75ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக, “விடுதலையின் அமுதப் பெருவிழா” என்கிற பெயரில் தொடர் நிகழ்வுகளை ஒன்றிய அரசு ஒருங்கிணைத்து நடத்தி வருவது, நாம் அறிந்ததே! அதன் ஒரு பகுதியாக “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்பதை வலியுறுத்தும் விதமாக, “காசி தமிழ் சங்கமம்” என்கிற பெயரில், ஒரு மாத தொடர் நிகழ்வுகளை ஒன்றிய அரசு 19/11/2022இல் இருந்து நடத்த ஆரம்பித்துள்ளது.
இதன் நோக்கங்களும் தெளிவாக சென்னை அய்.அய்.டி. உருவாக்கிய இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளன. வெளிப்படையாகக் கூற வேண்டும் எனில், புதிய கல்விக் கொள்கையை (2020) கலை வடிவத்தின் மூலமாக திணிப்பது முக்கிய நோக்கமாகும். இதை அவர்களே கூறியிருக்கிறார்கள். வடஇந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு ஆன்மீக தொடர்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சனாதன கொள்கைகளை தமிழ்நாட்டில் தீவிரமாக புகுத்துவது இன்னொரு நோக்கமாகும். “வாஸ்து சாஸ்திரத்தை நவீன அறிவியலோடு இணைப்பது” போன்ற பல நகைச் சுவையான நோக்கங்களும் கூறப்பட்டுள்ளன. சென்னை அய்.அய்.டி.யும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகமும் இணைந்து இந்நிகழ்வை நடத்து கின்றன. மதச்சார்பற்ற முறையில் விஞ்ஞான மனோபாவத்தோடு நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டிய கல்விக் கழகங்கள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் நிகழ்வாக இந்நிகழ்வை ஒருங்கிணைப்பது என்பது, நாட்டின் கல்வித் துறைக்கே மானக்கேடான ஒரு காரியமாகும். இதே போல், இந்தியாவில் தோன்றிய பிற மதங்களான, புத்த மதத்தைப் பற்றியோ, சீக்கிய மதத்தை பற்றியோ இத்தகு நிகழ்ச்சிகளை நடத்த இந்நிறுவனங்கள் என்றேனும் திட்டமிட்டுள்ளார்களா? இல்லை என்பதே பதிலாகும்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழ் நாட்டில் இருந்து நிறைய ஆராய்ச்சியாளர்களும் கல்வியாளர்களும் மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுள் கணிசமானோர் வலதுசாரிகளாக இருக்கின்ற போதிலும், மீதமிருக்கும் ஆற்றலாளர்களையும் வலதுசாரி கொள்கையின்பால் ஈர்ப்பதற்கும், இந்த ஒரு மாத “காசி தமிழ் சங்கமம்” பயன்படப் போகிறது. தமிழ்நாடு திரும்புபவர்களில் பெரும்பாலானோர் சங்கிகளாகவே மாறி, இங்கு வரும் வாய்ப்புள்ளது.
இதற்கென தனியாக ஒரு இணையதளமும், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் உருவாக்கப் பட்டு, வலதுசாரி கருத்துக்கள் பரப்பப் படுகின்றன. கல்விப் பணியை செய்வது அய்.அய்.டி.யின் வேலையா? அல்லது ஆன்மீகப் பணியை செய்வது அய்.அய்.டி.யின் வேலையா? என்கிற கேள்வி எழுகிறது. நம்முடைய வரிப்பணம் இவ்வாறாகவெல்லாம் வீணாகுவதா? என்ற ஆதங்கமும் நமக்கு இருக்கின்றது. ஆரியக் கலாச்சாரத்தை தமிழர் கலாச்சாரமாக உலக அரங்கில் பறைசாற்று வதற்கும், இச்சங்கமத்தை பாஜக பயன்படுத்த நினைக்கின்றது. ஆனால் அவர்களுக்கு கிடைக்கப் போவது என்னவோ தோல்விதான். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சமூக வலைத்தளங்களில் பெரிதாக வரவேற்பும் இல்லை. அவர்களால் இதுவரை எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தவும் முடியவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அய்.அய்.டி. உருவாக்கி இருக்கும் ஃபேஸ்புக் பக்கத்தின் முகப்புப் படத்தைக்கூட, ஒருவர்கூட இதுவரை Like செய்யாத அளவுக்கு, காத்து வாங்குகிறது. இசையில் மட்டும் ஞானியான இளையராஜாவை வைத்து பஜனை பாடியும் ஒன்றும் தேறவில்லை.
இவர்கள் முன்வைக்கும் “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்திற்கு வரலாற்று ரீதியாக ஏதேனும் அர்த்தம் உள்ளதா? பாரதம் என்ற பெயரில் ஒரு துணைக்கண்டமே, ஒரே நாடாக இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் தான் உண்டா? எதுவுமே கிடையாது. கிமு ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பழமையான “ஹதிகும்பா கல்வெட்டில்”, “பாரத வர்ஷா” என்பது மகத நாட்டுக்கு மேற்கே, கங்கை கரையில் அமைந்திருந்த, ஒரு சிறிய பகுதியாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. புராணங்களில் கூறப்பட்டுள்ள பாரதப் பெயர் சார்ந்த கட்டுக் கதைகள் எல்லாம், உலக அரங்கில் எடுபடாது.
ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்ய பார்த்தார்கள் (அதுவும் தமிழ்நாட்டில்); எந்த பயனும் அவர்களுக்கு கிட்டவில்லை. ராமர் பாலத்தை வைத்து முயன்று பார்த்தார்கள்; நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. வைணவத்தை கையில் எடுப்பதால் தான் வெற்றி பெற முடியவில்லையோ என்று யோசித்தார்கள். தமிழர்கள் அதிகம் வழிபடும் கடவுள் முருகனாயிற்றே! முருகனை வைத்து முயற்சி செய்து பார்க்கலாமே! என்று வேல் எடுத்து ஆடினார்கள்; டெபாசிட் தொகை கூட கிடைக்கவில்லை. இப்போது, தமிழ்நாட்டில் சைவர்கள் பெரும்பான்மை என்பதால், சிவனை கையில் எடுத்து காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இணைப்பை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.
“காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து சென்ற மாணவர்கள் அனைவருக்கும் காவித் துண்டு வழங்கப் பட்டுள்ளது. பாரதியார் காசியில் இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்த போது தான் மீசையை முறுக்க ஆரம்பித்தார் என்கிறார் பிரதமர். இதனால் காசிக்குப் பெருமை என்றால் வெள்ளையர்களுக்கு பயந்து பாரதியார் புதுச்சேரியில் பதுங்கி இருந்ததும் புதுச்சேரிக்கு பெருமை தானே! பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டே மோடி அறிவித்தார்; இப்போது காசி தமிழ் சங்கமத்தில் மீண்டும் இதனை அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மீண்டும் இதையே அறிவிப்பார்; நடைமுறைக்கு வருமா என்பது தெரியாது. இந்த வெற்று அறிவிப்பையே பெருமைக்குரிய விஷயமாக தமிழக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழ் மொழியை 130 கோடி இந்தியர்களும் காப்பாற்ற வேண்டும் என்கிறார் பிரதமர். யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதை சொல்ல மறந்து விட்டார். 2014இல் இருந்து இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, எட்டாவது அட்டவணையில் இருக்கக்கூடிய 22 மொழிகளையும், ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்காதது ஏன்? ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வுகளை, அந்தந்த மாநில மொழிகளில் நடத்துவதற்கு, இன்றளவும் மிகப்பெரிய போராட்டங்களை நாம் நடத்த வேண்டி இருப்பது ஏன்? உதட்டளவில் பாஜகவினர் பேசும் தமிழ் மொழியுரிமை என்பதைக் கண்டு மயங்க, தமிழர்கள் அரசியல் அறிவற்றவர்கள் இல்லை. “காசி தமிழ் சங்கமம்” ஒரு மாதம் நடைபெற இருப்பதால், பல விஷமத்தனமான கருத்துக்களை இந்த தொடர் நிகழ்வுகளின் மூலமாக அவர்கள் நிச்சயமாக பரப்ப முயல்வார்கள். அவர்கள் என்னென்ன கருத்துக்களை விதைக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து அதற்குரிய எதிர்வினையை ஆற்றுவது நம்முடைய கடமையாகும்!
- ம.கி.எட்வின் பிரபாகரன்