உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது “அமேதி” பாராளுமன்றத் தொகுதி. சென்ற வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் - காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் தலைவர்களில் (!?) ஒருவரான ராகுல் காந்தி ஆவார். உ.பி. முதல்வர் மாயாவதி அமேதியை ஜுலை 1, 2010 அன்று மாவட்டத் தகுதிக்கு உயர்த்தி அறிவிப்புக் கொடுத்தார். அதன்படி, அம்மாநிலத்தின் 72-ஆவது மாவட்டமானது அமேதி. ஆனால், இதுவல்ல செய்தி. அம்மாவட்டத்திற்கு  சத்ரபதி சாகு மகராஜ் மாவட்டம் எனப் பெயர் சூட்டி மிகவும் பாராட்டத்தக்க செயலை செய்துள்ளார் மாயாவதி.

மராட்டிய மாநிலத்தில் பிறந்த சாகுமகராஜ் பெயரை, உ.பி.யில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு சூட்ட வேண்டியத் தேவை என்ன? பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒருவரின் பெயரை, தான் ஆளும் மாநிலத்தின் ஒரு மாவட்டத்திற்கு தலித் தலைவர் செல்வி மாயாவதி இடவேண்டிய அவசியம் என்ன ? கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மன்னர் ஒருவரின் பெயரை மக்களாட்சியின் ஒரு நிலப்பரப்பிற்கு தற்போது சூட்ட வேண்டிய முக்கியத்துவம் என்ன ?

இது போன்ற எண்ணற்ற வினாக்களுக்கு விடை பகர்கிறது புரட்சியாளர் சாகுமகராஜ் அவர்களின் பொது நலன் சார்ந்த வாழ்க்கை. சிற்றம்பரி என்ற இயற்பெயர் கொண்ட சாகுமகராஜ் (1874 - 1922) அவர்கள் சத்ரபதி சிவாஜியின் மரபு வழி வந்தவர். பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு உட்பட்டு, மராட்டிய மாநிலம் கோலாப்பூர் சமஸ்தானத்தின் மன்னராக தமது 20-ஆவது வயதில் பதவியேற்று 28 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்.

இவரது பல்வேறு சாதனைகளிலும், இவரை ஒளி வட்டத்தில் கொண்டு நிறுத்தி, மற்றவர்களின் கவனத்தை இவர்பால் ஈர்த்தது - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவர் அளித்த இடஒதுக்கீடே ஆகும். கோலாப்பூர் சமஸ்தானத்தில் உள்ள அனைத்துப் பணிகளிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து 1902-இல் ஆணை பிறப்பித்தார். இந்தியத் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிற இன்றைய மொத்த நிலப்பரப்பிலும் இட ஒதுக்கீடு என்ற ஒன்றை முதன்முதலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மனமுவந்து அளித்தவர் புரட்சியாளர் சாகுமகராஜ் அவர்கள் தான்.

1900 ஆண்டுகளில் யார் ஆட்சியில் இருந்தாலும், அதிகாரமய்யங்களாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பதை சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தகுதி, திறமை என்று இப்போதும் திரிபு வாதம் பேசும் பார்ப்பனர்கள், 1902 - இல் சாகுமகராஜ் ஒடுக்கப்பட் டோருக்கு அளித்த இடஒதுக்கீட்டுக்கு எவ்வளவு இடையூறு செய்திருப்பார்கள் என்பதை நம்மால் உணரமுடியும். ஆனால், அத்தனை இடையூறுகளையும் புறந்தள்ளிய பெருமைக்குரியவர் சாகுமகராஜ்.

நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய டாக்டர் தரவாத் மாதவன் நாயர் (டி.எம்.நாயர்) மைசூர் சமஸ்தான மன்னராக விளங்கிய கிருஷ்ணராஜு (உடையார்), சாகுமகராஜ் - ஆகிய மூவரும் இங்கிலாந்தில் ஒரே காலத்தில் படித்தவர்கள். ஒத்தக் கருத்துடை யவர்களும்  கூட. படிப்பை முடித்ததும் மூவரும் தத்தமது பகுதிகளில் தங்கள் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தனர்.

சாகு மகராஜைப் பின்பற்றி 1921 - இல் தனது மைசூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மன்னர் கிருஷ்ணராஜு (உடையார்) இட ஒதுக்கீடு அளித்தார். 1916 முதல் பார்ப்பனரல்லாத இயக்கத்தை முன்நின்று நடத்தினார் டாக்டர் டி.எம். நாயர். எல்லாக் காலத்திலும் தங்கள் இனத்தை காப்பற்ற அடுத்த இனத்தின் மீது ஏறி மிதிப்பது என்ற கொடூரக்கொள்கையுடைய பார்ப் பனர்கள், மைசூர் மன்னர் அளித்த இடஒதுக்கீட்டையும் எதிர்த்தனர். மைசூர் சமஸ்தானத்தின் அப்போதைய திவானாக இருந்த விசுவேசுவரய்யா என்ற பார்ப்பனர், இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்துப் பதவி விலகினார். மன்னர் கிருஷ்ணராஜு (உடையார்) அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். 

“தொட்டால் தீட்டு ; கை பட்டால் பாவம்” என்ற நிலையில் அன்று ஒதுக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப் பட்டவர்கள் உணவுக்கடைகளை கோலாப்பூர் சமஸ் தானத்தில் வைத்துக் கொள்ள சாகுமகராஜ் அனுமதி யளித்தார். அது மட்டுமன்றி, தனது பரிவாரங்களுடன் வழக்கமாகச் அங்கே சென்று உணவருந்தி ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். இவர் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன் கோலாப்பூரில் ஒடுக்கப்பட்ட மக்கள் கட்டாயம் உடலுழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்தது. சாகுமகராஜ் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த 1894 - லேயே அதை முற்றுமுழுதாக ஒழித்தார்.

அனைவருக்கும் கல்வி என்பதில் முனைப்புக் காட்டினார். ஆனால், அனைத்து சாதியினரும் ஒன்றாகத் தங்கிப் படிக்க இருந்த ஒரே ஒரு விடுதியில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு மாணவர் கூட பல ஆண்டுகளாக சேர்த்துக் கொள்ளப்படாத நிலை கண்டு வருந்தினார். எனவே, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று தனி விடுதியை ஏற்படுத்தி அவர்கள் படிக்க ஆவனசெய்தார். நிலைமை சற்று சீரானதும் - அரசின் கல்வி நிறுவனங் களிலும் அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங் களிலும் சாதியின் பெயரால் மாணவர்களிடையே பாகுபாடு (discrimination) காட்டக்கூடாது என்று அரசாணையே பிறப்பித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும் என்று இருந்த தனிப்பள்ளிகளை மூடிவிட்டு, பொதுப்பள்ளிகளில் அவர்களைச் சேர்க்க ஆணையிட்டார்.

சாதி அடிப்பçயில் கோலாப்பூர் நகரசபைக்கு இட ஒதுக்கீடு அளித்து, தாழ்த்தப்பட்டோருக்கான இடங்களை அவர்களுக்கு அளித்தார். இவர் காலத்தில் தான் முதன் முதலில் தாழ்த்தப்பட்ட ஒருவர் கோலாப்பூர் நகரசபையின் தலைவராக ஆக்கப்பட்டார். கிராமங்களில் தாழ்த்தப் பட்டோர் உள்ளிட்ட எல்லா சாதிகளைச் சார்ந்தவர்களையும் கணக்குப்பிள்ளைகளாக (குல்கர்னிகளாக) நியமித்து ஆணையிட்டார். இதன் மூலம் கிராமங்களில் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தையும், சாதிகளுக்கு இடையில் சிண்டு முடியும் குள்ளநரித்தனத்தையும் ஒடுக்கினார். உடனே, “தாழ்த்தப்பட்டவர்களுடன் நாங்கள் பணிபுரிய மாட்டோம்” என்று வருவாய்த்துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள் எதிர்ப்புக்காட்டினர். அதற்கு சாகுமகராஜ், “உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன் ; அதற்குள் அதே பணியை அதே இடத்தில் தொடர்வதா, இல்லை பணியி லிருந்து விலகி ஓடுவதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று அறுதியிட்டுக் கூறியது மட்டுமன்றி, தாழ்த்தப்பட்டவர்களை மேலும் செல்வாக்குள்ள பதவிகளில் அமர்த்தினார்.

சாகுமகராஜ் தன்னுடைய தனி அலுவலர்களில் தாழ்த்தப்பட்டோரையும் சேர்த்துக்கொண்டார். யானை மீது ஏறி அமர்ந்து வழிநடத்திச் செல்லும் அரசுப் பதவியை அதுவரை எந்த தாழ்த்தப்பட்டவரும் வகித்ததில்லை என்ற நிலையை மாற்றி, தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அந்த அரசுப் பதவியை வழங்கினார். இவ்வாறு, சாதிப்பாகுபாடு பேணும் பிற்போக்கானவர்களின் கெடுமதியில் 19-ஆம் நூற்றாண்டிலேயே சுத்தியல் கொண்டு தாக்கினார் சாகுமகராஜ்.

சாதி அமைப்பையே தகர்க்க விரும்பி, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க முனைப்புக் காட்டினார். அதற்கு அவர் சார்ந்த சாதியாரின் முழு ஆதரவு கிடைத்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆனால், தாழ்த்தப்பட் டோரின் இழிவைப் போக்க இவர் முனைந்தபோது இவரின் சொந்த சாதியைச் சேர்ந்தவர்கள்  அதற்கு உடன்பட வில்லை. ஆனால், தன்னுடைய குறிக்கோளில் கடைசி வரை உறுதியாக இருந்து கடமையாற்றினார் சாகுமகராஜ்.

அம்பேத்கருக்கும், சாகுமகராஜுக்கும் இடையில் நல்லத் தொடர்பு இருந்தது. 1920 ஜனவரி 31 ஆம் நாள் அம்பேத்கர் “மூக்நாயக்” (ஊமைகளின் தலைவன்) என்றொரு இதழைத் தொடங்கினார். “மூக்நாயக்” இதழ் தொடர்ந்து வெளிவர நிதி உதவி செய்தவர் சாகுமகராஜ். அம்பேத்கர் தன் ஆய்வுப் படிப்பை இங்கிலாந்தில் படித்தபோது; இடையில் அதை நிறுத்திவிட்டு இந்தியா திரும்ப வேண்டி வந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சென்று மீண்டும் அப்படிப்பை அம்பேத்கர் தொடர உதவியவர்களில் சாகுமகராஜும் ஒருவர்.

சாகுமகராஜ் கடவுள் பற்றாளர் ; மதச்சடங்குகளில் ஆழ்ந்த ஈடுபாடுடையவர். எனவே, அவருக்கான மதச்சடங்களை நிறைவேற்ற அரண்மனையில் பார்ப்பன புரோகிதர்கள் இருந்தனர். ஆனால், வேதச் சடங்குகளைச் செய்யாமல், புராணச் சடங்குகளை மட்டுமே செய்தனர். வேதம் என்பது இரு பிறப்பாளர்களான (துவிஜர்கள்) பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் என்பதால் வேதச் சடங்குகளை பார்ப்பனர்களுக்கு மட்டுமே செய்ய முடியும் என்பதில் இன்றுவரை அவர்கள் உறுதியாக இருக் கிறார்கள். இரு பிறப்பாளர்கள் என்பது, ஒரு பார்ப்பான் குழந்தையாகப் பிறக்கும் போது முதல் பிறப்பு ; பூணூல் அணியும் போது இரண்டாவது பிறப்பு.

சத்ரபதி சிவாஜியின் வழியில் வந்த சாகுமகராஜ் சத்திரியராகவே (போர் செய்யும் தொழிலைச் செய்பவர்கள்) இருந்தாலும், அவரை சூத்திரராகவே கருதி தான் கோலாப்பூர் அரண்மனையில் வேதச்சடங்குகள் செய்யப்படாமல், வெறும் புராணச் சடங்குகளை மட்டுமே பார்ப்பனர்கள் செய்தனர். தன் மானம் கொண்ட சாகுமகராஜ் இதை அறிந்ததும், தனக்கு ஏற்பட்ட இழிவை அடியோடு ஒழிக்க முற்பட்டு, ‘இனி அரண்மனையில் புரோகிதர்கள் வேதச்சடங்குகளை மட்டுமே செய்யவேண்டும் ; புராணச் சடங்குகளை செய்யக் கூடாது; அப்படி மீறுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்’ என்றொரு அறிவிப்பைக் கொடுத்தார்.

அரண்மனைத் தலைமை புரோகிதர் ராஜோபாத்தியாயா, அந்த உத்தரவை செயல்படுத்த மறுத்தார். உடனடியாக, அவரைப் பணி நீக்கம் செய்து, அவருக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தையும் பிடுங்கினார் சாகுமகராஜ். தலைமைப் புரோகிதர் மறுத்தது சரிதான் என்று கோலாப்பூரில் இருந்த சங்க(ட)ர மடத்தின் சங்கராச்சாரி பிலவதிகர் என்பவரும் கூறினார். சினம் கொண்ட சாகுமகராஜ், கோலாப்பூர் சங்கரமடம் பற்றிய செய்திகளை தோண்டித் துருவினார். இவரின் காலத்திற்கு முன்பு 1863 இல் அன்றைய மன்னர் பெருமளவிலான  சொத்துகளை அந்த சங்கர மடத்திற்கு கொடுத்தது அப்போது தெரிய வந்தது.

ஒரு நிபந்தனையுடன் தான் அந்தச் சொத்துக்கள் கொடுக்கப்பட்டன. சங்கர மடத்தின் வாரிசை (ஜுனியர்) நியமிக்கும் முன், மன்னரின் ஒப்புதலைப் பெற்றே நியமிக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. சங்கராச்சாரி பிலவதிகர், மன்னர் சாகுமகராஜின் ஒப்புதலைப் பெறாமலே தனக்கான வாரிசை நியமித்ததை அறிந்தவுடன், சங்கராச்சாரியின் சொத்துக்களைக் கைப்பற்றினார் ; வாரிசு நியமனத்தையும் செல்லாது என அறிவித்தார். சொத்தை திரும்பப்பெற்று, மீண்டும் அதை அனுபவிக்கும் ஆசையில் - சீனியர், ஜுனியர் சங்கராச்சாரிகள் போட்டி போட்டுக்கொண்டு செயல்படத்தொடங்கினர். (போலி காஞ்சி சங்கரமடத்தின் பெரியவா, சின்னவா இடையே சொத்து மட்டுமின்றி, பெண்களுக்காகவும் வெளிப்படையாக அடித்துக்கொண்டு நாறியதை அண்மைக்காலத்தில் நாம் நேரடியாகக் கண்டோம்.)

கடைசியில், சாகுமகராஜுக்கு பூணூல் அணிவிக்கவும், வேதச்சடங்குள் செய்யவும் சொத்தை அனுபவிக்கும் ஆசையில் ஜுனியர் சங்கராச்சாரி உடன்பட்டு, இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற்றார்.

நடிகர் வடிவேலு நடித்த ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியில், வத்தக்குழம்பை கூரியர் மூலம் அனுப்ப வந்த பார்ப்பனரின் பார்சல் சேதம் ஆகும். இதற்கு ‘நான் சுப்ரீம் கோர்ட் போவேன்’ என்று அந்த பார்ப்பனர் கூறுவதாக அக்காட்சி இருக்கும். வத்தக்குழம்புக்கே சுப்ரீம் கோர்ட் போவதாகக் கூறும் போது, சொத்துக் கணக்கு இல்லை என்றால் சீனியர் சங்கராச்சாரி விடுவாரா என்ன ? கோலாப்பூரில் அன்று இருந்த ஆங்கில அரசின் அரசியல் முகவர் கர்னல் ஃபெரிஸ், பம்பாய் அரசு, இந்திய அரசு என படிப்படியாக மேலே சென்று முறையிட்டார் சீனியர் சங்கராச்சாரி பிலவதிகர்.

அய்யோ பாவம் ! கடைசி வரை அவரால் வெற்றி பெறவே முடியவில்லை.சத்ரபதி சிவாஜிக்கு பூணூல் அணிவிக்கவும், வேதச் சடங்குகள் செய்யவும் மறுத்து அவர் மன்னராக முடிசூட பெரும் சிக்கலை பார்ப்பன புரோகிதர்கள் இதற்கு முன்பு ஏற்படுத்தினர். புரோகிதர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்து தான் 1674 - இல் சத்ரபதி என்ற பட்டத்துடன் சிவாஜி முடி சூட்டிக்கொள்ள முடிந்தது. ஆனால், சிவாஜி மரபில் வந்த சாகுமகராஜ், புரோகிதர்களுக்குக் கொட்டிக் கொடுக்காமல் அவர்களை சுற்றிச் சுற்றி அடித்தே தனது உரிமையை நிலை நாட்டினார். ‘பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான் ; மிஞ்சினால் கெஞ்சுவான்’ என்ற சொற்றொடருக்கு அன்றே ஒரு முன் மாதிரியை நிலை நாட்டினார் சாகுமகராஜ்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு மெச்சத்தக்க இரு செயல்களைச் செய்தார் சாகுமகராஜ். பார்ப்பனர்களை அழைக்காமல் திருமணம், சடங்கு போன்றவைகளை நடத்தவேண்டும் என்பதில் தனது கவனத்தைக் குவித்தார். 1920 -இல் பார்ப்பனரல்லாத மராத்திகளை அர்ச்சகர்களாக உருவாக்க ஒரு வேதப்பள்ளியை நிறுவினார். கோயில்களைச் சுரண்டும் பார்ப்பனர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ‘தேவஸ்தான இனாம் துறை’ ஒன்றை நிறுவி அதை வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொணர்ந்தார். அதன்படி, கோயிலின் வருமானத்தை கல்விக்காக திருப்பிவிட்டார். இதைப் பின்பற்றித்தான் 1925-இல் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் இந்து அறநிலையத்துறையை ஏற்படுத்தியது.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையில், பார்ப்பனர் எதிர்ப்பில் மிகச் சரியாக செயல்பட்ட சாகுமகராஜின் பெயரைத்தான் உத்திர பிரதேசத்தில் உள்ள அமேதி மாவட்டத்திற்கு பெயரிட்டு தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டார் மாயாவதி.

- மேட்டூர் ஜஸ்டின் ராஜ்

(பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)

Pin It