகிறார்.

“அரசியல் சாசனத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளவர்களுக்குத் தேவைப்படுவ தெல்லாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மைதான். அவர்களுக்கு ஆதரவாக வயது வந்தோர் ஓட்டுரிமை மூலம் தேர்ந்தேடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறமுடியவில்லை என்றால் அரசியல் சாசனத்தைப் பற்றிய அவர்களது அதிருப்தி பொதுமக்கள் பகிர்ந்துக் கொள்ளப்பட வில்லை என்றுதான் கூறவேண்டும்.” 

இதில் நமக்கு மாற்றுக்கருத்து உண்டு. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை பெற்றுத்தான் எதையும் மாற்ற முடியும் என்ற நிலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எளிதானது அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தேசிய இனமாக, தனித்தனி நாடுகளாக இருந்தவை. ஒரு தேசிய இனத்து மக்களின் தேவையை, மற்ற அனைத்து தேசிய இன மக்களும் புரிந்து கொண்டால் தான் அரசியல் சட்டத் திருத்தம் என்பது சாத்தியமாகும். அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்ட ஒரு பாராளுமன்றத்தால் தான் சட்டத் திருத்தம் எளிதாக்கப்படும்.

தோழர் பெரியார் வகுப்புரிமைக்காகக் கொண்டுவந்த முதல் திருத்தம் செயலானதற்குக்கூட அன்றைய பாராளுமன்றத்தில், அம்பேத்கரே சட்ட அமைச்சராக இருந்தார் என்பது தான் முக்கியக் காரணம். ஆனால், எல்லாக்காலங்களிலும் அம்பேத்கர்களை நாம் சட்ட அமைச்சர்களாகப் பெற முடியாது.  இதுபோன்ற சில பிரிவுகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். மாற்றப்பட வேண்டும் என்பதைத் தான் தோழர் பெரியாரின் போராட்டம் வலியுறுத்தியது. இது எந்த வகையிலும் அம்பேத்கருக்கு எதிரான நிலை அல்ல. இந்துச் சட்டத் திருத்த மசோதா முயற்சியில் அம்பேத்கரே இதைப் புரிந்துகொண்டு தான் பதவி விலகினார் என்பதே அதற்குச் சான்று.

அரசியல் சாசனம் என்பது அம்பேத்கர் அவர்களால் முற்று முழுதாக நம்பப்பட்டதும் அல்ல; புனிதமானதோ, மாற்றக்கூடாததோ அல்ல. இவற்றைத் தோழர் அம்பேத்கரே மிகத் தெளிவாக விளக்கிவிட்டார். அம்பேத்கர் நினைத்ததை 1957 இல் செயலாக்கியவர் பெரியார்.  இதில் இருவரது கருத்துக்களுக்கும் எந்த முரண்பாடுகளும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். .

அரசியல் சட்டத்தைத் திருத்த முயலும் பார்ப்பனர்கள்

இன்று ஆளும் பார்ப்பனர் மற்றும் பார்ப்பன அடிமைகளின் அரசு இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சி செய்கிறது. அதன் நோக்கம் ஆபத்தானது. அதை அனுமதிக்க இயலாது. இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நாள் வரை நம்மை ஆண்டு வந்தது மனுசாஸ்திரச் சட்டங்கள் தான். இந்து மத வேதப் பண்பாடுகளும், சாஸ்திர சம்பிரதாயங்களுமே இந்தியப் பகுதியில் சிவில், கிரிமினல் சட்டங்களாக நடைமுறையில் இருந்தன.

1857-இல் ஆங்கிலேயரான மெக்காலே கிரிமினல் சட்டங்களில் பல புரட்சிகளைச் செய்தார். அதன் பிறகு 1949 இல் டாக்டர் அம்பேத்கர் பலவிதங்களில் மனுவின் அஸ்திவாரத்தையே புரட்டிப்போட்டார். நாம் எதிர்பார்த்த மக்கள் விடுதலைக்கு அரசியல் சட்டம் பயன்படவில்லை என்பது உண்மைதான். அதே நேரம், பார்ப்பனர்கள் எதிர்பார்த்த இராமராஜ்யக் கனவையும் முழுமையாக்கப் பயன்படவில்லை.

இப்போது ஆர்.எஸ்.எஸ். முழுமையான இராமராஜ்யத்தை உருவாக்கும் எண்ணத்தில் அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சிக்கிறது. அரசியல் சட்டம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால், அதை முற்றிலுமாக அழித்து, மீண்டும் மனுவின் சட்டங்களைக் கொண்டுவரத் துடிக்கும் பார்ப்பன முயற்சிகளை அனுமதிக்க முடியாது.

சான்றுகள்:

  1. பெரியார்: ஆகஸ்ட் 15 - எஸ்.வி.ராஜதுரை
  1. ‘நான் ஏன் பதவி விலகினேன்’ டாக்டர் அம்பேத்கரின் பாராளுமன்றப் பேருரைகள்

தொகுப்பு: டாக்டர் ஜெயராமன்