நேவன் குரோகன் (Nevan Krogan) : அளவறிபகுப்பு உயிரறிவியல் ஆய்வகத்தின் (Quantitative Biosciences Institute) இயக்குநர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.

ஆங்கில மூலம் : https://www.sciencealert.com/a-treatment-for-covid-19-might-already-exist-in-old-drugs-we-just-need-to-unlock-the-right-combination

தமிழில் : ப.பிரபாகரன்

SARS-CoV-2 – என்ற தொற்றுநோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் முற்றிலும் புதிய வகையைச் சேர்ந்த ஒரு நச்சுயிரி என்பது மட்டுமல்ல; அது மனித உடலில் புகுந்து செல்களை அழிக்கும் விதமும் முற்றிலும் புதியது. ஒவ்வொரு நச்சுயிரியும் அடிப்படையில் வெவ்வேறு பண்புகளைக் கொண்டவை என்பதால் அதனை அழிக்கக்கூடிய மருந்துகளும் அதற்கேற்ப புதியதாக இருக்க வேண்டும்.

covid 19கொரோனா நச்சுயிரி சில மாதங்களுக்கு முன்பு தான் தோன்றியிருக்கின்றது என்பதால் அதனை அழிக்கக் கூடிய மருந்துகள் நம்மிடம் முன் தயார்நிலையில் இல்லை. இதுதான் தற்போதைய இடர்பாடு.

நச்சுயிரி தாக்குதலின்போது நம் உடற்செல்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிவது தான் உயிரியல் அமைப்பியல் ஆய்வறிஞர்களின் பணி. நோய்த் தாக்குதலின்போது உடலில் ஏற்படும் பலவீனங்களும் குறைகளும் யாவை என்று ஆய்ந்து, அதனைத் தீர்க்கக்கூடிய மருந்துகளை கண்டறிவதற்கு இயல்பாகவே ஆண்டுகள் பல தேவைப்படும். காரணம், நோயின் தன்மையும் அதற்கு ஏற்ப வினையாற்றும் மருந்தின் தன்மையையும் ஆய்ந்து சோதனை அடிப்படையில் மெய்ப்பிக்க பல்வேறு படிநிலைகளைக் கடந்து வர வேண்டும் என்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகின்றது.

ஆனால், தற்போது உருவாகியிருக்கின்ற இந்தக் கொடிய தொற்றுநோயானது அவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொள்ள நம்மை அனுமதிக்கவில்லை. இந்தத் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவி வருவதோடு அதனால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையும் இலட்சங்களைத் தொடுமோ என்ற பேரச்சம், உடனடியாக அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறிய வேண்டிய கட்டாய நிலை, நம்மை முன்னிலும் அதிவேகமாக செயல்படத் தூண்டுகின்றன.

மனித சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொற்றுநோய் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு அவர்கள் வாழ்நாளிலேயே இதுநாள்வரை சந்தித்திராத மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. SARS-CoV-2 தொற்றுநோயினால் உலக மனித சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இடரையும் அதனால் ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தநிலை நெருக்கடிகளையும் சீர்செய்வதற்கு நம்முடைய சேவையத் தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையிலும், இந்த நச்சுயிரி மனித செல்களை எவ்வாறு தாக்கி அழிக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகவும், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California) உள்ள அளவறிபகுப்பு உயிர் அறிவியல் ஆய்வகத்தில் (Quantitative Biosciences Institute - QBI) ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு குழு மிகத் தீவிரமாக ஆய்ந்து வருகின்றது.

அதற்கு முன்பாக, இந்தப் பழைய மரபார்ந்த முறையில் புதிய மருந்துகளைக் கண்டறிந்து கொரோனா நச்சுயிரியைக் கொல்வதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள மருந்துகளைக் கொண்டு தற்போது இந்நோய்ப் பரவலையும் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் காக்க முடியுமா என்று நாம் முதலில் கண்டறிந்தாக வேண்டும்.

இதற்காக, 22 ஆய்வகங்களைச் சேர்ந்த குழுவொன்று (அந்தக் குழுவிற்கு QBI Coronavirus Research Group) இலக்கிய நயத்தில் சொல்வதென்றால் கழுத்து முறிந்து போகும் அளவிற்கு ஏழு நாட்களும் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இது, இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் ஜெர்மனியின் ரகசிய தகவல் அனுப்பும் தொழில்நுட்பத்தை முறியடிக்கும் வகையில் மிகத் தீவிரமாக செயல்பட்ட குழு எந்த வேகத்தில் செயல்பட்டதோ, அதைப் போன்று இப்பொழுது செயல்படுகிறது.

அப்பொழுது எப்படி நம் எதிரியின் ரகசியத்தை உடைத்து வெற்றி கண்டோமோ, அதைப் போலவே இப்பொழுது நம்முன் உருவாகி இருக்கக்கூடிய இந்த கொடிய கொரோனா நச்சுயிரியின் ரகசிய செயல்பாடுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் வினையாற்ற வேண்டும்.

கொரோனா – கள்ளத்தனம் மிகுந்த ஓர் எதிரி

மனித உயிர்ச்செல்களோடு ஒப்பிடும்போது நச்சுயிரிகள் (virus) அளவில் மிகவும் சிறியவை; எனவே அவைகளால் தங்களைத் தாங்களே மறு உற்பத்தி செய்து கொள்ள முடியாது. இந்த வகையில் பார்க்கும்பொழுது கொரோனா நச்சுயிரி 30 (proteins) புரதங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால், மனித உயிர்ச் செல்களில் கிட்டத்தட்ட 20,000-ற்கும் அதிகமான புரதங்கள் காணப்படுகின்றன.

மிகக் குறைவான படைக்கருவிகளைக் கொண்டுள்ள இந்த நச்சுயிரிகள் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ள புத்திசாலித்தனமாக மனித உடலுக்குள் புகுந்து விடுகின்றன. பொதுவாக மனித செல்களுக்குள் நச்சுயிரிகளால் அவ்வளவு எளிதில் புக முடியாது. உயிர்ச்செல்லின் பாதுகாப்பு வளையங்கள் பலமாக இருப்பதனால் நேரடியாக உள்ளே செல்ல முடியாது என்பதனால் புறவாசல் வழியாகத்தான் பெரும்பாலான நச்சுயிரிகள் நம் உடற்செல்களுக்குள் நுழையும். ஆனால் இந்த கொரோனா நச்சுயிரியோ முற்றிலும் புதிய ஒரு வழியைக் கையாளுகிறது. அதாவது, அதன் உடலமைப்பில் ’திறவுகோல்’ போன்ற அமைப்புடைய புரதங்கள் மனித செல்களின் பாதுகாப்பு வளையங்களைத் திறந்து நேரடியாக உள்ளே செல்கின்றன.

உள்ளே புகுந்த உடனேயே, தனது புரதங்களை மனித உடற்செல்லின் புரதங்களோடு பிணைத்துக் கொள்கிறது. இதன்மூலம் தன்னுடைய வளர்ச்சிக்கும் செயற்பாட்டிற்கும் மனித உடற்செல்லில் உள்ள புரதங்களை பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி, மனித உடற்செல்லையே தனக்கு சேவகம் செய்யும் ‘தொழிற்சாலையாக’ மாற்றி விடுகின்றது. மனித செல்களின் இயல்பான செயற்பாடுகளை எல்லாம் கொரோனா நச்சுயிரி தனக்கேற்ப மாற்றி அமைத்து, ஆயிரக்கணக்கான கொரோனா நச்சுயிரிகளைத் தோற்றுவிக்கும் படலம் தொடங்கும்போது மனித உடற்செல்கள் மெல்ல அழியத் துவங்குகின்றன.

மனித உடலில் உள்ள நுரையீரல் செல்கள் (Lung cells) மற்ற செல்களைக் காட்டிலும் மிகவும் பலவீனமாக, மிருதுவாக உள்ளதால் SARS-CoV-2 நச்சுயிரிகள் உள்ளே புகுவதற்கு இது ஏற்றதாக அமைந்து விடுகின்றது. நுரையீரல் செல்களில் உள்ள புரதங்களின் பூட்டுகளை அவை எளிதில் உடைத்து உள்ளே நுழைந்து விடுகின்றன. COVID-19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்ஸ் (SARS) எனும் மூச்சுத் திணறல் குறைபாடு இருப்பதற்கு இதுவே காரணமாகும். நுரையீரல் செல்களை அவை அளவுக்கு அதிகமாக அழித்து தங்களைப் பெருக்கிக் கொள்ள ஏதுவாக அமைவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

இந்தத் தொற்றுநோயை நாம் இரண்டு வழிகளில் எதிர்கொள்ள முடியும். முதல் அணுகுமுறையானது, உள்ளே செல்லும் நச்சுயிரியின் புரதங்களை அழித்து, உள்நுழைதல், மரபணுக்களை படியெடுத்தல் போன்ற அவற்றின் அடிப்படைச் செயல்களை செய்ய விடாமல தடுத்து, அவற்றை செயல் இழக்கச் செய்யும் மருந்துகளைக் கண்டறிவது. REMDESIVIR என்ற எதிர் நச்சுயிரி மருந்து (anti-viral drug) இந்த வகையைச் சேர்ந்தது தான். COVID-19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தினைச் செலுத்தி, சோதனை செய்யும் ஆய்வுகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த மருந்து வேலை செய்ய வேண்டும் என்றால் நச்சுயிரியின் வடிவமைப்பு தொடர்ந்து ஒரே மாதிரியாக நிலைத்திருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராதவிதமாக, நச்சுயிரிகள் தொடர்ந்து தங்கள் வடிவமைப்பை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இதனால் REMDESIVIR போன்ற எதிர்நச்சுயிரி மருந்துகள் கொடுப்பது பயனற்ற ஒன்றாகி விடக்கூடும். நச்சுயிரிகளுக்கும் எதிர் நச்சுயிரி மருந்துகளுக்கும் இடையேயான போராட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதனால் தான், ஆண்டுதோறும் புதிய, புதிய தொற்றுநோய்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன.

இதற்கு மாற்றாக, நச்சுயிரிகள் அதன் தேவைக்காக, மனித செல்களில் உள்ள புரதங்களோடு இடைவினையாற்றும் செயலைத் தடுக்கக்கூடிய மருந்துகளைக் கண்டறிவது இரண்டாவது அணுகுமுறை.

நச்சுயிரிகளை செயல் இழக்கச் செய்வதை விட இந்த அணுகுமுறை பாதுகாப்பானது. ஏனெனில், மனித உடற்செல்கள் அவ்வளவு எளிதில் மாற்றத்திற்கு உட்படாது என்பதனால் நச்சுயிரிக்கு சேவை செய்யும் புரத அமைப்புகளை இந்த வகை மருந்துகள் பாதுகாக்கும்.

நச்சுயிரிக்கு எதிராக நீங்கள் ஒரு மருந்தினைக் கண்டறிந்து விட்டால், அது தொடர்ந்து வேலை செய்வதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதைத்தான் எங்கள் குழு கண்டறிய முயல்கிறது. அதோடு மட்டுமில்லாமல் இனிவரும் காலத்தில் உருவாகும் நச்சுயிரிகளுக்கு எதிராகவும் இந்த மருந்துகள் வேலை செய்யக்கூடும்.

கொரோனா என்ற எதிரியின் திட்டத்தை புரிந்து கொள்ளுதல்:

கொரோனா நச்சுயிரி தன்னைத் தொடர்ந்து பெருக்கிக் கொள்ள, அதற்கு உதவக்கூடிய ஒவ்வொரு உடல் பாகத்தையும் அடையாளம் காண்பதே எங்கள் குழுவின் முதற்பணி. அத்துடன் எந்த வகையான புரதங்களை அது மனித உடலுக்குள் செலுத்துகிறது என்பதனையும் நாங்கள் கண்டறிய முயல்கிறோம்.

அதைக் கண்டறிவதற்காக, மனித செல்லின் உள்ளே நமக்கு வேண்டிய மூலக்கூறுகளை ஒரு மீனைப் போல் நீந்திச் செல்லுமாறு அமைத்து எங்கள் குழு ஆய்வு செய்து வருகின்றது. மீன் முள்ளில் மண்புழுவைக் கோர்ப்பதைப்போல, நச்சுயிரியின் புரதத்துடன் சில நுண் வேதிப்பொருட்களை ஒட்டி இணைத்து உள்ளே அனுப்புகின்றோம். இந்த முறைக்கும் நாங்கள் ‘வேதித்தூண்டில்’ என்று பெயரிட்டுள்ளோம்.

செயற்கையாக ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மனித செல்லின் உள்ளே இந்தத் வேதித்தூண்டிலை உள்ளே செலுத்தி உருவி எடுக்கும்போது அதில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்பதனை ஆய்வு செய்து வருகின்றோம். இவ்வாறு செய்யும்போது நச்சுயிரியானது தன்னுடைய புரதங்களில் ஏதேனும் சிலவற்றை மனித செல்லில் சிக்க வைத்துவிடும்.

இந்த ஆய்வின் மூலம் மனித செல்லில் இருக்கக்கூடிய எந்தெந்த புரதங்களெல்லாம் கொரானா நச்சுயிரிக்கு தேவைப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றின் ஒரு பகுதியை கடந்த மார்ச்சு 2—ஆம் நாளன்று நாங்கள் வெளியிட்டுள்ளோம். இவை நமக்கு உதவக்கூடிய முதல் துருப்புச் சீட்டுகள். நச்சுயிரிக்கும் எங்களுக்குமான இந்தப் போராட்டத்தின்போது ”முதல் வெற்றி.. 3 தூண்டில்.. அடுத்து 5 தூண்டில்கள்..” என்று எங்கள் குழு நண்பர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொண்டார்கள்.

எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகள்:

நமது உடற்செல்லில் எந்தெந்தப் புரத மூலக்கூறுகள் (protein molecules) நச்சுயிரிக்கு தேவைப்படுகின்றன என்ற பட்டியல் எங்கள் குழுவிற்கு கிடைத்தபோது, அந்த மூலக்கூறுகளோடு பிணைந்து அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய நாம் ஏற்கனவே அறிந்த வேதி மருந்துப்பொருட்கள் (chemical compounds) எவையெவை எனக் கண்டறிய எங்கள் குழு முனைந்தது.

மனித உடலிற்குள் இருக்கும் நச்சுயிரிகள் தங்களைத் தொடர்ந்து படியெடுப்பதை (copying) அந்த வேதிப் பொருட்கள் தடுத்து நிறுத்துமென்றால், தொற்றுநோயும் முடிவுக்கு வந்து விடும். ஆனால் இதைச் செய்வது அவ்வளவு எளிமையான செயலல்ல. ஏனென்றால் இந்த வினைகள் யாவும் உடற்செல்லிற்குள் நிகழ்வதனால், அது உடலில் பல தீங்கான விளைவுகளை உண்டு பண்ண நேரிடலாம். எனவே, எங்கள் குழு கண்டறியும் வேதிப்பொருளானது, மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

நடைமுறையில் உள்ள மருந்து கண்டறியும் முறையானது அதிக கால அவகாசமும் அதிக பொருட்செலவும் (மில்லியன் டாலர்) கோரும் நடைமுறையாகும். ஆனால் இதைவிட எளிமையான வழிமுறை ஒன்றுள்ளது. அது யாதெனில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து மேலாண்மை (FDA) அமைப்பு, ஆய்வு அடிப்படையில் சோதித்துப் பார்க்கப்பட்ட 20,000 தடுப்பு மருந்துகளை அடையாளம் கண்டு அங்கீகரித்துள்ளது. அவற்றில் எந்தெந்த மருந்துகள் கொரோனா நச்சுயிரிக்கு உரிய தடுப்பு மருந்தாக அமையக்கூடும் என்று ஆராய்ந்து அவற்றை அடையாளம் காண்பது தான் அந்த எளிய வழி.

நம்முடைய வேதியியல் வல்லுநர்கள் நாம் கண்டறிந்த நச்சுயிர் புரதங்களின் பட்டியலோடு பொருந்துகின்ற மருந்துகளை அந்த மிகப்பெரிய தரவுத்தளத்தோடு பொருத்திப் பார்த்து கண்டறிய முயன்று வருகிறார்கள். அவற்றுள் கிட்டதட்ட 10 மருந்துகள் நச்சுப் புரதத்தோடு சரியாகப் பொருந்துவதாக கடந்த வாரம் கண்டறிந்துள்ளார்கள்.

புற்றுநோயிற்கு அளிக்கப்படும் JQ1 மருந்து அவற்றுள் முக்கியமானது. இருப்பினும் இந்த மருந்து கொரோனாவை எந்த அளவிற்கு தடுக்கும் என்பதை நம்மால் கணிக்கவியலாது. நல்லவை ஏதேனும் நடக்க வாய்ப்பு இருக்கின்றது. நோயாளிகளை இது எவ்வகையிலாவது காக்கின்றதா என்பதனை ஆய்வு செய்ய வேண்டும்.

தேச எல்லைகள் எல்லாம் மூடப்பட்டிருக்கும் இந்த நெருக்கடியான வேளையில், இந்த 10 மருந்துகளும் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதனைச் சோதித்துப் பார்க்க, அம்மருந்துகளை எல்லாம் வெளிநாடுகளில் இயங்கும் சில அரியவகை ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நியூயார்க்கில் இயங்கும் மவுண்ட் சினை ஆய்வகமும் (Mount Sinai in New York.) பாரிசில் இயங்கும் பாஸ்டியர் ஆய்வகமும் (Pasteur Institute in Paris) அவற்றில் மிக முக்கியமானவை. இந்த ஆய்வகங்களில் எல்லாம் உயிருடன் இயங்கும் கொரோனா நச்சுயிரியைக் கொண்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன..

 இந்த மருந்துகள் மனித செல்லில் உள்ள நச்சுயிர் பெருக்கத்தை தடுக்கின்றனவா என்று கடந்த மார்ச்சு 13-ஆம் நாளன்று சோதித்திப் பார்க்கப்பட்டன.

மேலே கூறப்பட்ட இந்தப் 10 மருந்துகளில் ஏதேனும் ஒன்றோ, பலவோ SARS-CoV-2 தொற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறதா என்று மவுண்ட் சினை ஆய்வகத்திலும் பாஸ்டியர் ஆய்வகத்திலும் எங்கள் தோழமைகள் மேற்கொண்டிருக்கும் ஆய்வுகளிலிருந்து விரைவில் நாங்கள் கண்டறிவோம்.

அதேசமயத்தில், மனித செல்லில் உள்ள புரதங்களில்,கொரோனோவிற்கு உதவக்கூடிய நூற்றுக்கும் அதிகமான புரதங்களின் பட்டியலைக் கண்டறியும் ’வேதித்தூண்டில்’ ஆய்வும் இன்னொரு பக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. இதுவரை நாம் மேற்கொண்ட ஆய்வில் கிட்டதட்ட 50-ற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்கள் கொரோனாவிற்கு உதவக்கூடிய மனித உடற்செல் புரதங்களுடன் பொருந்துகின்றன என்ற நல்ல செய்தி நமக்கு கிடைத்துள்ளது. தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அவற்றிலிருந்து COVID-19 தொற்றுநோயை குணப்படுத்தும் மருந்தைக் கண்டறிய முடியும் என்று நான் நம்புகிறேன்.

சோதனைமூலம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள இம்மருந்துகள், குறைந்தபட்சம் நச்சுயிர் செயல்பாடுகளை குறைக்கச் செய்கிறது என்று கண்டறிந்தாலே, இம்மருந்துகளைக் கொண்டு, உடனே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நம் மருத்துவர்கள் மீட்பார்கள்.

- நேவன் குரோகன் (Nevan Krogan), அளவறிபகுப்பு உயிரறிவியல் ஆய்வகத்தின் (Quantitative Biosciences Institute) இயக்குநர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.

Pin It