ஜாதி மறுப்பு திருமணம் புரிந்தோர் வாரிசுகளை ‘ஜாதியற்றோர்’ என்ற புதிய பட்டியலில் இணைத்து தனி இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று கழக மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் “தமிழர் ஒற்றுமைக்கான ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு” பிப்.16 ஆம் தேதி சேலத்திலும், பிப். 18 ஆம் தேதி திண்டுக்கல்லிலும் எழுச்சியுடன் நடைபெற்றது. ஏற்கனவே சென்னையில்  பிப்.3 ஆம் தேதி மாநாடு நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து 23 ஆம் தேதி திருவாரூரில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு நிகழ இருக்கிறது.

சேலத்தில்

பிப்.16 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் விஜயராகவாச்சாரி அரங்கில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது. தோழர் ஜஸ்டின் வரவேற்புரை யாற்றினார். சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், தமிழ் நாட்டில் தர்மபுரி வன்முறை மற்றும் ஜாதிய சக்திகளின் அணி திரட்டல் நடக்கும் கால கட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இத்தகைய ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருவதைப் பாராட்டி னார். காதலர் தினம், கலாச்சார சீரழிவு என்று பேசி வருவோருக்கு தமிழ் இலக்கியங்களிலேயே காதல் போற்றப்பட்டிருப்பதையும், குறிப்பாக சிலப்பதி காரத்தில் இந்திர விழா, காதலர்களின் மகிழ்ச்சிக் கூடலாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார். 21 வயதுக்கு முன் நடக்கும் காதல் திருமணங்களை நாடகத் திருமணம் என்று குறை கூறும் மருத்துவர் ராமதாசின் வாதத்தை மறுத்த டாக்டர் ரவீந்திரநாத், ஜாதி மறுப்பு காதல் திருமணம் 24-25 வயதுக்கிடையேதான் பெரு மளவில் நடப்பதாக ஆய்வுகள் கூறுவதை சுட்டிக் காட்டினார். சாதி மறுப்பு திருமணம் செய்தோரை ஜாதியற்றோர் என்ற புதிய பட்டியலில் இணைத்து அவர்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் தனி இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் என்ற மாநாட்டின் தீர்மானத்தை பாராட்டி வரவேற்ற அவர், ஒரு சோஷலிச சமுதாயத்தை உருவாக்க பார்ப்பனியப் புராணம், இதிகாசப் புரட்டுகளுக்கு எதிராக பண்பாட்டுத் தளத்தில் போராட வேண்டிய அவசியமிருப்பதை சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து ஜாதி மறுப்புத் திருமண இணையரின் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜாதி கலைந்தோர் சங்கத் தலைவர் முகில்வண்ணன் தலைமை தாங்கினார். காதல் இயற்கையானது என்று கூறிய அவர், இல்லாத சுதந்திரத்துக்கும், குடியரசு தினத்துக்கும் விழா எடுக்கும்போது இயற்கையான காதலுக்கு விழா எடுப்பதில் என்ன தவறு என்று கேட்டார். கருத்தரங்கில் சேலம் மாலதி, மகாலட்சுமி, புதுடில்லி தமிழரசு ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து “ஜாதி ஒழிப்போம்; சமத்துவம் படைப்போம்” எனும் தலைப்பில் பெண்கள்-திருநங்கை பங்கேற்ற கவியரங்கம் நிகழ்ந்தது. ஊடகவியலாளர் சிறிதேவி தலைமை யில், சக்தி அருளானந்தம், தமிழ் மதி, சரண்யா (திருநங்கை), கோமதி, எம்.சிவகாமி, ஜெ.  மேரி, ஏஞ்சலாமெர்சி ஆகியோர் எழுச்சியான கவிதை களை அரங்கேற்றினர்.  சுமார் 30 நிமிட மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மேட்டூர் கருப்பரசன் கலைக் குழுவினர் நடத்திய நாடகம் அனைவரையும் கவர்ந்தது.

தொடர்ந்து மனு சாஸ்திரத்தில் விஞ்சி நிற்பது, “ஜாதியமா? பெண்ணடிமையா” எனும் தலைப்பில் கருத்துச் செறிவான பட்டிமன்றம் நடந்தது. கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் நடுவர் பொறுப்பையேற்றார். “ஜாதியமே” என்ற அணியில் வழக்குரைஞர் நீலவேந்தன் (ஆதித் தமிழர் பேரவை), பெரியார் பிஞ்சு மேட்டூர் அறிவுமதி, நங்கவள்ளி அன்பு ஆகியோரும்; “பெண்ணடிமையே” என்ற அணியில் திருச்சி புதியவன், பெரியார் பிஞ்சு ஈரோடு மதுமிதா, கோகுலக் கண்ணன் ஆகியோரும் வாதிட்டனர். “விஞ்சி நிற்பது ஜாதியமே” என்று நடுவர் தீர்ப்பளித்தார். சேலம் மாநகரக் கழகத் தலைவர் மூ.வெ. சரவணன் நன்றி கூற, நிகழ்ச்சி மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது.

மாலை 7 மணியளவில் - சேலம் கோட்டை மைதானத்தில் “தமிழர் ஒற்றுமைக்கான ஜாதி-தீண்டாமை ஒழிப்பு பொது மாநாடு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் அ.சக்திவேல் வரவேற்புரையாற்றினார். கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் தி.குமார், தர்மபுரி மாவட்ட கழக அமைப்பாளர் வெ.வேணுகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் இரா.நாவரசு, வழக்குரைஞர் நீலவேந்தன் (ஆதித் தமிழர் பேரவை), வழக்குரைஞர் தோழியர் கரூர் வி.ஆர்த்தி, டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். இரவு 10.30 மணியளவில் த. பரமேசு குமார் நன்றி கூற, மாநாடு நிறைவடைந்தது. தாதகாப்பட்டி கேட் அருகே மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தத்தைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மாநாடு நடத்த அனுமதிப் பெற்று கோட்டை மைதானப் பகுதியில் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்லில்

பிப்.18 ஆம் தேதி மாலை 6 மணியளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் மேட்டூர் டி.கே. ஆர். குழுவினர் இசை நிகழ்ச்சி மேட்டூர் கருப்பரசன் குழுவினர் வீதி நாடகங்களோடு மதுரை மண்டல அமைப்புச் செயலாளர் இராவணன் தலைமையில் மாநாடு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர்

நா. நல்லத்தம்பி தொடக்கவுரை யாற்றினார். தலித் போராளிகள் முன்னணி நிறுவனர் சூ.ச. மனோகரன், விடுதலை சிறுத்தைகளின் உழவர் பெருமன்ற மாநில செயலாளர் வேலுச்சாமி, த.மு.மு.க. நகர  தலைவர் ஜமால் முகம்மது, பழ. நீல வேந்தன் (ஆதித் தமிழர் பேரவை), தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சின்ன கருப்பன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

ஜாதி மறுப்பு திருமண இணையரின் வாரிசுகளுக்கு ஜாதியற்றோர் தனி ஒதுக்கீடு; தலித் மக்களுக்கான வீடுகளை தனியாக ஒதுக்காமல், பிற ஜாதியினர் வாழும் வீதிகளிலேயே கட்டித் தருதல்; ஜாதிப் பெயர்களில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்க தடை செய்தல் ஆகிய கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன. அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தவிருக்கும் மனுசாஸ்திர எரிப்புக் கிளர்ச்சி யில் வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்கவும், போராட்டத்தில் பங்கேற்க வாய்ப் பில்லாதவர்கள், இந்தப் போராட்டத்தின் நியாயங்களை மக்களிடம் எடுத்துரைக்கவும் முன்வரவேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார்.

- நமது செய்தியாளர்

சேலம் மாநாட்டிலிருந்து....

சேலம் சிந்தாமணியூரைச் சேர்ந்த கழகத் தோழர் ஜெயப் பிரகாசு, தனது இணையர் திலகவதியுடன் இணைந்து சேலம் கழக மாநாட்டு மேடையில் கழக வளர்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார்.

சேலம் நகர கழகத் தோழர் பழனி-சந்திரா இணையரின் பெண் குழந்தைக்கு கொளத்தூர் மணி ‘மணியம்மை’ என்று பெயர் சூட்டினார். உலகத்தில் ஒரு நாத்திக இயக்கத்துக்கு தலைமையேற்று வழி நடத்திய பெருமைக்குரிய அன்னை மணியம்மையாரை கொச்சைப்படுத்தும் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏட்டுக்கு மேடையில் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

மேட்டூர் காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன், பிற்படுத்தப்பட்டோர் குடியிருப்பு பகுதியில் தலித் குடியிருப்பை உருவாக்க தனக்கு சொந்தமான 1000 சதுர அடி குடியிருப்பு மனைக்கான உரிமையை கழகத்திடம் ஒப்படைத்தார். சேலம் மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கியபோது கூடியிருந்த மக்கள் பெரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு பொது மாநாட்டுக்கான அனுமதி கோரி கடந்த ஜனவரியிலேயே கழக சார்பில் முறையான அனுமதி கோரப்பட்டது. ஆனால் சேலம் மாநகர காவல்துறை எந்த பதிலையும் வழங்காமல் மாநாடு இறுதி நேரம் வரை அமைதி காத்திருந்தது. கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தால் மாநாட்டை நடக்கவிடாமல் தடுத்து விடலாம் என்று திட்டமிட்டிருந்தனர் போலும். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை எந்த பதிலையும் தராததை சுட்டிக்காட்டி கழக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கழக வழக்கறிஞர் துரை. அருண் மற்றும் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மாநாடு நடத்த அனுமதி மறுத்து சேலம் காவல்துறை கடிதம் அனுப்பியது. நீதிமன்றத்தில் மனு விசாரணையில் இருக்கும்போது காவல்துறை அதை கவனத்தில் கொள்ளாமல் அனுமதி மறுத்ததை கழக வழக்கறிஞர்கள் நீதிபதி எஸ். இராஜேசுவரன் அவர்களிடம் சுட்டிக்காட்டி வாதிட்டனர். மாநாட்டை நடத்த காவல்துறை ஏதேனும் ஒரு பகுதியில் அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி  ஆணையிட்டதோடு நீதிமன்றத்தை மதிக்காது செயல்பட்ட காவல் துறை ஆய்வாளரையும், தனது உத்தரவில் குறிப்பிட்டு கண்டனம் செய்துள்ளார். சேலம் மாநாட்டில் திரண்டிருந்த மக்களிடம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நீதிபதியின் இந்த ஆணையையும் கண்டனப் பதிவையும் எடுத்துரைத்து, காவல்துறையின் கருத்துரிமைக்கு எதிரான போக்கைக் கண்டித்தார்.

Pin It