மாநில ஆளுநர் என்பவர் … ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஏகாதிபத்தியத்தின் கடைசிச் சின்னம். இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் நம்மால் அறுத்தெரிய முடியாத ஓர் அடிமைப் பந்தம். – - கு. ச. ஆனந்தன் (மலர்க மாநில சுயாட்சி, பக்கம் 161).
கடந்த 11.03.2022 அன்று, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில், தென்மண்டலத் துணைவேந்தர்கள் மாநாட்டினைத் தொடக்கி வைத்துப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.அன். ரவி, பா.ஜ.க.-வின் செய்தித் தொடர்பாளர் போலவும், மோடியின் ஊதுகுழலாகவும் பேசியிருக்கிறார். இந்தியா வளர்ச்சி அடையாததற்கு நேருவே காரணம் என்று மேடைதோறும் மோடி பாடி வரும் பாட்டைக் கோயம்புத்தூரில் இம்முறை மோடியின் சார்பாகப் பாடியிருக்கிறார் ஆளுநர்.
விடுதலைக்குப் பின்னர் 65 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்தவர்கள், ஆங்கிலேய அரசின் காலனிய மனப்பாங்கிலேயே செயல்பட்டதாகவும், அதன் காரணமாக சமச்சீரற்ற முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், மாநிலங்களுக்கிடையே சீரற்ற வளர்ச்சி ஏற்பட்டதாகவும் பேசியுள்ள ஆளுநர், 2014-இல் பதவியேற்ற பிரதமர் மோடி, பழைய பார்வையிலிருந்து விடுபட்டுப் புதிய பார்வையுடன் இந்தியாவை அணுகினார் என்றும் பேசியிருக்கிறார் ஆளுநர். மோடியின் திட்டங்களையெல்லாம் வானளாவப் புகழ்ந்துள்ளார்.
மேலும், பாரதம் என்ற பெயரால் அரசியலமைப்பில் சுட்டப்பெறும் இந்தியா, பழங்காலத்திலிருந்தே காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடாக இருந்தது என்றும், 1947-இல் இந்தியா என்பது உருவானதில்லை என்றும், ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் போல (United States of America) ஓர் ஒப்பந்தத்தினால் இந்தியா உருவாகவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இந்தியா, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்தக் கருத்தியலே இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காப்பாற்றும். இந்தியா ஒரு தேசமென்பதை, அத்தகைய கற்பிதத்தைத் தந்தை பெரியார் தொடர்ந்து மறுதலித்துள்ளார். திராவிட இயக்கமும் தொடர்ந்து இதைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இந்நிலையில், மீண்டும் மீண்டும் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்,ஒரே மொழி என்று பா.ஜ.க. பரிவாரங்கள் தொடர்ந்து பெசி வருவதில் பொருள் ஏதுமில்லை.
இந்தியா உண்மையான கூட்டாட்சியாக (Federation) இல்லை; மாநிலங்கள் மாநகராட்சிகளைப் போல நடத்தப்பெறுகின்றன; மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலமே இந்தியா உண்மையான கூட்டாட்சியாகத் திகழும்; அதற்குத் தேவையான திருத்தங்களை அரசியலமைப்பில் கொண்டு வர வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அது மட்டுமே, பல்வேறு மொழி, கலாச்சாரம் (Multi-linguistic, Multi-cultural) ஆகியவற்றைக் கொண்ட இந்தியா ஒன்றுபட்டு இருப்பதற்குத் துணை புரியும்.
இவையனைத்தையும் மறந்து விட்டு, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கருத்தை நமது மூளைக்குள் திணிப்பதை ஆளுநர் கைவிட வேண்டும்.
முதலமைச்சர் உள்ளிட்டவர்களைக் கொண்ட அமைச்சரவையின் அறிவுரையின் பேரிலேயே ஆளுநர் செயல்பட வேண்டும் என்கிறது அரசியலமைப்பு (Article 163 – There shall be a council of Ministers with the Chief Minister at the head to aid and advice the Governor in the exercise of his functions). எதற்கெடுத்தாலும் அரசியலமைப்பை மேற்கோள் காட்டும் ஆளுநர், இந்த
விதியைப் படித்தாரா என்பது நமது கேள்வி. நீட் விஷயத்தில், மக்கள் பிரதிநிதிகளின் ஒன்றுபட்ட குரலைப் புறந்தள்ளிய ஆளுநர் அரசியலமைப்பைப் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்.
பா. ஜ. க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களின் மூலம் தொடர்ந்து ஆட்சி நிர்வாகத்திற்கு இடையூறு செய்து வருகிறது ஒன்றிய அரசு. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வருவதும் ஆளுநர் Vs ஆளும் மாநில அரசுக்கிடையேயான மோதல்தான். இதனால்தான் ஆளுநர்களை ஒன்றிய அரசின் கங்காணி என்று தன்னுடைய ‘மலர்க மாநில சுயாட்சி’ நூலில் கடுமையாக விமர்சித்துள்ளார் கு. ச. ஆனந்தன்.
ஆனால், தமிழக மண்ணில் பா.ஜ.க.வின் நரித்தனங்கள் எடுபடாது. ‘‘மத்திய அரசோடு கருத்து மாறுபடக் காங்கிரசல்லாத அரசுகளுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஏதோ ஒற்றர்களை வைத்திருப்பது போல, கவர்னர்களை வைத்திருப்பது ஆட்சேபிக்கத்தக்கதாகும். தாம் மட்டுமே தேச பக்தர்கள் என்றும், அரசியல் சட்டத்தைக் காப்பது நமக்கு மட்டுமே உள்ள கடன் என்றும் கவர்னர்கள் கருதக்கூடாது” என்று 1969-லேயே நாடாளுமன்றத்தில் முழங்கிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்*. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக ஆளுநர் பேசி வருவதைத் தமிழ்நாடும், தி.மு.க.-வும் ஒருநாளும் ஏற்காது.
*(தி.மு.க.-வின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கந்தப்பன், 10.03.1969-இல் நாடாளுமன்றத்தில் பேசியது; நெஞ்சுக்கு நீதி, இரண்டாம் பாகம், பக்கம் 67).
- வெற்றிச்செல்வன்