திரிபுவாத திம்மன்கள் யார்? (3)
“பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்! (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்."
கி.வீரமணி, 'விடுதலை' (30.8.2008)
மேலே எடுத்துக்காட்டிய "24 காரட் பொன் மொழிகளுக்கு" முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் 'திரிபுவாத திம்மன்' ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை 'புரட்சிப் பெரியார் முழக்கம்' எடுத்துக் காட்டியிருக்கிறது. ஆனால் 'விடுதலை'யின் 'அதிர்ச்சி' எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்.
பெரியாரியலையே புரட்டிக் கொண்டிருக்கிற இவர்கள் - அவற்றை கடந்தகால வரலாறுகளில் செய்தால்கூட பலருக்கும் தெரியாது போக வாய்ப்பு உண்டு. நடப்பு நிகழ்வுகளிலேயே - இந்தப் புரட்டுகளை வெட்கமின்றி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்; இதோ, ஒரு புரட்டு.
கலைஞர் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆட்சி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமியற்றிய பிறகு, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. என்ன காரணத்தினாலோ, தமிழக அரசு சட்டப்படியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கலைஞர் மிகவும் சாதுர்யத்தோடு செயல்படுவதாக கி.வீரமணி அதைப் பாராட்டினார். தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறும் பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாட்டின் 6 முக்கிய கோயில்களில் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து சாதியினருக்கும் பயிற்சிகளும் தரப்பட்டன. பயிற்சி முடித்து வெளியே வந்த மாணவர்கள் இப்போது அர்ச்சகராக முடியவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது என்று 'இந்து' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. "அர்ச்சகருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்தவர்கள், இப்போது தாங்கள் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தக்கூடிய வேறு ஏதாவது மாற்று வேலைகள் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அர்ச்சகர் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது, நீண்டு கொண்டே போகிறது. காரணம் - உச்சநீதிமன்றத்தில், வழக்கு இருப்பதால், அரசாங்கம், சாதி வேறுபாடற்ற அர்ச்சகர் நியமனத்தை நிறுத்தி வைத்துவிட்டது" என்று செய்தி வெளியிட்டுள்ளது 'இந்து' ஏடு.
இதை 'விடுதலை' நாளேடு எப்படி வெளியிட்டிருக்கிறது? "அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டதன் பலன்கள்; அரசுப் பணிக்கு முன்பே அர்ச்சகராகப் பணி புரிகிறார்கள்; 'தி இந்து' ஏட்டின் படப்பிடிப்பு" என்று புரட்டி செய்தி போடுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதையோ, வழக்கின் காரணமாக - அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஆகமக் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதை அரசு நிறுத்திவிட்டது பற்றியோ, 'இந்து' வெளியிட்டதை இருட்டடித்து விட்டு, 'விடுதலை', 'இந்து' ஏட்டின் செய்தியை திரித்து மொழி பெயர்க்கிறது.
ஆகமங்களுக்கு உட்படாத கிராமக் கோயில்களில், தனியார் கோயில்களில் அர்ச்சகர்களாக ஏற்கனவே பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்கள். பெரியார் எழுப்பிய பிரச்சினையே 'பார்ப்பனருக்கு மட்டுமே அர்ச்சகர் உரிமை உண்டு' என்பதை நிலைநாட்டும் ஆகமக் கோயில்களில் அதைத் தகர்த்து, அதன் மூலம் 'கர்ப்பகிரகத்துக்குள்' நிலைநாட்டப்பட்டுள்ள 'சூத்திர' இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவேண்டும் என்பது தானே! அந்த மாற்றம் இப்போது வந்துவிட்டதா? இந்தக்கேள்விக்கு 'இல்லை' என்பதுதான் பதில். உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கிய அரசின் முடிவு தோல்வியில் முடிந்துவிட்டது. இது யார் தந்த ஆலோசனை? கலைஞர் எடுத்த 'சாதுர்யமான' முடிவு என்று, கி.வீரமணி பாராட்டியதற்கான காரணம் என்ன?
('31சி' புகழ்!) வீரமணிதான் ஆலோசனை வழங்கினாரா? மீண்டும் தோல்வியில் முடிந்து விட்டதா? - இந்தக் கேள்விகள் - மக்கள் மன்றத்தில் எழத்தானே செய்யும்? அதற்காக - மக்களை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு குழப்பலாமா? செய்திகளையே திரித்து வெளியிடலாமா? 'முரசொலி' நாளேடுகூட இப்படி திரித்துப் போட்டு வெளியிட முன் வராத நிலையில் 'விடுதலை' ஏன், இப்படி புரட்டல் வேலை செய்கிறது?
ஏதோ, வேலை வாய்ப்புக்காக - அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது போலவும், அந்த நோக்கம் வெற்றிப் பெற்றது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி பெரியார் கொள்கையை திரிப்பது புரட்டு அல்ல! மகா புரட்டு! திரிபுவாத திம்மன்கள் பதில் கூறுவார்களா?