tn election commission

‘முயன்றால் முடியாதது இல்லை’ என்று முனைப்புடன் களம் இறங்கினால் எப்படிப்பட்ட அசுர சக்திகளையும் வென்றுவிடலாம் என்பதற்கு உதாரணமாய், உள்ளாட்சித் தேர்தல் அரசு ஆணைகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தடை உத்தரவு உள்ளது. இது திமுகவின் வெற்றி என்பதைவிட மக்களின் வெற்றி என்பதே பொருத்தமானது. ஆம்! திமுக என்பதே திராவிடத் தமிழர்களின் வடிவம்தானே.

வெளிப்படையாகத் திட்டமிட்டுத் தவறு செய்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒப்பனை வசனம்தான் “எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும்Ó என்பது. அந்த ஒப்பனையாளர்களாக உள்ள அதிமுகவினரும் அவர்களின் எடுபிடிகளாகப் போய்விட்ட தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரும் இணைந்து திட்டமிட்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெறக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். தொடர்ந்து பல தவறான முறைகளை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

முதலில், மாநகரத் தந்தை, நகர, ஒன்றியத் தலைவர்களை நேரடியாக மக்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி மன்ற உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரம் அளித்தது, குதிரை பேரத்திற்கு வசதி என்ற நினைப்பில் பணக்கட்டுகளுடன் பவனிவர முடிவெடுத்த அயோக்கியத்தனம்.

இரண்டாவது, தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சித்தலைவர் தளபதி எதிர்த்திட கழகக் குரலை அலட்சியம் செய்து ‘உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு சுழற்சி முறைக்குக் காலம் இல்லை. 2011 மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்

அடிப்படையிலேயே இடஒதுக்கீடு இருக்கும்Õ என அறிவித்தது.

மூன்றாவதாகப் போதிய மின்னணு இயந்திரங்கள் வாக்குப் பதிவிற்குத் தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருக்கின்ற போதும் மாநில தேர்தல் ஆணையம் அதைக் கேட்டுப்பெற மறுத்து வாக்குச்சீட்டு முறையினையே பெரும்பாலான அமைப்புகளில் கொண்டுவர முடிவெடுத்தது.

இவை துவக்க நிலையிலேயே நமது அய்யத்தை அதிகப் படுத்தியதுடன் அரசின் உள்நோக்கத்தையும் உறுதிப்படுத்தியது.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கத் தலைவரான கலைஞர் அவர்கள், உள்ளாட்சித் தேர்தல் எவ்விதமான சூழ்ச்சிகளிலும் சிக்கிவிடக் கூடாது, மக்களாட்சி மாண்பு காப்பாற்றபட்டாக வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றத்தை நாடினார். நீதி வென்றால்தான் அதிமுகவின் அராஜக ஊழல் வெறியாட்டம் அடங்கும் என்பதற்கான நியாயப்பூர்வமான நடவடிக்கையே திமுகவின் நீதிமன்றத்தை நாடிய செயல்.

தலைவரின் எதிரொலியாக - உழைப்பின் உருவாக விளங்கிடும் எதிர்கட்சித்தலைவர் பொருளாளர் தளபதி அவர்கள் ‘கழகத்தின் நோக்கம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் செய்வதல்ல, சட்ட விதிமுறைகளின்படி சரியாக நடத்திட வைப்பதுதான்’ என பலமுறை கூறிவிட்டதற்குப் பிறகும். சிலர் உள்ளாட்சித் தேர்தலைத் திமுக நடத்த விடாமல் செய்துவிட்டது எனக்கூறுவது கேலிக்கூத்தானது. உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் கிருபாகரன் மிகத்தெளிவாக உள்ளாட்சி மன்றத் தேர்தல், தேர்தல் விதிமுறைகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்று தள்ளிவைத்துள்ளார் என்பதுதான் வெளிப்படையான நிலையாகும்.

“பள்ளிக்கூடத்திற்குப் பிள்ளைகளை சாக்கடை, பெரும்பள்ளம், புதர்கள் என உள்ள குறுக்கு வழியில் அழைத்துப் போகாதே. ஒழுங்கான பாதையில் நேர்வழியில் அழைத்துப் போ” என்பது பிள்ளைகள் பள்ளிக் கூடத்திற்கே போகக்கூடாது என்று சொல்வதாகாது. உள்ளாட்சித் தேர்தலில் கழகம் எடுத்த நடவடிக்கை இதைப் போன்றதுதான்.

அரசின் நடவடிக்கைகள் முறையின்றி இருந்ததால் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி அவர்கள் கடந்த ஜூலை 11 ஆம் தேதியே சென்னை உயர்நீதிமன்றத்தில், இடஒதுக்கீடு சுழற்சிமுறை, கோரியும், முழுமையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டியும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள்

1 லட்சம் பேர் உள்ளனர். அவர்களைத் தேர்தல் பணிகளில் மேற்பார்வையாளர்களாகவும் மத்திய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டவுடன் முழு விபரங்களுடன் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் கால அவகாசம் இல்லையென்று அரசு தேர்தல் ஆணையம் வாதிட்டது. அவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததால் செப்டம்பர்

26 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு வருகின்ற 18 ஆம் தேதி வர உள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்று நள்ளிரவு (26.09.2016) 12.15 மணிக்கு தேர்தல் பற்றிய அரசாணையும், பொது அறிவிப்பும் (தேர்தல் கால அட்டவணை) வெளியிடப்படுகிறது. 26.09.2016 திங்கள்கிழமை வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இந்த அவசரக்கோலம் ஏன்? விதி 24க்கு எதிரானதாக உள்ளதை தேர்தல் ஆணையம் ஏன் கவனிக்கவில்லை. அலட்சியம்தான் காரணமா? தங்களை யார் கேட்கமுடியும் என்ற ஆணவமா?

திமுக விழிப்போடிருப்பதை மறந்து போனார்கள் - வாய் வீச்சுக்குப் பஞ்சமில்லா கட்சிகள் பல. திமுகவை எதிர்ப்பது ஒன்றே வேலையென்றுள்ள அந்தக் கட்சிகள் கவலைப்படவில்லை. ஆனால் தலைவர் கலைஞர் ஆணையிட, தளபதி செயலில் இறங்க, உடன் உயர்நீதிமன்றத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ‘இட ஒதுக்கீடு சுழற்சி முறை சரியில்லை. குறிப்பாக பழங்குயினருக்கான இடத்தை விதிப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்Õ என்று புதிய வழக்கினைத் தாக்கல் செய்தார். செப்.28 விசாரணையின்போதே மூத்த வழக்கறிஞர் பி.வில்சனின் அறிவார்ந்த வாதங்களைக் கேட்டு நீதியரசர் கிருபாகரன் அவர்கள் தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துவிட்டு, மறுநாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ஆய்வு செய்யக்கூடக் கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது என்றும் இவ்வளவு அவசரம் ஏன்? என்றும் வினா எழுப்பியுள்ளார்.

இந்த சூழலில் பல கேள்விகளுடன் சட்டமீறல்களுடன் வேட்பு மனுத்தாக்கல், தொடங்குகிறது. போர்க்களத்தில், திமுக என்றும் மண்டியிடாத மாவீரத்துக்குச் சொந்தமானது. கூட்டணியுடன் பேசியும் தமிழகத்தில் அனைத்துப் பொறுப்புகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்து அதிமுகவிற்கு அச்சமூட்டும் அரிமா உருவாய் கர்ஜித்து நின்றது.

வேட்புமனு ஆய்வன்று தேர்தலுக்குத் தடையை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அந்த உத்தரவில் -

1.          தேர்தல் ஆணைய அறிவிப்பு சட்டவிரோதமானது.

2.         தேர்தல் தொடர்பான ஆணையத்தின் ஆணைகள் உள்நோக்கம் கொண்டவை.

3.         தேவையற்ற அவசரம்.

4.         தேர்தல் அறிவிக்கை முறையாக மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

5.         தேர்தல் அரசாணையும், பொது அறிவிப்பும் ஒரே நாளில் வெளியிடப்படுவது விதி 24க்கு எதிரானது.

6.         26.09.2016 நள்ளிரவு 12.15 மணிக்குத் தேர்தல் கால அட்டவணை வெளியிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

7.         அவசரக் கோலத்தினால் பிற அரசியல் கட்சிகளுக்குக் கால அவகாசம் தராமல் இடையூறு செய்துள்ளது.

8.         ஆதி-திராவிடர், பழங்குடியினர், மகளிர் ஆகியோருக்கான இடஒதுக்கீட்டை செய்வதில் காலதாமதம்.

9.         அரசியல் கட்சிகளுக்கு சமவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் நீதியரசர் கிருபாகரன் அவர்கள் அறிவார்ந்த சட்டப்பூர்வமான வினாக்களை விவாதப் பொருளாக்கி இறுதியாக நெறியும் சட்டவிதியும் இல்லா அரசாணைகளை ரத்து செய்து உள்ளாட்சித் தேர்தலை சட்டவிதிகளுக்குட்பட்டு வருகின்ற டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்க வேண்டும்; புதிய அறிவிப்பு அரசாணை வெளியிட வேண்டும் என்று நடந்துள்ளவைகளைத் தடைசெய்து உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வளவு மோசடிகளிலும் பெரிய மோசடி மோடி பாணி மோசடி எதுவென்றால் இட ஒதுக்கீடுகளுக்கான இடங்களை (மகளிருக்கு, ஆதி-திராவிடர்களுக்கானவைகள்) பொதுவாக அறிவித்திடாமல் யாருக்கும் சரியாகத் தெரியாத நிலையில் தேர்தல் அறிவிப்பின் அடுத்த நாள் காலையிலேயே அதிமுக வேட்பாளர் பட்டியல் வந்துள்ளது. எப்படி? அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பட்டதா? மக்களை எவ்வளவு கேவலமாகக் கருதுகிறார்கள். எங்களை என்ன செய்யமுடியும் என்ற திமிருக்குதான் திமுக நீதிமன்றத்தின் மூலம் மரண அடி கொடுத்துள்ளது.

இவ்வளவு கண்டனத்திற்குப் பிறகும் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்து மூக்குடைபட்டு நிற்கிறது. இறுதி விசாரணை வருகின்ற 18 ஆம் தேதி உச்சநீதிமன்ற வழக்கு தேதியிலேயே உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பின் ஆரம்பமே தில்லுமுல்லு என்பதைத் தெரிந்து கழகமே சாட்டையடி நடவடிக்கையால் நிறுத்தாவிட்டால் என்னாவது தேர்தல்? தள்ளுமுள்ளுவிலேயே அதிமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்து அம்மாவுக்கு நன்றி சொல்லி மண்சோறு சாப்பிட்டுக் கோமியம் குடித்துக் கொண்டாடியிருப்பார்கள்.

நள்ளிரவில் பூட்டை உடைக்கும் போது மாட்டிக் கொண்டவன், “காலையில எப்படியும் கடையைத் திறக்கப் போற, எதுக்கு அந்தக் கஷ்டம் உனக்கு என்று இப்பவே திறந்து விட்டேன்” என்றானாம். அந்த நள்ளிரவு நாடகக்காரனைப் போல இன்று அதிமுக உளறிக் கொண்டிருக்கிறது. எல்லாமே இந்த ஆட்சியில் நாடகம்தான். மருத்துவமனை நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தலும் ஒரு காட்சியா?

“இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா” கவிஞர் கேட்டது நினைவுக்கு வந்தது. மக்களை ஏமாற்றக் கழகம் விடாது.

Pin It