தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் தடையில்லா சட்டமீறல் நடவடிக்கைகள் சிலவற்றை உங்கள் கவனத்திற்கும், உரிய நடவடிக்கைக்கும் முன்வைக்க விரும்புகிறேன்.

கடந்த நவம்பர் 6ஆம் நாள் திருத்தணியில் தொடங்கி எதிர்வரும் டிசம்பர் ஆம் நாள் திருச்செந்தூரில் முடிவடையும் என்ற அறிவிப்போடு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு எல்.முருகன் என்பவர், வேல் யாத்திரை என்ற பெயரால் ஓர் அரசியல் பரப்புரைப் பயணத்தை நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார்

அந்த பரப்புரைப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ அனுமதி அளிக்கவில்லை; சென்னை உயர் நீதிமன்றமும் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அந்தப் பயணம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டே உள்ளது.

அவ்வப்போது கைது நாடகம் ஒன்று நடந்தாலும் பயணம் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. பல இடங்களில் முதன்மைச் சாலைகளிலேயே மேடை அமைத்து பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றை நீங்களும் உங்கள் துறையினரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

அவசர வேலையின் காரணமாக அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்லும் நபர்களை, முகக் கவசம் அணியவில்லை என்ற காரணத்தைக் கூறி, தடை ஆணையை மீறி விட்டார்கள் என்ற காரணத்தைக் கூறி அவர்கள் வாகனங்களைப் பறிமுதல் செய்வதும் அபராதம் விதிப்பதும், பல இடங்களில் பொதுமக்களின் முன்னிலையில் தோப்புக்கரணம் போடச் செய்து, மிகுந்த கடமை உணர்வோடு நடந்து கொள்வதாக காவல்துறை காட்டிக் கொண்டதையும், அதிகார வரம்புகளை மீறி அடித்ததையும் தொலைக்காட்சிகளின் செய்திகள் வழியாக தமிழ்நாட்டு மக்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

மேலும் தனது சட்ட கடமையை ஆற்ற சென்ற திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதே வன்முறை பயன்படுத்தப்பட்ட அவமானகரமான நிகழ்வு எவ்வித உருப்படியான மேல் நடவடிக்கையும் இன்றி எளிதாக கடந்தமை, எதிர் காலத்தில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குலைவுக்கு இட்டுச் சென்று விடுமோ என்று சமூக அக்கறை கொண்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது; அல்லது குறிப்பிட்ட கட்சி அடையாளங்களுடன் எதை செய்தாலும் மிக எளிதாக காவல்துறை நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையை சமூக விரோதிகள் மனதில் தோன்றுவதற்கு வழிகோலிவிட்டது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது என் கடமையாகக் கருதுகிறேன்.

திரும்பத் திரும்ப ஒரே குற்றத்தை, சட்டமீறல்களை ஒரு நபரும் அவரது கட்சிக்காரர்களும் செய்வதை தமிழ்நாடு காவல்துறை அனுமதித்து கொண்டிருப்பது அத்துறைக்கு பெரும் களங்கத்தை உண் டாக்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

எனவே தான் இழந்துவிட்ட நற்பெயரை மீட்க வேண்டும் என்ற சுயநல நோக்கோடாவது, தொடர்ந்து சட்ட மீறலில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் மீதும் அவருடன் இணைந்து சட்டத்தை மீறும் கும்பல்கள் மீதும் கடமை உணர்வோடு உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

கொளத்தூர் தா.செ.மணி,
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
23.11.2020

Pin It