ஆன்றோர் சொல் அறிவோம் - 1

அதிகாரியின் நாய் இறந்தால் ஊரே திரண்டு உடன் வரும். அதிகாரி இறந்தாலோ அந்த நாய் மட்டும்தான் உடன் வரும் என்பார்கள். இவ்வாறு ஆதாயத்திற்காக இருப்பவரைப் போற்றுவதும் ஆதாயம் இல்லை என்பதற்காக இறந்தவரைப் புறக்கமுப்பதும் இழிவான செயலாயிற்றே! ஆனால், தலைப்பு வேறுவகையாக உள்ளதே என எண்ணுகின்றீர்களா? அதற்கு விளக்கம் காணும் முன்பு ஆன்றோர்கள் சொன்ன செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 உலகில் மனித இனம் தோன்றிய பகுதி தமிழ்நாடு. அவ்வாறு தோன்றிய பொழுது தமிழ்நாட்டின் நிலப்பரப்பு மிக அகன்று இருந்தது. தமிழ் நில எல்லை குறித்து, அறிஞர் மாகறல் கார்த்திகேயனார், 'இத்துணை ஆராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெருநிலப்பரப்பு இருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையா என்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க" எனத் தம்முடைய மொழிநூலில் தெரிவித்துள்ளார்.

 குமரி நாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்க் கடலால் கொள்ளப்பட்டது என்றும் இப்பொழுதுள்ள இந்துமாக்கடல் என்னும் பெருநீர்ப்பரப்பு, நிலப்பரப்பாயிருந்ததென்றும், அங்கேதான் மக்கள் தோற்றம் முதன்முதல் உற்றதென்றும் அந்நிலம் பின்னர்க் கடலால் விழுங்கப்பட்டதென்றும் பேராசிரியர் எர்னசுட் எக்கல், இசுகாட் எலியட், சர் வால்டர் இராலே, சர் சான் ஈவான்சு, சர்.சே.டபிள்ய+..ஓல்டர்னசு முதலான ஆராய்ச்சி அறிஞர்கள் ஆராய்ந்தறிந்து உண்மையை உலகிற்கு உரைத்துள்ளனர். படைப்பு வரலாறு (ர்ளைவழசல ழக ஊசநயவழைn), மறைந்த லெமூரியா(டுழளவ டுநஅரசயை;) முதலான பல நூல்கள் குமரிக்கண்ட வரலாற்றையும் அந்நிலப்பரப்பில் முதலில் தோன்றிய மக்கள் இனமே தமிழினம் என்றும் தெரிவிக்கின்றன. தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என ஆராய்ந்து உலகிற்கு உரைத்த பரிதிமாற் கலைஞர் அவர்கள், 'இக்குமரிநாடுதான் கிழக்கே சந்தாத் தீவுகள் வரையும், மேற்கே மடகாசுகர் தீவுவரையிலும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் இலெமூரியா என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெரு வெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழ்ந்து போன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பரப்பாகலான் மக்கள் முதன் முதலில் இந்நிலத்தில் இருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து வேறுபட்டனர் என்றும் அங்ஙன் இதிலிருந்து தொல்லோர் வழங்கியது தமிழ்மொழியாமென்றும் பல காரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல விஞ்ஞானிகளுள் ஒருவர்" எனத் தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 இத்தகைய தொல்குடிக்கு உரியவர்கள் தமிழ்க்குடியாகிய நாம் என்பதனைப் பல்வேறு இலக்கியங்கள் பற்பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றன. சான்றாகத், தொல்லிசை நட்ட குடி (கலி.104:15), முரசு கெழு முதுகுடி (கலி. 105:2), சீர்மை சிறப்பின் தொல்குடி (கலி.105:3), தொல்குடி (முருகு.128), நல்லிசை முதுகுடி (புறம் 58:5), பழங்குடி (அகம் 290: 8), எவ்வி தொல்குடி (புறம் 202:14),பீடுபெறு தொல்குடி (புறம் 289:4), மன்பதை காக்கும் நீள்குடி (புறம் 335:8), பண்பின்முதுகுடி (புறம் 391:9), எனப்பல வகையிலும் மூத்த தொல்குடியாய் நாம் உள்ளதை உணர்த்து கின்றன. பழங்குடி என்பது தொன்றுதொட்டு வருகின்ற குடி என்றும் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல் எனவும் பரிமேலழகர் விளக்கம் அளிக்கிறார்.

 இந்துமாவாரி (இந்தியப் பெருங்கடல்) ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழைக்கரை மட்டும் பரவியிருந்த நிலப்பரப் பாயிருந்தது எனப் பேரறிஞர் தக்ரேங் கூறுகிறார்.

 குரங்கைப் போன்ற இலெமூரியா என்னும் உயிரி இங்கு வாழ்ந்ததால் கிளேற்றர் என்னும் அறிஞர் இதனை இலெமூரியாக் கண்டம் என்றார். ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு தொடர்நிலப்பரப்பு இருந்தது என அறிஞர் ஓல்டுகாம் விளக்குகிறார். பேராசிரியர் கா.சுப்பிரமணியம்(பிள்ளை), ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு - ஒரு வேளை அதற்கும் முந்தி - தமிழ்ப்பெருங்கண்டம் ஆப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்தது என்கிறார். தமிழகம் தென்கடலுக்கப்பால் வெகுதொலைவு பரவியிருந்தது வரலாற்று உண்மையே என அறிஞர் கே.கே.பிள்ளை அவர்கள் தெளிவு படுத்தி உரைக்கிறார்கள் (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்).

 தமிழ் இலக்கியங்களும் இளம்ப+ரணர், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் முதலான உரையா சிரியர்களும் கடல்கோள்களுக்கு முன்னர் குமரிமுனைக்குத் தெற்கிலும் தமிழ்நாடு நெடுந்தொலைவு பரவியிருந்தது என்பதை மெய்ப்பிக்கின்றன.

 பல்வேறுவகை ஆராய்ச்சிகளின் அடிப்படையில்தான் தமிழ்நாடு மிகப் பெரும் பரப்பாக இருந்த உண்மையை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆரியத்தைப் பற்றிய பொய்யுரைகளை வரலாறு என்றும் தமிழக வரலாற்றுச் செய்திகளைக் கற்பனை என்றும் கூறுவதே பலரின் வழக்கமாகும். இத்தகையோருக்காக, அறிஞர் கே.கே.பிள்ளை அவர்கள், இவர்கள் கூற்றைப் புனைந்துரை என்றோ, பிற நாடுகளையும் பிற மொழிகளையும் தாழ்த்தித் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் உயர்த்திப் புகழ் தேடினர் என்றோ கொள்வதற்கில்லை. சான்றோர் மொழிகளைக் கொண்டும், தத்தம் காலத்தில் மக்கள் சமுதாயத்தில் நிலவிவந்த பழங்காலச் செய்திகளைக் கொண்டும் தம் ஊகத்தைக் கொண்டும் இவர்கள் இம்முடிவிற்கு வந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. நமக்குக் கண்கூடான காரணங்கள் ஏதும் தோன்றவில்லையாயினும் பல காலமாக நிலவிவரும் பழங்கொள்கை களைப் புறக்கணித்தல் அறிவுடைமையன்று என அறிவுறுத்துகிறார்.

 இத்தொன்மையான நிலப்பரப்பில் அழிவு போக எஞ்சி நிற்பதுதான் இரு கூறாகப் பிரிந்துள்ள நாம் வாழும் தாய்த் தமிழ்நாடும், ஈழத் தமிழ்நாடும். நாமோ இந்தியத்தில் கரைந்து கொண்டுள்ளோம். ஆனால், சிங்களத்தில் மூழ்கிப்போகும் சூழலில் இருந்து விடுபடுவதற்குப் பழந்தமிழர்க்கு இருந்த வீரப்பண்புடனும் பேரறிவுடனும் போராடித் தனியரசு நடத்தியவர்கள் தமிழ்ஈழப் பெருமக்கள். தாம் இழந்த உரிமைகளைப் பெறப் போராடிய மக்களும் மக்களின் படையினரான போராளிகளும் தம் கனவுகளை அடுத்த தலைமுறையினரிடம் விதைத்து விட்டுப் புகழ்உடல் பெற்றார்கள். இவர்கள் அனைவரும் நம் உள்ளத்தில் வாழ்கிறார்கள்! காலம் உள்ளளவும் வாழ்வார்கள். ஆனால், பாழ்செய்யும் வஞ்சகம் புரிவோர் நடைப்பிணங்களே. இவர்கள் நம் உள்ளத்தில் இருந்து நீங்கியவர்கள்- கடந்தவர்கள் - இறந்தவர்கள் ஆவர். தீயாரைப் பற்றி எண்ணுவதும் தீது என்பதால் இத்தகைய மடிந்தோரை நாம் மறந்திடுவோம்!

நம் உணர்வில் கலந்து நம்மோடு வாழும் தாய்நிலக் காவலர்களை வாழ்த்தி வணங்கிடுவோம்! எனவே,
வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்!
மடிந்தவரை மறந்திடுவோம்!
என்பது சரிதானே!

- இலக்குவனார் திருவள்ளுவன்

Pin It