பாசிஸ்டுகளின் பகல் வேடம்

தமிழ் மொழி, திருக்குறள், தமிழ் மன்னர்கள், அவர்களின் வரலாறு மீது பாஜகவுக்கும் அதன் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் திடீர் பாசம் பீறிட்டு பொங்குகிறது.

என் மண்; என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை சொகுசுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நினைக்கும் போதெல்லாம் சென்று வரும் இந்தப் பயணத்தில், அவர் புளுகியவை ஏராளம். அவற்றை அம்பலப்படுத்தியும் வரலாற்று உண்மைகளை உணர்த்தியும் சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் மொழியின் மீதும் தமிழ்நாட்டு வரலாற்றின் மீதும் அண்ணாமலையும் அவர் சார்ந்திருக்கும் பாஜகவும் வெளிப்படுத்தும் பாசம் குறித்துப் பார்க்கலாம்.annamalai modi murugan“குஜராத்தில் பிறந்த மோடிஜி தமிழின் தொன்மையை உலகம் முழுவதும் சொல்லி வருகிறார். ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், உலகின் தொன்மையான தமிழ் மொழியில் தன்னால் சரளமாகப் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். தமிழ் நாட்டின் மீது அவருக்குப் பற்று இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தின் மீது பாசம் இருக்கிறது. தமிழ் மொழியின் மீது அளவில்லா அன்பு இருக்கிறது. தமிழனாகப் பிறக்கவில்லையே என்ற குறை பிரதமர் மோடிக்கு இருக்கிறது” - இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு.

அடடே, எவ்வளவு அருமையான பிரதமர் கிடைத்திருக்கிறார். தமிழின் மீதும் தமிழ் நாட்டின் மீதும் மோடிக்கு இருக்கும் பற்று யாருக்கு இருக்கிறது? அவரை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? என்று அண்ணாமலை அங்கலாய்க்கிறார்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஆற்றிய பணிகள் என்ன? ஒன்றிய அரசு தமிழ் மொழிக்காக என்ன செய்கிறது? உலகின் தொன்மையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒன்றிய பாஜக அரசு, 2017 - 2020 ஆகிய 3 ஆண்டுகளில் 22.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதே காலத்தில் 24,821 பேர் மட்டுமே பேசக் கூடிய சமஸ்கிருத மொழிக்கு 643.84 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது எனப் பார்ப்போம்.

இது பற்றி நாடாளுமன்றத்தில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, “மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தானத்தை நிறுவி, அதற்கு மூன்று ஆண்டுகளில் (2017- 2020) 643.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-18ல் 198.31 கோடி ரூபாய். 2018-19ல் 214.28 கோடி ரூபாய். 2019-20ல் 231.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று ஒன்றிய அமைச்சர் கூறுகிறார்.

இதே காலத்தில், தன்னாட்சி அமைப்பான செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 10.59 கோடி ரூபாய். 2018-19ல் 4.56 கோடி ரூபாய். 2019-20ல் 7.7 கோடி ரூபாய் என குறைவான நிதியையே ஒதுக்கீடு செய்துள்ளது.

தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு இதைவிட பெரும் ஓரவஞ்சனை. 2017 - 2020 வரையிலான 3 ஆண்டுகளில் தலா 3.06 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலையாளம், ஒடியா மொழிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

அதாவது, செம்மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கும் 29 கோடி ரூபாய். சமஸ்கிருத மொழிக்கு மட்டும் 643.84 கோடி ரூபாய். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மக்களால் பேசப்படாத ஒரு மொழிக்கு 22 மடங்கு அதிகமான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதான் பிரதமர் மோடியின் அளவில்லா தமிழ்ப் பற்று(?). தமிழனாக பிறக்கவில்லையே என்று அவர் குறைபடுவதன் லட்சணம். இவற்றைத்தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊர் ஊராகப் பேசி வருகிறார். மற்றொரு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழில் பேச முடியவில்லையே என வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கிறார்.

பெருமழை, வெள்ளத்தால் சென்னை அதனையொட்டிய மாவட்டங்களும் தென்மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். தமிழ் நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதா ஒன்றிய அரசு? பாசம் மிகுந்த பிரதமர் ஓடோடி வந்தாரா? ஒன்றியத்தின் கருவூலத்திலிருந்து ஏதேனும் கிள்ளிப் போட்டாரா?

நேர்முக வரி, மறைமுக வரி, சுங்கக் கட்டணம், சாலையில் ஊர்திகள் செல்வதற்குக் கட்டணம் (டோல்), கூடுதல் வரி (செஸ்), வருமான வரி இப்படி பல்வேறு பெயர்களில் தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டி செல்லும் ஒன்றிய அரசு, அதன் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? ஒன்றும் இல்லை.

மாநிலங்களுக்கான வரிப் பங்கீட்டில் தமிழ்நாட்டுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகிறதே, இதுதான் பாஜகவின், பிரதமர் மோடியின் தமிழ் பாசமா? தமிழ்நாட்டின் மீதான பற்றா?

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பெயரளவிலான கூட்டாட்சியும் காணாமல் போய் போய்விட்டதே ஏன்?

“நல்லவன் வருகிறான், செம்பை எடுத்து உள்ளே வை” என்றொரு பழமொழி தமிழில் உண்டு. தமிழ் மொழி, தமிழர்களின் வரலாறு, இலக்கியம் என பேசிக்கொண்டு பாசிஸ்டுகள் வருகிறார்கள். தமிழர்களே விழிப்போடு இருங்கள்.

- மணிமாறன்

Pin It