மார்ச் மாதத்திலிருந்து சுமார் 8 மாத காலமாக எங்கு திரும்பினாலும் கொரோனா... கொரோனா... இதே பேச்சு, இதே செய்தி, அதைப் பற்றிய தகவலுக்கு நடுவில் பயத்துடனும், குழப்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடி நடுத்தர குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று.
பயத்திற்கான காரணம் 500 சதுர அடியில் உள்ள வீட்டில் நான் என் மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் மிகவும் வயதான தாய், தந்தை என மொத்தம் ஆறு பேர் வசிக்கிறோம், யாராவது ஒருவருக்கு தொற்று வந்தாலும் தனிமைப் படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் அதனால் அதிகரிக்கும் மரணங்கள், அவர்கள் மறைத்த மரணங்கள், பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை செய்த ஊழல்கள் என தொடர்ந்து செய்திகள் வெளியாக, இந்த அரசு மக்கள் உயிரையாவது காப்பாற்றும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல அற்றுப்போனது. தனது நாற்பதுகளில் என் நண்பன் கொரோனாவால் உயிர் இழந்தான்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்ககுள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் பல லட்சம் செலவு செய்தும் மரணமடைந்தார். செய்திகளாகக் கேள்விபடுவதை விட நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நடக்கும் போது, பயம் நம்மை மேலும் ஆட்கொள்கிறது.
கடந்த மாதம் என் அப்பாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது, எப்பொழுதும் மழை காலங்களில் வரும் மூச்சுத்திணறல் தான் என்று எண்ணினேன், நாளுக்கு நாள் மூச்சுத்திணறல் அதிகமாகி, காய்ச்சல் வர ஆரம்பித்தது. மனதுக்குள் பயம், குழப்பம், பக்கத்தில் இருக்கும் பல மருத்துவமனைகளை அணுகினேன். யாரும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.
கோடம்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அவர்கள் சிடி ஸ்கேன் மூலம் கொரோனா தொற்று உள்ளதை உறுதி செய்து, “நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது உடனே அட்மிட் செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்னேகால் லட்சம் ஆகும்” என்று கூறினார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் என் நண்பரின் ஞாபகம் வர தொலைபேசியில் அழைத்து அவரிடம் அனைத்தையும் கூறினேன்.
அவர், “உடனே ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். என் நண்பர்கள் மூவர் மருத்துவர்கள். கோவிட் வார்டில் தான் பணிபுரிகிறார்கள் அவர்கள் நன்றாக பார்த்துக்கொள்வார்கள். கவலைப்படாதீர்கள், முழுநலத்துடன் அப்பா வீடு திரும்புவார்” என்று தைரியம் கூறினார்.
அப்பாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து அவருக்கு ஆக்சிஜன் தர வேண்டிய தேவை அதிகரித்தது. ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் அட்மிட் செய்தேன். அவருக்கு 75 வயது, நீரிழிவு நோய் மற்றும் இதயப் பிரச்னைகள் இருப்பதால் தற்பொழுது எதுவும் சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்கள்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அப்பா தவறி கீழே விழுந்ததால் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவரால் நடக்க இயலாது. யாராவது ஒருவர் உதவி புரிந்தால் தான் அவரால் தண்ணீர் கூட அருந்த முடியும். அப்படியிருக்க அவர் எப்படி தனியாக இருப்பார் யார் அவரை கவனிப்பார் என்ற எண்ணம் என்னை தூங்கவிடாமல் துளைத்தது.
குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம், எனக்கும் ,அம்மாவுக்கும் பாசிட்டிவ் என்றவுடன் ஒன்றும் புரியவில்லை, எந்த அறிகுறியும் எங்களுக்கு இல்லை.
மாநகராட்சியில் மருத்துவமனையில் அம்மாவுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாலும், எனக்கு ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகக் கண்டுபிடித்ததாலும், மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறினார்கள், எங்களை கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்கள்.
அங்கும் மருத்துவ பரிசோதனை செய்தார்கள். அப்பொழுது நான், “என்னுடைய ரத்தம் பரிசோதனை செய்தீர்களே, அதில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை எப்படி?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள், “நன்றாக உள்ளது” என்றார்கள். “பின்பு ஏன் மாநகராட்சி மருத்துவமனையில் குறைவாக உள்ளது என்றார்கள்?” என்று கேட்டேன். அதற்கு பதில் இல்லை. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறினேன் அதற்க்கு அவர்கள் முடியாது பத்து நாட்கள் இருந்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
பரிசோதனை செய்வதற்கு முன்பே தொற்றால் உடல் மோசமாக பாதிக்கபட்டு அனுமதிகப்பட்டவர்களை பரிசோதனை செய்யாமல், அவர்கள் மரணித்தாலும் வேறு காரணங்களை பதிவு செய்து தொற்று எண்ணிக்கையை ஒருபுறம் குறைத்து காண்பித்து, மறுபுறம் அரசு சிகிச்சையால் நலம் பெற்று திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதுபோல் காண்பிக்க தொற்று அறிகுறி இல்லை என்றாலும் கட்டாயப்படுத்தி பல மருத்துவமனைகளில் சேர்க்கிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டிருந்தேன்.
ஆனால் அதில் என் குடும்பமும் சிக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. நானும் அம்மாவும் ஒரு மருத்துவமனை, ஆக்சிஜனுக்காகப் போராடி கொண்டிருக்கும் அப்பா வேறொரு மருத்துவமனை, மனைவி, குழந்தைகள் வீட்டில், என குடும்பமே கொரோனவால் நிலைகுலைந்து போய் இருந்தது.
ஒவ்வொரு நாளும் என் அப்பா தொலைபேசியில் “டயபர் ஈரம் ஆயிடுச்சு. மாற்ற யாரும் இல்லை, ரொம்ப குளிருது” என்று கூறும்போது மிகவும் மனவேதனை அடைந்தேன். அரசு மருத்துவமனையில் ஒரு வயது முதிர்ந்த நோயாளிக்கு டயப்பர் மாற்ற மூன்று நாட்கள் ஆகிறது. செவிலியர் ஒருவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, கொஞ்சம் பணமும் கொடுத்து அப்பாவைக் கொஞ்சம் கவனித்துக்கொள்ளச் சொன்னேன்.
அவரிடம் “ஏன் வார்டில் ஒரு செவிலியர் கூட இருப்பதில்லை?” என்று கேட்டதற்கு “50 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்பதால் எங்களுக்கும் நோயாளிகளை கவனிக்க மிகவும் சிரமமாக உள்ளது” என்றார்.
அவர்களும் மனிதர்கள் தானே, அரசு அவர்களின் வேலையை உறுதி செய்யாது, தொற்றிலிருந்து பாதுகாக்க போதிய உபகரணங்கள் வழங்காது, நோயால் மடிந்தாலும் நஷ்டஈடு கொடுக்குமா எனத் தெரியாது. மிகுந்த மன அழுத்தம் அவர்களுக்கு.
நமது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “எந்த அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை” என்றார். ஆனால் உண்மை அதுவல்ல. பதினொரு நாள்கள் கழித்து என் அப்பாவுக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்று பரிசோதனையில் தெரிந்தது. ஆனாலும்,
“அவருக்கு ஆக்சிஜன் சீராக இல்லை. எனவே அவரை intermediate வார்டில் வைத்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். நாளையே மாற்றிவிடுவோம். உறவினர் ஒருவர் நோயாளியுடன் துணைக்கு இருக்கலாம்” என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
இத்தனை நாளாக யாரையும் பார்க்காமல் மன அழுத்தத்தில் இருந்த அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் அவரை கோவிட் வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற பல போராட்டங்களுக்குப் பிறகும் ஆறு நாட்கள் ஆனது. காரணம், பொது சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் வசதி உள்ள பெட் இல்லை.
இப்பொது டிஸ்சார்ஜ் ஆகி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் முழுதாக குணமாகவில்லை. வயது தான் காரணம். இந்த கொரோனா கால அனுபவத்தில் அரசு மருத்துவமனையில் பல குறைகள் ஏற்பட்டாலும், அவை அரசின் நிர்வாக சொதப்பல்களின் விளைவுகள் தான் என்று புரிந்தது.
ஆனால் இங்கு நான் மிக முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது, “உங்கள் அப்பா அதிர்ஷ்டம் இருந்தால் பிழைப்பார்” என்று தனியார் மருத்துவவமனை கையை விரித்து அனுப்பிய பின்னரும், அவரைக் காப்பற்றிக் கொடுத்தது அரசு மருத்துவர்கள்தான்.
தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகள் வார்டுகளில் சலிப்பின்றி சேவை செய்தவர்கள் கிராமப்புரங்களில் இருந்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு எழுதாமல், சமூகநீதி மூலம் படிக்க வாய்ப்பு பெற்றவர்கள் தான்.
இந்த இளம் மருத்துவர்கள் பணத்திற்கோ, கடமைக்கோ மருத்துவ பணியாற்றி இருந்தால், இவ்வளவு பெரிய பேரிடரை இந்த அரசால் இந்த அளவிற்கு கூட கையாண்டிருக்க முடியாது.
காரணம் என் அனுபவத்தில் சொல்கிறேன், 25 ஆண்டுகளாக நாங்கள் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் எங்கள் குடும்ப மருத்துவர் டெஸ்ட் நெகடிவ் வந்தபிறகும் கூட இன்னும் எங்களுக்கு சிகிச்சை அளிக்க பயப்படுகிறார். ஆனால் இந்த இளம் மருத்துவப் பிள்ளைகள் சளைக்காமல் சேவை செய்கிறார்கள்.
காரணம் அவர்களின் எளிய அல்லது நடுத்தரப் பின்னணி. நம் முகத்தைப் பார்த்தால் அவர்களுக்கு ‘நம் மக்கள்’ என்ற எண்ணம் ஏற்படும். நம் வலி, வருத்தம் புரியும். இயல்பான நெருக்கத்தை இதை உருவாக்கும், இந்த மண்ணில் விதைக்கப்பட்ட சமூகநீதியின் மகசூல் இது.
அனால் இவற்றை நாம் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் மனதை ஆட்கொள்கிறது. என் அப்பா அந்த அச்சத்தை, மூச்சு விடவே கடினப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இயல்பாக வெளிபடுத்தினார், தொலைபேசியில் ஒரு அதிகாலை அவர் சொன்னார் “ இங்க நம்மள மாதிரி கருப்பு தோலுல இருக்குற டாக்டர் பிள்ளைங்க தான் கொஞ்சம் முகம் கொடுத்து அக்கறையா பேசுதுங்க.
சந்தோஷம். ஆனா நம்ம வீட்டு பிள்ளைகள இனி இங்கு பாக்கமுடியாது”. நீட் தேர்வால் இனி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு சவக்குழி வெட்டப்படுவதால் ஏற்பட்ட மன உளைச்சலின் வெளிப்பாடு அது.
- அன்பு ஆறுமுகம்