உலக பெண்கள் தினத்தின் நூறாவது ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை மக்களவையில் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் தலையிலான கூட்டணி அரசு முயற்சி எடுத்து முடியாமல் முடங்கிவிட்டது. தமிழகத்தில் ஜெயலலிதா, வங்காளத்தில் மம்தா, உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி, டெல்லியில் ஷீலா தீட்சித் மற்றும் இந்தியாவை ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவியாக சோனியா காந்தி என்றும் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டில், நாடாளுமன்ற அவைத்தலைவராக மீரா குமார் எனவும் அரசியல் தளத்தில் கண்ணில்படும்படி பெண்களின் பங்கேற்பு இருந்து வருகிறது. ஜெயலலிதா, நிதிஷ் குமார், மம்தா ஆகியவர்கள் சேர்ந்து மற்றுமொரு மூன்றாவது அணி முயற்சியில் இருக்கிறார்கள்.

ஜெயத்தாபூர் அணுஉலை எதிர்ப்பில் பெண்கள், ஒரிசா மாநிலத்தில் போஸ்கோ என்னும் பன்னாட்டு அலுமினியம் ஆலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த எழுச்சியான போராட்டத்தில் தலைமையேற்கும் பெண்கள், ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிரான ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் போராளிகளிடையில் பெண் உறுப்பினர்கள், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் என்று பெண்கள் தலைமையில் அல்லது பெண்களின் பெரும் பங்களிப்போடு நடைபெறும் போராட்டங்கள் பலவாக இருக்கின்றன. பெண்களின் பங்களிப்பு அதிகமாக அதிகமாக போராட்டத்தின் வெற்றி வாய்ப்பு அதிகமாகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

தொடர் வண்டி ஓட்டுநர்களாகப் பெண்கள், தொழில் முனைவோர் கூட்டமைப்புத் தலைவர்களாகப் பெண்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளாகப் பெண்கள் என்று பெண்கள் தடம்பதிக்கும் புதிய துறைகள் பற்றிய தகவல்கள் தொடர்கின்றன.

ஊழலுக்கு எதிராகக் கொந்தளித்த மக்களின் போராட்ட‌ங்களில் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது தலைமையிலும் தோழமையிலும். மணிப்பூரில் மக்களுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை அகற்றக்கோரி மணிப்பூரின் இரும்புப் பெண் என்று அழைக்கப்படும் இரோம் ஷ‌ர்மிளா அவர்களின் தலைமையிலான போராட்டம் வீறுபெற்று வருகிறது. உள்ளாட்சித் தலைவர்களான பெண்களை வெட்டிச்சாய்த்திடும் நிலைமை இருந்தாலும் கூட வீரத்தோடு தலைமை ஏற்றிடும் தீரம் கண்ணில் படுகிறது.

அக்கிரமம், சூழ்ச்சி, அதிகாரப் பேராசை
கொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான்
மானம் உணர்ந்து வளர்ந்து எழுச்சியுற்றுக்
கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்!

என்னும் பாரதிதாசனின் வார்த்தைகள் வாழ்வதைக் கண்ணால் பார்க்கிறோம். அரசுகள் சாய்வதையும் வீழ்வதையும், அதிகாரப் பீடங்கள் அசைக்கப்படுவதையும் வீழ்த்தப்படுவதையும் பார்க்கிறோம்.

தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவெடுத்து வருவதைப் பார்க்கிறோம். கந்துவட்டிக் கொடுமைகளில் இருந்து குடும்பங்களைக் காக்கிறார்கள் பெண்கள். குழந்தைகளின் கல்விக்கும் குடும்பத்தின் மருத்துவத்திற்கும் சேமித்த காசிலிருந்து செலவழிக்கிறார்கள் பெண்கள். அலைகடலில் துரும்புபோன்ற அசையும் படகுகளைத் துணிவோடு துடுப்புப்போட்டு செலுத்திடும் வேலையாக, பொருளாதாரப் புயலிலே சிக்கிப் பெரும் பெரும் கப்பல்களே கவிழும்போது நமது நாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்க கோடிக்கணக்கான பெண்களின் சிறுசிறு முயற்சிகளும் காரணம் என்பதை விபரம் அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே வேளையில் இந்தப் பெண்களின் தியாகத்தில், உழைப்பில், வேர்வையில் விளைந்த சொத்துக்களைக் கொத்தித் தின்னும் கழுகுகளாக லாப நோக்கத்தில் இயங்கும் குறுங்கடன் நிறுவனங்கள் பல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. வங்கிக் கடன்கள் குறுங்கடன் நிறுவனங்கள் வழியாக அல்லாமல் நேரடியாக தன் உதவிக் குழுக்களுக்கே கிடைக்கும்படி செய்து தொழில் முனையும் பெண்களின் கடுமையான உழைப்பும் தியாகமும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பலன்தரச் செய்வது சரியான செயலாக இருக்கும்.

இந்த மகளிர் தினம், அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கான நியாயமான பங்களிப்பை உறுதிசெய்யட்டும். இன்னும் பெண்களின் ஆளுகைக்குள் வராத எல்லாத் துறைகளிலும் அவர்கள் கால் பதிக்கும் வகை செய்யட்டும். ஊழலுக்கும், அக்கிரமத்திற்கும் எதிரான போராட்டங்களில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறட்டும். நாட்டின் பொருளாதார வளங்களை வளர்த்தெடுத்து பசியும் பிணியும் போக்கும் பாங்கான செயல்களிலே பெண்கள் வெற்றி பெறட்டும். மகளிர் தின வாழ்த்துக்கள்.

Pin It