இந்திய வல்லரசின் 13 பத விளையாட்டு

தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் மாறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவேந்தும் இந்நேரத்தில் இதை எழுதுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகான இந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் நீதிக்கான போராட்டத்தில் ஈட்டியுள்ள வெற்றிகளையும் அடைந்துள்ள தோல்விகளையும் கணக்கிட்டு அடுத்தடுத்த பணிகளுக்குத் திட்டமிட வேண்டியுள்ளது.

ஈழத் தமிழர்களும் சரி, இந்தியத் தமிழர்களும் சரி, நீதிக்கான போராட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதில் இந்தியா ஒரு முகன்மைக் காரணி என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

‘நாங்கள் இந்தியாவைத்தான் நம்பியிருக்கின்றோம்” என்று சில ஈழத் தமிழர்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

‘புவிசார் அரசியல் நோக்கில் சீனத்தை எதிர்க்க இந்தியா ஈழத் தமிழ் மக்களை ஆதரிக்க வேண்டும்” என்றும் சொல்லப்படுகிறது. இவ்வகையில் இந்தியாவுக்கு அயலுறவுக் கொள்கை பற்றிப் பாடம் எடுப்போரும் உள்ளனர்.rajapakse and modi 375நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு இந்துமதச் சார்புடையதாக இருப்பதால், ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதை மனத்திற்கொண்டு அவர்களுக்கு ஆதரவு தரும் என்று எதிர்பார்த்து மோதியின் மனங்குளிரப் பேசுவோரும் உள்ளனர்.

இந்திய வல்லரசைப் பொறுத்த வரை தமிழர்களின் இந்த நம்பிக்கைகளைத் தனது புவிசார் அரசியலுக்கு மூல முதலாகப் பயன்படுத்திக் கொள்வதில் குறியாக உள்ளது. இலங்கை என்னும் சதுரங்கப் பலகையில் தமிழ்த் தலைவர்களைப் பகடைகளாக நகர்த்தி வருகிறது.

சென்ற ஆண்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மாநாடு நடத்தி, இனவழிப்புக்கு நீதி காணும் போராட்டத்தில் இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழக மக்கள் செய்ய வேண்டியது என்ன? என்பதையெல்லாம் தெளிவான தீர்மானங்களாக வரையறுத்தோம்.

அடுத்த சில நாளில் நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் போன்ற ஈழ ஆதரவுப் பாரம்பரியம் கொண்ட தலைவர்கள் முள்ளிவாய்க்கால் சுடரேந்தும் நிகழ்ச்சியில் பாசக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் கலந்து கொண்டு நரேந்திர மோதிக்கும் அண்ணாமலைக்கும் பாராட்டுத் தெரிவித்தார்கள். இதை வன்மையாக எதிர்த்த நான் ‘மோதிக்கு முதுகு சொறிந்தால் தமிழீழம் மலர்ந்து விடாது” என்று ஒரு செவ்வியில் சொல்லியிருந்தேன்.

இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவி ஈழத்துக்கு ஏதாவது (?) செய்ய முடியும் என்ற கருத்தைப் பரப்பி வரும் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என்றே தமிழீழ ஆதரவு முற்போக்காளர்கள் கேலி செய்து வருகின்றனர். அவரும் ‘அது பற்றிக் கவலை இல்லை, நான் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன்.” என்று கூறி விட்டார். இந்துத்துவ ஆளும் கும்பலை நயந்து கொள்ளும் பொருட்டு அவரும், அவரைப் போலவே காந்தளகம் சச்சிதானந்தன் போன்றவர்களும் இஸ்லாமிய வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளையும் சேர்த்து அகண்ட பாரதம் அமைப்பது ஆர்.எஸ்.எஸ்-பாசக திட்டம். இந்தியாவில் போலவே இலங்கை, மியான்மர் போன்ற அண்டை நாடுகளிலும் அது இஸ்லாமியரை நசுக்கத் திட்டமிடுகிறது. அதற்குக் காசி அனந்தன் போன்றவர்களுக்கு ‘ஈழ” ஆசை காட்டி இந்துத் தமிழர்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறது. பாசக ஆதரவோடு தமிழீழம் அமையும் எனக் கொண்டாலும் அது காவித் தமிழீழமாகவே இருக்கும். இந்தப் பின்னணியில் தான் நான் சொன்னேன்: ‘தமிழீழம் மலரும் அது காவித் தமிழீழமாக இருக்காது. சிவப்புத் தமிழீழமாகவே இருக்கும்.”

முள்ளிவாய்க்கால் சுடரேந்தும் அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை என்ன பேசினார் தெரியுமா? ‘2009 இல் நரேந்திர மோதி பிரதமராக இருந்திருந்தால் இது (முள்ளிவாய்க்கால் கொடுமை) நிகந்திருக்காது”.

மோதி அப்போது இந்தியத் தலைமையமைச்சராக இல்லை. ஆனால் குசாராத் முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சராக அவர் முள்ளிவாய்க்கல் இனவழிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டாரா? அவர் சார்ந்த பாரதிய சனதா கட்சி முள்ளிவாய்க்கால் இனக்கொலையைக் கண்டித்ததா? அப்போதைய காங்கிரஸ் அரசு சிறிலங்;காவின் சிங்கள அரசுக்கு ஆய்தங்களும் ஆதரவும் வழங்கியதை எதிர்க்கட்சியான பாசக கண்டித்ததா?

2009 தொடங்கி இன்று வரை ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் ஏமாற்று அணுகு முறையில் - தமிழ் மக்களின் ஈடுசெய் நீதிக்கோரிக்கையை மறுக்கும் அணுகு முறையில் - மன்மோகன் சிங்குக்கும் நரேந்திர மோதிக்கும் என்ன வேறுபாடு? தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு பொதுவாக்கெடுப்பு ஆகிய பொதுவான தமிழர் கோரிக்கைகளை மறுப்பதில் காங்கிரசுக்கு பாசக-வுக்கும் என்ன வேறுபாடு? 13 ஆம் திருத்தச் சட்டம் என்னும் கதைக்குதவாத திட்டத்தைத் தமிழர்கள் மீது திணிக்க முற்படுவதில் முந்தைய அரசுக்கும் இன்றைய அரசுக்கும் என்ன வேறுபாடு?

2013 ஆம் ஆண்டு அக்டோபரில் கொழும்பில் நடைபெறவிருந்த பொது நலவாய (காமன்வெல்த்) உச்சி மாநாட்டுக்கு இந்தியத் தலைமையமைச்சர் செல்லக்கூடாது எனக் கோரி காலவரையற்ற பட்டினிப் போர் தொடுத்தேன். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எமது போராட்டத்தை ஆதரித்த போது கொழும்பு மாநாட்டை மன்மோகன் சிங் புறக்கணிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டவர் பாசக அனைத்திந்தியத் தலைவர்.

ஒரு கேள்விக்கு அண்ணாமலை விடை சொல்லட்டும் :

2009 முள்ளிவாய்க்காலில் நடந்ததை மோதியால் தடுத்திருக்க முடியுமா ? என்ற இறந்த காலம் தொடர்பான வினா கிடக்கட்டும். அன்று நடந்தது இனக்கொலை தான் என்பதை இப்போதாவது மோதியும் அண்ணாமலையும் அறிந்தேற்பார்களா? இன்றைய பன்னாட்டரங்கில் ஓர் அரசு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை ஆதரிப்பதாக இருந்தால் அதற்கான முதல் படியே தமிழினவழிப்பை அறிந்தேற்பதுதான் அங்கீகரிப்பதுதான்.

ஆனால் அண்ணாமலை அந்தக் கூட்டத்திலேயே சொல்கிறார் : என்னால் சில சொற்களை உச்சரிக்க முடியாது என்று. இனவழிப்பு என்று தன் வாயால் சொல்ல முடியாதவரை ஏன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைக்க வேண்டும்? அவர் ஏன் அங்கு வந்து சுடர் ஏற்ற வேண்டும்? தமிழ்த் தலைவர்கள் அவரையும் அவரின் தலைவரையும் ஏன் ஏன் பாராட்;ட வேண்டும் ? தமிழீழ மக்கள் இனவழிப்புக்கு ஆளானவர்கள், இன்றளவும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் இன்றைய போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டம். இனவழிப்புக் குற்றம் புரிந்த சிங்கள அரசியல் தலைவர்களும், படைத் தலைவர்களும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றப்பட வேண்டும். ஆனால் இது மட்டும் போதாது. இறுதி நோக்கில் இனவழிப்பு என்பது சிறிலங்கா எனப்படும் சிங்களப் பேரினவாத அரசின் குற்றம். சிறிலங்கா கலைக்கப்படுவதே முறையானஅரசியல் நீதியாக நிறைவுபெறும்.

தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற வகையில் இயல்பிலேயே இறைமைக்கு உரிமை படைத்தவர்கள். இனவழிப்புக்கு ஆளான மக்கள் என்ற வகையில் இறைமைக்கான சிறப்புரிமையும் அவர்களைச் சாரும். யூதர்கள் ஒரு தேசமாக மாட்டார்கள் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் போர்க் காலத்திலும் பாரிய இனவழிப்பு ஆளானவர்கள் என்பதால் அவர்கள் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை ஏற்று இசுரேல் அமைத்துத் தரப்பட்டது. இசுரேல் அந்த இறைமையைப் பாலத்தீனர்களுக்கும் பிற அராபியர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தி வருகிறது.

தமிழீழத்தை இசுரேலுடன் ஒப்பிட்டு, அமெரிக்க வல்லரசுக்கு இசுரேல் போல் இந்திய வல்லரசுக்கு ஈழம் பயன்படும் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அப்படித்தான் ஈழம் பயன்படும் என்றால் இந்தியாவில் ஓர் ஒடுக்குண்ட தேசம் என்ற வகையில் தமிழர்களாகிய நாம் அதை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்ற கௌ;வி எழத்தான் செய்யும். விடுதலை பெற்ற தமிழீழம் ஒரு போதும் இந்தியாவுக்கோ, வேறு வல்லரசுக்கோ அடியாளாக இருக்காது, அது முற்போக்கான கொள்கைகளைக் கடைப்பிடித்துக் குறிப்பாகத் தெற்காசியாவில் பிற தேசங்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அமையும் என்பதற்கு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானமும், ‘சோசலித் தமிழீழம்’ என்ற விடுதலைப் புலிகளின் வேலைத்திட்டமும், நாடு கடந்த தமிழீழ அரசாங்க முன் முயற்சியில் பறை சாற்றப்பட்டுள்ள விடுமைப் பட்டயமும் சான்று பகர்கின்றன. இப்படியொரு தேசம் மலர்வதை அமெரிக்க, இந்திய, சீன, வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் வல்லரசுகளின் விருப்பமே வரலாற்றைத் தீர்மானித்து விடுவதில்லை.

ஈழம் இந்தியாவின் எந்த நியாயமான நலனுக்கும் எதிரானதல்ல. இந்தியா ஈழத்தை எதிர்க்கவும், நீதிக்கான ஈழத் தமிழர் பேராட்டத்தை மறுக்கவும், நியாயமான காரணம் ஏதுமில்லை. நீதிக்கான போராட்டத்தில் இந்தியா தமிழ் மக்களுக்கு உதவ விரும்பினால் அவர்களின் மூன்று முதன்மைக் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும்.

1. ஈழத் தமிழருக்கு எதிராக இனவழிப்புப் போர் நடந்துள்ளது என்பதை அறிந்தேற்று, இனவழிப்பு, போர்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் ஆகிய பன்னாட்டுக் குற்றம் இழைத்தவர்களை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்ற ஆதரவளிக்க வேண்டும்.

2. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான பொறுப்புக் கூறல் என்ற வகையில் வந்துள்ள ஐநா அறிக்கைகளின் தொடர்ச்சியாகத் தற்சார்பான பன்னாட்டுக் குற்றப்புலனாய்வு செய்ய ஆதரவளிக்க வேண்டும்.

3. தமிழீழத்தின் வருங்காலம் குறித்துத் தீர்மானிக்கத் தாயகத்திலும் புலம் பெயர் தமிழுலகிலும் ஈழத் தமிழர்களிடையே ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஆதரவளிக்க வேண்டும்.

இந்தப் பொதுவான கோரிக்கைகளை ஆதரிக்காமல் 13ம் திருத்தச் சட்டம் என்ற பாட்டையே இந்தியா திரும்பத்; திரும்பப் பாடி வருகிறது. இது தவிர வேறு எதுவும் தமிழர்களின் கோரிக்கைகளாக இருக்க கூடாது எனவும் வலியுறுத்தி வருகிறது.

13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு 36 ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டது என்று பொருள்.

36 ஆண்டுகளுக்கு முன் இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையின் தொடர்ச்சியான 13ம் திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட நேரத்தில் அன்றைய இந்திய பிரதமர் இராசீவ் காந்திக்கு ஈழத் தேசிய அரசியல் கட்சிகள் எழுதிய கடிதத்தில் 13ம் திருத்தச் சட்டத்தை கேலிக் கூத்து என்று சாடின.

13ஆம் திருத்தச் சட்டம் குறித்து ஏமாற்றம் தெரிவிக்கும் வகையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம், செயலாளர் அமிர்தலிங்கம், துணைத்தலைவர் சம்பந்தன் ஆகிய மூவரும் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவ் காந்திக்கு 1987 அக்டோபர் 28ஆம் நாள் எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணம். இந்தக் கடிதத்தில் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்.

‘இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யவில்லை. தமிழ் மக்கள் சந்தித்துள்ள உயிரிழப்பு, இன்னல்கள், துயரங்களுக்கு எவ்விதத்தும் ஈடாகவும் இல்லை”.

சுருங்கச் சொல்லின் 13ஆம் திருத்தச் சட்டம் ஒரு கேலிக்கூத்து! ஒரு மோசடி! இந்தக் கேலிக் கூத்தைத்தான் இந்த மோசடியைத் தான் இப்போது முழுமையாகச் செயலாக்கச் சொல்;லித் தமிழ் அரசியல் தலைவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு சிங்கள அரசிடம் பேரம் பேசுகின்றது இந்திய வல்லரசு.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கூட இந்திய அரசிடமிருந்து வரவில்லையே, ஏன்? ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தின் படி வலியுறுத்த வேண்டிய கோரிக்கையை வாய்மொழியாகக் கூட பேசாமல் மோசடியான 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஈழத் தமிழர்கள் தலையில் கட்ட முயலும் இந்திய அரசின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 13 ஆம் திருத்தச் சட்டம் எவ்வகையிலும் தமிழர்களின் தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, சிங்களத்தில் கட்டமைப்பியல் இனவழிப்புக்குத் துணை செய்வதாகவும் அமையும் என்பது ஆய்ந்து தெளிந்த முடிவாகும்.

ஈழச் தமிழர் தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு 13 ஆவது திருத்தச் சட்டம் தான் என்பதால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ்த் தலைவர்களும் உள்ளனர், ஆய்வு அறிஞர்களும் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்ட ஈழத் தமிழர் இனவழிப்பு குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன ? இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் தமிழர் போராட்டம் குறித்து இந்தியாவின் கொள்ளை நிலைப்பாடு என்ன? உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் நிகழ்துள்ளன என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கும் மூன்று ஐநா அறிக்கைகள் (தாருஸ்மன் சார்லஸ் பெற்றி, மனிதரிமை ஆணையர் அலுவலகத்தின் (ழுஐளுடு) அறிக்கை) குறித்து இந்தியாவின் கொள்ளை நிலைப்பாடு என்ன? இந்தக் குற்றச்சாட்டுகள் மீது புலனாய்வு செய்ய உள்நாட்டுப் பொறிமுறையா? பன்னாட்டு பொறிமுறையா? கலப்புப் பொறிமுறையா? என்ற வினாவில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன ?

ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கையும் இந்தியாவும் உள்ளிட்ட கூட்டு முன்மொழிவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 30ஃ1 திர்மானம் குறித்தும் அதிலிருந்து சிறிலங்கா ஓடிப்போளது குறித்தும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் இந்தியா தொடர்ச்சியாகவும் முன்பின் முரணின்றியும் கடைப்பிடித்துள்ள கொள்கை நிலைப்பாடு என்ன?

ஈழத் தமிழினம் கோருவது இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி, குற்றவியல் நீதியும் அரசியல் நீதியும்! இந்தியா ஏனோதானோ என்று முன்வைப்பது தமிழர்களால் மறுதலிக்கப்பட்ட 13 ஆம் திருத்தம்! இது மோசடியான கேலிக்கூத்து என்று கருநிலையிலேயே தலைவர்கள் சிவசிதம்பரமும் அமர்தலிங்கமும் சம்பந்தர் ஐயாவும் தோலுரித்துக் காட்டிய பின் அதையே வரலாற்றின் குப்பைத் தொடடியிலிருந்து தூக்கி வந்து சீவி சிங்காரித்து அம்பலத்தில் ஆடவைக்க இந்தியா செய்யும் சூழ்ச்சிக்குப் பலியாகலாமா தமிழர்கள்?

பரமபத விளையாட்டு போல் இது இந்தியாவின் 13 பத விளையாட்டு ! தமிழனம் போரிலே தோற்றபின் வெற்றியாளரின் நீதிக்குத்தான் பணிந்து போக வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அரசுக்கு அடங்கிப் போகச் சொல்லும் இரண்டகக் கும்பல் ஒரு பக்கம் ! இந்தியாவின் விரிவாதிக்க அரசியலுக்குத் துணைநின்று அது ஈவதை இரந்து பெற்றுக்கொள்ள ஓடேந்தி நிற்கும் இரவலர் கும்பல் மறுபக்கம் ! இந்த இரண்டகர்களையும் இரவலர்களையும் எதிர்த்துப் போராடி வெல்வதுதான் விடுமை வாழ்வுக்கு வழி !

இந்தியாவுக்கு என்ன வந்தது? அது ஏன் 13 ஆம் திருத்தத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? இந்திய வல்லரசின் புவிசார் அரசியல் அப்படி! சீனக் கொள்ளையருக்கும் இந்தியக் கொள்ளையருக்கும் இலங்கை என்னும் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வதில் போட்டி ! இலங்கை என்னும் சதுரங்கப் பலகையில் தமிழர்களைப் பகடைகளாக உருட்டுவது இந்தியாவின் உத்தி! அதற்காகத் தமிழீழ விடுதலையையும் ஏற்றுக் கொண்டு விடக் கூடாது! தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு! பன்னாட்டு நீதிப் பொறிமுறை! குற்றவாளிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றுவது! பொதுவாக்கெடுப்பு வழியிலான அரசியல் தீர்வு! இவற்றிவல் எதுவும் சிங்கள அரசை மிரட்டிக் கைக்கடக்கமாக வைத்துக் கொண்டே சீனச் செல்வாக்கைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாகத் தமிழர்களின் விடுமைப் பயிருக்கு இவையெல்லாம் நீர் பாய்ச்சுவாதி விடும். 13 ஆம் திருத்தம் வெறும் புழு! யாரையும் கடிக்காது. 13 ஆம் திருத்தம் தமிழ் மக்களின் எந்த உரிமையையும் மீட்டுக் கொடுக்காது. தமிழர் தாயகத்தின் மீதான வன்பறிப்பை (ஆக்கிரமிப்பை) முடிவுக்குக் கொண்டுவராது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்காது. சிறையில் அடைபட்டுள்ள போர்க் கைதிகளை விடுவிக்காது. தமிழ் நிலத்தின் சிங்கள பௌத்த மயமாக்கத்தைத் தடுக்காது. சிங்கள வன் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தாது.

13 ஆம் திருத்தத்துக்காக இந்தியக் குடுமி ஆடுவதேன்? இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை: முள்ளிவாய்க்காலுக்கு முன் நேர் இனவழிப்பக்குத் துணைபோன இந்திய வல்லரசு இப்போது தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் துணைபோய்க் கொண்டிருக்கிறது என்பதே! எச்சரிக்கை தமிழா!

- தியாகு

Pin It