காமராசர் நினைவு நாளான அக்.2 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை நகலைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தித் தொகுப்பு:

சென்னை : தேசிய கல்விக் கொள்கையின் நகல் கிழிப்புப் போராட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் காமராசர் நினைவு நாளான அக். 2ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் நடந்தது. காமராசர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்துடன் கல்விக் கொள்கை நகலை கிழித்து எறிந்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெண் தோழர்கள் உள்ளிட்ட 70 தோழர்கள் கைதானார்கள். சிந்தாதிரிப் பேட்டையில் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டனர். அங்கே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தின் ஆபத்துகளை விளக்கி உரை யாற்றினர். 6 மணியளவில் விடுதலை செய்யப் பட்டனர்.

viduthalai rajendran at agitationசேலம்:  புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. சேலம் மாநகர அமைப்பாளர் பாலு கண்டன முழக்கங்கள் எழுப்ப அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் புதிய தேசிய கல்வி கொள்கையின் நகல் கிழித்தெறியும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி  உரையாற்றினார். தோழர்களின் கண்டன முழக்கங்களோடு புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு நகல்கள் கிழித்தெறியப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் ஒருங்கிணைத்தார்.  ஆர்ப்பாட்டத்தில் 110 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 85 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை கமலா மஹால் மண்டபத்தில் வைக்கப்பட்டு, மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்த உடன் கழகத் தோழர்கள் மிலிட்டரி குமார், கபிலன் விஜி மற்றும் ஆதரவாளர்கள், கர்ணன், கவுதம் தோழர்களுக்கு தேனீர் மற்றும் பிஸ்கட்  ஏற்பாடு செய்தனர். த.மு.மு.க. தோழர்கள் இப்ராஹிம் தலைமையில் மண்டபத்திற்கு வந்து  தோழர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இதுபோன்ற போராட்டங்களில் தமுமுகவையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். மாலை தமிழ்தேச மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் வின்செண்ட் காமராஜ் உட்பட தோழர்கள் வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாலை விடுவிக்கப்பட்ட பின் தமுமுக வழக்கறிஞர்கள் மற்றும் மஜக நிர்வாகிகள் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மண்டபத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு பெரியாரியல் பாடலுடன் கருத்தரங்கம் துவங்கியது.

அதைத் தொடர்ந்து கல்வியில் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட எவ்வாறு முன்னேறி உள்ளது என்பதையும் புதிய தேசிய கல்விக் கொள்கை அமுல்படுத்தப்பட்டால் தமிழக மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கழகத் தலைவர் விரிவாக விளக்கி உரை நிகழ்த்தினார்.

kolathoor mani at agitationதிருப்பூர்: திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற கல்விக் கொள்கை நகல் கிழிப்புப் போராட்டம் திருப்பூர் மாநகரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 32 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள்  6 குழந்தைகள் உட்பட 29 தோழர்கள் கைது செய்யப்பட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில்   வைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

கோவை: கோவை  தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காலை 11மணி அளவில் கோவை மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில்  குலக்கல்வியை வலியுறுத்தும் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக  முழக்கங்கள் எழுப்பப்பட்டு நகல்கள் கிழித்தெறியப்பட்டது.

40 தோழர்கள் கலந்து கொண்டனர். 34 பேர் கைதாயினர். அதில்  3  பெண் தோழர்கள், 2 பெரியார் பிஞ்சுகள் மற்றும் தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, கோவை மாவட்ட தலைவர் இராமச்சந்திரன், தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் காசு. நாகராஜன் மற்றும் விஜயராகவன் வகுப்புகளை எடுத்தனர். இறுதியாக கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் கோவை மாநகர கழகத் தோழர் லோகு நன்றி தெரிவித்தார். அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

 கைதான தோழர்களை திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, களப்பிரார், புரட்சிகர இளைஞர் முன்னணியை சார்ந்த வழக்கறிஞர் முத்து, தமிழ் கொடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மருத்துவர் மாணிக்கம் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சிற்றுண்டிகள் வழங்கி சென்றனர். ஜெனோவா இராமச்சந்திரன் தேனீர் செலவுகளுக்கு 500 ரூபாய் நன்கொடை வழங்கினார்.

மயிலாடுதுறையில் இரண்டு இடத்தில் போராட்டம் : பள்ளிப்பாளையம் மாநாட்டில் தலைமைக் கழகம் அறிவித்தப்படி மயிலாடுதுறையில் காமராசர் நினைவு நாளான 02.10.19 அன்று காலை 10.30 மணிக்கு நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை கழகத் தோழர்கள் கூடுவதற்குக்கூட நேரம் வழங்காமல் முன்கூட்டியே கைது செய்தது. மயிலாடுதுறை நகராட்சி பூங்கா மற்றும் வட்டாச்சியர் அலுவலகம் ஆகிய இரு இடங்களில் போராட்டம் நடத்தப் பட்டது.  போராட்டத்தில் தமிழர் உரிமை இயக்கத் தோழர்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் மற்றும் மக்கள் அரசு கட்சியை சேர்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி முன்னிலையில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் காலை 11 மணிக்கு புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. 15 ற்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

பழனி : திண்டுக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பழனி பேருந்து நிலையம் இரவுண்டானா அருகில், மருதமூர்த்தி தலைமையில் புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்புப் போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. 12 தோழர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பழனி, ஆக்களையாம் புத்தூர் பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி: திருச்சி மாவட்டம் சார்பில், புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு போராட்டம், திருச்சி இராமகிருஷ்ணா திரையரங்கம் அருகில் காலை 11 மணிக்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் . 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்தேச மக்கள் முன்னணி, ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை, எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய மஜ்லீஸ் கட்சி, போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி: திராவிடர் விடுதலைக் கழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் அக்டோபர் 2 அன்று காலை 11 மணியளவில், கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுக செயற்பாட்டாளர் வேடியப்பன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தோழர்கள் 39 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Pin It