நீ இந்துவாக இருக்கும் வரை சூத்திரன் என்றும், மனுஸ்மிருதியில் 8ஆம்அத்தியாயம், 415 ஆம் ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ள சூத்திரர்க்கான வரையறையப்ப் படிநிலையில் தேவடியாள் மகன் என்று இருப்பதைச் சுட்டிக்காட்டி ஆ.ராசா அவர்கள் பேசியதை பா.ஜ.க திரித்து விவாதமாக மாற்றி விட்டது.
அரசியல் அமைப்புச் சட்டம் வந்த பிறகு எங்கே இருக்கிறது மனுநீதி என்றும், யார் பின்பற்றுகிறார்கள் மனுநீதியை என்றும் கூசாமல் பேசுகிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதி ஏற்ற ஆளுநர் ஆர்.என்.இரவி மனுஸ்மிருதியை உயர்த்திப்பிடிக்கும் சனாதனத்தை ஏற்றுப் பேசுகிறாரே. இது குறித்து ஒருவரும் பதில் கூறுவதில்லை.
நாராயணன் மற்றும் கேசவன் ஆகிய பார்ப்பனர்கள், ஆண்டாள் குறித்து ஆய்வுக்கட்டுரை எழுதியதற்காக கவிஞர் வைரமுத்துவை வசைப்பாடினார்கள். மன்னிப்புக்கேள் என்றார்கள். அதுபோலவே சுகி.சிவம் பேசியதையும் பிடித்துக் கொண்டார்கள்.
இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால் எது பேசினால் சிக்கலாகும் என்பதல்ல, யார் பேசினால் சிக்கலாகும் என்பதே முக்கியம் பெறுகிறது.
சனநாயக நாட்டில் பேச்சுக்குத் தடையில்லை. தத்தம் கருத்தை யார் வேண்டுமானாலும் கூறலாம்.
ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும், அவாள் கருத்துக்கு உட்பட்டு வேண்டுமானால் பேசலாம், அதை மீறி உங்களுக்கு என்று ஒரு சுயக்கருத்து இருக்கக் கூடாது என்று சொல்வது பாசிசம். ஒரு குலத்துக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி- சூத்திரனுக்கு ஒரு நீதி என்பதுதானே மனுஸ்மிருதி. இன்றும் அனைத்துச் சாதிகள் அர்ச்சகர் ஆகலாம் என்றச் சட்டத்தை ஏன் எதிர்கின்றனர்? பின்னால் இருக்கிறது மனுவின் நீதி .
யார் சூத்திரன் என்று சந்தேகம் உள்ளவர்களுக்கு, சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார், தன் தெய்வத்தின் குரல் நூலின் இரண்டாம் பாகத்தில் நவீனர்களின் கருத்து என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார், “ப்ராமண வர்ணத்திலேயே ஐயர், ஐயங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன”. இன்றைய அளவிலும் இணையத்தில் இருக்கின்றது. (பார்க்க: https://www.kamakoti.org/tamil/2dk67.htm)
ஆ.ராசா அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டுமாம்! கேட்கத் தயார். என்ன மன்னிப்பு என்று சொல்லுங்கள் என்று நெத்தியடியாகக் கேட்கிறார் ஆ.ராசா. வெளிப்படையாக ஒரு சனாதனவாதிக்கும் பதில் கூறத் திராணியில்லை. பதிலை உரக்கச் சொல்லிவிட்டால் அது அவர்களின் ஒப்புதல் வாக்குமுலம் ஆகிவிடும். நீதிமன்றம் செல்வோம் என்று அச்சுறுத்தினார்கள்; அதற்காகத்தான் காத்து இருக்கிறேன் என்று ராசா சொன்னவுடன் ஆடிப்போனார்கள் ஆட்டம் ஆடியவர்கள். ஏன்? மனுவின் நீதிக்குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால்தான்.
இந்தியாவின் பிற பகுதிகளில் செய்யும் காவிகளின் அரசியல், தமிழ்நாட்டில் எடுபடாது. காரணம் இங்குள்ள தமிழர்கள் படித்தவர்கள், நடப்பது திராவிட மாடல் ஆட்சி.
2024ஆம் ஆண்டு வரவிருக்கும் ஒன்றிய அரசுக்கான பொதுத்தேர்தலில் எப்படிக் களம் அமைப்பது என்று அல்லாடும் பா.ஜ.க அண்ணாமலைக்கு நேர்மையான அரசியல் தெரியாமல் இப்படிக் குறுக்குச் சால் ஓட்டுகிறார்.
அண்ணாமலை நேர்மையான மனிதராக, அரசியல்வாதியாக இருப்பாரேயானால் அவர் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.
ஆ.ராசா அவர்கள் சொன்னது போலச் சூத்திரர்களை, மனுஸ்மிருதி கேவலமாகப் பேசுகிறதா இல்லையா? ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். அல்லது நீதி மன்றத்திற்காவது வரவேண்டும்.
என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை? பார்ப்போம்.!
- மதிவாணன்