‘இந்து’க்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி தமிழ்நாட்டில் பா.ஜ.க. இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், மாணவர் களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்து கிறார்கள். இஸ்லாமிய மாணவர்களுக்கும், கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும்போது ‘இந்து’க்களுக்கு ஏன் வழங்கவில்லை என்று கேட்கிறார்கள்.

‘இந்து ஆதி திராவிட, ‘இந்து’ பிற்படுத்தப்பட்ட, ‘இந்து’ மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும், நீண்டகாலமாகவே வழங்கப்பட்டுத்தான் வருகிறது. ‘இந்து’ பார்ப்பனர்களுக்கு மட்டும்தான், அவர்கள், ஏற்கனவே ஆதிக்கசாதியினராக இருப்பதால், இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ‘இந்து’ பார்ப்பன மாணவர்களுக்குக்கூட பொருளாதார அடிப்படையில் கல்விக் கடன் வசதிகள் வழங்கப் பட்டுத்தான் வருகின்றன. மாணவர்களிடையே ‘இந்து - முஸ்லீம்’ என்று அணிகளைப் பிரித்து அவர்களை மோதவிடும் சூழ்ச்சிதான் இந்தப் போராட்டத்தின் உள்நோக்கம்.

‘இந்து’ மாணவர் உதவித் தொகை கேட்கும் பார்ப்பன, பார்ப்பனிய சக்திகளுக்கு ஒரு கேள்வி!

கிராமங்களில் ‘இந்து’ தாழ்த்தப்பட்டோருக்கு தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளையும், இரட்டை சுடுகாடும், பல்வேறு வடிவங்களில் தீண்டாமையும் பின்பற்றப்படுகிறதே; இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் போராட்டக் களத்தில் நிற்கிறதே. ‘இந்து’ஆதி திராவிடர் உரிமைக்கு இவர்கள் போராட முன் வருவார்களா?

Pin It