கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

kolathoor mani at salemபெரியார் - கலைஞரை அவமதிக்கும் சேலம்-பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக செயல்படும் சேலம்-பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகளைக் கண்டித்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆக. 23, 2021 காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்தது. பல்கலைக் கழக வளாக வாயிலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகங்கள் ஏற்பாடு செய்திருந்தன.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பெரியார் பல்கலைக்கழகம், மதவாதிகளிடம் ஜாதியவாதிகளிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது, முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“இந்தப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஆய்வு மய்யம் ஒன்று இருக்கிறது. இதில் எந்த நிகழ்வுகளும் நீண்டகாலமாக நடைபெறுவது இல்லை. கடந்த ஆக.16ஆம் தேதி கலைஞர் கொள்கைக்கு நேர்மாறாக, ‘வேத சக்தியும் வர்மக் கலையும்’, ‘பண்பாட்டுப் பின்புலமும்’ என்ற ஆய்வரங்கம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பெரியார் சிலையை மக்கள் பார்வையிலிருந்து மறைக்கும் நோக்கத்தோடு தோரணவாயில் ஒன்றை கட்ட திட்ட மிட்டார்கள். அப்போது சுயமரியாதைக்காரரான தி.மு.க. மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம், கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த வாயில் கட்டுவதைத் தடுத்து நிறுத்தினார். இப்போது தோரண வாயிலைக் கட்டி பெரியார் சிலையை மறைத்து விட்டார்கள். பெரியார் படத்துக்கு பதிலாக சரசுவதி படத்தை ஏற்கனவே இருந்த துணைவேந்தர் மாட்டினார். இப்போது பகவத் கீதையையும் அதற்கு அருகே இடம் பெறச் செய்து விட்டார்கள். அறிவியலைப் பரப்ப வேண்டிய ஒரு பல்கலைக் கழகம் மதவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது.

பல்கலைக்கழக நியமனங்களில் இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படுவதே இல்லை. நியமனங்களுக்கான அறிவிப்புகளிலும் இடஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படுவது இல்லை. பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஒரே ஒரு இஸ்லாமியப் பேராசிரியர் மட்டுமே இருக்கிறார். மதச் சடங்குகளை அரசு நிறுவனங்களில் கொண் டாடக் கூடாது என்று வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஒன்றிய அரசே ஆணைகளைப் பிறப்பித்தது. தமிழ்நாடு அரசாணையும் இருக்கிறது. ஆனால், சரசுவதி, ஆயுதபூஜைகள் இந்தப் பல்கலைக் கழக நிதியிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. கலைஞர் ஆய்வு மய்யத்துக்கு ஒரு அறைகூட ஒதுக்கவில்லை. ஆனால் பஜனைப் பாடல்களைப் பாடுவதற்காக உருவாக்கப்பட்ட விவேகானந்தர் ஆய்வு மய்யத்துக்கு ஒரு மாடி முழுவதுமே இடமாக ஒதுக்கி இருக்கிறார்கள். பா.ஜ.க.வின் எச். ராஜாவும், வானதி சீனிவாசனும் வந்து போகும் புகலிடங்களாக இருக்கிறது இந்தப் பல்கலைக்கழகம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியைவிட ஆளுநர்களின் உரிமைக்குரிய இடங்களாகவே பல்கலைக்கழகங்கள் செயல்படுவதையும் துணை வேந்தர்களை ஆளுநர்களே நியமிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது குறித்து விவாதங்களை நடத்த வேண்டும். பெரியாரையும் கலைஞரையும் அவமதித்து ஆர்.எஸ்.எஸ். கூடாரமாகி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் முறைகேடுகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று கழகத் தலைவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

கலைஞர் ஆய்வு மய்யத்துக்கு சேலம் மாவட்ட தி.மு.க. ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் ஏன் மதத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். ‘ஆளுநர் மதவாதிகளாக இருப்பதால் அவர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் மதவாதிகளாகவே இருக்கின்றனர். துணைவேந்தர்களாகவே ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தொடர்ந்து நியமிக்கப் படுகிறார்கள். எனவே அவர்கள் ஜாதியினரைக் கொண்டே பதவிகளை நிரப்புகிறார்கள். உறுதிப்படுத்தப்படாத தற்காலிக பதவிகளை உருவாக்கி தங்கள் ஜாதிக்காரர்களை நிரப்புகிறார்கள்” என்று கொளத்தூர் மணி பதிலளித்தார்.

பட்டியலின பழங்குடி மாணவர்களிடம் விதிகளை மீறி மாணவர்களுக்கு விடுதி உறைவிடக் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு விதிகளை மீறி பட்டியலின பிரிவு மாணவர்களிடம் தேர்வுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. முனைவர் பட்ட மாணவர்களுக்கான இடங்களில் இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவது இல்லை என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளக்கிப் பேசப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்- இரா.டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் - சி.கோவிந்தராஜ், தமிழ்நாடு மாணவர் கழகம் சந்தோஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்புச் செயலாளர் - இரா. நாவரசன், மதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர்- அன்னையன்பன், சிபிஅய் மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.முனுசாமி, ஆதித் தமிழர் பேரவை சேலம் மாவட்டத் தலைவர்- சந்திரன், புரட்சிகர இளைஞர் முண்ணனி - வின்சென்ட், அம்பேத்கர் கல்வி இயக்கம் - கவி அரசன், அருந்ததியர் மக்கள் இயக்கம் - பிரதாபன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்- ஆ.குணசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் - பார்த்திபன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை - சுந்தரவதனம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் - தங்கராஜ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி - மாரியப்பன், திராவிட பண்பாட்டு நடுவம் - முல்லை வேந்தன் ஆகியோர் கவன ஈர்ப்பு உரையாற்றினர். சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், சேலம் கிழக்கு, மேற்கு, மேட்டூர், ஏற்காடு, தர்மபுரி, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்ட கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.