கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

suba udayakumar and gana kurinji

”நாட்டு நலன்களுக்கு எதிரான புதிய தேசியக் கல்விக் கொள்கையைப் புறக்கணிப்போம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கை செப் 25, 2016 ஞாயிற்றுக் கிழமை திருப்பூரில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு நடத்தியது. அணுசக்திக்கு எதிரான மக்கள்  இயக்கம் மற்றும் பச்சைத் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழகத் தலைவர் கண.குறிஞ்சி கல்வியாளர் பேராசிரியர் ப.சிவக்குமார், ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.  

இக்கருத்தரங்கில் வேலிறையன் அவர்கள் எழுதிய   “தேசியக் கல்விக் கொள்கை 2016 - உலகமயமாக்கலின் மனுதர்மம்” என்ற அறிக்கையை தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் வெளியிட நாமக்கல் மாவட்டக் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.இரா.சுப்பிரமணியன் பெற்றுகொணடார்.

நாட்டு மக்களுக்கும் குறிப்பாக நாட்டின் வருங்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கும் நமது ஆட்சியாளர்களும் கல்விக் கொள்கை வகுப்பவர்களும் இவர்களை ஆட்டிப் படைக்கும் வணிக சக்திகளும் தொடர்ந்து இழைத்து வரும் கல்வித் துரோகங்களை இவ்வறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

கல்வி உரிமைக்கான வாய்ப்புகளைப் பெறுவதில்  ஏமாற்றப்படுகிறோம்  என்பதைக் கூட தங்களால் உணர்ந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள பல்லாயிரம் மக்களிடம் இவ்வறிக்கையின் கருத்துகள் சென்று சேரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு விற்பனை நோக்கமின்றி இவ்வறிக்கையைக் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு  வெளியிடுகிறது. கல்விச் சீர்கேடுகளுக்கு எதிராகக் களத்தில் நின்று களப்பணியாற்றும் தோழர்களுக்கும் இவ்வறிக்கை பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.

 

***                                                                                      

கல்விக் குழுக்களும் அவற்றின் பின்புலமும்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொடங்கி சுதந்திர இந்தியா எனப்படுகின்ற இன்றைய இந்தியாவின் மோடி ஆட்சிக் காலம் வரை பல கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஆளும் ஆட்சியாளருக்கு உகந்த கல்விக் கொள்கைகளை அவ்வப்போது வகுத்தளித்தன. மக்களுக்கு எத்தகைய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதை எப்பொழுதும் ஆளும் வகுப்பாரே தீர்மானிக்கின்றனர். வர்க்க, சாதி ஏற்றத் தாழ்வுகள் உள்ள சமுதாயத்தில் கல்வி எப்பொழுதும் ஆதிக்க வர்க்க, சாதியினர் நலம் சார்ந்ததாகவே இருக்கும். பெரும்பான்மை மக்களுக்கான கல்வியாக இருக்காது. எப்பொழுதும் அது அவர்களுக்கு மறுக்கப்பட்டே வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்குத் தேவையான கல்விக் கொள்கையை மெக்காலே(1805) கல்விக்குழு வடித்தது. அவர்களுக்கு வேண்டிய  “குமாஸ்தாக்களையும்” அடிவருடி அறிவாளிகளையும் உருவாக்கும் நோக்கத்தை அது கொண்டிருந்தது. படித்த இந்தியர்கள் தோற்றத்தில் மட்டுமே இந்தியர்களாக இருக்க வேண்டும், மற்றபடி சிந்தனையில் செயல்பாட்டில் பண்பாட்டில் ஆங்கிலேயர்களாக இருக்கவேண்டும் என அது பறை சாற்றியது. ஆங்கிலேயர் அகன்று ஆண்டு பல கழிந்தாலும் மெக்காலேயின் தாக்கம் நம் ஆளும் வகுப்பு அறிவாளிகளின் அடி மூளையில் கெட்டியாகப் படிந்திருக்கிறது என்பதே உண்மை. உலகமயமாக்கலுக்குப் பின் அது மீண்டும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது என்பதும் உண்மை.

ஆங்கிலேயர் அகன்ற இந்தியாவில்  உள்நாட்டுப் பண்ணையாளர்கள் முதலாளிகளாக மாறவும் தேசிய முதலாளிகள் பெரும் முதலாளிகளாக மாறவும் இங்குத் தொழிலும் உழவும் ஊக்கப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே சமயத்தில் நேருவியப் பொருளாதாரத்திற்கு ஒரு சோசலிச வண்ணமும் பூசப்பட்டது. பெருந்தொழில்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இவற்றிற்கான தொழில்நுட்ப வல்லுநரகளும் அறிவியல் அறிஞர்களும் பல்துறை அறிவாளிகளும் தேவைப்பட்டனர்; கல்வியைப் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவை எழுந்தது. கல்வியின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அக்காலத்தில் அமைக்கப்பட்ட முனைவர் இராதக்கிருக்ஷ்ணன் தலைமையிலான பல்கலைக் கழகக் கல்விக் குழுவும்(1948), முனைவர் இலட்சுமணசாமி முதலியார் தலைமையிலான இடைநிலைக் கல்விக் குழுவும்(1952) கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை முன் வைத்தன. தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சிக் காலத்தில் கல்வி கிராமப்புறம் வரை சென்றடைந்தது. அவரும் வரலாற்றில் கல்வி தந்த கர்ம வீரர் ஆனார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சரி பின்னர் அமைந்த இந்தியர் ஆட்சிக் காலத்திலும் சரி அமைக்கப்பட்ட கல்விக் குழுக்கள் சில நல்ல சீர்திருத்தங்களையும் செயல்திட்டங்களையும் முன் வைத்துள்ளன. ஆட்சியாளர்கள் அவர்களுக்கு எது தேவையோ அவற்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றைக் கிடப்பில் போடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதில் அந்நிய ஆங்கில ஆட்சியைத் ‘தேசபக்த காங்கிரஸ்’ ஆட்சி முறியடித்து சாதனை புரிந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஹண்டர் கல்விக்குழு(1882) முன் ஜோதிராவ் பூலே முன் வைத்த கோரிக்கைகளை அது கண்டு கொள்ளவே இல்லை. அது போலவே வார்தாக் கல்விக் கருத்தரங்கில் காந்தி முன் வைத்த கருதுகோள்களை காங்கிரஸ் சீந்தவே இல்லை. பூலே காந்தி ஆகிய இருவரின் கல்விக் கோட்பாடுகளும் காலனியக் கல்விக் கோட்பாட்டை மறுப்பதாக அமைந்திருந்தன. அறிவை உயர் வகுப்பினருக்கு உடைமையாக்கி உழைப்பைக் கீழ் வகுப்பினருக்கு மட்டுமே உரித்தானதாக்கும் மனுதர்ம, ஆரிய அய்ரோப்பியக் கோட்பாடுகளை அவை வன்மையாகக் கண்டித்தன. அறிவையும் உழைப்பையும் பிரிக்கும் வஞ்சகத்தைக் கேள்விக்குட்படுத்தின.

1948-49களில் நடைபெற்ற அரசமைப்பு அமர்வு விவாதங்களின் போது தேசபக்தர்களின் உண்மையான முகம் அம்பலமானது. அவர்கள் 14 அகவை வரையுள்ள குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி உரிமை என்பதைக் கடுமையாக எதிர்த்தனர். அம்பேத்கரின் சமரசமற்ற போர்க்குணம் அவ்வெதிர்ப்பை முறியடித்தது. ஆனால் கட்டாயக் கல்வி அரசமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக்கப்படாமல் வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டது. அரசமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பத்தாண்டுகளில் அனைவருக்கும் கல்வி என்பதெல்லாம் வெறுங்கனவாகப் போயிற்று. இலவசக் கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையெனச் சட்டம் வடிவம் பெறவே நாடு 63 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் நிறைவேறியுள்ள இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தில்தான் எத்தனை எத்தனை ஓட்டைகள் உடைசல்கள்! 14 அகவைக்குட்பட்ட குழந்தைகள் என்றிருந்த வரையறை 6 முதல் 14 அகவை வரையுள்ள குழந்தைகள் என்று மாற்றப்பட்டது. ஆறு அகவைக்குட்பட்ட குழந்தைகள் முன்பருவ மழலையர் கல்வி பெறும் உரிமை குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகள் கட்டாய இலவசக் கல்வி அளிக்கின்றன. தனியார் பள்ளிகளோ அருகாமையில் உள்ள நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட 25% குழந்தைகளுக்குக் கட்டணமில்லாக் கல்வி அளித்தால் போதுமானது. அதனால் அதற்கொன்றும் இழப்பில்லை. அதற்கான செலவை அரசு வழங்கி விடும். என்ன கொடுமை இது? மய்ய அரசின் சிறப்பு உயர்தகுதிப் பள்ளிகளான நவயோதயா, கேந்திரியா வித்யாலயாப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளைப் போலவே 25% குழந்தைகளை மட்டுமே கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ளும். மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் மய்ய அரசுப் பள்ளிகளில் ஓரவஞ்சனை காட்டுவது எந்த வகைச் சமூகநீதியைச் சேர்ந்தது? ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் மீது அரசு பாய்ச்சும் கொடிய வன்கொடுமை இது.

இந்தியக் கல்வி வரலாற்றில் கல்வியாளர்களால் மிகவும் வியந்தோதப்பட்ட, அதே சமயம் ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட ஓர் அறிக்கை ஒன்று உண்டென்றால் அது கோத்தாரிக் கல்விக் குழு(1964-66) அறிக்கைதான். அது மக்கள் அனைவருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க மூன்று அடிப்படைக் கோட்பாடுகளைப் பரிந்துரைத்தது. பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி, தாய்மொழிக் கல்வி என்பனவே அவை. பொதுப்பள்ளிக் கல்வி முறை கல்வியில் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதை உயிரோட்டமாகக் கொண்டது; இலவசக் கல்வியை அடித்தளமாகக் கொண்டது; அரசமைப்பு வலியுறுத்தும் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டது; 1986ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையாலும் ஆச்சாரிய இராமமூர்த்திக் குழுவாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது; நாடாளுமன்றத்தில் (1968,1986,1992) மூன்று முறை முன் மொழியப்பட்டு மூன்று முறையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால்தான் என்னவோ இன்று வரை ஆளும் வகுப்பாரால் தொடர்ந்து இருட்டிப்புக்கு உள்ளாகி வருகிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கையில் அதைப் பற்றிய மூச்சுப் பேச்சே இல்லை. கல்வி வெளிச்சம் பெரும்பான்மை மக்களைச் சென்றடையக் கூடாது என்பதில் மனுதர்ம வாரிசுகள் விழிப்புடன் உள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது.

கல்விக் கொள்கைகளை அவ்வப்போதைய அரசியல் பொருளியல் சூழல்களே தீர்மானிக்கின்றன. உலகமயமாக்கலுக்கான கதவுகள் திறந்த பின் “புதிய எசமானர்களின்” கண்ணசைவுக்கு ஏற்ப கல்விக் கொள்கைகள் உருக்கொள்ளத் தொடங்கின. இராசீவ் காந்தி காலத்திலேயே அதற்கான அடித்தளம் இடப்பட்டது. சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பதே புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிநாதம். தாராளமயமாக்கலும் தனியார் மயமாக்கலும் அதன் பக்க வாத்தியங்கள். மக்கள் நலம் பேணும் பொறுப்புகளிலிருந்து அரசு படிப்படியாக விடுவித்துக் கொள்ளத் தொடங்கியது. கல்வியையும் அது கை கழுவியது.

1986ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையும், 1992ஆம் ஆண்டு அதன் திருத்திய வடிவமும் அரசின் புதிய திசையைக் கோடிட்டுக் காட்டின. அனைவருக்கும் தரமான சமமான கல்வி என்ற அரசமைப்பின் உறுதிமொழி காற்றில் பறக்க விடப்பட்டது. 2000ஆம் ஆண்டு அரசிடம் கையளிக்கப்பட்ட அம்பானி-பிர்லா அறிக்கை உயர்கல்வி முழுமையையும் தனியார் மயமாக்க வேண்டும் என வலியுறுத்தியது. 2005ஆம் ஆண்டு மனித வளத்துறை அமைச்சகச் செயலர் கடிதம் ஒன்று, “தற்போது கல்வி என்பது சரக்காகி விட்டது. ஆகவே அதைக் கொண்டு இலாபம் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்ற கேள்வி எழுப்பியது. இச்சிந்தனைகளின் உச்சம்தான் மோடி அரசின் கல்வி மேதை சுப்பிரமணியனார் வழி வெளி வந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை, 2016.

தேசியக் கல்விக் கொள்கை 2016, யாருக்காக?

உருசியாவில் சோசலிச அரசு வீழ்ந்ததற்குப் பிறகு உலகில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது அரசியல் பொருளியல் விதியானது. ஈவிரக்கமற்ற கொடூர முதலாளித்துவம் உலகைத் தன் கைக்குள் சுருட்டிக் கொண்டது. எல்லோருக்கும் எல்லாம் என்பது பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனது. ஒரு காலத்தில் பொதுவுடைமை வேட்கை இளைஞர்கள் உள்ளத்தை நிறைத்திருந்தது. அது கானல் நீராய்ப் போனது. இளைஞர்கள் பலர் விரக்திக்கு உள்ளாகினர். மதம் அவர்களை எளிதாய்க் கவ்விக் கொண்டது. ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த ஆசியா ஆப்பிரிக்கா அரபு நாடுகளில் மதமெனும் அபினுக்கு இளைஞர்கள் பலியாகினர்; பாதை மாறினர். உலக வல்லாதிக்க நாடுகள் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் பல வழிகளில் இப்போக்கை ஊக்குவித்து வருகின்றன. இளைஞர்கள் மக்கள் நல அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து விடக்கூடாது என்பதில் அவை கவனமாக உள்ளன.

இந்தியத் துணைக்கண்டத்தின் நிகழ்கதையும் இதுதான். சுதேசக் காங்கிரஸ் உலகமயக் காங்கிரசாக மாறிவிட்டது. இடதுசாரி இயக்கங்களும் அம்பேத்கர் பெரியார் இயக்கங்களும் தம் வீரியத்தை இழந்து போயின; மனுதர்ம இந்துத்துவாவாதிகள் அதிகாரத்தைத் தம் வயப்படுத்திக் கொண்டனர். அவர்களின் வேதகாலப் பெருமைகளும், பண்டை ஆரியப் பண்பாட்டு வீறாப்புகளும் இலாப வெறி கொடூர முதாளித்துவத்தோடு கைகுலுக்க எந்தக் கூச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்துத்துவமும் உலகமயமும் இரட்டை உடன்பிறப்புகளாக உலா வருகின்றன. உள்நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவோர் தீண்டத்தகாதவர்களாக இந்துத்துவப் பண்பாட்டு எதிரிகளாக வெறுத்தொதுக்கப்படுகின்றனர் அமெரிக்கா அய்ரோப்பா மாட்டுக்கறிச் சந்தையாளர்களோ ஆரத்தழுவிக் கொள்ளப்படுகின்றனர்.

நிகழும் இன்றைய அரசியல் பொருளியல் சூழலின் அப்பட்டமான வெளிப்பாடுதான் தேசியக் கல்விக் கொள்கை,2016 உருவாக்கம் ஆகும். டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான கல்விக்(?) குழு ஆளும் அரசியல் எசமானர்களின் உள்வேட்கைகளைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளது. ஆளும் வர்க்கம் தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அறிவைக் கட்டமைப்பதையும் கட்டுப்படுத்துவதையும் தன்வயப்படுத்துவதையும் தன் முதன்மைக் கடப்பாடுகளாகக் கொண்டிருக்கும். தனக்கேற்ற அறிவையே அது விளைவிக்கும்; தனக்கேற்றதையே அறிவு படைத்தளிக்குமாறு அது பார்த்துக் கொள்ளும். கைகட்டிச் ‘சேவகம்’ செய்யும் அறிவே அதற்குத் தேவையானது. கேள்வி கேட்கும் அறிவை அது தண்டிக்கும். “மெய்ப்பொருள் காணும்” அறிவோ புதியன படைக்கும் அறிவோ அதற்கு ஒவ்வாதது. இவற்றையே தேசியக் கல்விக் கொள்கை,2016 தன் நோக்கங்களாகக் கொண்டிருப்பதில் ஒன்றும் வியப்பில்லை.

பாசிசத்தின் இயற்கைப் பண்பு

பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றப் பல தில்லுமுல்லுகளைக் கையாளும். அது அதனுடைய இயற்கைப் பண்பாகும். நிலவும் குறைபாடுகளையும் குறைகளையும் அது எல்லோரும் மனங்கொள்ளும் வகையில் பட்டியலிட்டுக் காட்டும். தனக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டால் அவற்றையெல்லாம் உடனடியாகக் களைந்து சொர்க்கத்தைப் படைக்க அது உறுதி கூறும். முசோலினியும் இட்லரும் இச்சூழ்ச்சியைத்தான் கையாண்டனர். மக்களின் வறுமையையும் ஆட்சியாளர்களின் செல்வச் செழிப்பையும் சுட்டிக் காட்டி ஆட்சியைக் கைப்பற்றிய அவர்கள் பாசிஸ்டு ஓநாய்களாய் இரத்தம் குடித்தது வரலாறு.

மோடியும் மன்மோகன்சிங் ஆட்சியின் தவறுகளையும் பெருக்கெடுத்தோடிய ஊழலையும் விலாவாரியாக விளக்கி, “வளர்ச்சி, வல்லரசு” என்ற தாரக மந்திரங்களை மூச்சுக்கு முந்நூறு முறை ‘உச்சாடனம்’ செய்து முடி சூட்டிக் கொண்டார். இன்று உலக முதலாளிகளின் ஆணையை மன்மோகன்சிங்கைக் காட்டிலும் வேகமாக நிறைவேற்றி வருகின்றார். கூடவே இந்துத்துவா நெறிகளையே அரசமைப்பு நெறிகளாக்கத் துடிக்கின்றார். அம்பேத்கர் வடித்தெடுத்த அரசமைப்பு அவருக்குப் பெரும் இடையூறாக உள்ளது. சுப்பிரமணியன் கல்விக் குழுவும் குறைகளைப் பட்டியிலிடும் அதே உத்தியைக் கடைப்பிடிப்பது அதிகாரத்துவ அறிவைக் கட்டமைக்கும் அதன் உட்கிடக்கையையே வெளிப்படுத்துகிறது. கல்வியிலுள்ள குறைகளைக் களைதல் என்ற பெயரில் உலகமய மநுதர்மக் கொள்கை உருவாக்கப்படுகிறது.

நக்கீரனை மிஞ்சும் சுப்பிரமணியன்

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் கதையை நாம் அறிவோம். கல்வித் துறையில் மண்டிக் கிடக்கும் குறைகளையும் குற்றங்களையும் அடுக்குவதில் சுப்பிரமணியன் நக்கீரனையும் மிஞ்சுகிறார். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த நேர்காணலில் அப்படியான ஒரு தோற்றம்தான் வெளிப்படுகிறது. “தற்போதைய நடைமுறையைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? எங்களைப் பொறுத்தவரை முழுமையாக விமர்சித்து அறிக்கை தயார் செய்துள்ளோம்..... எங்கள் அறிக்கையில் நாங்கள் உண்மையை மட்டுமே எடுத்துரைத்துள்ளோம்....கடந்த70 ஆண்டுகாலத் தவறான நிர்வாகத்தின் அவலத்தை மட்டுமே தோலுரித்துக் காட்டி உள்ளோம்.” “தற்போதைய கல்வி நடைமுறையைப் பாராட்ட ஒன்றும் இல்லை.....நாம் எப்போது மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறோம்? இனி மேலும் காலத்தைக் கடத்தமுடியாது” எனப் பொங்கி எழவும் செய்கிறார்.

புகழ் பெற்ற ஈபிடபுள்யூ(Economic and Political Weekly)வில் வெளி வந்திருக்கும் அவர் கட்டுரையின் தலைப்பே நம்மை ஈர்ப்பதாக உள்ளது. ‘அலங்கோலத்தில் கல்வி’(Education in Disarray) இதுவே அவர் கட்டுரைத் தலைப்பு. கட்டுரையின் உள்ளே அலங்கோலத்தைப் படம் பிடிக்கவும் செய்கிறார். அரசியலில் மோடி கையாண்ட அதே உத்தியை கல்வித்துறியில் சுப்பிரமணியன் கையாளுகிறார். ஏற்கனவே கல்வித் துறையில் நிலவும் சீர்கேடுகளை நன்கறிந்தவர்களுக்கு அவர் சரியாகத்தானே சொல்கிறார் எனத் தோன்றவும் கூடும்; அவர் விரிக்கும் வலைக்குள் சிக்கவும் நேரும். பாசிசம் இப்படித்தான் வெற்றி பெறுகிறது. அலங்கோலத்தை நீக்கி மணக்கோலம் காண அவரும் அவர் குழுவும் முன் வைக்கும் தீர்வுகளை ஆழ்ந்த கவனத்துடனும் கூர்மையுடனும் ஆய்ந்தறியாவிட்டால் பிணக்கோலத்தையே காணும் துயரம் நிகழும்.

கல்விக் குழுவா? காவிக் குழுவா?

திரு.டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான கல்விக் குழுவின் உள்ளடக்கமே நமக்குப் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லி விடுகின்றது. முன் வைக்கப் போகும் தீர்வுகளை குறிப்பால் உணர்த்தி விடுகின்றது.. அய்வர் அடங்கிய இக்குழுவின் தலைவரான திரு டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற மத்திய அமைச்சரவைச் செயலர் ஆவார். சவுளித்துறை அமைச்சரவைச் செயலராகவும் பணியாற்றி உள்ளார். அய்ந்து உறுப்பினர்களில் நால்வர் தலைவரைப் போலவே அரசுத் துறைச் செயலர்களே ஆவர். நிர்வாகத்துறையைச் சேரந்தவர்களுக்குக் கல்வித் துறை அனுபவம் என்ன இருந்துவிடப் போகிறது எனத் தெரியவில்லை. தேசியக் கல்விக் கொள்கையைத் தீர்மானிக்கப் போகிற குழு உறுப்பினர்களில் அய்வரில் நால்வர் கல்வியாளர்களே இல்லையென்றால் அதன் பொருள் என்ன? அதை அதன் அய்ந்தாவது உறுப்பினரின் தகுதி தெள்ளென விளக்கி விடுகிறது.

அய்ந்தாமவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.இராஜ்புத் ஆவார்; கடந்த வாஜ்பேயின் ஆட்சியில் முரளி மனோகர் ஜோசி மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பொழுது தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி அவை(NCERT)க்குத் தலைவராகப் பணியாற்றியவர். கல்வியைக் காவிமயமாக்க அவரும் ஜோசியும் ஆடிய ஆட்டத்தை நாடறியும். இவரைக் கல்வியாளர் என்றழைப்பதா? காவியாளர் என்றழைப்பதா?

தத்துவமேதை இராதாக்கிருஷ்ணன், சென்னைப் பல்கலைக் கழகத்தின் புகழ் பெற்ற துணைவேந்தராக நீண்ட காலம் பணியாற்றிய இலட்சுமணசாமி முதலியார் போன்ற உலகமறிந்த அறிஞர்களும் கல்வியாளர்களும் தலைமையேற்றுப் பணியாற்றிய கல்விக் குழுக்களைப் பற்றி நாம் அறிவோம். இந்தியக் கல்வி வரலாற்றிலேயே மருந்துக்குக் கூட கல்வியாளர்கள் இடம் பெறாத ஒரே கல்விக் குழு இதுதான். அம்பானியும் பிர்லாக்களும் உயர்கல்வி குறித்து அறிக்கை அளிக்கும் காலத்தில் இதுவும் நடக்கலாம் எதுவும் நடக்கலாம்.

குழுவில் கல்வியாளர்கள் இடம் பெறாதது குறித்த கேள்வி எழுந்த போது தாமே ஒரு பல்கலைக் கழகத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றியிருப்பதாகத் தலைவர் சுப்பிரமணியன் விடையளித்துள்ளார். ஆனால் எந்தப் பல்கலைக் கழகம் என்று கூறவில்லை. ஏழை மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார். ஆனால் அந்தக் கல்வித் திட்டத்தைப் பற்றி எதுவும் விளக்கவில்லை. வெளிவந்துள்ள கல்வி அறிக்கையின் உள்ளீடுகளில் துளி கூட அதற்கான கூறுகள் இல்லை. மாறாக அவர்களைக் கல்விப் பாதையிலிருந்து அகற்றுவதற்கான திட்டங்களே உள்ளன. கல்விக்குழுவில் இடம் பெற்றவர்களுக்கும் போதிய கல்வி அனுபவம் இருப்பதாகப் பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார். தம் கல்வி அனுபவத்திற்கு எடுத்துக்காட்டாக  இம்பீரியல் கல்லூரி ஹார்வாடு பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். இவருடைய குழு உறுப்பினர்களும் இவரைப் போலவே ஏதாவது பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலா இருந்திருப்பார்கள்? தம் குழந்தைகளையாவது பள்ளி கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள், இல்லையா? தேசியக் கல்விக் கொள்கையை  வகுக்க போதாதா இந்த அனுபவங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக திரு. சுப்பிரமணியன் மறைக்காமல் ஒன்றைத் தம் கல்வி அனுபவமாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அதைத்தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். “தலைமைச் செயலாளராக இருந்த போது  வாஷிங்கடனில் நடந்த உலக வங்கியின் கல்வித் திட்ட முகாமில் பங்கேற்றுள்ளேன்..” இது தி இந்து நேர்காணலில் அவர் அளித்துள்ள வாக்குமூலம். அவர் அங்குப் பெற்ற பயிற்சியின் தாக்கம் அறிக்கை முழுவதும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.

இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் குழந்தைகளுக்கான\இளைஞர்களுக்கான  கல்வித் திட்டம் அல்ல இது. உலக முதலாளிகளின் தேவைகளை நிறைவு செய்ய வரையப்பட்ட திட்டமே இது. அதே சமயம் உள்ளூர் மனுதர்மவாதிகளின் ஆதிக்கத்தையும் குலைந்து விடாமல் காப்பாற்றும் நோக்கத்தையும் கொண்ட திட்டம் இது. உலக ஆதிக்கவாதிகளோடு உள்ளூர் ஆதிக்கவாதிகளும் கை கோர்க்கும் களம் இது.

எல்லாமே மூடு மந்திரம்

தேசியக் கல்விக் கொள்கை என்பது கோடிக்கணக்கான குழந்தைகளின்\ இளைஞர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது; நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பது. அத்தகைய நாட்டின் உயிர்நாடியான கொள்கை வகுப்பில் அத்துறையில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் உடைய எவரும் இடம் பெறவில்லை என்பது எவ்வளவு கேடானது. ஆனால் இதைச் சுட்டிக் காட்டுவோரைக் கிண்டல் செய்கிறார் குழுவின் தலைவர் சுப்பிரமணியன். ஈபிடபுள்யூவில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் செய்தித்தாள் படிக்கும் தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொருவரும் தம்மை அரசியல் கூரறிவு வாய்ந்தவர்களாகக் கருதிக் கொள்வது போல ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் கல்வித் துறையோடு ஏதேனும் தொடர்புடைய அனைவரும் தம்மைக் கல்வி ‘வல்லுநர்களாக’க் கருதிக் கொள்வதாகப் பகடி செய்கிறார்.

கல்வியின் அனைத்துக் கூறுகளிலும் தலைசிறந்து விளங்கும் வல்லுநர்கள் இருக்க முடியாது என்கிறார். இவ்வாறு கருதிக் கொள்வோர்கள் கருத்தாழம் அற்றவர்களாவும், கொண்டதே கோலம் என்பவர்களாகவும், தன்னல நோக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனச் சாடுகிறார். ஆனால் தங்களைத் தாங்களே வல்லுநர்களாகக் கருதிக் கொள்ளும் இவர்களைக் காட்டிலும் கல்விக்குழு தன் மூன்று மாதப் பணிக் காலத்தில் சந்தித்த எத்தனையோ ஊர்பேர் தெரியாத குடிமக்கள் மிகுந்த புரிதல் உள்ளவர்களாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஐந்நூறூக்கும் மேற்பட்ட இத்தகைய வல்லநர்களோடு மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றங்களின் விளைவுதான் அறிக்கையில் வெளிப்படும் கருத்துகள், ஆய்வுகள், பரிந்துரைகள் என்கிறார். அவர்களில் பலர் குறிப்பிட்ட துறைசார் வல்லுநர்களாக இருந்ததாகவும் சிலர் வேறுபட்ட கோட்பாடுகளுக்கு இடையேயான உறவுகளைப் பற்றிப் பரந்த பார்வை உள்ளவர்களாகவும் இருந்தததாகவும் குறிப்பிடுகிறார்.

சுப்பிரமணியன் யாரையும் வெளிப்படையாக அடையாளப்படுத்தாமல் பூடமாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். அது போலவே இவர் தலைமை தாங்கியக் கல்விக் குழுவின் செயல்பாடுகளும் வெளிப்படையானதாக இல்லாமல் கமுக்கமானதாகவே இருந்து வந்துள்ளன. 2.75 இலட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடந்ததாகவும் வலைத்தளம் வழியாக 29ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும் குழு கூறுகிறது. ஆனால் எங்கே எப்பொழுது இக்கூட்டங்கள் நடந்ததென யாருக்கும் தெரியாது. எல்லாமே மூடுமந்திரங்களாக நடந்துள்ளன. குறிப்பாக இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர்கள் அதிலும் குறிப்பாக இடதுசாரிச் சிந்தனையாளர்கள், அம்பேத்கரிய, பெரியாரிய நெறியாளர்கள் கல்விக் குழுவின் செயல்பாட்டிலிருந்து முற்றாக விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். சுப்பிரமணியன் தம் கட்டுரையில் சாடுவது இவர்களைத்தான். அவர் புகழ்வது வலதுசாரி அறிவாளர்களை. பொதுவாகவே அறிவுசார் நிறுவனங்களிலிருந்து முற்போக்காளர்களை அகற்றுவதற்கு இந்துத்துவாவாதிகள் கையாளும் தந்திரம் இது.

பன்மையை மறுக்கும் ஒற்றைக் கோட்பாடு

அனைவருக்கும் கல்வி, சமத்துவக் கல்வி, தரமான கல்வி, பன்மையை\மதச்சார்பின்மையை வலியுறுத்தும் கல்வி என்பன போன்ற சொற்கள் அறிக்கை நெடுக விரவிக் கிடக்கின்றன; சிலிர்ப்பை உண்டாக்கும் செய்திகளும் ஆங்காங்கே உள்ளன. ஆனால் அறிக்கையில் இறுதியினும் இறுதியாய் வெளிப்படும் நோக்கமும் அது வலியுறுத்தும் செயல்திட்டங்களும் மேற்கண்ட கோட்பாடுகளை முற்றாக மறுப்பனவாகவே உள்ளன. அறிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் நாம் ஏமாந்து போவோம். அறிக்கையை ஆழமாக ஆய்ந்தால் அதன் உள்நுட்பங்கள் புரியும்; உள்நோக்கங்கள் தெளிவாகும்.

அறிக்கையின் முகப்புரையின் தொடக்கமே நம் முகத்தில் அறையும் உரையாக உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக முகிழ்த்த கல்வி முறை வேதம் சார்ந்த கல்வி முறை என்கிறது முகப்புரையின் முதல் பத்தி. அது இந்தியாவில் வேறு கல்வி முறைகள் இருந்திருக்கலாம் என்கின்ற சாத்தியங்களையே மறுப்பதாக உள்ளது; இந்தியாவின் நாகரிகம், பண்பாடு என்பன எல்லாமே ஆரியர் வருகைக்குப் பின்தான் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் என்ற ஒன்று இருந்ததையும் அங்குக் கல்வி சிறந்தோங்கி இருந்ததையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை அல்லது அதையும் ஆரிய நாகரிகமாகப் புனைய எத்தனிக்கிறது.

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தோன்றிய காலத்தின் தமிழ்க்கல்வி முறை பற்றி அது கவலைப்படவில்லை. அங்கே குருகுலக் கல்வி முறை நிலவியதா என்றறியவும் அதற்கு அக்கறை இல்லை. கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என வரிசையாக நான்கதிகாரங்களைக் கொண்டுள்ள திருக்குறள் எங்கேயும் குருகுலக் கல்வி முறையை வியந்தோதவில்லை. குருகுலக் கல்வி முறைக்கான சான்றுகள சங்க இலக்கியங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

கல்வியை மிகவும் உயர்வாகப் போற்றிய சமுதாயம் தமிழ்ச் சமுதாயம்

   “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

     மாடல்ல மற்றை யவை”

என்கிறது வள்ளுவம். எண்ணையும் எழுத்தையும் கண்ணெனப் போற்றியவர்கள் பண்டைத் தமிழர்கள். கல்லாதவர்களை “முகத்தில் புண்ணுடையவர்”களாகத் தூற்றுவார் நம் ஆசான் வள்ளுவர்.

   “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

    மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.”

என்றான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். கீழ்ப்பாலார்கள் கல்விக்கும் கேள்விக்கும் தடை விதித்த மனுவாதி மரபெங்கே? கற்ற கீழ்ப்பாலானை மேற்பாலனுக்கும் மேலாக உயர்த்திப் பிடிக்கும் தமிழ்ச் சாதி மரபெங்கே? எல்லாவற்றையும் மூடி மறைத்து வேத மரபு எனக் “கப்சா” விடும் கல்விக் குழுவின் அறிவு நேர்மை என்ன? சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்கியதை அகழ்வாய்வுகள் மெய்ப்பிப்பதாகப் புகழ் பெற்ற ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று போற்றுகிறார் பாரதி.

கல்விக் குழுவின் அறிவு நேர்மையின்மையை முகப்புரையின் அடுத்தடுத்து வரும் பத்திகள் அம்பலப்படுத்துகின்றன. நாளந்தா பல்கலைக் கழகத்தைப் பற்றி வானளாவப் புகழும் அறிக்கை அது புத்த மதத்தின் கொடை என்பதைக் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்கிறது. உண்மையில் இந்தியத் துணைக் கண்டமெங்கும் கல்வியைப் பரந்து பட்ட மக்களிடையே கொண்டு சென்றது புத்தமும் சமணமும்தான். இவற்றையெல்லாம் மூடி மறைத்து இந்திய அறிவு என்பதையே வேதம் சார்ந்ததாகவும் சமற்கிருதம் வழிப்பட்டதாகவும் கட்டமைக்கிறது கல்விக்குழு அறிக்கை. உலகிற்கே அனைத்துத் துறை அறிவையும் வழங்கியவர்கள் வேத மரபினரே என அது பெருமை பாராட்டுகிறது. முதன் முதலில் இராக்கெட் செலுத்தியவர்கள், முதன் முதலில் அறுவை மருத்துவம் கண்டவர்கள் என்பன போன்ற கதைதான் இதுவும்.

இந்தியா என்பது பரந்து விரிந்த துணைக்கண்டம். அது பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டது; ஒவ்வொன்றும் தனித்தனி மரபுகளையும் பண்பாட்டு வேர்களையும் கொண்டது. வேதத்திற்கு முந்திய தொல்குடி மரபுகளும் உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக்கி அதற்கு வேதத்தையும் சமற்கிருதத்தையும் மூலமாக்குவது பன்மையைப் போற்றுவது ஆகாது. அது பன்மையை மறுத்து ஒற்றையை நிலைநாட்டும் பாசிசப் போக்காகும்.

தேசிய இனங்களின் உரிமை மறுப்பு

தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்துக் கட்டப் பல்வேறு நுட்பங்களைக் கையாளுகிறது பாசக அரசின் கல்விக் குழு. நெருக்கடிக் காலத்தில் கள்ளத்தனமாக மாநிலங்களின் அதிகாரப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கல்வி மாற்றப்பட்டதை நுணுக்கமாக நியாயப்படுத்துகிறது அது.  இவ்வதிகார மாற்றம் நம் நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை ஏற்பளிப்பதாக உள்ளதென உச்சி முகந்து மகிழ்கிறது; மய்ய மாநில அரசுகளுக்கு இம்மாற்றம் இணையான முக்கியத்துவம் அளிப்பதாகவும் இரு அதிகாரமைப்புகளும் கல்வி நோக்கங்களை நிறைவேற்றப் பங்காளிகளாகப் பணியாற்ற இது உதவுவதாகவும் பசப்புகிறது. கல்விச் செயல்பாட்டில் மாநிலங்களின் பங்களிப்பை எந்தவொரு கொள்கை வகுப்பாரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் எனவும் பொய்யுரைக்கிறது.

உண்மையில் சுப்பிரமணியன் கொள்கை வகுப்புக் குழு மாநிலக் கல்வித்துறையை “ஒப்புக்குச் சப்பாணி”யாக்கி விடுகிறது. தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்கல்வி ஆகிய அனைத்தையும் கண்காணிக்க கல்விப் புலனாய்வு மய்யக் குழு(Central Bureau of Educational Intelligence) ஒன்றையும் அது பரிந்துரைக்கிறது; நிலையான கல்வி ஆணையம்(Standing Education Commission) ஒன்றை அமைக்கவும் அது வலியுறுத்துகிறது. கல்வித் துறை இதுவரை காணாத பல தேசிய நிறுவனங்களை அது பட்டியலிடுகிறது.. மாநிலக் கல்வித் துறை மேலிருந்து வரும் ஆணையின்படி ஆடுவதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை.

கல்விக்கான அதிகாரம் என்பது முதன்மையாகப் பாடத்திட்டத்தை வகுக்கும் அதிகாரத்தைச் சார்ந்தே உள்ளது. புதிய கல்விக் கொள்கை இவ்வதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பறித்துக் கொள்கிறது. இனி தொடக்கக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஆங்கிலம் கணிதம் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான பாடத்திட்டங்களை மய்யக் கல்வித்துறையே வகுக்கும். சமூக அறிவியலுக்கும் அதன் வழிகாட்டுதல்கள் இருக்கும். காலப்போக்கில் இப்பாடங்ளுக்கான தேர்வுகளையும் மய்ய அமைப்புகளே நடத்தக் கூடும். அப்பொழுதுதானே இந்தியா முழுமைக்கும் ஒரே சீரான தரமான படிப்பாளிகளை உருவாக்க முடியும்?

எல்லாவற்றிற்கும் மேலாகத் தாய்மொழிக் கல்வி என்பது அய்ந்தாம் வகுப்புடன் முடிவுக்கு வந்து விடும். உலக முதலாளிகளுக்கான பணியாளர்களை உற்பத்தி செய்ய ஆங்கிலமே அனைவர்க்குமான கல்வி மொழியாக அமையும். இந்தியப் (?) பண்பாட்டை அறிந்து கொள்ள சமற்கிருதத்தைக் கற்பதும் கட்டாயமாகும். சமற்கிருதமே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது கல்விக் குழு அறிக்கை. எனவே சற்கிருதத்தைக் கற்றுக் கொள்வது இந்தியன் ஒவ்வொருவனின் “தார்மீகக் கடமை” அல்லவா? இந்தியாவிற்குள் மாநிலங்களாய்க் கட்டுண்டுள்ள தேசிய இனங்கள் இனி எங்கே தங்கள் மொழி, பண்பாடுகளைப் பேணிக் காப்பது, வளர்ப்பது? இந்து, இந்தியர், இந்தியப் பண்பாடு என்ற ஒற்றைக் கோட்பாட்டை முன்னிருத்துவதே புதிய கல்விக் கோட்பாடு.

ஆசிரியர்களை அவமதிக்கும் அறிக்கை

எந்தவொரு நாடாக இருந்தாலும் அந்நாட்டை வடிவமைப்பது அந்நாட்டுக் கல்வியே ஆகும். கல்வியில் உயர்ந்தோங்கும் நாடு இயல்பாகவே எல்லாத் துறைகளிலும் சிறந்தோங்கி விளங்கும். கல்வித் திட்டங்களை வகுப்பறைகளில் நடைமுறையாக்குபவர்கள் ஆசிரியர்களே. நாட்டின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது என்று கோத்தாரிக் கல்விக் குழு (1966) கூறியது. மாணவர்களை மட்டும் மனதில் வைத்து அவ்வாறு சொல்லவில்லை; ஆசிரியர்களையும் கருத்தில்  கொண்டே அவ்வாறு கூறப்பட்டுள்ளது.  

தமிழ்ச் சமூகம் ஆசிரியரைப் போற்றும் சமூகம். அது தாய்க்கும் தந்தைக்கும் அடுத்த நிலையில் ஆசிரியரை வைத்துப் போற்றுகிறது. தாய் தந்தை குரு ஆகிய மூவரும் வாழ்வுக்கான வழிகாட்டிகள் என்பதே அதன் பொருள். ஐந்து அகவையைக் கடந்த ஒரு குழந்தை தன் பெற்றோர்களிடம் செலவழிக்கும் நேரத்தை விட ஆசிரியர்களிடம் செலவழிக்கும் நேரமே அதிகம். குழந்தையின் உடலை வளர்ப்பது பெற்றோராக இருக்கலாம். ஆனால் அறிவை அதன் பண்பு நலத்தை வளர்ப்பது ஆசிரியரே. வாழ்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரின் பின்னாலும் அவர்களுடைய ஆசிரியர் இருப்பார். ஓர் ஏழைக் குடிமகனின் குடும்பத்தில் பிறந்து உலகம் போற்றும் அறிவியல் அறிஞராகவும் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த அப்துல் கலாம் அவரை வடிவமைத்தது, தம் தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்றே உணர்ச்சி மேலிடப் பேசுவார்.

ஆனால்,  புதிய கல்விக் கொள்கை அறிக்கையோ அறப்பணி ஆசிரியர்களையும் இனி நவீனக் கொத்தடிமைகளாகவே நடத்த வேண்டும் என்று கூறுகிறது. தேர்வு என்னும் நெருக்கடிக்கு இனி அய்ந்தாண்டுக்கு ஒரு முறை ஆசிரியர்களும் ஆளாகவேண்டும் என்கிறது. தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதெல்லாம் இனி அடிமைச் சேவகத்தைப் பொறுத்தே அமையுமாம். சங்கம் வைத்து உரிமைக்குப் போராடினால் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வழியிருக்காது. அடிமைபோல்  பணி செய்வோரே இனி நல்லாசிரியர் என்ற நிலை உருவாக்கப்படுகிறது.

கல்வியில் மலிந்துள்ள அனைத்துச் சீர்கேடுகளுக்கும் ஆசிரியர்களையே முழுதாகப்  பொறுப்பாக்குகிறது. கல்வியை வணிகமாக்கிய உலக முதலாளிகளும் உள்ளூர் ஆதிக்கவாதிகளுமே அதற்கான காரணம் என்பதை மறைக்கிறது. ஆசிரியர்களை அப்பணியிலிருந்து இடையிலேயே  விரட்டவும் புதிய கல்விக் கொள்கை வழி அமைக்கிறது. சம்பள உயர்வு பதவி உயர்வு ஆகியவை பணித்திறன் மதிப்பீடு மூலமே வழங்கப்படும்  என்பது ஊழலுக்கே வழி வகுக்கும்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும், ஆசிரியர் கல்லூரிகளையும் தனியார்களுக்குத் தாரை வார்த்து விட்டு நிர்வாகச் சீர்திருத்தம் பேசுவது எந்தப் பயனும் தராது. அங்கு நடக்கும் ஊழல்களே தரமற்ற ஆசிரியர்கள் பெருக்கத்திற்குக் காரணம். தனியார் பயிற்சிப் பள்ளிகளையும் ஆசிரியர் கல்லூரிகளையும் ஒழுங்குபடுத்த அவற்றிற்குத் தரம் வழங்குவது பற்றி அறிக்கை பேசுகிறது. அதுவும் பெருமளவு ஊழலுக்கே வழி வகுக்கும். கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு அதைத் தடுக்கும் வழி பற்றி ஆராயாது ஆசிரியர்கள் மேல் பழி போடுவது இருப்பதையும் கெடுக்கும்; சீர்படுத்தாது.  

மறுகட்டமைக்கப்படும் மனுநீதி

வாழைப் பழத்திற்குள் ஊசி ஏற்றுவதைப் போல என்றொரு பழந்தொடர் தமிழில் உண்டு. சுப்பிரமணியன் தலைமையிலான தேசியக் கல்விக் கொள்கைக் குழு அந்த வேலையைத் தங்கள் அறிக்கையில் திறம்படவே செய்கிறது. அறிக்கை முழுவதும் அனைவருக்கும் கல்வி சமமான கல்வி தரமான கல்வி என்று பேசிக் கொண்டே அதை மறுக்கும் சதியைச் சாணக்கியத் திறத்துடன் நிறைவேற்றி உள்ளது. கல்வியைத் தொடராமல் பாதியிலேயே நின்று விடும் குழந்தைகளை\இளைஞர்களைப் பற்றி இதுவரையிலான கல்விக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன; இடைநிற்றலைத் தடுக்கும் வழி பற்றி ஆராய்ந்துள்ளன. ஆனால் மோடி அரசு கல்விக் குழுவோ அவர்களை வீட்டுக்கு\குலத்தொழிலுக்குத் திரும்ப அனுப்பும் வழியைப் பரிந்துரைக்கின்றது.

கல்வியின் தரம் குறைந்துள்ளதற்கான உண்மையான காரணங்களை ஆராயாமல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற கொள்கைதான் அதற்கான காரணம் என்று கற்பிக்கிறது; ஆறாம் வகுப்பிலிருந்து தோல்வி(பெயில்)என்ற குழந்தைகளை மிரட்டும் பூதத்தை அது மீண்டும் நுழைக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும் இது அமைகிறது. கல்வியில் பின்தங்கிய குழந்தைகள் அவரவர் அகவைக்கேற்ற கல்வித் தரம் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையோ அவர்களை வடிகட்டி வீட்டுக்கு அனுப்ப வழி அமைக்கிறது.

பத்தாம் வகுப்பில் மிகவும் நுட்பமான தேர்வுமுறை ஒன்றை புதிய தேசியக் கலவிக் கொள்கைக் குழு அறிமுகப்படுத்துகிறது. பெரும்பான்மையான மாணவர்கள் ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களிலும் குறைவான மதிப்பெண்கள் பெறுவதே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைவதற்கான காரணம் என்று கண்டறியும் கல்விக்குழு அதற்கான தீர்வை முன்மொழிகிறது. எல்லாப் பாடங்களிலும் கெட்டிக்காரர்களாக உள்ளவர்களை ‘ஏ’ பிரிவாகவும் மேற்காணும் மூன்று பாடங்களில் பின்தங்கி உள்ளவர்களைப் ‘பி’ பிரிவாகவும் பிரிக்கிறது. முதல் பிரிவு மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்குச் செல்லலாம்; இரண்டாம் பிரிவு மாணவர்கள் ஆங்கிலம் கணிதம் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டியதில்லை. அவர்கள் நேராகத் தாங்கள் விரும்பும் தொழிற்கல்விக்குச் செல்லலாம்.

இதில் உயர்கல்விக்குச செல்லக் கூடிய மாணவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள் தொழிற்கல்விக்குச் செல்லக்கூடியவர்கள் எப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதை விளக்க வேண்டியதில்லை. அன்று மனுநீதியை மீறிய சம்பூகனின் தலையை வெட்டினான் ஒருவன்; ஏகலைவன் கட்டை விரலை வெட்டினான் இன்னொருவன். புதிய மனுநீதியோ தலையையும் விரலையும் வெட்டாமலே அவர்களை முடமாக்கிக் குலத் தொழிலுக்குத் திரும்ப அனுப்புகிறது. முந்தைய வன்மத்தில் எந்த வகையிலும் குறைந்ததல்ல பிந்தைய வன்மம்.

திசைமாறிய கல்வியின் நோக்கம்

தேசியக் கல்விக் கொள்கை 1986 தொடங்கி தொழிற்கல்வியின் தேவை பற்றி மிகுதியாகப் பேசப்படுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின்னான கல்விக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாக இது மாறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வியாளர் அனில் சடகோபால் சொல்வதைப் போல இஃதொன்றும் உழைப்பின் மேன்மையைப் பறைசாற்றும் கோட்பாடல்ல. மாறாக உழைப்பையும் அறிவையும் பிரிக்கும் சூழச்சி இது. மனுநீதிக் காலம் தொட்டு உழைப்புக்கு ஒரு வர்க்கம் அறிவுக்கு ஒரு வர்க்கம் என்று பிரித்த வஞ்சகத்தின் தொடர்ச்சி இது. வெள்ளைக்காரன் காலத்திலும் இது தொடர்கதையானது; இந்தியர் காலத்தில் புது வண்ணம் பூசிப் புதுப்பிக்கப்படுகிறது.

பூலேயும் காந்தியும் உழைப்பு உலகத்தையும்( World of Work), அறிவு உலகத்தையும்(World of Knowledge) இரு தனித்தனிக் கூறாக்கும் காலனிய-பார்ப்பனியக் கூட்டுச் சதியைக் கடுமையாக எதிர்த்தனர். “உழவனுடைய கலப்பையையோ தச்சனுடைய வாய்ச்சியையோ கையாளக் கூச்சப்படாதவர்களையே” ஊர்ப்புற ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்றார் பூலே. அறிவு உழைப்பைப் போற்ற வேண்டும்; அறிவும் உழைப்பும் ஒன்றாக வேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால் புதிய கல்விக் கொள்கையோ அதனை இரு கூறாக வெட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பத்தாம் வகுப்பில் மாணவர்களை ஏ பிரிவு பி பிரிவு எனப் பிரிப்பதை மேலே பார்த்தோம். ஆனால் உண்மையில் புதிய கல்விக் கொள்கை ஆறாம் வகுப்புத் தொடங்கியே அறிவுத் திறன் கொண்டவர்களைத் தனியாகவும் உழைப்புத் திறன் கொண்டவர்களைத் தனியாகவும் பிரிக்கத் தொடங்கி விடுகிறது.

ஆறாம் வகுப்பிற்கு மேல் சிறப்புப் பயிற்சி அளித்தும் இருமுறை தேர்ச்சி அடையத் தவறுகின்றவர்கள் அவர்கள் விரும்பும் தொழிற்சார்ந்த படிப்பைத் தொடர வேண்டியதுதான். அவர்கள் விரும்பும் தொழில் பெரும்பாலும் குலத்தொழிலாய்த்தான் இருக்கப் போகிறது. 14 அகவைக்குட்பட்ட குழந்தைகள் குடும்பத் தொழிலில் ஈடுபடலாம் என்று அண்மையில் திருத்தப்பட்டக் குழந்தைத் தொழிலாளர் சட்டம் சொல்வதை இத்துடன் இணைத்துப் பாருங்கள். இந்துத்துவா பாசக அரசு எதை நோக்கி நகர்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அனைவர்க்கும் கல்வி என்பது வெற்று ஏமாற்று முழக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்

படைப்பாற்றலையும் பன்முகப் பண்பாட்டையும் வளர்க்கும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டிய கல்வி இன்று உலகமயமாக்கல் பின்னணியில் பணத்தாசையைப் பெருக்கும் கல்வியாக மாறி விட்டது. கல்வியின் நோக்கமே  ‘வேலைக்கமர்வது’ என்றாகி விட்டது. புதிய கல்விக் கொள்கை வேலை வாய்ப்புக்கான திறன்களை வளர்ப்பது பற்றியே விலாவாரியாகப் பேசுகிறது. இது முழுக்க முழுக்க உலகப் பெரும் முதலாளிய நிறுவனங்களுக்குக் குறைந்த ஊதியத்தில் சேவை செய்யத் தேவையான ஆட்களை உற்பத்தி செய்யும் நோக்கத்தை மட்டுமே கொண்டது. பல்கலைக் கழகங்கள் சுயசிந்தனையுள்ள அறிவாளிகளை உருவாக்கும் பணியிலிருந்து வெகுதொலைவு விலகி ‘வேலைக்கான திறன்’ வாய்ந்த ‘ரோபோக்களை’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறி வருகின்றன.

சந்தைச் சரக்காகிப் போன கல்வி

உலகமயமாக்கல் தனியார்மயமாக்கல் தாராளமயமாக்கல் என்கின்ற முப்பூதங்கள் மனிதம் உட்பட உலகிலுள்ள அனைத்தையுமே பண்டப் பொருளாக்கி விட்டன. உலகச் சந்தையில் எதை வேண்டுமானாலும் விற்கலாம் வாங்கலாம். இதில் கல்வி முதன்மையான சந்தைச் சரக்காகக் கூவிக் கூவி விற்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படை கல்வியே என்பதால் சந்தையில் இதன் தேவை உயர்ந்து கொண்டே போகிறது. விலைக்கேற்ற கல்வியே இங்குக் கிடைக்கும். உயர்ந்த விலை கொடுப்போருக்கு உயர்ந்த கல்வி; குறைந்த விலை கொடுப்போருக்கு அதற்குத் தகுந்த கல்வி. 1986 கல்விக் கொளகையே இந்தியக் கல்வியைக் கடைச்சரக்காக்கும் பணியைத் தொடங்கி வைத்து விட்டதென்றாலும் 2016 கல்விக் கொள்கை விட்டகுறை தொட்டகுறை எல்லாவற்றையும் சரி செய்கிறது.

அனைவர்க்கும் சமத்துவமான தரமான கல்வி என்பது அறிக்கை நெடுகப் பேசப்படுகிறது. அப்படியான கல்வியைப் பொதுப்பள்ளி முறை மட்டுமே அளிக்க முடியும். வர்க்க, சாதி, சமய, பாலினச் சார்பற்ற கல்வியை அதுவே தரும். அரசுப் பள்ளிகளுக்குள்ளேயே நவயோதயா போன்ற சிறப்புப் பள்ளிகள் உள்ள கல்வி முறையில் சமத்துவமான கல்வியை எப்படி எதிர்பார்ப்பது? உயர் வகுப்புத் தனியார் பள்ளிகளும் கல்வி வணிகமும் பெருகி விட்ட நிலையில் அது எப்படி இயலும்? சுப்பிரமணியன் கல்விக்குழு இது பற்றியெல்லாம் பெருத்த அமைதி காக்கிறது.

மொத்த வருவாயில் 6% கல்விக்குச் செலவழிப்பதைப் பற்றிப் பேசும் அறிக்கை கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகுவதைப் பற்றிப் பேசுவதே இல்லை. அரசுக்கும் கல்விக்கும் தொடர்பே இல்லாமல் போகும்பொழுது கல்விக்கு 6% என்பது பொருளற்றுப் போகிறது. அதே போலக் கல்வி வணிகத்தைப் பற்றிக் கவலைப்படும் அறிக்கை கல்வி தனியார்மயமாதலைப் பற்றித் தொடுவதே இல்லை. மாறாகக் கல்வியில் தனியார்களை ஊக்குவிப்பதைப் பற்றியும் அவர்களுக்கு வரிச்சலுகை உட்பட மற்ற சலுகைகளை வழங்குவதைப் பற்றி மட்டுமே பேசுகிறது. உலகக் கல்வி நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பது பற்றியும் இந்தியக் கல்வி நிறுவனங்கள் வெளியே செல்வதைப் பற்றியும் மட்டுமே பேசுகிறது. உலக வணிக நிறுவனம்(WTO) நீட்டுகின்ற இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடும் இந்தியா கல்விக்குச் செலவளிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதனால் அமைக்கப்பட்ட கல்விக் குழு அப்படியான பரிந்துரையை எப்படிச் செய்யும்?

புதிய மனுதர்மம்

இந்துத்துவா என்பது அதிகாரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது; அதிகாரத்துவத்தைக் கட்டமைப்பது; மேலிருந்து கீழ் என்ற கட்டமைப்பைக் கொண்டது. இவ்வமைப்பில் அதிகாரம் மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும். கீழிருப்பொர் மேலுள்ளவர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டும். உலகமயமாக்கலுக்கு இத்தகைய கட்டமைப்பு மிகவும் ஏற்றதாக உள்ளதால் இந்தியாவில் இரண்டும் இயல்பாகக் கைகோர்த்துக் கொண்டன. இவ்மைப்பிற்குக் கேடு விளைவிக்காத அதற்குத் துணை போகின்ற அதைக் கட்டிக் காக்கின்ற சிறப்பான கல்விக் கொள்கையை சுப்பிரமணியன் தலைமையிலான கல்விக்குழு வகுத்தளித்துள்ளது.

அதிகாரத்துவத்தைப் பாதுகாக்க ஒழுக்கமும் கட்டுப்பாடும் கீழ்ப்படிதலும் அடிப்படைத் தேவைகள். அப்படியான கல்விக் கட்டமைப்பையே புதிய கல்விக் குழு நிறுவுகிறது. குருகுலக் கல்வி முறையே இந்தியக் கல்வி முறை என்று கூறும் கல்விக் குழு அதன் சிறப்புகளையும் கூறுகிறது. அது ஆசியர் மாணவர் இடையே குரு-சீடர் உறவை உருவாக்கி வளர்க்கிறது; ஆசிரியரை மய்யமாகக் கொண்டது; மாணவர்களைக் கடுமையான ஒழுக்கத்திற்கு உட்படுத்துவது. இம்முறையின் கீழ் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் கடப்பாடுகளும் உள்ளன.

இக்கல்வி முறையின் மீது கல்விக்குழு எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்பதும் இன்றைய கல்வியாளர்கள் வலியுறுத்தும் குழந்தை மய்யக் கல்வி பற்றி எங்கும் எதுவும் சொல்லவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. இதன் பொருள் குருகுலக் கல்வி முறையே இந்தியாவிற்கு ஏற்றது என்பதை அது சொல்லாமல் சொல்கிறது என்பதுதான். பள்ளிகள் பக்கத்திலுள்ள ஆசிரமங்களுடன் இணைக்கப்படும் எனப் போகிற போக்கில் அறிக்கைச் சொல்லிச் செல்கிறது. அன்று குரு ஆற்றிய பணியை ஆசிரமத் துறவிகள் ஆற்றுவார்களோ? வினவு கட்டுரை ஆசிரியர் கூறுவதைப் போல பாபா இராம்தேவும்  இரவி சங்கர்ஜியும் நித்தியானந்தாவும் கணிதத்தையும் அறிவியலையும் சமூக அறிவியலையும் கற்றுத் தரும் குருநாதர்களாகப் பணி அமர்த்தப்பட்டால் வியப்படைய ஒன்றும் இல்லை.

ஒழுக்கம் கட்டுப்பாடு குறித்த கல்விக் குழுவின் பார்வை பல்கலைக் கழக மாணவர்களின் அரசியல் செயல்பாடு குறித்துப் பேசும் பொழுது தெளிவாக விளங்கி விடுகிறது. கல்விச் செயல்பாட்டைக் குலைக்கும் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என்கிறது அறிக்கை. இத்தகைய செயல்கள் வெளி ஆள்களாலும், கல்விக் காலத்திற்கு அப்பால் அரசியலுக்காகக் கல்வியைத் தொடரும் சிலராலும் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கை சொல்கிறது. இது குறித்து ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனத்தைக் கடுமையாக (ஈபிடபுள்யூ) எதிர்கொள்கிறார் குழுத் தலைவர் சுப்பிரமணியன். நாட்டின் கல்வி நிலை குறித்தும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் அறிக்கை விரிவாகப் பேசுவதை விவாதிக்காமல் அரசமைப்பு விதி 19 வழங்கும் பேச்சுரிமையையும் கருத்துரிமையையும் சங்கம் சேரும் உரிமையையும் கல்விக்குழு மறுக்கிறது எனக் குரல் எழுப்புவதாக வருத்தப்படுகிறார்.

பல்கலைக் கழகத்தின் முதன்மை நோக்கம் கற்பிப்பதே எனக் கூறும் அவர் எந்த விதியும் அரசியல்வாதிகளை உருவாக்குவது அதன் முதன்மை நோக்கம் என்று கூறவில்லை என்கிறார். துணை விளைவான அரசியல்வாதிகள் உருவாகுவது முதன்மை நோக்கத்தைக் கெடுக்குமானால் பேசாமல் தலைவர்களை உருவாக்குவதே பல்கலைக் கழகத்தின் முதன்மை நோக்கம் என்றும் கற்பிப்பது அதன் துணை நோக்கம் என்றும் விதிகளைத் திருத்திக் கொள்ளலாம் எனவும் சீறுகிறார். அதிகாரத்தின் உச்சாணி இப்படித்தான் பேசும்; அதற்கு ஜனநாயகக் குரல்கள் வேம்பாகக் கசக்கும். இத்துடன் ஜவகர்லால் நேரு. ஹைதராபாத் பல்கலைக் கழக நிகழ்வுகளை இணைத்துப் பார்த்தால் இந்துத்துவா செயல் தந்திரம் பளிச்சென விளங்கும்.

கேள்வி கேட்பதை வேத மரபு அனுமதிக்காது. மநுநீதி வாரிசுகள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான கல்விக் கூடத்திலும் கேள்விக்கு இடம் இல்லாத கட்டமைப்பை அது போற்றுகிறது. சுப்பிரமணியன் தலைமையிலான கல்விக்குழுவும் தன்னை நோக்கிக் கேள்வி கேட்பதைப் பொறுமை இல்லாமல் எதிர்கொள்கிறது. மூன்று மாதக் கால அதன் செயல்பாடும் மூடுமந்திரமாகவே அமைந்து போனது. வினாத் தொடுப்போரை அது தன் அருகிலேயே அனுமதிக்கவில்லை. புதிய தேசியக் கல்விக் கொள்கை 2016 உலகமயமாக்கலின் மனுதர்மம் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை.

நன்றியைப் படையிலிடுகிறோம்.

எந்த ஒரு கருத்தும் கோட்பாடும் தனியொரு மனிதச் சிந்தனையின் விளைவு மட்டும் அல்ல. அறிவியல் கண்டுபிடிப்புகளும் தனியொரு மூளையின் சாதனைகள் அல்ல. நேற்றைய அறிவுடன் இன்றைய அறிவும் கலக்க வெளிப்படுவதே புதிய சிந்தனை புதிய கண்டுபிடிப்பு. அவ்வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை 2016ஐப் புரிந்து கொள்ள உதவிய அனைத்துக் கல்வியாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் எங்கள் நன்றியைப் படையிலிடுகிறோம். குறிப்பாக மதிப்பிற்குரிய எங்கள் ஆசான் திரு.எஸ்.எஸ. இராசகோபால், கல்வியாளர் திருமதி வசந்திதேவி, கல்வியாளர் அனில் சடகோபால், பேரா. எல்.என். வெங்கடராமன் ஆகியோருக்கும் ‘வினவு’, ‘எக்னாமிக் பொலிடிக்கல் வீக்லி’ ஆகிய இதழ்களுக்கும் எங்கள் நன்றி என்றென்றும் உரியது:  

- வேலிறையன், வழிநடத்துனர், கல்வி மேம்ப்பாட்டுக் கூட்டமைப்பு, தாய்த்தமிழ்க் கல்விப் பணி அறக்கட்டளை.