thirumavalan 400.jip

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தனிமனித தாக்குதலில் ஈடுபட்டுவரும் பாசிச காவிக் கும்பலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.!

கடந்த 27.09.2020 அன்று ஐரோப்பாவில் பெரியார் - அம்பேத்கர் வாசக வட்டம் நடத்திய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய தோழர் திருமாவளவன், மனு ஸ்மிருதியில் பெண்களை இழிவுபடுத்தி எழுதப்பட்ட வாசகங்களை சுட்டிக் காட்டிப் பேசினார்.

இது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற சமூக மாற்ற சிந்தனையாளர்கள் எழுப்பிய மனுநீதி எதிர்ப்புக் குரலின் தொடர்ச்சிதான் என்றாலும், தோழர். திருமாவளவன் குறிப்பிட்டுப் பேசியதை அவரின் சொந்தக் கருத்து போன்று சித்தரித்து, தங்கள் ஆதரவு ஊடகங்களின் துணையோடு, இந்துத்துவவாதிகள் மக்களிடத்தே விசமத்தனத்தை விதைக்க முற்படுகிறார்கள்.!

தேர்தல் அரசியலில் பங்கேற்கும் கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே சனாதன எதிர்ப்பை அரசியல் முழக்கமாக்கி - உறுதியான நிலைப்பாட்டுடன் களமாடுகிறது; அதுவே பா.ச.க.வினருக்கு தமிழ் மண்ணில் காலூன்ற பெருந்தடையாக இருந்து வருகிறது.

இதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதனை வழிநடத்தும் தோழர் திருமாவளவன் மீதான பார்ப்பனிய - இந்துத்துவவாதிகளின் கோபத்திற்குக் காரணம்.!

சனாதன எதிர்ப்பில் நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்ட தமிழ் மண்ணில், கண்மூடித்தனமான காட்டுக் கூச்சல்கள் - பாசிக பா.ச.க.வை வேரூன்ற வைக்க உதவும் என
சங்பரிவாரங்கள் நம்புகின்றன.

இந்துத்துவா - பாசிச பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்குத் துணைபோகும் விதமாக தோழர். தொல்.திருமாவளவன் மீது பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்துத்துவவாதிகள் தங்கள் வன்முறை வெறியாட்ட செயல்பாடுகளின் வாயிலாக பெண்களையும் மனித குலத்தையும் இழிவுபடுத்தும் மனு ஸ்மிருதி நூலை புனிதமாக்கிவிட எத்தனித்து நிற்கிறார்கள்.! நம் சகோதரிகளை இழிவுபடுத்தும் மனு ஸ்மிருதி தடைசெய்யப்பட வேண்டிய நூல் என்பதை அரசு ஆய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெண்களை இழிவுபடுத்தி - சமத்துவத்தை வேரறுப்பது மனுதர்ம சாஸ்திரமே தவிர மண்ணுரிமைக்கும் - பெண்ணுரிமைக்குப் போராடும் தோழர் திருமாவளவன் அல்ல.!

மேலும் மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமான சொல்லாடல்கள் இல்லை என்பதை வலியுறுத்திக் கூறி விவாதக் களத்திற்கு வரத் திராணியில்லாத இந்துத்துவவாதிகள் அதனைத் தட்டையாக எதிர்த்து வருவது திட்டமிட கயமைத்தனமுடையது.

மருத்துவக் கல்லூரிகளில் - தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமைகள் பறிக்கப்படும்போது அதற்கு ஆதரவாக, பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்து மாணவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த தமிழக பா.ச.க.வினர், இன்று இந்து மக்களின் காவலர்கள் போன்று கூப்பாடு போடுவது எவ்வளவு ஏமாற்றுத்தனமானது; யாருடைய நலனுக்கானது? என்பதை பா.ச.க.வில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உணர வேண்டும்.! இவற்றையெல்லாம் மூடி மறைக்கவும் மடை மாற்றவுமே இத்தகைய கூச்சல்களும் குழப்பங்களும்.!

இன்றைய ஊடக வெளிச்சத்தால் மனுதர்மம் உரைக்கும் உள்ளார்ந்த பொருளை உணர்ந்த மக்கள் அதனைக் கொளுத்துவதற்கு அணியமாகிவிட்டார்கள்.!

பெண்களை இழிவுபடுத்தும் - சாதியத்தைப் பாதுகாக்கும் மனுதர்மத்தைக் கொளுத்துவோம்.!

விடுதலைச் சிறுத்தைகளின் சனாதன எதிர்ப்புப் போரில் இணைந்து கரம் கோர்ப்போம்.!

அரசியல் தலைமைக்குழு,
தியாகி இமானுவேல் பேரவை,
தமிழ்நாடு