கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் அரை நூற்றாண்டு காலம் போராடிப் பெற்ற சரித்திர மாற்றங்கள் எல்லாம் இப்போது தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. கல்விக்காக ஏற்படுத்திய சட்டதிட்டங்கள் எல்லாம் பயனில்லாமல் போகும் நிலை உருவாகிவிட்டது. பெரியார் 1947 சுதந்திரத்தை உழைக்கும் மக்களுக்கான சுதந்திரம் இல்லை என்றார்.

1950 ஆம் ஆண்டின் இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்தார். 1922-லிருந்து காந்தியார் இந்தியாவிலுள்ள அனைத்து மாகாண மக்களும் வெள்ளையருக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடி விடுதலை பெற்றதும் அந்தந்த நாடுகள் தனித் தனியாக ஆண்டு கொள்ளலாம் என்று கூறி வந்தார்.

1946 வரை காங்கிரஸ் கமிட்டியிலும், இதே தீர்மானம் வலியுறுத்தப்பட்டு, எல்லா அதிகாரங்களும், மாகாணங்களுக்கே வழங்கக் கோரப்பட்டது. ஆனால், 1947க்குப் பிறகு நிலைமைகள் மாறி, அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. சுதந்திரத்திற்கு முன்பு இருந்த உரிமைகள் இப்போது இல்லை.

உயர்சாதியினர், ஜமீன்தார்கள், பட்டதாரிகள் இவர்களைப் பிரதிநிதிப்படுத்தியது அரசியல் நிர்ணயசபை. 4 சசதவீதம் வாக்குரிமை மட்டுமே இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த அரசியல் நிர்ணயசபையின் சட்ட வரைவுக் குழுவுக்குத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் தலைவராக இருந்தார். அப்போது இயற்றப்பட்ட சட்டங்களில்கூட சில உரிமைகள் இருந்தன.

16-4 சட்டப்பிரிவில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்த இந்த இட ஒதுக்கீட்டை, சென்னை மாகாணத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் கொண்டுவர தந்தை பெரியார் போராடினார். அந்தப் போராட்டத்தின் விளைவாக 1934-ல் சென்னை மாகாணத்தில் மட்டும் அஞ்சல் மற்றும் ரயில்வே துறைகளில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.

ஆனால், 1947 செப்டம்பர் 30-ல் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட அனைத்து ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன. விடுதலை பெற்ற ஒரு மாதத்தில் நம் உரிமைகள் பறிக்கப்பட்டன.

1950-ல் மருத்துவப் படிப்பில் இடமில்லை என்றும், பொறியியல் படிப்பு கிட்டவில்லை என்றும் செண்பகம், சீனிவாசன் என்ற பார்ப்பன மாணவர்கள் இடஒதுக்கீட்டால் பாதிப்படைந்ததாகக் கூறி வழக்குத் தொடுத்தனர்.

அந்தப் பார்ப்பன மாணவ, மாணவிகளுக்காக வாதாடியவர் அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இடஒதுக் கீட்டுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கின்போது, வழக்குத் தொடுத்த செண்பகம், மருத்துவப் படிப்புக்கு சேர விண்ணப்பமே கொடுக்கவில்லை என்பதும், அவருக்கு 32 வயதாகி விட்டதால் அந்தப் படிப்பில் சேரத் தகுதியில்லை என்ற செய்தியும் வெளியாகி பார்ப்பனரின் சூழ்ச்சி அம்பலமானது. ஆனாலும் இடஒதுக் கீட்டுக்கு எதிரான தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இறுதியில் தந்தை பெரியாரின் போராட்டத்தின் காரணமாக 15-4- பிரிவு உருவாக்கப்பட்டு கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் தற்பொழுது அவற்றுக்கும் ஆபத்து வந்து விட்டது.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் : மய்ய அரசுப் பணிகளில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார். ஆனால், அதில் இன்று வரை கல்வியில் இடஒதுக்கீடு கிடையாது. மேலும் நீதித்துறை, படை, உயர்கல்வி ஆய்வு ஆகிய பணிகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இந்தியாவில் உள்ள 18 உயர்நீதி மன்றங்களின் 540 நீதிபதிகளில் 100 பேர் மட்டும் பிற்பட்டோர், 12 பேர் மட்டும் தாழ்த்தப்பட்டோர் மீதி அத்தனை பேரும் உயர்சாதியினரே!உச்சநீதிமன்ற நீதிபதிகள் மொத்தம் 26 பேர் இதில் ஒருவர் தாழ்த்தப்பட்டோர், ஒருவர் பிற்படுத்தப்பட்டவர் - மீதி அத்தனை பேரும் முன்னேறிய சாதியினரே! நீதித் துறைகள் யாவும் பார்ப்பன மயமாக உள்ளதால் நமக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது. வெகுஜன மக்களுக்கு எதிராகவே தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புகள் வருகின்றன. உரிமைக்காக சமுதாய இயக்கங்கள் நடத்திய போராட்டங்களை நீதிமன்றங்கள் அவமரியாதை செய்கின்றன.

முன்பு பெண்களின் திருமண வயதை 14 ஆக உயர்த்தியும், பால்ய விவாகத்தை தடுக்கவும், கடுமையாகப் போராடி சட்டமியற்றப்பட்டது. ஆனால் இந்த நவீன காலத்தில இரண்டு பார்ப்பன நீதிபதிகள் 15 வயது பெண்களுக்கு திருமணம் நடந்ததை செல்லும் என அறிவிக்கிறார்கள். வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை சட்ட விரோதம் என தீர்ப்பு வழங்குகிறார்கள். தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு தவறு என்று தீர்ப்பளிக்கிறார்கள்.

மண்டல் குழு வழக்கின் பயனாக 1992 வரை பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நீதிமன்றத்தின் அநீதித் தீர்ப்பால் 1997-லிருந்து அந்த வாய்ப்பும் பறிக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடும் நீதிமன்றத் தீர்ப்பால் முடக்கப்பட்டு விட்டது.

எனவே, நீதித்துறையில் இடஒதுக்கீடு இல்லாததால், விடுதலைக்கு முன்பிருந்த வாய்ப்புகள்கூட மறுக்கப்பட்டு வருகின்றன. இந்து முன்னணியினருக்கு சவால்! கவுந்தப்பாடியில், சாமி சிலைகளை சேதப்படுத்தி விட்டார்கள் என்று கிருஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து, தட்டி விளம்பரம் செய்துள்ள இந்து முன்னணியினரை நான் கேட்கிறேன்!

யார் சிலையை உடைத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டியது தானே? வேண்டுமென்றே மதக் கலவரத்தைத் தூண்டும் உங்கள் சூழ்ச்சி பலிக்காது. இந்துக்களே ஒன்றுபடுவீர் என்று சந்துக்குச் சந்து கூவுகிறீர்கள்! கிராமப் பூசாரிகளுக்கு மாநாடு நடத்துகிறீர்கள். அதே பூசாரிகளை அனைத்துக் கோயில்களிலும் அர்ச்சனை செய்ய அனுமதி கேட்டுப் போராட்டம் நடத்தவும், மாநாடு நடத்தவும் நீங்கள் தயாரா?

பிரேமானந்தாவையும், சதுர்வேதியையும் காவல்துறை கைது செய்தபோது மவுனம் காத்த இந்து முன்னணியினர் சங்கராச்சாரியைக் கைது செய்த போது - இந்து மதத்துக்கே அவமரியாதை என்று ஆர்ப்பாட்டம் நடத்தினீர்களே, முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் உட்பட அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தார்களே ஏன்? பார்ப்பனப் பாசம் தவிர வேறு என்ன? பிரேமானந்தாவும், சதுர்வேதியும் இந்து சாமியார்களாகத் தெரியவில்லையே ஏன்? அவர்கள் தமிழர்கள் என்பதால் தானே?

திருப்பனந்தாள் மடத்தில், அந்த சாமியார் மீது கொலை முயற்சி வழக்குதான்! அதில் அவருக்கு பிணை கிடைக்க 8 மாதங்கள் ஆனது. மேலும் 3 மாதங்கள் நிபந்தனை ஜாமீனில் இருந்தார் - அவரை உடனே விடுதலை செய்ய இந்து முன்னணி போராட வில்லையே. ஏன்? சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகையில் வினாயகருக்கு செருப்பு மாலை போடப்பட்டது. சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இது பெரியார் தி.க.வின் சதிவேலை என்று ராமகோபாலன் கூறினார். இதைச் செய்தவர்களை 24 மணி நேரத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் கொக்கரித்தார்.

ஆனால் இதைச் செய்ததோ இந்து முன்னணியின் கிளைச் செயலாளர் மஞ்சுநாதன் மற்றும் ஒன்றிய இணைச் செயலாளர் செல்வக்குமார், காவல்துறை ஒப்புதல் வாக்குமூலத்தில் இந்த உண்மை அம்பல மானது. பழியை பெரியார் தி.க. மீதுபோட நினைத்த இந்து முன்னணிப் பொறுப்பாளர்களின் திட்டம் நிறைவேறவில்லை. ஆனால், இந்து முன்னணியின் அடாவடி வேலைகள் மட்டும் அடங்கிடவில்லை. இராமகோபாலன்கள் போன்ற பார்ப்பனர்களின் அம்பாக நம் தமிழ் இளைஞர்கள் மாறி, சூழ்ச்சிக்குப் பலியாவதை நிறுத்தியாக வேண்டும்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் இவர்களெல்லாம் எந்தச் சாமியாரையும் சென்று பார்த்ததில்லை. மராட்டிய முன்னாள் முதல்வர் ஷிண்டே ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினர்.

இந்தியாவில் முதன்முதலாக தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வந்த மாமனிதர். அவர் சங்கராச்சாரியைப் பார்க்கத் தமிழகம் வருகிறார். காஞ்சி மடத்தில் அவரை கீழே ஒரு இடத்தில் அமர வைக்கிறார்கள். அதே நாளில் ஜெயலலிதாவும் சங்கராச்சாரியைப் பார்க்க வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு சங்கராச்சாரி அமர்ந்துள்ள அளவு உயரமான நாற்காலியில் அமர வைக்கப்படுகிறார். ஏன் இந்த வேறுபாடு? குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வந்தபோதுக்கூட நின்று கொண்டுதானே இருந்தார்? ஏன் அவாளுக்கு மட்டும் தனி நீதி? இந்து முன்னணியினர் சிந்திப்பார்களா?

இந்துக்களே ஒன்றுபடுவீர் என்று கூறும் இந்து முன்னணியினரே 1971-ல் கலைஞர் போட்ட அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த போராட வருகிறீர்களா?

2002 அக்டோபரில் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர் அர்ச்சகரானது சட்டப்படி சரிதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே - அதை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த எங்களுடன் போராட வரத் தயாரா? கேரள மாநில வி.எச்.பி. பஜ்ரங்தள் தலைவர்கள் அந்தத் தீர்ப்பினை வரவேற்று, “இந்துக்களுக்குள் சாதி வேற்றுமை இல்லாமல் செய்ய இந்தத் தீர்ப்பு உதவியுள்ளது” என்று அறிக்கை அளித்துள்ளார்களே நீங்கள் ஏன் பார்ப்பனர்களின் ஊதுகுழலாக இருக்கிறீர்கள்?

இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்று பல வடிவங்களில் பார்ப்பனர்கள் படையெடுத்து வருகிறார்கள். தொக்காடியா, கிறித்துவ-முஸ்லீம் மற்றும் நாத்திகர்களைக் கொல்ல திரிசூலம் வழங்குவதை காவல்துறை அனுமதிக்கிறது. அவர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை. இதேபோல இல.கணேசன் கையை வெட்டுவதாகப் பகிரங்கமாகப் பேசுகிறார். இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை இல்லை.

ஆனால், தடி ஊர்வலம் சென்ற தி.க.வினர் மீது போட்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவ சக்திகள் ரக்சா பந்தன் தினத்தன்று, ஸ்டெயின்ஸ் பாதிரியாரை எரித்துக் கொன்றனர். அம்பேத்கர் நினைவு நாளை பாபர் மசூதி இடிப்புக்குத் தேர்வு செய்தார்கள். சரஸ்வதி பூசை அன்று ரொட்டிக்கடை ரகீமைக் கொன்றார்கள்.

இப்படி இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்று கூறிக் கொண்டு, மற்ற மதத்தவரைக் கொலை செய்தும், இந்துக்கள் என் போரில் உழைப்போரைப் பிரித்து வைத்து செயல்படும் மனித குலத்துக்கு எதிரான பார்ப்பனியத்தின் நச்சுப் பற்களைப் பிடுங்கி எறிந்து சமத்துவ சமுதாயம் அமையப் பாடுபட வேண்டும்.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற உணர்வு மங்கி இந்து - இந்து அல்லாதார் எனும் உணர்வு ஊட்டப்படுகிறது. நாம் தொடர்ந்து ஏமாந்துவிடக் கூடாது. தமிழர்கள் பழைய எழுச்சியை மீண்டும் பெற வேண்டும். அப்படிப்பட்ட எழுச்சியைப் பெற நம்மீது சுமத்தப்பட்ட இழிவுகளை முதலில் உணர வேண்டும்.