இடஒதுக்கீட்டைப் பற்றிப் பேசினால் பார்ப்பனர்களுக்குப் பற்றி எரிகிறது என்றால், அவாள் கொடூரமான அளவில் அயோக்கியத்தனமாகச் சுருட்டி வைத்துக் கொண்டு இருக்கும் அதிகார மண்டலங்களில் மற்றவர்கள் நுழைவதை விரும்பாதது தான். அவ்வாறு மற்றவர்கள் நுழைந்தால் நாளடைவில் அவாளில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்நிலை வேலைகளை அடையும் வாய்ப்பு குறைந்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.
ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசுவது வேதனையையும், எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தையும் தருகிறது. நம் மக்களில் சிலர் "இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் இட ஒதுக்கீட்டைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பீர்கள்?" என்று சலிப்புடன் கேட்கிறார்கள். இட ஒதுக்கீடுத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படவே இல்லை என்று இவர்களுக்குத் தெரியாமலேயே வைத்து இருப்பது பார்ப்பன ஆதிக்கத்தின் விளைவுதான். இட ஒதுக்கீடு முறையில் 5ரூ கூட நிரப்பப்படவில்லை என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மீள்பார்வையின் போது கதறிக் கதறிப் பதிவு செய்வதை நரேந்திர மோடி மட்டும் அல்ல; இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்வதும் இல்லை / கண்டு கொண்டதும் இல்லை. இப்படி இட ஒதுக்கீடு முறையைச் செயல்படுத்தாமலேயே இருந்துவிட்டு, அது செயல் படுத்தப்பட்டு விட்டது என்ற அனுமானத்தில் "இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் இந்த இட ஒதுக்கீடு" என்று கேட்பவர்கள் இருப்பது மிகவும் வேதனையான செய்தி.
அப்படி என்றால், இட ஒதுக்கீடு முறை முழுமையாகவே செயல்படவில்லையா? அப்படி அல்ல. தமிழ்நாட்டில் ஓரளவு செயல்பட்டு இருக்கிறது. அதன் விளைவாக வாய்ப்புப் பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர் சாதிக் கும்பலினரைவிடத் திறமைசாலிகள் என்று அனைத்துத் துறைகளிலும் மெய்ப்பித்து இருக்கிறார்கள். இருப்பினும் மருத்துவத் துறையில் இது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பெருமளவில் மருத்துவர்களாக உள்ள தமிழ்நாடு, மருத்துவச் சிகிச்சையில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து மட்டும் அல்லாமல், உலகின் பிற பகுதிகளில் இருந்தும் மருத்துவச் சிகிச்சை பெற தமிழ் நாட்டிற்கு வருகின்றனர். உயர்சாதிக் கும்பலினரே பெரும்பாலும் மருத்துவர்களாக உள்ள வட மாநிலங்களில் இத்தகைய நிகழ்வு நடைபெறவில்லை.
தமிழ்நாட்டைப் போல் பிற மாநிலங்களிலும் இட ஒதுக்கீட்டை முறையாகச் செயல்படுத்தியிருந்தால், அங்கும் தரமான மருத்துவர்கள் உருவாகி இருப்பார்கள். மருத்துவத்துறை மட்டும் அல்லாமல் பிற துறைகளிலும் திறமைசாலிகள் இடம் பெற்றிருப்பார்கள். நிர்வாகம் இன்று போல் மோசமாக இல்லாமல் நன்றாக இருந்திருக்கும்.
ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! முறையாகச் செயல்படுத்தப்படாத இட ஒதுக்கீட்டுக் கொள்கை முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அதைப் பற்றிப் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது மட்டும் அல்ல. இட ஒதுக்கீட்டுக் கொள்கை மேலும் விரிவாக்கப்பட்டு விகிதாச்சாரப் பங்கீடு முறையாக வளர்த்து எடுக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாதவர்களுக்கு மேற்கண்ட செய்தியைக் கூற வேண்டி உள்ளது சரி தான். ஆனால் இட ஒதுக்கீடு / விகிதாச்சாரப் பங்கீட்டுக் கொள்கையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டவர்களே கூட "இது என்ன சர்வரோக நிவாரணியா?" என்று கேட்பது வியப்பைத் தருகிறது.
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக, அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக எத்தனையோ வழிகளில் போராட வேண்டியுள்ளது. அப்போராட்டங்களில் கவனத்தைச் செலுத்தும் போது விகிதாச்சாரப் பங்கீட்டில் கவனக் குறைவு ஏற்பட்டால், மற்ற போராட்டங்களால் கிடைக்கும் பயன்கள் காலப் போக்கில் மங்கி மறைந்து விடும். மங்கி மறைந்து விடும் என்பதை விட எதிரிகளால் அரித்து அரித்து பங்கீடு இல்லாமலேயே செய்யப்பட்டு விடும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மருத்துவத் துறையையும், இந்தியாவின் பிற மாநிலங்களின் மருத்துவத் துறையையும் பார்ப்போம். இடஒதுக்கீடு செயல்பட்ட தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மருத்துவர்கள் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இட ஒதுக்கீடு செயல்படாத வட மாநிலங்களில் உயர் சாதிக் கும்பலினரே மிக மிகப் பெருமளவில் மருத்துவர்களாக உள்ளனர்.
அனைத்து வகுப்பு மக்களிலும் திறமைசாலிகள் இருப்பதால், அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமைசாலிகள் தமிழ்நாட்டில் மருத்துவர்களாக உருவாக முடிந்து உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் இட ஒதுக்கீடு முறையைச் செயல் படுத்தாமல், உயர் சாதிக் கும்பலினரை மட்டுமே மருத்துவப் படிப்புக்குத் தேர்ந்தெடுத்ததால், அவர்களில் உள்ள திறமை சாலிகள் மட்டும் அல்லாமல் திறமைக் குறைவானவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஆகவே அவர்களால் தமிழ் நாட்டு மருத்துவர்களின் அளவுக்குச் சிறந்து விளங்க முடியவில்லை. (இது பொதுப் போட்டி முறை திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கப் பயனற்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.)
இந்த அனுபவம் ஏற்பட்ட உடனேயே என்ன செய்து இருக்க வேண்டும்? நாடு முழுவதும் இடஒதுக்கீடு முறையைக் கண்டிப்புடன் செயல்படுத்தி, நாட்டில் மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
"எங்களுக்கு மருத்துவச் சேவையின் தரம் முதன்மை அல்ல. மருத்துவச் சேவையின் தரம் குறைந்தாலும் பரவாயில்லை. உயர் சாதிக் கும்பலினரே மருத்துவர்களாக இருக்க வேண்டும்; எந்தக் காரணத்தைக் கொண்டும் உயர் சாதிக் கும்பலினர் மருத்துவச் சிகிச்சைக்காக ஒடுக்கப்பட்ட வகுப்பு மருத்துவரை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடக் கூடாது; ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர் சாதி மருத்துவர் களைத் தவிர்க்க முடியவே கூடாது. எதிர்காலத்தில் அரசுக்கு எதிராக ஒரு போராட்டமே, புரட்சியோ உருவானால் போராளி களும் புரட்சியாளர்களும் மருத்துவச் சிகிச்சைக்கு உயர் சாதிக் கும்பலினரையே நம்பி இருக்க வேண்டும். அப்பொழுது போராளி களை / புரட்சியாளர்களை வளைப்பதும் ஒடுக்குவதும் எளிதாக இருக்கும். போராட்டத்தை / புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்." என்றெல்லாம் சிந்தித்து முடிவு செய்த பார்ப்பன ஆதிக்க அரசு, அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக "நீட்" முறையை மக்கள் மீது திணித்து உள்ளது. உயர் சாதிக் கும்பலினர் பெறும் கல்வியும், சிறப்புப் பயிற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி பெறும்படியாக இம்முறை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிராக நாட்டின் மற்ற மாநிலங்களில் மக்கள் திரளவில்லை. தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே பார்ப்பன ஆதிக்க அரசின் மக்கள் விரோத நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்து இருக்கிறது. ஏனெனில் இங்கு மட்டும்தான் பொருட்படுத்தத்தக்க அளவிலான எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கல்வி பெற்று உள்ளனர். மற்ற மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை; குரல் எழுப்ப முடிவது இல்லை. மீறி முயல்பவர்களின் குரல்வளை நெரிக்கப்படுவதும் வெளியில் தெரிய வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது.
தமிழ் நாட்டிலேயே கூட அதிகார மையங்களின் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை பொருட்படுத்தத்தக்க அளவில் இருப்பதால் தான் குரல் எழுப்ப முடிகிறது. முடிவெடுக்கும் / முடிவெடுக்க வைக்கும் அளவிற்கான எண்ணிக்கையில் இருந்திருந் தால் நாம் இந்நேரம் வெற்றி பெற்று இருப்போம்.
ஆகவே நமது போராட்டங்களின் வெற்றிக்கு அதிகார மையங்களில் அனைத்து நிலைகளிலும் வலுவான எண்ணிக்கையில் நமது பிரதிநிதித்துவம் தேவைப் படுகிறது. அதைப் பெறுவதற்கு இட ஒதுக்கீடு ஒரு வழியே என்றாலும், அது போதுமான வழி அல்ல. விகிதாச்சாரப் பங்கீடு இருந்தால் தான் எந்த ஒரு போராட்டத்திலும் நம் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.
அது மட்டும் அல்ல. விகிதாச்சாரப் பங்கீடு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகார மையங்களில் அவரவர்க்கு உரிய பங்கைப் பெற்றுத் தருவதால், அவ்விரு வகுப்பினருக்கும் இடையேயான முரண்பாடுகளின் கூர்மை மழுங்கத் தொடங்கும்.
இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் சிந்திக்க வேண்டும். விகிதாச்சாரப் பங்கீடு முறை அமலில் இருந்தால் பார்ப்பன ஆதிக்க வர்க்கத்திற்கு நீட் முறையைத் திணிக்கும் யோசனை தோன்றி இருக்குமா? என்ன முறையைப் புகுத்தினாலும் அவாளுக்கு அவாளுடைய பங்கு மட்டும்தான் கிடைக்கும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கு உரிய பங்கு கொடுக்கப்பட்டே தீர வேண்டும் என்ற விதிமுறை இருந்தால் பார்ப்பன ஆதிக்க வர்க்கத்தின் அயோக்கியத்தனமான சிந்தனைகள் முடக்கப்பட்டு விடும் அல்லவா? (ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பொருட்படுத்தத் தக்க அளவில் வாய்ப்பு பெறத் தொடங்கிய உடன் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்திலும் நுழைவத் தேர்வு முறையை மாற்றி வேறு முறையைக் கொண்டு வரலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்)
ஆகவே விகிதாச்சாரப் பங்கீடு என்பது சர்வரோக நிவாரணி அல்ல; அது நமது ஒன்று திரட்டப்பட்ட உணர்வுகள் ஒழுகி, ஒழுகி இல்லாமல் ஆகிவிடாமல் போவதைத் தடுத்து அடைக்கும் அடைப்பானே ஆகும்.
நாம் எவ்வளவோ போராட்டங்களை முன்னெடுக்கிறோம். அவற்றை நடத்தும் போது விகிதாச்சாரப் பங்கீடுப் போராட்டத்தை மறந்து விடுகிறோம்; குறைந்தபட்சம் 'பின்னுக்குத்' தள்ளி விடுகிறோம், இது அதிகார மையங்களில் நமது வலிமை கூடுவதைத் தடுக்கிறது. விகிதாச்சாரப் பங்கீடு நமது இறுதி இலக்கு அல்ல. ஆனால் மற்ற போராட்டங்களில் எல்லாம் நம்மை வலிமைப்படுத்தும் முக்கியமான காரணி.
"பார்ப்பான் கிழக்கே போ என்று சொன்னால், நீ மேற்கே போ" என்று பெரியார் சொன்ன கோணத்திலும் விகிதாச்சாரப் பங்கீடு முறையை நோக்கிப் பாருங்கள்.
நாம் முன்னெடுக்கும் எந்த ஒரு போராட்டம் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு நம்முடன் சேர்ந்து போராட முன் வரும் பார்ப்பனர்கள் இருப்பார்கள். கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஈழத் தமிழர் பிரச்சினை, நீட், தமிழ் வழிக் கல்வி, காவிரி, மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என எந்தப் பிரச்சினை என்றாலும் நம்முடன் சேர்ந்து போராட முன் வரும் பார்ப்பனர்கள் கிடைப்பார்கள். ஏன்? இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பார்ப்பனர்களும் கிடைப்பார்கள்.
ஆனால் விகிதாச்சாரப் பங்கீடுக் கருத்தியலை வளர்க்கவும், முன்னெடுக்கவும் ஒரு பார்ப்பனர் கூட முன் வரமாட்டார். எனக்குத் தெரிந்து இது வரைக்கும் ஒரு பார்ப்பனர் கூட முன் வந்தது இல்லை. இதிலிருந்தே அது நமக்கு எவ்வளவு முதன்மையானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.