‘கல்வி - நமது உரிமை; வேலை வாய்ப்பு - நமது வாழ்வு; சுயமரியாதை - நமது அடையாளம்’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் 7 நாட்கள் நடத்திய பரப்புரை இயக்கத்துக்கு (2018 ஆக.20 முதல் 26 வரை) மக்கள் பேராதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆக. 26, 2018இல் பெரம்பலூரில் நடந்த நிறைவு விழா மாநாட்டில் பயணக் குழு பொறுப்பாளர்கள் பரப்புரைக்குக் கிடைத்த ஆதரவையும் ‘நீட்’ தேர்வு நீக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் காட்டிய உறுதியையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மனுசாஸ்திரத்தைக் காட்டி பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’களாக்கி அதன் வழியாக கல்வி, வேலை வாய்ப்புகளைப் பறித்து வந்ததை எதிர்த்து சமூகநீதிக்கான போராட்டம் வலிமையாக நடந்தது தமிழ்நாட்டில்தான். நீதிக்கட்சி ஆட்சி காலங்களிலே ‘சுதந்திரத்துக்கு’ முன்பே தொடங்கிய இந்தப் போராட்டம், பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் வழியாக தடைபட்டாலும், தடைகளைத் தகர்த்து முன்னேறியது.

கடவுள்-மத நம்பிக்கையாளர்களும் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்தனர். விளிம்பு நிலை மக்களும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கே முன்னுரிமை தந்தனர். இந்த சமூக நீதிக்கான உரிமை தமிழ்நாட்டின் சமூகப் பண்பாடாகவே மாறி நிற்கிறது என்பதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம். இந்தப் பண்பாட்டுப் புரட்சிக்கு ‘சுயமரியாதை’ என்ற உணர்வு உந்து சக்தியாக இருந்தது.

“சுயமரியாதை என்கின்ற ஒரு என்ஜினைப் பயன்படுத்தி சரியாக ஓட்டத் தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்து விட்டால் பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்து தோல்பட்டையை மாட்டி விட்டாலும் அது தானாகவே ஓடும்.” (‘குடிஅரசு’ 17.2.1929) என்றார் பெரியார். தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ‘நீட்’டும் தமிழர் வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறித்து, வடநாட்டுக்காரர்களுக்கு தாரை வார்க்கும் நடுவண் அரசின் முயற்சிகளும் தமிழர் சுயமரியாதைக்கு எதிரானது. எனவேதான் இந்தக் கோரிக்கைகளை சுயமரியாதையோடு நாம் இணைத்தோம்.

‘நீட்’ தேர்வுக்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும் தான் வெடித்துக் கிளம்பியது. தமிழக சட்டமன்றத்தில் மட்டும்தான் ‘நீட் தேர்வு வேண்டாம்’ என்ற ஒருமித்தத் தீர்மானம் நிறைவேறியது.

இந்த நிலையில் ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி மீண்டும் ஒரு முறை தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பெரம்பலூரில் நிகழ்ந்த நிறைவு விழா மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் முன் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ‘நீட்’ எதிர்ப்புக்கான போராட்டத்துக்கு இது மேலும் வலிமை சேர்க்கும் என்று நம்புகிறோம்.

பயணக் குழுவில் தொடர்ந்து ஒரு வார காலம் காலை முதல் இரவு வரை பயணித்து, மக்களிடம் சமூகநீதியை எடுத்துச் சென்ற கழகத் தோழர்களை பாராட்டி மகிழ்கிறோம்.

Pin It