விடுதலைக்கான வழிகாட்டும் அரசியல் தத்துவம் முற்றுண்மையானதுமன்று, ஒரேவழிப் பாதையுமன்று. தத்துவ வழிபாட்டின் தன்னிலைகளாகக் கட்சிகட்டி, வன்மம் பாராட்டி வெறுப்பரசியலால் நீலம்பாரிக்கும் சீரழிவுகள் அருவறுத்துக் களைந்தெறியப்பட வேண்டியனவே. கருமை செம்மை நீலம் கைகோத்தாலே காவிநிர்மூலம் என்னும் உள்ளார்ந்த புரிந்துணர்வுடன் இயங்கியாக வேண்டியதென்பதே இன்றைய பொருத்தப்பாடான அணுகுமுறை ஆகும்.

“இடதுசாரிகளும் ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மைச் சமூகத்தாரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டிய தேவை­யிருக்கிறது என்று கடந்த இருபதாண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். ” - தொல். திருமாவளவன் (‘நமது தமிழ்மண்’ - சன. 2015)

இந்நோக்கிலவர் தம் விசிக சார்பில் ஒருங்கிணைத்த சனாதனப் பாசிச எதிர்ப்பு மாநாடு குறிப்பிடத்தக்கதாகும்.

‘பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு’ திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி, கோவையில் நீலச்சட்டைப் பேரணி எனத் தொடர்ந்து; 29/05/2022 அன்று மதுரையில் வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டையும் செஞ்சட்டைப் பேரணியையும் நடாத்தியது. அதில் ‘வீழட்டும் பார்ப்பனியம் சாதியம் முதலாளியம் ‘ எனும் ஆவணத் தொகுப்பையும் வெளியிட்டது. பன்மப் படிநிலையான சாதிய சமூக அமைப்பில் வாழநேர்ந்துள்ள நாம் அதற்கான ஓர்மையுடனேயே இத்தகுஅணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

ambedkar 450“1938 ஜனவரி 12 அன்று பம்பாயில் 20, 000 விவசாயிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார் அம்பேத்கர். இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்: ‘ஏழை, பணக்காரன் என்ற இரண்டே சாதிகள்தான் உலகில் உள்ளன. இங்கே திரண்டுள்ளது போல் சாதி, மத, வேறுபாடுகளை மறந்து இன்னும் வலிமையாக நாம் ஒன்றிணைய வேண்டும்.

கம்யூனிஸ்ட்டு நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்வேன். மார்க்சியக் கோட்பாடுகளின் மீது எனக்கு விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தபோதும் உழைப்பாளிகளின் வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்தமட்டில் கம்யூனிஸ்ட்டுக் தத்துவம் எமக்கு நெருக்கமாக உள்ளதாகவே நான் உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டார். - அ. மார்க்ஸ் (‘அம்பேத்கர் வழியில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்’ ப. 43) இத்தகு புள்ளிகள் ஒன்றுபடும் தரப்புகளை முதலிற் தொகுத்துக் காண்போம்.

“காந்தி - காந்தியம் இன்றி அம்பேத்கரிய - பெரியாரிய அறச் சட்டகத்­திலிருந்தே இனியான அற அரசியலைக் கட்ட முடியும். ” “புத்தர், அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் அனைவரிடமிருந்தும் கற்போம் என்பதுதான் விடுதலை அரசியல். ” பிரேம் (‘அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்‘ - ப. 88) “இந்தியாவில் மார்க்சியமும் லெனினியமும் மலரவும், சமதர்ம சமுதாய அமைப்பு வந்திடவும் பெரியாரியம் உதவும்; அம்பேத்கரின் ஆய்வுகள் துணை நிற்கும் என்பதை நாம் உணர்வது இன்றியமையாதது ஆகும். ” - வே. ஆனைமுத்து (‘வீழட்டும் பார்ப்பனியம் .. சாதியம்.. முதலாளியம். ’)

“தன்னை ஓர் உலகக் குடிமகன்(I am a citizen of the world) என அறிவித்த கார்ல் மார்க்சும் ‘எனக்குத் தாய்நாடு இல்லை’ (I have no homeland: எனக்கென ஒரு நாடு இல்லை) எனக் காந்தியின் முன் அறிவித்த அம்பேத்கரும் இணைந்து கூறும் செய்தி இது. ‘ஆகக் கீழான ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் விடுதலையில்தான் மனிதர்கள் அனைவர்க்குமான விடுதலை தொடங்குகிறது. இந்த விடுதலையைக் கொண்டு வரக் கூடியவர்கள் அந்த ஒடுக்குதலுக்கு உள்ளானவர்கள் தான். ’இந்த அறிவிப்பு வெறும் உணர்ச்சி மயமானதோ, நல்லெண்ண அடிப்படையில் உருவானதோ, அந்தராத்மாவின் ஒலியோ அல்ல. உலக வரலாற்றின் மிக அரிதான இரு பேரறிவாளர்களின் ஆய்வின்வழி கண்டறியப்பட்ட உண்மை. ” - பிரேம் (முற்சுட்டிய நூல் ப. 97)

‘அந்தராத்மாவின் ஒலியோ’ என பிரேம் சுட்டுவதன் பொருள் அந்தராத்மாவின் பேரால் காந்தியார் கையாண்ட தந்திர நாடகங்களைத்தாம். பூனா ஒப்பந்தத் தருணத்தில் அவர் மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டம் அமைப்பு சார்பிலான முடிவின் அமலாக்கமா என்ன? மாறாக அது மகாத்மாவின் அந்தராத்மா அசரீரி பேரிலான முன்னெடுப்புத்தானே? மட்டுமல்ல, “இதர அரசியல் தலைவர்களுடனோ மற்றவர்களுடனோ பேச்சு வார்த்தை நடத்தும் பொழுது காந்திஜீ ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டு விடுவார். ஆனால் சிலநாட்கள் கழித்து அவர் ஒப்புக் கொண்டதை மீறிவிடுவார். இதற்கு அவர் சொன்ன காரணம் ‘எனது அந்தராத்மா அப்படிச் சொல்லிற்று. எனவே எனது கருத்தை மாற்றிக் கொண்டேன் ‘ என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிடுவார். ’ (ஏ. கே. ரிபாயி ‘மறுமலர்ச்சி’ -30/09/1994 -’பறை - 2015)

“புலமை மிக்க அம்பேத்கரும், பள்ளிக்கூடத்தை விட்டு இளமையிலேயே வெளியேறிய ஈவெராவும், ஒரு விஷயத்தில் இந்தப் பார்வைத் தீர்க்கத்தைத் தமது இயக்கங்களின் மூலம் வெளியிட்டனர். அது இதுதான்: இந்தியா வெள்ளையரிடமிருந்து, பெறக் கூடிய சுதந்தரம் இரண்டாம் பட்சமானது, இந்தியா பெறவேண்டியது ஜாதி ஒழிப்பைத்தான். ”- பிரமிள் (‘வானமற்ற வெளி’) பாவாணரும் பிரித்தானியத்தை எதிர்ப்பதினும் பிராமணியத்தை எதிர்த்ததே பெரியார் பேராண்மை என்பார். (‘தமிழன் எப்படிக் கெட்டான்?’)பின்காலனிய நோக்கில் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்: காலனியாதிக்கம் இந்தியாவில் மேற்கொண்ட செயல்பாடுகளை இரண்டு நிலைகளில் அணுகலாம், ஒன்று ஆக்கபூர்வமானதாக, மற்றொன்று அழிவு பூர்வமானதாக எனக் கார்ல் மார்க்ஸ் கூற்றை முன்வைத்து, “தலித்துகளின் வாழ்வில் காலனியம் ஏற்படுத்திய மாற்றங்களில் பல ஆக்கபூர்வமானவை. நிலவுடைமையும் சாதிய அமைப்பும் கட்டமைத்திருந்த ஆதிக்க வெளிகளைக் கடந்து அதைப் புதிய வெளிகளாக மாற்றியது” “நகரமயம், புதியதொழிற்சாலைகள், நவீன தொழிற்கருவிகள் போன்ற நவீனச் செயல்பாடுகள் சாதி, மதம் எனும் கட்டுமானங்களிலிருந்து தலித்துகள் வெளியேறுவதற்கு ஓரளவு வாய்ப்பு ஏற்பட்டது. முதன்முறையாகப் பொதுவெளிகளின் பரப்பிற்குள் தலித்துகள் இடம்பெறல் என்பது அவர்களுடைய உரிமைப்போராட்டங்களின் நீட்சி. இதை அங்கீகரித்தது காலனியத்தின் வெகுமதி. ”- ந. இரத்தினக்குமார் (‘பின்காலனியம் சமூகம் - இலக்கியம்- அரசியல்’) இதற்கூடாகப் பிரித்தானிய எதிர்ப்பினும் பார்ப்பனிய எதிர்ப்பை அயோத்திதாசரும் அம்பேத்கரும் முன்னுரிமை கொடுத்து மேற்கொண்டதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும்.

இந்தியாவின் தலைமையதிகாரப் பீடமாக வேதமே கொலுவீற்றிருக்கின்றது. ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடு வரைக்குமாக இது ‘வேதங்களின் நாடு’ எனுமாறே காட்சியளிப்பதும் வரலாற்றின் விபரீத முரண்நகை தானே? “வேதமே சுருதி. அறத்துணிபுதான் ஸ்மிருதி. இவற்றை வாதிட்டு சோதித்தறிய முயலக்கூடாது. இந்நூல்களின் விதிப்படி ஒழுகுதலன்றி உயிர்களுக்கு வேறு கடமைகள் எதுவும் இல்லை. இவற்றைக் கல்விநூல் அறிவாலும் தர்க்கவாதத் திறமையாலும் சோதித்து அவமதிப்பவன் எவனா­யினும் அவன் நாத்திகன் ஆவான். அவன் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட வேண்டியவன்”- (மநுதர்மம்-) “நாத்திகம் என்ற சொல்லுக்குக் கடவுள் இல்லை என்று பொருளில்லை. வடமொழி ஆதாரங்களில் பார்த்தபடி சொல்கிறேன். நாத்திகன் என்றால் புராண, இதிகாசங்களை, வேதங்களை, சாஸ்திரங்களை, தத்துவங்களைப் பகுத்தறிவினாலே விவகாரம் விவாதம் பண்ணுகிறவன் என்று அர்த்தம். இந்த விவாதம் ஆரிய புராண இதிகாசங்களைப் பெரிதும் பாதிப்பதால் யார் ஒருவர் தங்களுடைய ஆதாரங்களில் கைவைக்கிறார்களோ அவர்களை நாஸ்திகன் எனச் சொல்லி விட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது. ? கடவுள் நம்பிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லே. ஆரிய கடவுள்களையும், ஆரிய சாஸ்திரங்களையும், மூடநம்பிக்கைகளையும் பகுத்தறிவுடன் எதிர்த்துக் கேட்டால் நீ நாஸ்திகன் அவ்வளவுதான். அந்தவகையில் என்னை நாஸ்திகன் என்று தைரியமாகச் சொல்லிக்கொள்கிறேன். ” -ஈ. வெ. ராமசாமி.

இதிலவர் விவகாரங்களை விவாதம் பண்ணுகிறவன் என்கின்றாரே அவனையே, ‘வேதவிரோத தர்க்க வியவஹாரிண’ என்கின்றது வேதாந்தத்தரப்பு. அவனை நோக்கியே, ‘சோதிக்க வேண்டா சுடர் விடடுளான் எங்கள் சோதி’ என்கின்றது சைவசித்தாந்தத் தரப்பும்.

“சிந்தித்தால், தர்க்கித்தால், சந்தேகித்தால் பாவம் என்று அழுத்திவைக்கப்பட்டிருந்தார்கள். எனவேதான் அறிவு வளரவில்லை. சமுதாயம் மேலோங்கவில்லை.” - ஈ. வெ. ராமசாமி (‘விடுதலை’. 12/-1/1961) இத்தொடர்பில் அம்பேத்கர் பார்வையும் துல்லியமானது. “அம்பேத்கரியம் என்பது வரலாற்று பூர்வமான, விஞ்ஞான பூர்வமான தன்னிலை உருவாக்கம். ஓர் அறிவுத் தேர்ந்தெடுப்பு. ஓர் அரசியல் நிலைப்பாடு. ஒருவர் அம்பேத்கரிஸ்ட்டாக வாழத் தேர்வது, துறவுநிலையைத் தேர்வதற்கு ஒப்பானது.. ஒருவர் அம்பேத்கரிஸ்ட்டாக மாற வேண்டுமெனில், அவர் இந்திய மதவாத மனநிலையில் இருந்து, வெளியே வரவேண்டும்“ என்னும் ரமேஷ் பிரேதன் காந்தியாரை மகாத்மா என்று சொல்லும் போது அம்பேத்கரை ஏன் மகாத்மா என்று சொல்லக்கூடாதென வினாத்தொடுக்கின்றார்

காந்தி, காந்தியம் இன்றி எனப் பிரேம் சுட்டுவது தொடர்பாக இன்னும் சில தரப்புகளையும் காண்போம்:“அம்பேத்கர் காந்தி சர்ச்சையில் காந்தியார் மண்ணைக் கவ்வுகிறார். ஜாதியம், வர்ணாசிரமம் இரண்டையும் பற்றிய விஷயத்தில் காந்தியார் பதில் தவறானது. ” “இந்திய வைதிக வர்க்கம் தமது ஜீவித நியாயத்துக்காக ஆன்மிகக் கூப்பாட்டை எழுப்பிவரும் இயக்கம் ஆகும். இது விஷயத்தில் காந்தி போன்றவர்கள், வைதிகமரபும் ஆன்மிகமும் ஒன்றே என்ற பார்வைக்குத் துணை போயிருக்கிறார்கள். ” “மனமறிந்தே காந்தி தவறான பார்வையை மேற்கொண்டார். இந்தத் தவறான பார்வையை அவர்துறந்தால் அத்தோடு இந்துக்களிடையே அவர் பெற்றிருந்த தலைமையைத் துறக்க வேண்டும். ” - பிரமிள் (முற்சுட்டிய நூல்)

“உண்மையாகவே காந்தி இரட்டைவாக்குரிமைக்கு எதிராகச் செய்தது வரலாற்று மோசடி. அதை எந்த அம்பேத்கரிஸ்ட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ‘கக்கத்தில் குறுவாளை வைத்துக் கொண்டு அகிம்சையைப் போதிப்பவரை மகாத்மா என்று ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று அம்பேத்கர் கேக்கிறார். ” - ரமேஷ் பிரேதன் (‘விகடன் தடம்‘: செப். 2019) அதனைக் காந்தியாரின் ‘அகிம்சையின் வன்முறை’ என்னும் ஓஷோ, அம்பேத்கர் தரப்பே அகிம்சை பேணியது என்பார். காந்தியாரின் அணுகுமுறை பூனா ஒப்பந்தத் தருணத்தில் மட்டுமல்லாது வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் என எதற்கூடாகவுமே இந்துமதச் சட்டகத்துக்குள்ளிருந்தவண்ணமே ஆடிய சதுரங்க ஆட்டமாகவே காணக்கிடக்கின்றது. அத்தகு நிலைப்பாட்டுக்குக் குந்தகம் நேராவாறே, இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளும் ஏமக்காப்பரணான ‘ஷேப்டி வால்வ் சிஸ்ட்ட’மாகவே கருத்தூன்றிச் செயல் பட்டுக் காய் நகர்த்தியது.

கோயில் நுழைவுப் போராட்டத்தைப் பொறுத்தவரை அம்பேத்கரின் பார்வை வேறுபட்டதே: “எனது அரசியலின் அடிப்படை எதுவெனில் தீண்டப்படாதோரை இந்துமதத்தின் ஒரு பிரிவோ அல்லது பகுதியோ இல்லை என நிறுவிப் பண்பாட்டின் வேறுபட்ட தனித்துவமானவர்களாக வாழச் செய்வதுதான். ” ஆலய நுழைவு, குளத்தில் நீரெடுத்தல் முதலிய போராட்டங்களிலிருந்து விலகி இந்து மதத்தை விட்டு வெளியேறுதல் என்கிற நிலைப்பாட்டை அம்பேத்கர் 1920 -1935 வாக்கில் வந்தடைந்ததாக அ. மார்க்ஸ் குறித்துள்ளதும் நோக்கத்தக்கது. (‘முற்சுட்டிய நூல் ப. 22)

ஆலயநுழைவுப் போராட்டத்தைத் தாம் தொடங்கியதற்குக் காரணம் ‘தலித்துகளைச் சிலை வணக்கம் செய்பவர்களாக மாற்றுவதற்காக அல்ல, மாறாக இந்துச்சமூகத்தில் அவர்களின் இடம் என்ன என்பதை உணரவைப்பாதற்காகவே என்ற அண்ணல், அந்தக் குறிக்கோள் நிறைவேறிவிட்டதாகவும் இனி ஒடுக்கப்பட்டவர்க்கம் அரசியலிலும் கல்வியிலும் தன் கவனத்தைக் குவிக்க வேண்டும் என வலியுறுத்தியதையும் அ. மார்க்ஸ் (ப. 38) தொடர்வார்.

அண்ணல் அம்பேத்கர் குறித்த முகாமையான வெவ்வேறு தரப்புகள் குறித்துக் காண்போம்: •“நமது காலத்தில் அம்பேத்கரின் எழுத்துக்கள், அடையாள அரசியலுக்கான அனுபவங்களின் இயங்கியல் குறித்த மாபெரும் ஆவணம்” - ந. முத்துமோகன் (‘அடையாள உருவாக்கமும் அடையாள வேறுபாடுகளும்‘ - தொகுப்பு நூல் அணிந்துரையில்)

  • ”ஒவ்வொரு உள்ளுணர்வும் ஒடுக்கப்படாதவரை ஏதோ சில படைப்பாக்கச் செயல்களாக மாறும் என்று மனிதமனம் அதன் அபூர்வமான மதிப்பு இவற்றைப் புரிந்துகொண்ட நிலையில் அம்பேத்கர் கூறுவது இருபதாம் நூற்றாண்டின் வெளி விளிம்பில் நிற்கும் தத்துவவாதிக்கு மிகவும் வியப்பூட்டுவதாகத் தோன்றும். இதைக்கூற இன்னும் பல தத்துவங்களுக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம். மார்க்சியத்திற்குப் பின்னான (Post -Marxist) தத்துவவாதியாக வெளிப்பட்ட அம்பேத்கரே இந்தியப் பின்நவீனத்திற்கும் (Post - Modernism) முன்னோடியாக இருப்பதை நாம் வியப்புடன் அறிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ” - ரமேஷ் பிரேதன் (‘பொதிகை -2000 - பொதியவெற்பன் பொன்விழா மலர்)
  • சட்ட அமைச்சராகவும், அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவராகவவும் அண்ணலின் வகிபாகம். இத்தொடர்பில் காந்தியார், காங்கிரஸ் கட்சி செயல்பாடுகள் குறித்துக் காண்போம்: “மிகக் குறுகிய காலமே சட்ட அமைச்சராகப்பணியாற்றினாலும், சுதந்தர இந்தியாவின் சட்டப் பாதைக்கு மகத்தான வழிகாட்டியவர் அம்பேத்கர். சுதந்தரத்துக்குப் பிந்தைய முதல் அமைச்சரவைப் பட்டியல் காந்தியின் பார்வைக்குப் போன போது அதில் அம்பேத்கர் பெயர் இல்லை. அப்போது, ‘சுதந்தரம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸுக்கு அல்ல’ என்றார் காந்தி. சட்ட அமைச்சராக அம்பேத்கர் இடம்பெற்றார். ” - ‘தமிழ் இந்து’- 20/11/2014) “எப்படியிருந்த போதும் இந்த அரசியல் சட்டம், ஜனநாயக அமைப்பு பாபாசாகேப் உருவாக்கியது. இதன் வழியாக நாம் விடுதலை நோக்கிச் செல்ல முடியும் ‘ என்ற நம்பிக்கை. இது மக்கள் வழக்காறாக, வாய்மொழி மரபாக மாறியிருப்பது சாதி இந்துக்கள், இந்துச்சாதிகள் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ” “ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளடக்க, அவர்களுக்கு நம்பிக்கை அழிக்கக் காங்கிரஸ் செய்த உத்திதான்(ராஜ தந்திரம்) அம்பேத்கரை அரசியல் சட்டக்குழுவின் தலைவர் ஆக்கியது. ” பிரேம் ( முற்சுட்டிய நூல் ப. 138). தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்க்குமுகமாகவேஆச்சாரியார் பெரியாரை அதன் தலைவராக்கிய தந்திரம்போலும் அரசியல் விரகாண்மையே அதுவும் எனலாம்.

தந்தை பெரியார் அரசியமைப்புச் சட்டத்தை 26/11/1957 -இல் கொளுத்துகிறார். அம்பேத்கர் அதற்கு முன்னாலேயே இது குறித்துப் பேசுகிறார்:

‘இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வரைவுக்குத் தலைவராக நான் இருந்ததாக என் நண்பர்கள் கூறினார்கள். யாராவது அரசியலமைப்புச் சட்டத்தை எரிக்க வேண்டுமென்று இன்று துணிந்து விட்டால் அந்தப் படையில் நான் முதல் ஆளாக இருப்பேன்’ என்றார்” (Rajya Sabha Debates - 2 /09/1953) “நேருவுக்குக் கோபம் வருகிறது, ’சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று சொன்னீர்கள். முடியாது என்றவுடன் கொளுத்த வேண்டும் என்கிறீர்கள்’ என்று கேட்கிறார். அப்போதுதான் அம்பேத்கர் தான் யார் என்பதைக் காட்டுகிறார்:” நான் ஒரு வாடகைக்குதிரை போல் பயன்பட்டேன். என்னுடைய நோக்கத்துக்கு மாறாக எதை எல்லாம் எழுதச்சொன்னார்களோ அதையெல்லாம் எழுதவேண்டியதா­யிற்று. ”- (Rajya Sabha Debates -12/09/1953)

1955 -ஆம் ஆண்டு, பர்மாவில் நடைபெற்ற உலக பௌத்த மாநாட்டில் பெரியாரும் அம்பேத்கரும் சந்தித்துக் கொள்கின்றனர்:

“சூத்திரர்க்கான விஷயத்தைக் கொஞ்சம் ஒழுகவிட்டு விட்டீர்களே பாபா சாகேப்” என்று கேட்கும் போதுதான் அம்பேத்கர் வெளிப்படையாகச் சொல்கிறார்: “சட்டம் எழுதிய பேனாவை நான் பிடித்திருந்தேன் என்பது உண்மைதான். ஆனால் அதை நகர்த்தியது முழுவதும் பார்ப்பனரே என்கிறார்”

அரசியமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதி: 26/11/1949. விவாதங்களை எல்லாம் முடித்து வைத்த பிறகு அம்பேத்கர் பேசுகிறார்: “இந்த அரசியல் நிர்ணயசபைக்கு நான் உறுப்பினராக வந்ததன் நோக்கம் - தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்கணும்என்பதுதான். இதைத் தவிர வேறு பெரிய நோக்கம் எதுவும் இல்லை. (ஆதாரம் வே. ஆனைமுத்து நூலில்)

ஒரு காலக்கட்டத்தில் டாக்டர் அம்பேத்கர், தான் அரசமைப்புச்சட்டத்தை உருவாக்க ஒரு கருவியாக மட்டுமே பயன்பட்டதாகவும் அதை மகிழ்வோடு எரிப்பேன் என்று கூறினாலும், சுதந்தர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் தலைமை வடிவமைப்பாளராகவே அவர் கருதப்படுகிறார். ஏனெனில் அதன் உருவாக்கக் குழுவில் அவர் தலைவராக அவர் மிக முக்கியமான பங்கை அதீதத்திறனுடன் செயல்படுத்தினார். இந்திய அரசமைப்புச்சட்டத்தின் தந்தை என்றவரை அழைக்க அம்பேத்கரியர்

ஒரு போதும் தயங்கியதில்லை என்னும் எஸ். கே. பிஸ்வாஸ் ஜனநாயக பலிபீடத்தில் அவர் காவு வாங்கப்பட்டார் எனவும் காந்தியாருடன் அவர் சமரசப்படுத்திக் கொண்டார் என்பதான தரப்புகளையும் சுட்டிக்காட்டி அவற்றை எதிர்கொள்கின்றார். (‘பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்‘ ப. 152) இத்தொடர்பில் இன்னும் சில தரப்புகளைக் காண்போம்:

“அம்பேத்கரை வெள்ளைக்காரர்களின் கைக்கூலி என்றார் நேரு; தொங்குசதை என்றார் தாகூர்; நியமிக்கப்பட்ட வேட்டை நாய் என்றார் பட்டேல். ஆனால் மேற்படி தலைவர்கள் எல்லாம் அம்பேத்கர் மீது அவதூறு பேசியதை உடைதெறியும் வண்ணம் எடுத்துரைத்து வந்தார் பெரியார்” - டி. எம். மணி (‘சட்டநாள் மக்கள் மாநாடு மலர்’ - 2003) ‘நம் எதிரிகள் அவரைச் சர்க்கார் தாசர் என்று சொல்லக்கூடும். அதைப்பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை. பதவிக்குச் சென்றது முதலே ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் பெயரையும் நிலைமையையும் எடுத்துச் சொல்லிச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தம் இனத்தின் நலனுக்கு ஏதாவது காரியம் செய்துகொண்டு எதிரிகளை வெள்ளையாகக் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்துவிடுகிறார். “- ஈ. வெ. ராமசாமி (‘தலித் முரசு’ - செப். 2004) மட்டுமல்லாமல் இதனை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். அது வித்தியாசங்களின் அரசியலைப் பேசிநின்ற அம்பேத்கர், பெரியார் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனை முதன்மையாக மனங்கொண்டு அரசைச் சார்ந்து நின்றே கையாள நேர்ந்த ஓர் அணுகுமுறை குறித்தது:

“தலித் அரசியல் என்பது ஆரம்பம் முதற்கொண்டே பாராளுமன்ற அரசியலைச் சார்ந்தே இருக்கிறது. அப்படித்தான் இருக்க முடியும். பாராளுமன்றத்தின் ஊழல்களையும், பொய்மைகளையும் கருத்திற்கொண்டு அதைப் புறக்கணித்துவிடும் சாத்தியம் அதற்குக் கிடையாது. தவிரவும் அது குறிப்பிட்ட அளவிற்கு அரசைச் சார்ந்தும் உள்ளது. அரசின் கொடூரங்களைக் காட்டிலும் சமூகத்தின் கொடூரத்தை அது உடனடியாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே சமூகக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு Arbitrator ஆக அரசை அது அணுகுகிறது.

நடுநிலை என்கிற சொல்லைக் காட்டிலும் Arbitrator என்கிற ஆங்கிலச் சொல்லே பரவாயில்லை என்பதால் அப்படியே பயன்படுத்தியுள்ளேன். (சமனப்படுத்துநர் அல்லது நயன்மைத் தீர்வர் எனலாமோ?’ -பொதி) எனவே பெரியார், அம்பேத்கர் போன்ற வித்தியாசங்களின் அரசியலைப் பேசியவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு அரசு வலிமையாக இருப்பதையே விரும்பினர். ” “ பஹிஷ்கரித் ஹிதகரிணிசபா-சுதந்திரத் தொழிலாளர் கட்சி-- பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு-குடியரசுக் கட்சி என்பதாக அம்பேத்கரது இயக்கம் இருந்தது. அதாவது, தலித்களுக்கான தனி அமைப்பு - கட்சி - தனி அமைப்பு-கட்சி என்பதாக இருந்தது. கட்சி என ஆகும்போது பெயரைக்கூட தலித் என்கிற வட்டத்தைத் தாண்டி அமைக்க வேண்டியிருந்தது. பரந்த அடையாளம் என்கிற போது அம்பேத்கர் “தொழிலாளர் குடியரசு” முதலானவற்றை தேர்வு செய்தார். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரை அணுகினார். ” அ. மார்க்ஸ் ( தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள் குறித்த அயலக உரையில் - ‘சஞ்சாரம்‘:1 மார்ச் 2008 )

மார்க்சிய நோக்கில் அண்ணலின் கருத்தியல் எவ்வாறு பொருத்தப்பாடுடையதாக அமைந்தியல்கின்றதெனப் பிஸ்வாஸ் தெளிவாக எடுத்துரைக்கின்றார்: “நடைமுறையில் ஐனநாயகமும் அரசமைப்புச் சட்டவியலும் முதல்படியாக, தனியுடைமையை ஒழிப்பதன் மூலமும் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவுவதன் மூலமும் மனித இனத்தின் இறுதி இலக்கை அடைய வழிவகுக்கும் என மார்க்சும் ஏங்கெல்சுமே விளக்கம் அளித்துள்ளனர். ” (ப. 152)

“இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தது அண்ணலின் போராட்டத்துக்கு எவ்வாறானும் சமரசமோ, பின்னடைவோ ஏற்படுத்துவது ஆகமாட்டாது; அரசமைப்புச் சட்டவா­யிலாக சோசலிச இலக்கை அடைவதற்கான வழிமுறையாகவே அவர் தம் கருத்தியலைக் கொண்டிருந்ததாகத் தொடர்வாரவர்:

“அம்பேத்கரின் கருத்தியல் என்பது அரசமைப்புச் சட்டவியல் ஆகும். மார்க்சியத்தின் அடிப்படை என்பது மனித சமூகத்தின் வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் வழிமுறை என்பதை மறந்துவிடக் கூடாது. ” “மார்க்சியம் என்பது நம் கண்முன் நடக்கக் கூடிய சமூக மாற்றங்களின் அடிப்படையில் மனித இனத்தின் வரலாற்றைக் கணித்து அறிவிப்பது என்று புரிந்து கொண்டால், இந்தியாவின் தற்போதைய சமூகக் கூறுகளின் வளர்ச்சியின் அடிப்படையில் ஓர் அரசியல் கருத்தியல் உருவாகாது என எதிர்பார்ப்பது சரியானது ஆகுமா? டாக்டர் அம்பேத்கர் இதனைத் தொடக்கி வைத்தார். ” - எஸ். கே. பிஸ்வாஸ் (முற்சுட்டிய நூல் ப. 168)

“இந்தியாவுக்கு வரும்போது அம்பேத்கரியத்தின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இந்தியாவில் சாதி, மதம், இனம் இவைகளே மொத்தச்சிக்கலுக்கும் அடிப்படைகள் என்று மார்க்ஸ் சமூக அறிஞராக மூன்று பத்திகளில் சொல்லியிருக்கிறார். இதை மறந்து விட்டு மார்க்சியத்தைப் பேசமுடியாது. அம்பேத்கரின் ஆய்வுகள் இந்தச்சிக்கல்களையே அடிப்படையாகக் கொண்டவை. ”- பிரேம் (அல் ஷாபாஸ் ஆஷிக் - ‘உயிர் எழுத்து’ மே, 2003)

“மார்க்சியம், அம்பேத்கரியம் என்பதெல்லாம் சமூக மாற்றம், விடுதலைக்கான கருத்தியல்கள். கால, இட, சமூக வடிவங்களுக்கேற்ப அவற்றின் கண்டறிதல்கள், கோட்பாடுகள், வழிமுறைகள் மாறும். ஆனால் அவை விடுதலைக் கருத்தியல்கள். இந்திய அரசியலில் சாதியே வர்க்கப் போராட்டம் என்று சொன்ன மார்க்சியம் அம்பேத்கரிடமிருந்துதான் கற்க வேண்டும். ”(ப. 160)

“விடுதலைக்கான வழி ஒற்றையடிப் பாதையல்ல, அது ஒருவருக்குள் அடங்குவதும் இல்லை. புத்தர் வேண்டும், அம்பேத்கர் வேண்டும், பெரியாரியம் வேண்டும், பெண்ணியம் வேண்டும், கருப்பினப் போராளிகள் கனவுகள் வேண்டும். அதற்கும் மேலாகப் போராடுவதற்கு மக்கள் வேண்டும், போராட்டங்களை வழிநடத்தத் தலைமை வேண்டும். அந்தத் தலைமை தலித் தலைமையாக மாறி­விடக் கூடாது என்று கவனமாக இருப்பதல்ல மார்க்சியம். ”- பிரேம் (‘பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்‘ பக். 162) இத்தகு பிஸ்வாஸ், பிரேம் தரப்புகள் கவனங்கூரத் தக்கனவே ஆனபோதிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியனவே . தலித் மக்களுக்குத் தலைமைப்பொறுப்பைப் பிரதானமாக வலியுறுத்தும் பாவனையை இந்தப்புள்ளியில் இந்துத்துவ ஆக்டோபஸின் லீலைகளையும் கருத்திலிருத்தியே அதன் ‘காயடிக்கும் காய்நகர்த்தல்’களையும் அணுக வேண்டும்.

“பார்ப்பனர்கள் எப்போதும் தமக்குக் கூட்டாளிகளைக் கொண்டிருந்தனர் என்பதையும், அவர்கள் தமக்குக் கீழ்ப்பட்டு ஒத்துழைப்பதாக. இருந்தால் ஆளும்வர்க்கம் என்ற தகுதியையைத் தரத் தயாராக இருந்தனர் என்பதையும் வரலாறு காட்டுகின்றது. ” பி. ஆர். அம்பேத்கர் (‘காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதார்க்குச் செய்ததென்ன?’) “பார்ப்பனியம் என்பது எல்லாரையும் சிறுபான்மையாக்கி ஒரு மீச்சிறுபான்மை மட்டும் கொட்டமடிக்க ஏதுவாய் வடிவமைக்கப்பட்ட தத்துவம்! அண்ணல் தனது அணிச்சேர்க்கையைப் பார்ப்பனிய நிறுவனத்துக்கு எதிரானதாகவே எப்போதும் அமைத்துக் கொண்டார். பார்ப்பனர்கள் விரும்புவதையே தனது செயல்பாடாக அமைத்துக் கொண்டால் நல்ல விளம்பரமும் வெளிச்சமும் கிடைக்கும். ஆனால் அந்த பார்ப்பனச் சார்புக்குக் கேடயமாக அண்ணல் அம்பேத்கரை நிறுத்துவது அவரைச் சிறுமைப்படுத்துவதாகும். ” - ம. மதிவண்ணன் இத்தகைய புரிதல்களின் அடிப்படையில்தான் அண்ணல் எந்தச் சித்தாந்தத்தைக் கடுமையாக எதிர்த்தாரோ அந்தச்சித்தாந்த எதிரிகளுடனேயே அதிகாரத்துக்காகக் கூட்டணி கொள்ளும் அரசியல் சந்தர்ப்பவாதச் சமரசம், சமூகநீதி இயக்கங்களை வீழ்ச்சிக்குத்தான் இட்டுச்செல்லும் எனத் தாம் எப்பதவி வாய்க்கக்கூடுமேனும் கொள்கைப் பகைவர்களுடன் கூட்டணி கூடாது என்பதில் உறுதியாக நிற்பதாகத் திருமா பிரகடனப்படுத்திக் கொள்கின்றார்.

எதிரிகளையும் சனநாயகப்படுத்த விழையும் தொலைநோக்கு; சனநாயகப் பொறுப்புணர்வோடு சமன் குலையாது உரையாடும் பாங்கு; தம் மீதான விமர்சனங்களைச் செவிமடுக்கும் நிதானம்: தன்னாய்வு செய்து கொள்ளும் பரிபக்குவம்; தம் அமைப்பிற்கு அப்பாலும் பலராலும் நம்பகமானவராக ஏற்றுக் கொள்ளப்படும் தலைமைப்பண்பு இன்னபிறவும் தோழர் திருமாவிற்குரிய சிறப்பியல்புகளாகும்.

அண்ணாவின் ‘தம்பிக்குக் கடிதங்கள் தொகுதிகளும், திருமாவின் ‘அமைப்பாகத்திரள்வோம்‘ நூலும் அதிகார நகர்வை நோக்கிய பொதுநீரோட்ட அரசியல் முன்னெடுப்பென்னும் வகையில் இன்றியமையாது வாசிக்கப்படவேண்டிய நூல்களே. “தமிழக அரசியலில் தலைமை வகித்துவரும் யாருக்கும் அமையாத நவீன- பின் நவீனப் புரிதலும், புலனறிவும் கொண்ட ஒரு நெறியாளராக, வழிகாட்டியாக, கோட்பாட்டளராகத் தோழர் திருமாவளவன் தம்மை அமைத்துக் கொண்டிருப்பதை ‘அமைப்பாய்த் திரள்வோம்‘ கட்டுரைகள் தெளிவாக்குகின்றன. ”(119)

“இந்திய மாற்றுக் கருத்தியலின் பன்முக உருவகமாக, விடுதலைக்கான தத்துவ - அரசியல் வடிவமாக நிற்கும் பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய மரபைத் தொடர்வதற்கு ஒவ்வொரு மொழியிலும் கருத்தியல் தலைமைகள் தேவை. இன்று தமிழகத்தில் தோழர் திருமாவளவன் அதனை அளித்து வருகிறார். அவருடைய குரல் பிற இந்திய தலித் விடுதலைத் தலைமைகளில் இருந்து பலவகைககளில் வேறுபட்டது. உலக அரசியலையும், பன்மெய் அரசியலையும் தன் களமாகக் கொண்டது” -பிரேம்(‘அ. தொ. வை. அறப்போராட்டம்‘ ப. 127) இத்தொடர்பில் மேலதிகப் புரிதல்களுக்கு, ‘பாசிசத்தால் வீழ்த்தப்படாத ஸ்பார்ட்டகஸ்’ எனும் தொகைநூலிற் காண்க.

ஆதிபத்தியம் எதற்கும் அடிபணி யோமே

அம்பேத்கர் பெரியார் அணியிணைந் தோமே

சாதிபத்தியம் எமக்குச் சமரசங்கள் விலக்கு

மதமான பேய்பிடியா மார்க்கமே இலக்கு

மீதிதத்துவம் எல்லாம்ஓதி உணர்ந் தோமே

மேதினி மீதினி ஏதினி யேகதி

போதிசத்துவன் அவனின் புத்ததம்மம் கச்சாமி

பொதுவுடைமை மார்க்சிய லெனினியம் கச்சாமி

(அண்ணலைப் பற்றிய இக்கட்டுரையில் அவருடைய ‘புத்தரா காரல் மார்க்ஸா ‘ எனும் முகாமையான ஆய்வு குறித்து எதுவும் எழுதவில்லை, ஏனென்றால் அது குறித்து ஏலவே நான் ‘மார்க்சியத்திற்கும் அஃதே துணை’ எனும் ஐம்பது பக்க அளவிலான என் விரிவான ஆய்வுக்கட்டுரையை ‘அகம் புறம்:3’ - யூலை 2016 இதழில் முன்வைத்துள்ளேன்.)

- வே.மு.பொதியவெற்பன்

Pin It