அனிதாவின் மரணம் தமிழகத்தை கொதிப்படையச்செய்துள்ளது. 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றும் ‘நீட்’ தடையால் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாத நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி சமூக நீதிக்காக உயிர்ப்பலி தந்தார். மத்திய மாநில அரசுகளின் படுகொலையாகியிருக்கிறது அவரது மரணம். தமிழகம் முழுதும் போராட்டக் களமாகி வருகிறது.

கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து உயிர்பலி தந்தருவமான அனிதா அவர்களுக்கு நீதிக் கேட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 2.09.2017 மாலை 3 மணி யளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது.

முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய ஆட்சிகளுக்கு எதிராக வும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக செயலை கண்டித்தும் போர் முழக்க மிட்டனர். தமிழக கல்வி உரிமைகளை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அமைக்கும் மோடி ஆட்சியை கண்டித்தும் மோடியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தியாகராய நகரில் அமைந்துள்ள முருகன் கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

அனிதா மரணத்துக்கு  நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், 04.09.2017 மாலை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்ட பகுதி மக்கள் இணைந்து சென்மேரீஸ் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் கல்வி உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து மோடியின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

anitha kulathuru mani 600சேலத்தில் 

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிட கோரியும், ‘நீட்’ தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 02.09.2017 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேல் தலைமை தாங்கினார்.  சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஏற்காடு பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் இரணியாவின் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரி, மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு,  முல்லை வேந்தன், சேலம் மாநகர அமைப்பாளர் பாலு, தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல் கண்டன உரையாற்றினர். சேலம் மாநகர செயலாளர் பிரபு நன்றியுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, நங்கவள்ளி, ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ் பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் கணிசமான அளவு அங்கேயே நின்றிருந்து ஆர்ப்பாட்டத்தை முழுமையாக கவனித்தனர். சேலம் மாநகர தலைவர் பரமேஸ் குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

ஈரோட்டில் 

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 03.09.2017 அன்று மாலை 3 மணிக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.

அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  வைரவேல் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார்.

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணு கோபால், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், ஆசிரியர் சிவகாமி, சங்கீதா, இணையதளப் பொறுப்பாளர்  விஜயக்குமார், அமைப்புச் செய லாளர் இரத்தினசாமி ஆகியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு தோழர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலை முன்பு கனல்மதி படிக்க ‘நீட்’ ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருப்பூரில்

மாணவி அனிதாவின் மரணத் திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் 02.09.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்டகழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொருளாளர் துரைசாமி தலைமை தாங்கினார்.  த.வா.க. மத்திய மாவட்ட செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள், தனகோபால், சங்கீதா, மாதவன்அருண் (மக்கள் கட்சி), கௌதம், மாதவன், ராஜசிங்கம், ரவி, கனல் மதி, தேன்மொழி, பார்வதி, முத்து, கருணாநிதி, சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில்

கோவையில் காந்தி பூங்காவில் நீட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 02.09.2017 காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் பூர்ணிமா நந்தினி தலைமையில் சிறப்பாக நடந்தது. நிமிர்வு குழுவின் பறை முழக்கத்தோடு ஆரம்பமானது. நீட் தேர்வு விலக்கு பெறும்வரை தினமும் நடக்கும் இடம் அந்தந்த அமைப்பு தோழரிடம் அறிவிக்கப்படும் . அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நடக்கும் என்ற முடிவோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது.

பொதுவாக வேடிக்கை பார்த்தவர்கள் கூட நிகழ்வு முடிவடையும் நேரத்தில் பங்கேற்பாளர்களாக இருந்தார்கள். தேன்மொழி அடுத்த கட்ட போராட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசினார். கண்மணி, வினோத், இளந்தமிழகம், கோவை மாநகர கழகத் தோழர்களும் உணர்வுப் பூர்வமாக பேசினர். கழகத் தோழர்கள் நேருதாஸ், நிர்மல் குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.