2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி ஒழுங்கு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆளும் தி.மு.க.வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று ஒருமித்த உணர்வை வெளிப்படுத்தினர்.
 
தனிமைப்படுத்தப்பட்ட தி.மு.க. - இந்த ஓர்மையை சிதைக்க திட்டங்களை வகுத்தது. மயிலை மாங்கொல்லையில் கலைஞர் கருணாநிதி ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஈழத் தமிழர்களுக்கு உருக்கமான குரல் கொடுத்தார். மத்திய அரசு தலையீட்டைக் கோரி போர் நிறுத்தத்துக்கு காலக் கெடு நிர்ணயித்தார். போர் நிறுத்தம் வராவிடில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்தார். மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்தார். கட்சிகளை உதறிவிட்டு, தமிழர்கள் அணி திரண்டனர். அதன் பிறகுதான் முதுகில் குத்தும் படலங்கள் தொடர்ந்தன. போர் நிறுத்தத்தை வலியுறுத்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மறுத்தது.
 
அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், நார்வே உள்ளிட்ட நாடுகளும் அய்.நாவும் போரை நிறுத்த வலியுறுத்தியும், இந்தியா மவுனம் சாதித்தது. மாறாக ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு உதவியது. தி.மு.க.வின் குரலும் மாறி ஒலிக்கத் தொடங்கியது. போர் நிறுத்தமும் வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் திட்டமும் கைவிடப்பட்டது.
 
தி.மு.க.வின் செயற்குழு கூடி களத்தில் நின்று போராடிய போராளிகளை குற்றம் சாட்டியது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றார் கலைஞர் கருணாநிதி. சிங்கள ஆட்சியின் அதிகாரபூர்வ ஏடாக செயல்பட்ட ‘இந்து’ ஏடு தி.மு.க.வின் செயற்குழு தீர்மானத்தைப் பாராட்டி தலையங்கம் தீட்டியது. ஈழப் பிரச்சினையில் முதல்முறையாக மிகுந்த மதிநுட்பத்தோடு சரியான நிலையை தி.மு.க. எடுத்துள்ளதாக புகழ் மாலைகளை சூட்டியது.
 
போர் நிறுத்தத்தை வலியுறுத்தாத மத்திய அரசை தி.மு.க. நியாயப்படுத்தத் தொடங்கியது. இன்னொரு நாட்டின் பிரச்சினையில் ஒரு எல்லைக்கு மேல் எப்படி தலையிட முடியும்? என்று முதல்வர் பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி வேண்டும் என்று நாம் கருதுவது போலவே, மத்தியில் சோனியாவின் வழிகாட்டுதலில் நடக்கும் மன்மோகன்சிங் ஆட்சியும் நமக்குத் தேவை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசினார்.
 
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கழகத்துக்கு போட்டியாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை தி.மு.க. தொடங்கியது. உறுதியோடு போராடி வந்த வழக்கறிஞர்கள் போராட்டம், காவல்துறையைக் கொண்டு ஒடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தின் இனப்படுகொலையைக் கண்டிக்காத உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், போராளிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடைய வேண்டும் என்றார். ப. சிதம்பரத்தின் கருத்தை நியாயப்படுத்தி, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதலில் ராணுவம் போரை நிறுத்தக் கோரி, மனித சங்கிலிக்கு அழைப்புவிட்ட தி.மு.க., பிறகு குரலை மாற்றிக் கொண்டு, போராளிகள், ஆயுதங்களைக் கீழே போட வலியுறுத்தும் மனித சங்கிலியை தி.மு.க. இளைஞரணி பெயரால் நடத்தியது.
 
தூத்துக்குடி வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‘இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்று ஒரு பேட்டியில் கூறியவுடன், கலைஞர் கருணாநிதி, பாராட்டுகளைக் குவித்தார். தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்றார். அதன் பிறகு, போரை நிறுத்துமாறு தங்களை இந்திய அரசு கோரவில்லை என்று, இலங்கை அரசு அறிவித்தப் பிறகு, முதலமைச்சர் மவுனமாகிவிட்டார்.
 
மக்கள் கொதிப்பை திசை திருப்ப போர் நிறுத்தம் கோரி, திடீரென்று உண்ணா விரதம் தொடங்கிய முதல்வர் கலைஞர் கருணாநிதி, சில மணி நேரங்களிலே போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதற்குப் பிறகுதான் ஒரே நாளில் 30000 தமிழர்களை ராணுவம் பிணமாக்கியது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த போராளிகளையும், மக்களையும் சுட்டுக் கொன்றது.
 
தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவும் தம் பங்கிற்கான துரோகத்தை செய்தார். ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தமக்கு உண்மைகள் புரியத் தொடங்கிவிட்டன என்றும், தனி ஈழம் பெற்றுத் தர தாம் தயாராக இருப்பதாகவும், திடீரென தேர்தல் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். கடலில் தத்தளிப்போருக்கு உயிர் பிழைக்க துரும்பு கிடைத்ததுபோல், ஜெயலலிதாவின் குரல் ஆறுதலாக இருந்தது என்றாலும், தேர்தலோடு ஜெயலலிதா தனது தமிழ் ஈழ ஆதரவுக் கருத்தை மூட்டைக் கட்டிவிட்டார். 2009 ஆம் ஆண்டு தமிழகம், இப்படி துரோகங்களை சந்தித்த ஆண்டாகவே இருந்தது.

- நமது செய்தியாளர்

Pin It