மனு சாஸ்திர எரிப்பு விளக்க பரப்புரைப் பயணம் 10.2.13 அன்று சூலூர் ஒன்றியம் இராவத்தூரில் துவங்கியது. கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜி, கழக வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச் செல்வி, திருப்பூர் மாவட்டத் தலைவர் துரைசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, சுயமரியாதைக் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் அ.ப.சிவா, திருப்பூர் முகில்ராசு, சூலூர் பன்னீர்செல்வம், கிணத்துக் கடவு நிர்மல் மற்றும் சூலூர் ஒன்றிய தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மனுதர்மம் என்றால் என்ன? மனுதர்மத்தின் சமூக ஒடுக்கு முறை, இழிவுகள் என்பதைப் பற்றி பொது மக்களிடம்  தோழர்கள் விளக்கிப் பேசினர்.

இரண்டாம் கட்டப் பயணம் 17.2.13 அன்று கண்ணம்மாளையம், பள்ளபாளையம், பாப்பம் பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்றது. இறுதியாக பாப்பம்பட்டியில் இரவு 8 மணிக்கு பரப்புரை நடந்தது. அந்த ஊரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இங்கு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று காவலர்களிடம் தகராறு செய்தனர். தோழர்கள் அதனை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை தொடர்ந்தனர். பொள்ளாச்சி விஜயராகவன் பேசுகையில், “இராமாயணத்தில்  வாலிக்கும் சுக்ரீவனுக்கும் போர் நடக்கும்போது, ராமன் மறைந்து நின்று தாக்கியதைப்போல் அல்லாமல் எங்கள் முன் நேருக்கு நேர் கருத்து வாதத்துக்கு வாருங்கள்” என்று அறைகூவி அழைத்தார்.

உடனே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள், ‘இராமனைப் பற்றி பேசாதே, ஜாதியைப் பற்றி மட்டும் பேசு’ என்று தகராறு செய்ததற்கு, கிணத்துக்கடவு தோழர் நிர்மல் பதிலடி தந்து பேசினார். “ஆம்; ஜாதியைப் பற்றி பேசுகிறேன்; எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ்சில் முக்கிய பொறுப்பு வகிக்கக்கூடிய ராஜேஷ் என்பவர், அந்த ஊரிலுள்ள கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை. காரணம் அவர் ஒரு தலித். இங்கே, எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே நான் உங்களை கேட்டுக் கொள்வது நீங்கள் எப்படியாவது போராடி, அந்த ஆர்.எஸ்.எஸ்.காரரை கோவிலுக்குள் ஒரு அடி எடுத்து வைக்கச் சொல்லுங்கள். உங்களால் செய்ய முடியுமா?” என்று சவால் விடுத்தார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடமிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. சூலூர் பன்னீர் செல்வம், தொடர்ந்து மனுதர்மத்தைப் பற்றி யும், அதிலுள்ள இழிவான கருத்துக்களைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.

Pin It