vaccination for kidsஉலக நாடுகள் பலவற்றிலும் கோவிட் தாக்கம் பெருகிக் கொண்டிருக்கிறது. 90% பாதுகாப்பு, 96% பாதுகாப்பு என சந்தைக்கு வந்த தடுப்பூசிகளின் வாக்குறுதிகளுக்கு மாறாக நோய்த் தொற்றானது சுனாமி போல தேசங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது.

 எங்களின் தடுப்பூசிதான் சக்தி வாய்ந்தது என தன் மூன்று தடுப்பூசிகளையும் முன்மொழிந்த அமெரிக்கா இன்று விழி பிதுங்கி நிற்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த 4.1.2022 ல் மட்டும் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அமெரிக்காவில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே நூறில் ஒரு அமெரிக்கருக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது.

தடுப்பூசி நிறுவனங்களும், அவற்றின் ஆதரவாளர்களும் இப்போது சதவீதக் கணக்குகளை கைவிட்டுவிட்டு, வீரியத்தைக் கட்டுப்படுத்துகிறது, மரண விகிதத்தைக் குறைக்கிறது என்று வார்த்தைகளை மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

தடுப்பூசிகளின் செயல்பாட்டு ஊனம் ஒருபுறம் என்றால், மறுபுறம் அவற்றின் பக்க விளைவுகள் பரவலான பேசுபொருளாகி இருக்கின்றன. மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினை, ரத்தம் உறைதல் பிரச்சனை எனத் தொடர்ச்சியாக புகார்கள் கூறுவதும் இது தொடர்பாக covishield போன்ற தடுப்பூசிகளை கட்டுப்படுத்தப்பட்டதும் ஊடகங்களில் செய்தியாக்கப் பட்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் பெருகி வரும் கொரோனா உருமாற்ற அலையை எதிர்கொள்ள 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் அண்மையில் திருவாய் மலர்ந்திருக்கிறார். கடந்த 3.1.2022 ல் இருந்து ஒவ்வொரு மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு சிறார்களுக்கான தடுப்பூசிகளை செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

வருங்கால தேசத்தின் தூண்கள் குழந்தைகள் எனும் அடிப்படையில் அவர்களை ஆரோக்கியமானவர்களாக அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது எனும் தார்மீகக் கடமையின் அடிப்படையில், இந்த சிறார்களுக்கான தடுப்பூசி அவசியம்தானா என்பதைப் பரிசீலிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகிறது.

"தடுப்பூசிகள் நோய்க்கிருமிகளை தடுக்காது. மாறாக மரணத்தை மட்டுமே கட்டுப்படுத்தும்" என தடுப்பூசி நேசர்களாலேயே இன்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆடை விலகியதை பதட்டத்தோடு சரி செய்யும் ஒரு யுவதியைப் போல இந்த தடுப்பூசி ஆதரவாளர்கள் தங்களின் ஆற்றாமையை மறைக்க படாதபாடு படுகிறார்கள். திட்டுகிறார்கள், மிரட்டுகிறார்கள், சபிக்கிறார்கள், நகைக்கிறார்கள். ஒரு படி மேலே போய் 'தடுப்பூசி தயாரிப்பு முறை பற்றி தெரியாதவர்கள் தடுப்பூசி பற்றி விமர்சிக்கக் கூடாது' என்று உத்தரவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன விதமான சொற்களைக் கொண்டு பூசி மொழுகினாலும் 'பலாபலன்' என்பது யாவற்றையும் தவிடுபொடியாக்கி விடும் என்பதே எதார்த்தம்.

தடுப்பூசி தனது பெருமையை இழந்து மரண விகிதத்தை மட்டுமே கட்டுப்படுத்தும் (அதற்கும் கூட உறுதியான தகவல்கள் இதுவரை ஏதும் இல்லை. ஒருவேளை அதுவும் கூட இல்லாமல் போகலாம்) என்ற நிலை இன்றைய தேதியில் ஒத்துக் கொள்ளப் பட்டு விட்ட சூழலில் மரண விகிதம் குறைவாக இருக்கின்ற குழந்தைகளுக்கு ஏன் ஊசி செலுத்த வேண்டும் என்ற கேள்வி பரவலாக எழுகிறதல்லவா?

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், covaccine தடுப்பூசியில் பக்கவிளைவுகள் தொடர்பான ஆய்வுக் குழுவின் தலைவருமான டாக்டர் சஞ்சய் கே ராய், "குழந்தைகளில் கோவிட் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரில் வெறும் 2 பேர் மட்டுமே இறக்கின்றனர், இதுவே வயது வந்தவர்களில் 10 லட்சம் பேரில் 15000 பேர் இறந்து போகிறார்கள்" என தரவுகளை முன்வைத்து குறிப்பிடுகிறார்.

தேசிய தொற்றுநோயியல் கழகத்தின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் மூலியல், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு என்பது கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்கிறார்.

மேற்கண்ட இருவரும் ஏதோ நமது மருத்துவ ஜாம்பவான்கள் சொல்வது போல தடுப்பூசி தயாரிப்பு முறை குறித்து அறியாதவர்களோ, தற்குறிகளோ அல்ல, ஆங்கில மருத்துவம் கற்றறிந்த பேராசிரியர்கள்.

இந்த முகாமில் இருந்தே ஏறத்தாழ 70 முதல் 90 சதவீதம் வரை சிறார்களுக்கு கோவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

சொற்பமான மரண விகிதம் உள்ளபோது குழந்தைகளுக்கு இவ்வளவு பணத்தைக் கொட்டி ஏன் தடுப்பூசி போட வேண்டும்? அதுவும் அச்சப்படத்தக்க பக்கவிளைவுகள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்போது…

வயது வந்தவர்களில் தடுப்பூசியினால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகளை பல்லாயிரக்கணக்கான புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் கணிசமானவை மரணம் தொடர்பானவையும் ஆகும். பதிவுக்கு வராமல் மறைக்கப்பட்டவை என்பது இதை விடவும் பல மடங்கு கூடுதலாக இருக்கும். covishield தடுப்பூசிக்கு எதிராக மட்டும் சுமார் 33 ஆயிரத்து 449 புகார்கள் பதியப்பட்டு இருப்பதாக தகவல் ஒன்று குறிப்பிடுகிறது.

ரத்தம் உறைதல், மாதவிடாய் சுழற்சி என பெரியவர்களுக்கு வரும் பிரச்சினைகள் ஒருபுறம் என்றால், அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் சிறுவர்களுக்கு வருவதாக அறியப்பட்ட mayocarditis எனப்படும் இதய தசை அழற்ச்சி நோய் மறுபுறம். இது மெல்ல மாரடைப்பு வரை கூட்டிப் போகும் அபாயகரமான நோய். இது தடுப்பூசி செலுத்தி கொண்ட 6000 குழந்தைகளில் ஒருவருக்கு வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 லட்சத்தில் 2 மரணம் எங்கே? 6000 பேரில் ஒருவருக்கு mayocarditis வருவது எங்கே?

கோவிட்டுக்கு மட்டுமல்ல, எல்லா விதமான நோய்களுக்கும் செலுத்தப்படும் சகல தடுப்பூசிகளும் பக்கவிளைவு உள்ளவையே. 'குணம் நாடி குற்றமும் நாடி'... என்பது போல எது கூடுதலோ அதை ஏற்கும் அடிப்படையிலேயே இதுகாறும் தடுப்பூசி தொடர்பான ஒரு நடைமுறை பெயரளவிலேனும் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த கோவிட் தடுப்பூசியானது அத்தகு சடங்குத்தனமான நடைமுறைகளைக் கூட காற்றில் பறக்க விட்டு விட்டு வீதிக்கு வந்திருக்கிறது, அதுவும் குழந்தைகளுக்காக.

இந்தியாவில் குழந்தை தடுப்பூசிக்காண சோதனைக் காலத்தையும், அவற்றின் எண்ணிக்கையையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்களானால் நிச்சயசமாக அதிர்ச்சி அடைவீர்கள். 2 முதல் 18 வரையிலான குழந்தைகளுக்காக விரைவில் சந்தைக்கு வருவதாகச் சொல்லப்படும் covaccin ஆய்வு மாதிரிகள் 525 மட்டுமே. Zycov-D யின் மாதிரிகள் 1000 மட்டுமே. இவ்வளவு சொற்பமான தரவுகளை வைத்துக்கொண்டு தான் வருங்கால இந்தியாவை வார்க்கப்போகும் நமது பிள்ளைகளுக்கு இவர்கள் தடுப்பூசி செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

கோவிட்டால் குழந்தைகள் உயிரிழப்பு சொற்பம் என நாம் பார்க்கும் அதே வேளை இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக பசி தொடர்பான நோய்களில் மட்டும் 9 லட்சம் குழந்தைகள் இறந்து போவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்து குறைபாடுகள் தொடர்பாக 2000 குழந்தைகள் இறந்து போகிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு, பசி தொடர்பான பிரச்சினைகளில் மட்டுமே மொத்த குழந்தைகளில் 3 சதவீதம் பேர் இறந்து போகிறார்கள் என்ற உண்மை ஒருபுறம் இருக்கையில், இதில் 2000-3000 பேரில் 1 சதவீதம் கூட இல்லாத கோவிட்டுக்கு இவ்வளவு இடர்பாடுகளையும், செலவுகளையும் தாண்டி தடுப்பூசி தேவையா?

அரசு சிறிது முயன்றாலே குழந்தைகளின் பசிப்பிணி போக்க முடியும். ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் குழந்தைகளை சாவிலிருந்து காப்பாற்ற முடியும். ஆனால் அதைச் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அதனால் தனது ஆத்மார்த்தமான எஜமானர்களான, கோவிட் தடுப்பூசிகளால் கோடிகளில் புரளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்தவிதமான ஆதாயமும் இருக்காது அல்லவா?

போராட்டத்தில் இறந்த 500 விவசாயிகளும் எனக்காகவா இறந்தார்கள் என ஆணவத்தோடு கேட்பவரின் ஆட்சியின்கீழ் இதுவெல்லாம் ரொம்ப சாதாரணம் தான்.

- பாவெல் தருமபுரி

Pin It