முகமதிய பெண்களின் உடையான பர்தா - ஹிஜாப்பை கல்வி வளாகம் போன்ற பொது இடங்களில் அரசு அங்கீகரித்தால், இந்துக்களின் மத அடையாளங்களை அல்லது காவித்துண்டு போன்ற உடைகளையும் அங்கீகரிக்க வேண்டியது ஏற்படும் எனக்கூறி, இரண்டையுமே அதாவது பொது சீருடை தவிர எந்த மத அடையாளங்களையும் உடைகளையும் அங்கீகரிக்கக் கூடாது என முடிவெடுப்பது 'இப்பொழுது' சரியா?
ஹிஜாப்பிற்கு போட்டியாக காவித்துண்டு அணிந்து ரகளை செய்த கர்நாடக சங்பரிவாரங்களுக்கு முகமதியர்கள் போல் தமக்கும் மத அடையாள உரிமைகள் வேண்டும் என்று கோருவது நோக்கமில்லை; போட்டி நடவடிக்கைகள் மூலம் முகமதியர்களுக்கு மட்டும் தனிச் சலுகைகள் இருப்பது போல் அடையாளங்காட்டி முகமதியர்கள் மீது வெறுப்பை விதைக்க வேண்டும்; இந்து மத நம்பிக்கையாளர்களிடம் உள்ள பிற மத சகிப்பு தன்மையை தகர்க்க வேண்டும் என்பவையே நோக்கம்.
"மதத்தை அரசு மற்றும் அரசியலிலிருந்து பிரித்து தனிநபர் விவகாரமாக்க வேண்டும்; எந்த மத அடிப்படைவாதமும் ஏற்புடையதல்ல" என்ற பொதுக் கண்ணோட்டத்தில் பொதுவுடமையாளர்கள் பலர் நடுநிலை வகிப்பது இந்து மத வெறியர்களுக்கு சாதகமான களத்தையே உருவாக்குகிறது.
மதவெறியையும் மத நம்பிக்கையையும் பிரித்து பார்த்து கையாள வேண்டும். மதவெறியை சமூக வகையிலும் அரசு வகையிலும் ஒடுக்க வேண்டும். மத நம்பிக்கையை தனிநபர் விவகாரமாக அனுமதித்து அவர்களை அம்மூடக் கருத்தியல் - பழக்கவழக்கங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
தனிநபர்களை மத நம்பிக்கை அடிப்படையிலான பழக்கவழக்கங்களிலிருந்து மீட்டெடுப்பது எப்படி? ஒவ்வொருவரும் அவர்களாகவே மத அடையாளங்களை - பழக்கவழக்கங்களைக் கைவிடும்படி மாற்ற வேண்டும். அதாவது அகநிலை மாற்றம் வேண்டும். இந்த அகநிலை மாற்றமும் புறத்தே இருந்து வரும் பொதுவுடமையாளர்களின் மதத்திற்கு எதிரான முற்போக்கு கருத்துகளால் மட்டுமே நிகழ்ந்து விடாது. அல்லது மத மோதல் சூழலில் அனைத்து மதங்களையும் பொதுவில் எதிர்ப்பதாலும் நிகழ்ந்துவிடாது.
இந்துமத அடிப்படைவாதிகளின் காவித்துண்டு கலகம் போன்ற மதவெறி வன்முறை நடவடிக்கைகளாலும் அந்த அகநிலை மாற்றம் எதிர்மறையில் நிகழும்; எதிர்திசையில் நகரும். அதுவும் விரைவாக நகரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அந்த தனிநபரது அகநிலை மாற்றம் மத பொது நம்பிக்கையிலிருந்து மத அடிப்படைவாதத்தை நோக்கி நகரும்.
இந்தியாவிலுள்ள இன்றைய மத மூடக் கருத்துக்கள் - பழக்கவழக்கங்களுக்கு வேர் அரை நிலக்கிழாரிய உற்பத்திமுறை. இதன் பொருளாதார ஏற்றத்தாழ்வு எனும் இழிநிலை மதத்தின்பால் உள்ள மக்களது பற்றை உறுதியாக்குகிறது. உற்பத்தி முறை மாற்றப்படும் வரை, மதம் பற்றிய கம்யூனிஸ்டுகளின் கோட்பாடுகளை மட்டும் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா மத அடிப்படைவாத தாக்குதல்களிலும் பொத்தாம் பொதுவாகப் பேசுவது சரியல்ல.
மத அடையாளங்களே இல்லாத நிலைக்கு மக்களை மாற்றுவதற்கு முந்தைய படிநிலைதான் மதச்சார்பின்மை பார்வை. மதச்சார்பின்மையும் பொது இடங்களில் இரண்டு முறைகளில் நடைமுறைப்படுத்தப்படலாம். ஒன்று அனைத்து மத முறைகளையும் சமமாக அனுமதிக்கலாம் அல்லது மறுக்கலாம். இடம் - தேவைக்கேற்ப இவ்வாறு இருப்பது மதச் சிந்தனையிலிருந்து மனிதர்களை மீட்டெடுக்கப் பயன்படும். அந்த வகையில் குறிப்பான தேவை கருதி மதச்சார்பின்மை முறையை அங்கீகரிப்பதும் பொதுவுடமையாளர்களின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
கோயில் கருவறைக்குள் குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை அனுமதிக்காமல் இருக்கும் அநீதியை தட்டிக் கேட்கிற, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கோருகிற நிலைப்பாடு எப்படி ஜனநாயக வகைப்பட்டதோ, அதுபோல் இந்து மத வெறியர்கள் ஹிஜாப்பிற்கு போட்டியாக காவித்துண்டு போட்டு வன்முறையை தூண்டுவதையும் அனுமதிக்காமல் தடுக்க வேண்டும் எனக் கோருவதுமாகும். கோயில் கருவறையிலுள்ள அநீதியை எதிர்ப்பதால் நாம் ஆத்திகவாதிகளாகிவிடமாட்டோம்; காவித்துண்டை எதிர்ப்பதாலேயே ஹிஜாப்பை ஏற்றுக் கொண்டவர்களாகிவிடமாட்டோம். அது நமது பொதுவான மற்றும் குறிப்பான நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் திறம்பட எடுத்துச் செல்வதன் மூலமே மக்களுக்குப் புரிய வைக்கமுடியும்.
பல அரசு அலுவலக வளாகங்களில் பெரும்பான்மை 'இந்து' மதக் கோயில்கள் அதுவும் விநாயகர் கோயில்கள் இருக்கின்றன. அதற்கு முறை தவறாமல் பூஜை புணஸ்காரங்கள் அவ்வலுவலக அதிகாரிகளாலும் ஊழியர்களாலும் நடத்தப்படுகின்றன. சர்ச்சோ, மசூதியோ உள்ள அரசு வளாகங்கள் அநேகமாக இல்லை. அரசு அதிகாரிகள் இந்து மத முறையில் பூஜை போட்டு பல அரசு கட்டிடங்களை - திட்டங்களை தொடங்கியிருக்கிறார்கள். மோடி இந்து மத கடவுள்களுக்கு பூஜை போடுவது - வணங்குவது விளம்பரப்படுத்தப்படுகிறது. அதுவும் தமிழக அறநிலையத்துறை கோவில்களில் அது தொடர்பான அவரது பக்தியுரை ஒலிபரப்புவதும் அதை நீதிமன்றம் சரியென அங்கீகரிப்பதும் நடக்கிறது. தமிழ்நாடு அரசு முத்திரை கோவில் கோபுரம் பொதுவானது என்கிற வாதம் சங்கராச்சாரி பற்றிய மோடியின் பக்தியுரை கோவில்களில் ஒலிபரப்பியதன்வழி இல்லை என்றாகிவிட்டது. அரசு அலுவலகங்களில், பள்ளி- கல்லூரிகளில் சபரிமலைக்கு பழனிமலைக்கு... என மாலை போட்டவர்கள் தனி உடை உடுத்தி வருவது வாடிக்கை. இதுபோன்று பலவற்றைக் குறிப்பிடலாம்.
அதாவது அரசு மற்றும் பொது இடங்களில் 'இந்து' மத நடவடிக்கைகள் - பழக்கவழக்கங்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் இயல்பான ஒன்றாக இருப்பது போலவும் முகமதியர்களின் சில இயல்பான பழக்கவழக்கங்கள் - நடவடிக்கைகளை மட்டும் பூதாகரப்படுத்தி ஏதோ தனிச் சலுகைகள் உள்ளதாக சித்தரித்து மத வெறுப்பை பொது சமூகத்தில் விதைப்பது யார்? ஆர்எஸ்எஸ் - பாஜக இந்து மத வெறியர்கள்தான். இதைக் கண்டிக்காமல் பொதுவில் மத அடையாளங்கள் அனுமதிக்கக் கூடாது என்ற பல்லவியை மட்டுமே கம்யூனிஸ்டுகள் பாடுவது தவறு.
பகுத்தறிவாளர்கள்தான் பூணூலை அறுத்திருக்கிறார்களே ஒழிய எந்த முகமதியரும் பூணூலை அறுத்ததில்லை. சட்டையைக் கழற்றி பூணூலை பார்த்து மதவெறித் தாக்குதலை எந்த முகமதியரும் தொடுத்ததில்லை; மாறாக கீழாடையைக் கழற்றி சுன்னத் செய்யப்பட்டவரா என்பதைப் பார்த்து இந்து மதவெறித் தாக்குதல் நிகழ்த்தியதுதான் நிறைய நடந்திருக்கின்றன. அதேபோல் வெளியில் தெரிகிற மத அடையாளங்களை அனுமதிக்கக் கூடாது; வெளியே தெரியாதவண்ணம் சீருடைக்குள் மறைவாக இருக்கும் மத அடையாளங்கள் பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை எனும் சங்கிகளின் வாதம், சுன்னத் செய்யப்பட்டவரா என்பதை அறிய துகிலுரித்து சங்பரிவாரங்கள் மதவெறித் தாக்குதல் தொடுத்ததில் பல்லிளித்துவிடுகிறது. எல்லா மத அடிப்படைவாதமும் எதிர்க்கப்பட வேண்டும் என்றாலும் இந்து மத அடிப்படைவாதத்தை - மதவெறி பாசிசத்தை மட்டுமே இப்பொழுது முதன்மையாக எதிர்க்க வேண்டும். ஏனெனில் முகமதிய மத அடிப்படைவாதத்திற்கு அல்லது பிற சிறுபான்மை மத அடிப்படைவாதத்திற்கு இந்து மத வெறி பாசிசமே அடிப்படையாக விளங்குகிறது; தூபமிடுகிறது. பொதுவில் மத அடிப்படைவாத எதிர்ப்பு என்பது ஒருவகையில் இந்து மதவெறி பாசிசத்திற்கு சாதகமானதே.
சரி, அரசு அலுவலக வளாகங்களில் உள்ள கோவில்களை அகற்ற சொல்லி இந்த நேரத்தில் (ஹிஜாப் × காவித்துண்டு என மத மோதல்களை சங்பரிவாரங்கள் தூண்டிவிடுகிற நேரத்தில்) ஒரு வலுவான நாடு தழுவிய போராட்டத்தை - இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் (குறிப்பாக சிபிஐ, சிபிஎம், சிபிஐஎம்எல்) எடுத்தால்... அது இந்து மத வெறியர்களுக்கு ஒரு நெருக்கடியாக இருக்குமே, அதையாவது செய்தார்களா என்றால் அதுவுமில்லை. அல்லது இதுபோன்ற வேறு ஏதாவது போராட்டத்தை எடுத்து இந்து மதவெறியர்களை முடக்க முயன்றார்களா என்றால் அதுவுமில்லை. இந்து மத வெறியர்கள் கிளப்பும் சிக்கல்களுக்குப் பின்னே வால்பிடித்து சென்று மறுப்பு - தடுப்பு முறை (defence) போராட்டங்களை மட்டுமே செய்யக் கூடாது; அவர்களை முடக்குகிற - தாக்குகிற - நெருக்கடி தருகிற (offence) வகைப் போராட்டங்களையும் ஒருங்கே கட்டி எழுப்ப வேண்டும். இதுவரை எந்த விசயத்திலும் பொதுவுடமையாளர்கள் இப்படி ஒர் உக்தியை கையிலெடுக்கவில்லை.
மாறாக திராவிட அரசியலாளர்கள் அவர்கள் பாணியில் கையிலெடுக்கிறார்கள். சங்பரிவார கும்பல் இந்து மத நம்பிக்கையில்கூட உண்மையாகவோ விசுவாசமாகவோ இல்லை. அதேபோல் சங்பரிவாரங்கள் தமது இந்து மத மக்களிடையே காட்டும் சாதிய பாகுபாடுகளையும் அவர்களை ஒன்று திரட்டும் பொருட்டு தற்காலிகமாக கூட கைவிடமுடியவில்லை. இதை மக்களிடையே அம்பலப்படுத்தி சங்பரிவார கும்பலை தனிமைப்படுத்திடும் திராவிட அரசியலின் உக்தி இத்தருணங்களில் செல்வாக்கு பெறுகிறது.
பொது சிவில்சட்டம், பொது சீருடை, பொது மத உரிமைகள் அல்லது தனிப்பட்ட மதச் சலுகைகள்... போன்றவற்றில் ஆர்எஸ்எஸ் - சங் பரிவாரங்களிடமிருந்து கம்யூனிஸ்டுகளின் பார்வை மாறுபட்டது என்பதை மக்களிடையே நிறுவ கம்யூனிஸ்டுகள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்?
தற்போதும் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுப்பப்பட்ட சர்ச்சையில்... நிலைப்பாடுகள் எடுப்பதில் பொதுவுடைமையாளர்கள் பலர் தமக்குள் முரண்படுகிறார்கள். கர்நாடக பொதுவுடைமையாளர்கள் மட்டுமல்ல; தமிழ்நாடு போன்ற பிற மாநில பொதுவுடைமையாளர்கள் பலரும் குழப்பமான - தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள்.
ஜெய் சிறீராம் கோஷத்திற்கு எதிராக ஜெய்பீம் + அல்லாஹூ அக்பர் மட்டும் ஒலிப்பதும் இன்குலாப் ஜிந்தாபாத் பரவலாக ஒலிக்கவில்லை என்பதும் வேதனைக்குரியதே.
- ஞாலன்