பேரறிஞர் அண்ணா வழங்கிய மாநில சுயாட்சிக் கொள்கையின் முக்கியத்துவத்தைப் பிற மாநிலங்கள், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் உணரும் தருணம் வந்துவிட்டது. 15 வது நிதிக்குழுவுக்கு  நடுவண் அரசு வழங்கியுள்ள ஆய்வு வரம்பு இதனை உறுதி செய்துள்ளது.

15 வது நிதிக்குழு மூலம் வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்களின் நிதி ஆதாரத்தை முடக்கும் வகையில் நடுவண் அரசு செயல்படுவதைக் குறிப்பிட்டு, அதனால் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை விளக்கி பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும்  அனைத்துத் தென் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும், ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்களுக்கும்  தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து  கர்நாடக, ஆந்திர முதல்வர்களும்  நடுவண் அரசுக்கு ​எதிரான தங்களது நிலைப்பாட்டை விளக்கியுள்ளனர். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனும் தென்னிந்திய நிதி அமைச்சர்களின் கூட்டத்தினைக்  கூட்டியுள்ளார்.

மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்க, பிற மாநில முதல்வர்களை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதைக் காணும் போது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் காட்டிய, பயணித்த பாதைகளில் திராவிடச் சுடரை ஏந்தி எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பீடுநடை போடுகிறார் என்பதை வரலாற்றின் வாயிலாக நாம் உணர முடியும்.

பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு தமிழக முதல்வர் பொறுப்பினை ஏற்ற தலைவர் கலைஞர், முதல்முறையாக 1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைநகர் தில்லி சென்றார். அங்கே விமான நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தலைவரிடம் கேள்விக் கணைகளை தொடுத்தனர். “உங்களின் தில்லிப் பயண நோக்கம் என்ன?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, ”மாநிலங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் தில்லியில் குவிந்து கிடக்கின்றன. அதை மீட்டெடுப்பது தான் என்னுடைய பயண நோக்கம்” என்றார். மேலும், மைய-மாநில உறவுகள் தொடர்பாக ஆராய்ந்து, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்கள் எவை என்பதைக் கண்டறிய நிபுணர்கள் குழு ஒன்றினைத் தனது அரசு அமைக்கும் என்பதையும் பத்திரிக்கையாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்தார். பிறகு தமிழ்நாடு திரும்பிய கலைஞர், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜமன்னார் அவர்கள் தலைமையிலான மூவர் குழுவை அமைப்பதாகத் தமிழகச் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நினைவை அனுசரிக்கும் வகையில் 1970 ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற உயர்ந்த​ தத்துவத்தினை இந்தியாவுக்குத் தந்தார்.

அதனைத் தொடர்ந்து மாநில சுயாட்சிக் கொள்கையைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தினார் கலைஞர். தந்தை பெரியார், காயிதே மில்லத், அப்போதைய மேற்கு வங்க முதல்வர் அஜய் முகர்ஜி, பின்னாளில் குடியரசுத் தலைவரான பிரணப் முகர்ஜி, சோசியலிஸ்ட் தலைவர் அரங்கில் சிரிதரன், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற தலைவர்களும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

மாநில சுயாட்சி பற்றி நமது இனமானப் பேராசிரியர் கூறும்போது, ஒரு கடிகாரத்தின் முட்களில் மணிமுள் முதன்மையுடையது, எனினும், நிமிட முள்  பேரளவு இயங்கினால் தான் மணி முள் சிறிதளவு இயங்கும் என்பது முறை. அதைப்போலவே மாநில மக்களோடு நெருக்கமாக இருக்கும் மாநில அரசு பேரளவு இயங்க இடம் தந்து, நடுவண் அரசு அதற்கு இணக்கமாக அளவுடன் இயங்கும் நிலையே, மக்களாட்சியின் சிறந்த நெறி என்று கூறினார்.

அடுத்ததாக வி.பி.சிங் அவர்கள் பிரதமரான பிறகு மாநிலங்களுக்கிடையேயான குழு (Inter-state council) உருவாக்கப்பட்டது. அண்ணாவின் கனவை நினைவாக்க அயராது உழைக்கும் தலைவர் கலைஞர் ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த போது, 2007ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில், மாநில சுயாட்சி கொண்டு வர திமுக  அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு 2009ஆம் ஆண்டு கழகம் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழாக்களில் மாநில சுயாட்சி இலட்சியத்தை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம் என்று சூளுரைத்தார்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவரையும் தன் சிந்தையில் நிறுத்தி, அவர்கள் காட்டிய வழியில் ஓய்வறியாமல் உழைத்து, எதிர்க்கட்சித் தலைவராகத் தமது பணியினைத் திறம்பட ஆற்றிக்கொண்டிருக்கும் திமுக செயல் தலைவர் மாநில சுயாட்சிக்கான கொள்கைச் சுடரைத் தற்போது தமது கையில் ஏந்தியுள்ளார்.

stalin karunandhi 600“தி.மு.க அதன் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு​, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் எல்லைக்குள்ளாகவே சுருக்கிக் கொள்ள நினைக்கலாம். ஆனால் திமுக உணர்வு இந்திய யூனியனில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் கட்டாயம் சூழ்ந்து கொள்ளத்தான் போகிறது. மாநில சுயாட்சியும், அதிக அதிகாரம் கேட்கும் கோரிக்கையும் காலப் போக்கில் இளந்தலைமுறையினரையும், செயல் திறன் கொண்ட அரசியல் தலைவர்களின் சிந்தனையையும் கவரப்போவது நிச்சயம்.” என்று உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியை பிரபா ராஸ்டோகி ‘இந்திய அரசியல் கட்சிகள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளில் தி.மு.க.வைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களது கடிதம் பிற மாநில முதல்வர்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தையும், அதற்கு ஆதரவாக அவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் பார்க்கும்போது உத்தரப் பிரதேச பேராசிரியையின் கூற்று உண்மையாகிவிட்டதையே காட்டுகிறது.

சமீபத்தில், தி. மு. கழகம் நடத்திய ஈரோடு மண்டல மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக மாநில சுயாட்சிக் கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு பா. ஜ. க வின் கைப்பாவையாக உள்ள தற்போதைய அ.தி.மு.க அரசு மாநில உரிமைகளை அடகு வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் நடத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் 27 அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும் போது, மாவட்டங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு ஆளுநர் கொடுத்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததையடுத்து, ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பதை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் அல்லது தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வர வேண்டும். இல்லையென்றால் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாநில சுயாட்சிக் கொள்கைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து, போராட்டங்களை நடத்தும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பல மாநில முதல்வர்களையும், தலைவர்களையும் அழைத்து, 1970ல் தலைவர் கலைஞர் நடத்தியதைப் போல, தமிழகத்தில் மாநில சுயாட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்துவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.                      

Pin It