dronacharya awardஇன்றைய முக்கிய செய்தி!!!

"கடந்த நூற்றாண்டிற்கான ‘பார்ப்பனிய மத நல்லிணக்க விருது’ நாதுராம் கோட்சேவிற்கு வழங்கப்படுகிறது. தேசப் பிதாவான காந்தியை சுட்டுக் கொன்றவனுக்கு மதநல்லிணக்க விருது வழங்குவதா? அதுவும் மத நல்லிணக்கத்திற்கு நேர் எதிரான பார்ப்பனியத்தின் பெயரில் விருது வழங்குவதா? என்று எதிர்க்கட்சிகள் இந்தியா முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்”.

முழு விவரத்திற்கு மேலும் வாசிக்கவும். 

மத்திய பிரதேச மாநிலத்தில், குஜராத் - மத்திய பிரதேச மாநில எல்லையில் இருக்கும் மாவட்டம் அலிராஜ்பூர். இம்மாவட்டத்தில் பில்லாலா எனும் பழங்குடி மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். மலைப்பகுதியில் வாழும் இவர்களிடம் பொதுவாகக் காணப்படும் கருவி "வில் அம்பு". ஆனால் பொதுவாக எங்கும் காணப்படாத ஒரு முறையை வைத்து இவர்கள் அம்பை எய்கிறார்கள். அப்படி என்ன பெரிய சிறப்பு இருந்துவிடப் போகிறது? கட்டைவிரலை பயன்படுத்தாமலா அம்பு எய்கிறார்கள்?! ஆம்! அப்படித்தான்.

என்றோ ஒருநாள் சடங்காக இதை அவர்கள் செய்யவில்லை. கையில் வில்லை எடுக்கும்போதெல்லாம் கட்டைவிரலை அனிச்சையாக மறந்து விடுகின்றனர். இதற்கான காரணம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மகாபாரத கதையில் உள்ள நயவஞ்சக செயலில் உள்ளது. அன்று எரியூட்டப்பட்ட காடு கிட்டத்தட்ட அழிந்து விட்டாலும் இன்றும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தச் செயலைப் புரிந்து கொள்வதற்கு முன் கலாச்சாரத்தை பற்றி ஒருமுறை பார்த்துவிடுவோம். 

எதிர்ப்புக் குறியீடு:

கலாச்சாரம் என்பது மொழி, குறியீடு, விழுமியம் என்னும் பல கூறுகளை உள்ளடக்கியது. மனித சமுதாயத்தில் மட்டுமே காணப்படும் மொழி மற்றும் குறியீடுகளால் தான் விழுமியங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லப்படுகிறது. மனிதர்களிடையே காணப்படும் மொழி ஆளுமை பிற உயிரினங்களிடம் இல்லாததால்தான் அவற்றால் ஒரு கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் உண்டாக்க முடியவில்லை.

உதாரணத்திற்கு மொழியின் மூலமே ஒரு குழந்தைக்கு யாரை எப்படி அழைக்க வேண்டும் என்று உறவுமுறை (kinship) கற்றுத்தரப்படுகிறது. மரபணு மூலம் தெரிந்து கொள்வதைக் காட்டிலும் மனிதர்கள் மொழி மற்றும் குறியீடுகளால் நிரப்பப்பட்ட சமுதாயத்தால் தான் அதிகம் கற்றுக் கொள்கின்றனர்.

ஒரு பொருளை அல்லது சிந்தனையை உணர்த்தும் எழுத்து அல்லது அடையாளம் குறியீடு எனப்படும். ஒவ்வொரு கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு குறியீட்டின் அர்த்தம் மாறுபடலாம். பெரியார் திடலில் சாதி ஒழிப்பை குறிக்கும் அதே கருப்பு நிறம், சபரிமலையில் பக்தியை குறிக்கிறது.

பார்ப்பனர்கள் அணியும் பூணூல், தாங்கள் அனைவருக்கும் மேலானவர்கள் என்ற சிந்தனையின் குறியீடு. ஆனால் இதே பூணூலை இடைநிலை சாதியினர் அணிந்தால் அது சமஸ்கிருதமயமாதலை மட்டுமே குறிக்கும். ஏனென்றால் இடைநிலை சாதியினர் பூணூல் அணிவதை பார்ப்பனர்கள் அங்கீகரிக்கவில்லை. இதுபோல பல குறியீடுகளால் மானுட சமுதாயம் நிரம்பியுள்ளது. நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் இந்த மின் இதழின் முகப்பில் இருக்கும் தடி கூட பெரியாரின் கொள்கையை உணர்த்தும் குறியீடு தான்.

மனிதர்கள் விலங்குகளிடம் இருந்து மாறுபட்டு உயர் பாலூட்டிகளாக பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு உடற்கூறு மாற்றமும் (anatomical changes) முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாற்றங்கள் மூலம்தான் இன்ன பிற பாலூட்டிகளிடம் அதிகமாக காணமுடியாத பல அம்சங்கள் உயர் பாலூட்டிகளிடம் (primate) காணமுடிகிறது.

அப்படியான ஒரு அம்சம்தான் "துல்லிய பிடிப்பு". இதை ஆங்கிலத்தில் Precision grip என்று மானுடவியலாளர்கள் கூறுவர். கட்டை விரலைக் கொண்டு மற்ற நான்கு விரல்களை எளிதாக பல கோணங்களில் தொடும் திறன் மூலம் துல்லிய பிடிப்பு தன்மையை மனிதன் பெறுகிறான்.

இந்த தன்மையைக் கொண்டே மனிதனால் ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவே எழுதுகோலை வைத்துக்கொண்டு எழுத முடிகிறது. ஆதி கற்காலத்தில் மனிதன் கற்களை கூர்மையாக மாற்றி வேட்டையாடியது இந்த தன்மையால் தான். பின்னர் வில் அம்பு மூலம் விலங்குகளுக்கு அருகில் செல்லாமல் வேட்டையாடி மனித சமுதாயத்தை பெருக்கியதும் இந்த தன்மையால் தான். 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கட்டைவிரலை ஒரு பழங்குடி இனம் வில்லை ஏந்தும் போது பயன்படுத்தாமல் இருப்பதும் கூட ஒரு குறியீடு தான். இந்த நாட்டின் பெரும் காப்பியமாக கருதப்படும் மகாபாரதத்தில் வரும் துரோணரின் பல நயவஞ்சக செயல்களுக்கு எதிரான ஒற்றைக் குறியீடு இது.

ஏகலைவனை தம்முடைய முன்னோராகக் கருதும் இப் பழங்குடியினர் தங்களுடைய முன்னோரின் கட்டைவிரலை தட்சணையாகக் கேட்ட துரோணரை முழுவதுமாக வெறுக்கின்றனர். துரோணருக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் இந்த குறியீடு, அதே வேளையில் ஏகலைவனுக்கு மரியாதை செலுத்துகிறது.

தங்களுடைய அடுத்த தலைமுறைக்கும் இந்த குறியீட்டை இவர்கள் கொண்டு செல்கின்றனர். ஏகலைவனின் கட்டைவிரல் சூழ்ச்சி மூலம் பறிக்கப்பட்டதால் தாங்களும் இனி அதை வில்லை ஏந்தும் போது பயன்படுத்தப் போவதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இந்தப் பழக்கத்தை விடுவது என்பதை அவர்கள் கனவிலும் நடக்காத செயல் என்று கூறுகின்றனர். கட்டைவிரல் ஒன்றுதான் ஆனால் அது இருவேறு காலங்களில் இருவேறு குறியீடாக மாறியுள்ளது. அன்று வர்ணாஸ்ரம தர்மத்திற்கு உட்பட்டு வெட்டுண்ட கட்டைவிரல் இன்று அதே சமூகத்திலிருந்து எதிர்ப்புக் குரலாக ஒலிக்கிறது. 

துரோணரின் பெயரில் விருது - சரிதானா?

"தன் மனதிற்கு மிகவும் நெருங்கிய சீடனான அர்ஜுனனை விட சிறந்த வில்லாளனாக ஏகலைவன் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக, தான் கற்றுக் கொடுக்காத ஒரு கலைக்கு தட்சணையாக அதுவும் கட்டைவிரலை கேட்பதற்கு துரோணருக்கு என்ன உரிமை உள்ளது? இது துரோணரின் வெட்கக்கேடான செயலாகும்" என்று உச்ச நீதிமன்றம் 2011-இல் தன்னுடைய தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு உச்சநீதிமன்றம் முதல் மக்கள் மன்றம் வரை பல இடங்களில் அவப்பெயர் வாங்கியுள்ள துரோணரின் பெயரில் வருடா வருடம் விருது வழங்குவது சரிதானா?

தாம் செய்யாத வினைக்கு உரிமை கோர முடியாது என்பது இயற்கை நீதி. ஆனால் இயற்கை நீதியை மீறுவது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்லவே. இந்த நாட்டில் இல்லாத பட்டப்படிப்பின் பெயரில் எம் ஏ முழு அரசியல் அறிவியல் ( MA Entire Political science) என்று சான்றிதழ் அச்சிட்டு மிகப்பெரிய பதவியில் அமர்ந்து கொண்டிருக்கும் ஜென்மமும், கட்டித் தராத கல்லூரிக்கு தகுதித் தேர்வு வைத்த அரசும் இன்றும் இருக்கும் இடம் அல்லவா இது?

அதனால் தான் வர்ண பாகுபாடு பார்க்கும் பயிற்சியாளரின் பெயரிலும் விருது, இந்தப் பாகுபாட்டின் மூலம் பலனடைந்த அர்ஜுனனின் பெயரிலும் விருது வழங்குகிறது மத்திய அரசு. (ஏகலைவனின் பெயரில் விருது வழங்கப்படுவதாக நீங்கள் எங்கேனும் படித்து இருக்கலாம். ஆனால் அந்த விருது சில மாநில அரசுகளால் மட்டுமே வழங்கப்படுகிறது). 

வாழும் துரோணர்கள்:

எவ்வாறு துரோணர் பாகுபாடு பார்த்து கலையை கற்றுத் தந்தாரோ அப்படியே துரோணாச்சாரியார் விருதுகளும் பாகுபாடுடனே வழங்கப்படுகிறது. 2020இல் வழங்கப்பட்ட 8 (வாழ்நாள்) துரோணாச்சாரியார் விருதுகளில் ஒரு விருது கூட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விருது தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்திய பயிற்சியாளர்களுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இப்படி ஆரம்பம் முதல் இன்று வரை வர்ண, வர்க்க, இனம் மற்றும் பால் பாகுபாடு பார்த்து வழங்கப்படும் இந்த விருதை எவ்வித தயக்கமும் இன்றி எதிர்க்க வேண்டும். துரோணரின் பெயரில் விருது தொடர்ந்து வழங்கப்பட்டால் அது இந்த சமுதாயத்திற்கு எவ்வித சமிக்ஞையை அனுப்பும்? பயிற்சியாளராக இருந்து விட்டால், அவர் சொல்லும் எதற்கும் பயிற்சி பெறுபவர் உட்பட வேண்டும் என்பது போலல்லவா இருக்கிறது? விளையாட்டுத் துறையில் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த விருதின் பெயர் மாற்றம் மிகவும் அவசியமாகிறது.

விருப்பு வெறுப்புடன் செயல்படுபவர்கள் எவ்வாறு சிறந்த பயிற்சியாளருக்கான விருதை பெற முடியும்? துரோணரே சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு தகுதி பெறாதவராக இருக்கும் வேளையில் எவ்வாறு அவர் பெயரில் விருது வழங்குவது ஏற்புடையதாகும்? சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது, அரசியலமைப்பிற்கு எதிரானதாகும். 

நாதுராம் கோட்சேகளுக்கு மதநல்லிணக்க விருது தருவது தவறு தான். ஆனால் அதைவிட பெரிய அடிப்படைத் தவறு பார்ப்பனியத்தின் பெயரில் மதநல்லிணக்க விருது வழங்குவது. பார்ப்பனியத்தை ஒழித்துவிட்டால் மத நல்லிணக்கம் மேம்படும்.

இதைப்போல் தான் தவறானவர்களுக்கு துரோணாச்சாரியார் விருது வழங்குவதை விமர்சிப்பதை விட துரோணாச்சாரியாரின் பெயரில் விருது வழங்குவதை முதலில் எதிர்க்க வேண்டும். ஏனென்றால் துரோணரின் பெயரில் விருது வாங்குபவர்கள் அனிதாவிற்கா பயிற்சி அளிப்பார்கள்? 

ஏகலைவன் காலம் தொட்டு, ஒருவரின் திறமை எதில் உள்ளதோ அதை அவர்களைக் காட்டிலும் சரியாகத் தெரிந்து கொண்டு சூழ்ச்சி செய்து அந்தத் திறமையை பறிப்பது பார்ப்பனியத்தின் அம்சம், இன்றும் அதே வேலையைதான் புது புது யுக்திகளைக் கையாண்டு செய்து வருகிறது.

இன்று வட இந்தியாவைக் காட்டிலும் பல பாதைகளில் தமிழகம் முன்னேறி வருவதற்கான காரணம் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப்பட்ட கல்வி. இந்தக் கல்வியை நம்மிடமிருந்து பறிக்கும் விதமாக புதிய நுழைவுத் தேர்வுகளை நம்மிடையே திணித்து வருகிறது மத்திய அரசு. அன்று விரலை விட்டுக் கொடுத்தாற் போல் இன்று கல்வியை விட்டுக்கொடுத்தால் மீண்டும் எழுவதற்குள் பல தலைமுறைகள் சுய மரியாதை இழந்து அவமானங்களை சந்திக்க நேரிடும்.

இத்தகைய கல்வியை அளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் ஏகலைவனின் சகோதர சகோதரிகள் எவ்வித தடையுமின்றி சேர வேண்டுமென்றால் அவர்களை தேர்ந்தெடுக்கும் இடத்தில் துரோணாச்சாரியார்கள் இல்லாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- இளன் அறவாழி

Pin It