தமிழ்நாட்டில் நக்சலைட் தீவிரவாதம் தலைதூக்கியிருப்பது போன்று ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகளில் தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு இறங்கியிருப்பதும், இதற்கு தமிழக அரசு பச்சைக்கொடி காட்டி நிற்பதும் உண்மையிலே வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரிய நிகழ்வுகளாகும்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் நக்சலைட்டுகளானாலும், மாவோயஸ்டுகளானாலும், தாக்குதல் நடத்தியதாகவோ, ‘அழித்தொழிப்பு’ நிகழ்த்தியதாகவோ எந்த நிகழ்வும் இல்லாதபோது, தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு தமிழின இளைஞர்களை ‘என்கவுன்டர்’ பெயரில் சுட்டுப் பிணமாக்குவது, மன்னிக்க முடியாத, மனித விரோதச் செயலாகும். கடந்த வாரம் ஏப்ரல் 23 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், நக்சலைட் பிரச்சினை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வறுமையும், சுரண்டலும், கொடூரமாக தலைவிரித்தாடுகிற சட்டீஸ்கார், ஜார்கண்ட், பீகார், ஒரிசா மாநிலங்களில் தான் நக்சலைட்டுகள் நடவடிக்கை தீவிரமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டீஸ்கார், ஜார்கண்ட் மாநிலங்களில்தான் நக்சலைட் தொடர்பான தாக்குதல் நிகழ்வுகளில் முறையே 66, 75 சதவீதம் கடந்த ஆண்டு நடந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உ.பி., மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர் என்று கூறும் அந்த அறிக்கை, தமிழகத்தைப் பொறுத்தவரை, நக்சலைட் பிரச்சினை, மிகவும் புதிய பரிமாணம் என்றே குறிப்பிடுகிறது. இந்த உண்மையான எதார்த்தத்தை கவனத்தில் கொண்டு சமூகக் கண்ணோட்டத்துடனும், சமூகப் பொறுப்புடனும் அணுக வேண்டிய ஒரு பிரச்சினையை ஏன், அதிரடிப் பிரச்சினையாக மாற்ற வேண்டும்? வழக்கு, விசாரணைகள், நீதிமன்றங்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு, காவல்துறையே துப்பாக்கிகளைக் கொண்டு மரணதண்டனை வழங்கும் கொடுமை - ‘என்கவுன்டர்’ என்ற போலி நாடகத்தால் அரங்கேற்றப்பட்டு வருவது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
ஒரு காலத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஏற்றுக் கொண்ட பல புரட்சிகரக் குழுக்கள் - தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்து - மக்களை அணிதிரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தமிழ்நாட்டுக்கே உரிய தனித் தன்மை. இந்த நக்சலைட் பிரச்சினையை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்காமல், சமூகப் பிரச்சினையாக ஆராய வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞரே, ஒன்றுக்கு மேற்பட்ட முறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் காவல்துறையின் செயல்பாடுகளோ இதற்கு நேர்முரணாக இருக்கிறது.
இன்னமும் கிராமங்களில் வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் மறுக்கப்படுவதை புரிந்து கொண்டு, அதைத் தீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மக்களின் உரிமைகளுக்காக போராடும்போது அவர்கள் மாவோயிஸ்டாக இருந்தாலும், நக்சலைட்டாக இருந்தாலும் மக்கள் ஆதரிக்கவே செய்வார்கள். அண்மையில் கொடைக்கானல் மலையில் நவீன் எனும் பிரசாத் என்கிற ஒரு இளைஞரை தமிழக காவல்துறை சுட்டு பிணமாக்கி, இவர்களுக்கு மக்கள் ஆதரவே கிடையாது என்று கூறியது. ஆனால், அந்த இளைஞரின் இறுதி ஊர்வலம் தர்மபுரியிலிருந்து புறப்பட்டபோது 12 கிலோ மீட்டர் தூரம், செம்மணஹல்லி வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததாக செய்திகள் வந்துள்ளன. தமிழக காவல்துறையின் கூற்று பொய்யானது என்பதை இது நிரூபித்துவிட்டது என்று, ஆங்கில நாளேடுகள் சுட்டிக் காட்டுகின்றன.
காவல்துறையின் இத்தகைய அத்துமீறிய என்கவுன்டர் படுகொலைகளால் தமிழக அரசு அடித்தள மக்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும் சந்திக்கும் நிலை உருவாகி வருவதை தமிழக முதல்வர் கலைஞர் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஆட்சி மாற்றம் என்று வந்துவிட்டால் காவல்துறை உடனே தனது விசுவாசத்தை மாற்றிக் கொண்டு விடும். இவர்களின் அத்துமீறிய செயல்பாடுகளுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆட்சிகள் தான் பலிகடாவாக வேண்டும்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் புரட்சிகர தத்துவங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாலேயே அவர்கள் மீது வன்முறை முத்திரை குத்தி என்கவுன்டரில் சுட்டு பிணமாக்கும் கொடூரத்தை இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும். தீர்ப்பு தரும் உரிமைகளை காவல்துறையிடம் வழங்கிவிட்டால், பிறகு நாட்டின் நிலை என்னாவது? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து இளைஞர்கள் - இப்படி, தமிழ்நாட்டில் காவல்துறையின் துப்பாக்கிப் பசிக்கு இறையாகலாமா? இதை ஒரு ஜனநாயக நாடு அனுமதிக்கலாமா?